விஜய் பார்க்கும் இந்த சிலை யாருடையது? பிரிட்டனில் இருந்து 69 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி? முழு விவரம்

திருமங்கை ஆழ்வார் சிலை: 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், TN Archeology Department

    • எழுதியவர், ரா. ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கும்பகோணம் அருகே உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் 1957ஆம் ஆண்டு திருடப்பட்டதாகக் கூறப்படும் திருமங்கை ஆழ்வாரின் பழமையான வெண்கல சிலை, சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்த இந்தச் சிலை, தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின் விசாரணை மற்றும் இந்திய அரசின் தூதரக நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிலையை, ஆகஸ்ட் 17இல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பார்வையிட்டார். பின்னர் கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய நடைமுறைகளுக்குப் பிறகு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

1957இல் நடந்த சிலைத் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை உள்ளிட்ட நான்கு பழமையான உலோகச் சிலைகள் 1957 - 1967க்கு இடைப்பட்ட காலத்தில் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் கே. ராஜா அளித்த புகாரின் அடிப்படையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை 2020 பிப்ரவரி 12ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

அந்த விசாரணையில், திருடப்பட்டதாகக் கூறப்படும் நான்கு சிலைகளில் ஒன்றான திருமங்கை ஆழ்வார் சிலை பிரிட்டன் ஆக்ஸ்போர்டில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருடப்பட்ட மற்ற மூன்று சிலைகளான காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்திலும், ஸ்ரீதேவி சிலை ஃப்ளோரிடாவில் உள்ள ஹில் ஏலக்கூடத்திலும், விஷ்ணு சிலை டெக்சாஸில் உள்ள கிம்பல் கலை அருங்காட்சியகத்திலும் இருப்பது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருமங்கை ஆழ்வார் சிலை: 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், CMO Tamil Nadu/X

சிலை 69 ஆண்டுக்கு பிறகு தமிழகம் வந்தது எப்படி?

திருமங்கை ஆழ்வார் சிலை கோயிலில் இருந்து திருடப்பட்டதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக 1957ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனங்களின் காப்பகங்களில் இருந்த பழைய புகைப்படங்களுடன் வெளிநாட்டில் இருந்த சிலையை ஒப்பிட்டுப் பார்த்ததில், அது சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்த சிலையே என்பதற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன.

அதே நேரத்தில், 1967ஆம் ஆண்டு அஷ்மோலியன் அருங்காட்சியகம் இந்தச் சிலையை சோதெபி(Sotheby) ஏல நிறுவனம் மூலம் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. அப்போது அதன் உண்மையான பூர்வீகம் குறித்த தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.

சிலையின் தொன்மை மற்றும் அது திருடப்பட்டதற்கான அறிவியல் ரீதியான சான்றுகளைச் சேகரித்த சிலை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதை பிரிட்டன் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் பிரதிநிதி இந்தியா வந்து சான்றுகளை ஆய்வு செய்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிர்வாகம் சம்மதித்தது.

இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தூதரக மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளின் பயனாக இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை, சிலை தடுப்புப் பிரிவு தனிப்படை காவல்துறையினர் புதுடெல்லியில் இருந்து பெற்று ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழ்நாடு கொண்டு வந்தனர்.

கடந்த 17ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பார்வையிட்டார். பின்னர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சிலை அலுவலரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

ஊர் எல்லையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூமாலைகள், மேளதாளங்களுடன் கொண்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலைக்கு பக்தர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்குத் திரும்பிய சிலையை ஏராளமான பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர்.

திருமங்கை ஆழ்வார் மூலச் சிலையைப் போன்றே புதிதாக ஒரு வெண்கல சிலையைச் செய்து ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்த பின்னரே, வரலாற்றுச் சிறப்புமிக்க மூலச் சிலையை நாம் திரும்பப் பெற முடிந்தது" என கும்பகோணம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அஸ்வினி தெரிவித்தார்.

மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை குறித்துப் பேசிய கும்பகோணம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அஸ்வினி, "ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இந்தச் சிலை காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததால், அந்த இடத்தை வெறுமையாக வைக்க முடியாது என அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்தது" என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே கோயிலில் வழிபாட்டிற்கு ஒரு மாற்றுச் சிலை இருந்தபோதிலும், அருங்காட்சியகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மூலச் சிலையைப் போன்றே புதிதாக ஒரு வெண்கலச் சிலையைச் செய்து அவர்களிடம் ஒப்படைத்ததாகக் குறிப்பிட்ட அஸ்வினி, அதன் பின்னரே, வரலாற்றுச் சிறப்புமிக்க மூலச் சிலையை திரும்பப் பெற முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

அதோடு, இந்தச் சிலை மீட்பு நடைமுறைகள் மற்றும் ஆய்வுகள் நிறைவடைய சுமார் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமங்கை ஆழ்வார் சிலை: 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், TN Archeology Department

பாதுகாப்பு அறைகள் மற்றும் நவீன கண்காணிப்பு

சிலை திருடப்பட்ட சூழ்நிலை மற்றும் அதன் பின்னணி குறித்து விவரித்த அஸ்வினி, "வெளிநாட்டினர் நமது பண்டைய கலைப் பொருட்களைப் பெரும் பொக்கிஷமாக பார்க்கிறார்கள். ஆனால், நம் மக்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது. கோயிலில் உள்ள சிலைகளை வழிபாட்டு தெய்வமாக மட்டுமே பார்க்காமல், அவை நமது பாரம்பரிய பொக்கிஷங்கள் என்பதை உணர்ந்து பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை" என்று சுட்டிக்காட்டினார்.

கூடுதலாக, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், "கோயில்களில் சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தனிப் பாதுகாப்பு அறைகள் (Strong Rooms) உருவாக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள், நவீன அலார வசதிகள் ஆகியவற்றுடன் இரவு நேரக் காவலர்களும் நியமிக்கப்படுகின்றனர்" என்று விவரித்தார்.

அத்துடன், இதுபோன்ற முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் கோயில்களுக்கு மட்டுமே சிலைகளை வைத்துப் பராமரிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஐகான் மையம் மற்றும் நீதிமன்ற வழிமுறைகள்

பாதுகாப்பு வசதிகள் இல்லாத சிறிய கோவில்களின் சிலைகள் 'ஐகான் மையம்' (Icon Centre) மூலமாகப் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலும் இத்தகைய பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சிலைகள் நேரடியாக கோயில்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த அஸ்வினி, சிலைத் தடுப்புப் பிரிவு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்டபூர்வ நடைமுறைகளுக்குப் பிறகே கோயில்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் விளக்கினார்.

இளம் தலைமுறையினரிடையே நமது சிற்பக் கலை, கட்டடக் கலை பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அஸ்வினி, கோயில் நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற வரலாற்றுப் பொக்கிஷங்களை எதிர்காலத்திற்குப் பாதுகாக்க முடியும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

திருமங்கை ஆழ்வார் சிலை: 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?
படக்குறிப்பு, கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அஸ்வினி

சிலையின் காலம் மற்றும் கலைச் சிறப்பு

இந்தச் சிலையைப் போலவே, அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல சிலைகள் இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை குறித்த பல்வேறு தகவல்களையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

"இந்தச் சிலையை ஆராயும்போது இது பிற்கால சோழர் காலத்தின் 13 அல்லது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கல சிற்பமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. சோழர் காலத்து செப்புத் திருமேனிகளுக்கே உரித்தான கலை நுட்பமும் நேர்த்தியும் இதில் பளிச்சிடுகிறது" என்று அவர் விளக்கினார்.

"பொதுவாக கோயில்களில் மூலவர் சிலைகள் கருவறையில் நிலையாக இருக்கும். விழாக் காலங்களில் வெளியே எடுத்துச் செல்வதற்காக இதுபோன்ற செப்புப் படிமங்களை (உற்சவர்) உருவாக்குவார்கள். சோழர் கால சிற்பங்களின் இணையற்ற கலை நுட்பமே, உலக நாடுகளின் அருங்காட்சியகங்களில் இவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைப்பதற்கான முதன்மைக் காரணம்" என்கிறார் அவர்.

திருமங்கை ஆழ்வார் சிலை: 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?
படக்குறிப்பு, தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் தமிழ் பண்டிதர் மற்றும் தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன்

அரசர் சிலைகளைவிட அரிதான ஆழ்வார் சிலைகள்

"பன்னிரு ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார், சோழ நாட்டில் பிறந்தவர். நீலன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோழர் படையில் படைத் தலைவராக இருந்து பல வெற்றிகளைக் குவித்தவர். இவரது வீரத்தைப் பாராட்டி சோழ மன்னர் இவருக்கு 'ஆலிநாடு' என்ற பகுதியைப் பரிசாக வழங்கினார்" என்று விளக்கினார் மணிமாறன்.

கமுதவள்ளி என்பவரை மணந்த அவர், வைணவ அடியார்களுக்கு தினமும் அமுது படைக்கும் தொண்டில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட மணிமாறன், "இதனால் தனது செல்வம் முழுவதையும் இழந்து, அவர் கடன் சுமைக்கு ஆளானதாகவும், தொடர்ந்து தொண்டு செய்ய வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் எனவும் கூறும் மணிமாறன், "அதன் பிறகு ஆன்மீகப் பாதையில் சென்று 1,000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார்" எனத் தெரிவித்தார்.

"சோழர் காலத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டாலும், ராஜராஜ சோழன் அல்லது ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களின் உருவச் சிற்பங்கள் மிகவும் அரிதாகவே கிடைத்துள்ளன. ஆனால், ஆன்மீகத் தொண்டாற்றிய பன்னிரு ஆழ்வார்களையும் தெய்வத்திற்கு நிகராகப் போற்றி, அவர்களுக்குச் செப்புப் படிமங்களை உருவாக்கி வழிபட்டது சோழர்களின் சிறப்பம்சம்" என்று விவரித்தார் மணிமாறன்.

"பழங்காலம் முதலே கலைச் சிறப்புமிக்க பொருள்களையும் தூண்களையும் வென்றெடுத்துச் செல்வது அல்லது கொண்டு செல்வது ஒரு மரபாக இருந்துள்ளது."

"ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பின்போதுகூட, அங்குள்ள கலைப் பொருட்களைக் கொண்டு வந்த சான்றுகள் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவின் பல அரிய சிலைகளும் சுவடிகளும் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன."

தற்போது அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல சிலைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட மணிமாறன், "அவற்றை மீட்க சட்டரீதியான ஆவணங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளைச் சமர்ப்பிப்பது அவசியம். அண்மைக் காலத்தில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முயற்சியால், வெளிநாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான கலைப் பொருட்கள் மீட்கப்பட்டு திரும்பக் கொண்டு வரப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

அதோடு, "கும்பகோணம் கோயிலில் இருந்து திருடப்பட்ட இந்த திருமங்கை ஆழ்வார் சிலை மீண்டும் அதே கோயிலுக்கு வந்து சேர்வது தமிழக வரலாற்றுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி" என்றும் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன்.

திருமங்கை ஆழ்வார் சிலை: 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?
படக்குறிப்பு, தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முனைவர் இளமுருகன்

சோழர்களின் கலைக்கு சான்றாகும் சிலை

தற்போது மீட்கப்பட்டுள்ள திருமங்கை ஆழ்வார் சிலை குறித்து தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இளமுருகன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தச் சிலை சோழர் கலை பாணியில், நின்ற கோலத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு வெண்கல சிற்பம். தமிழகத்தின் சிற்ப நுட்பங்களும் சோழர் கால கலைச் சிறப்பும் வெளிநாட்டினரை வெகுவாகக் கவர்ந்ததால், அக்காலத்தில் பல கலைப் படைப்புகள் வெளிநாட்டு அருங்காட்சியகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக," தெரிவித்தார்

திருமங்கை ஆழ்வாரின் ஆன்மீக திருப்பம் குறித்து விளக்கிய அவர், "ஐம்புலன்களையும் அடக்கி திருமாலை வழிபட்ட இவர், திருவரங்கநாதன் மீது பல பாடல்களைப் பாடினார். இவரது பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்று, வைணவ தத்துவத்தை உலகுக்கு உணர்த்துகின்றன," என்றார்.

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்துப் பேசிய அவர், "சுமார் 250 ஆண்டு கால ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழகத்தின் அழகிய சிலைகள் பல வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக" அவர் தெரிவித்தார்.

தற்போது உரிய ஆவணங்களுடன் முறையீடு செய்யும்போது, பிற நாடுகளும் அந்தச் சிலைகளைத் திருப்பிக் கொடுக்க முன்வருவதாகக் குறிப்பிட்ட அவர், "நாகப்பட்டினம் ஆனைமங்கல செப்பேடு, ராஜராஜ சோழன் - லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டதைப் போலவே, திருமங்கை ஆழ்வாரின் சிலையும் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமையைச் சேர்த்துள்ளதாக," முனைவர் இளமுருகன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு