மெக்கா ஒப்பந்தம்: வங்கதேசம் இணைய விரும்புவது இந்தியாவுக்கு சிக்கலாகுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

வங்கதேசத்தின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர் கூறியதாகக் கூறப்படும் ஒரு கருத்து, இந்திய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்கா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, துருக்கி, பாகிஸ்தான், சௌதி அரேபியா ஆகிய நாடுகள், அந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு தாக்குதலையும் தங்கள் மீதான தாக்குதலாகவே கருதும்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வங்கதேசத்தின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர் கூறியதாகக் கூறப்படும் ஒரு கருத்து, இந்திய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை இரவு முதல், வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளரான ஹுமாயூன் கபீர், சௌதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார அல்லது பாதுகாப்புக் கட்டமைப்பில் வங்கதேசம் இணைவதற்கான வாய்ப்பை வரவேற்பதாக வங்கதேச சங்பாத் சங்ஸ்தாவிடம் (BSS) தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையிலான மெக்கா ஒப்பந்தத்தில் வங்கதேசமும் இணைய ஆர்வமாக இருப்பதாக ஹுமாயூன் கபீரின் இந்தக் கருத்து இந்திய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

வங்கதேசத்தின் இந்த நிலைப்பாடு, இந்தியாவுடனான நீடித்து வரும் பதற்றத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சௌதி அரேபிய பட்டத்து இளவரசரின் அழைப்பின் பேரில் வங்கதேச பிரதமரின் ரியாத் பயணம் கோடைக் காலத்திற்குப் பிறகு இறுதி செய்யப்படுமென ஹுமாயூன் கபீர் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பாகிஸ்தான், சௌதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையிலான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வங்கதேசம் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வாலிடம் வெள்ளிக்கிழமை கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இப்போதைக்கு நான் இவ்வளவுதான் கூற விரும்புகிறேன்" என்று மட்டும் தெரிவித்தார்.

மெக்கா ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகவே பல நிபுணர்கள் பார்க்கின்றனர். இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், மூன்று நாடுகளின் மீதுமான தாக்குதலாகவே கருதப்படும் என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் பொருள், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், அதைத் தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக துருக்கியும் சௌதி அரேபியாவும் கருதக்கூடும். இதில் வங்கதேசமும் இணைந்தால், வங்கதேசத்தில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் (இடது), சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (நடுவில்) மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் (வலது)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கி அதிபர் எர்துவான் (இடது), சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (நடுவில்), பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் (வலது) ஆகியோர் சௌதி அரேபியாவின் மெக்காவில் ஆகஸ்ட் 7, 2026 அன்று ஒரு முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மெக்கா ஒப்பந்தம் வங்கதேசத்திற்கு சாதகமாக அமையுமா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வங்கதேசம் மெக்கா ஒப்பந்தத்தில் இணைந்தால், அது அந்த நாட்டுக்குச் சாதகமாக இருக்குமா?

வங்கதேசத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமென் நியூஸ்18க்கு அளித்த பேட்டியில், "மேலோட்டமாகப் பார்த்தால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளுக்கு இடையிலான பலதரப்பு ஒத்துழைப்பின் ஒரு வடிவமாக மெக்கா ஒப்பந்தம் தோன்றலாம். ஆனால், நடைமுறை நிலவரத்தைப் பார்த்தால், இதனால் வங்கதேசத்துக்கு உண்மையில் கிடைக்கப் போகும் உறுதியான பலன்கள் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

"நமது தேசிய முன்னுரிமைகள் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், பிராந்திய நிலைத்தன்மை, அணிசேரா கொள்கை உள்ளிட்ட சமநிலையான வெளியுறவு உறவுகளைப் பேணுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

"கூட்டுப் பாதுகாப்புக் கட்டமைப்பில், குறிப்பாக தொலைதூர உலக அரசியல் சூழ்நிலைகள் மற்றும் ராணுவப் பொறுப்புகளை உள்ளடக்கிய ஒன்றில் இணைந்தால், அதனால் ஏற்படும் ஆபத்துகள் உடனடியானவை, வெளிப்படையானவை. இதன் காரணமாக வங்கதேசம் தான் போராட விரும்பாத மோதல்களுக்குள் இழுக்கப்படலாம்."

"மேலும், நமது நிலவியல் மற்றும் பொருளாதார எதார்த்தங்கள், நமது அண்டை நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவுடன், வலுவான, நிலையான மற்றும் ஒத்துழைப்பான உறவுகளைப் பேணுவது மிகவும் முக்கியம் என்பதை உணர்த்துகின்றன. இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அல்லது வெளிநாட்டு ராணுவக் கூட்டணிகளில் நம்மைச் சிக்க வைக்கும் எந்த நடவடிக்கையும் வங்கதேசத்தின் அடிப்படை தேசிய நலன்களுக்கு உகந்ததல்ல" என்று மொமென் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "இத்தகைய முக்கியமான உத்திசார் மாற்றத்திற்கு அவசரமாக முடிவெடுப்பதைவிட, கவனமாகவும் விரிவாகவும் மதிப்பீடு செய்ய வேண்டுமெனக் கருதுகிறேன். வெளியுறவுக் கொள்கையின் எதார்த்தத்தை வெறும் நிலைப்பாடு மாற்றக்கூடாது. 'அனைவருடனும் நட்பு, எவருடனும் பகை இல்லை' என்ற கொள்கையால் வங்கதேசம் வரலாற்று ரீதியாகப் பலனடைந்துள்ளது. பிராந்திய நிலைத்தன்மையைப் பாதிக்கக் கூடிய ராணுவக் கூட்டணிகள் அல்லது பாதுகாப்பு ஒப்பந்தங்களை நோக்கி நகர்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்."

"முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் முழுமையாக ஆராயப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். எந்தவொரு கட்டுப்படுத்தும் முடிவையும் எடுப்பதற்கு முன், அதன் நீண்டகால விளைவுகளை தலைமை கவனமாகப் பரிசீலிக்குமெனத் தான் நம்புவதாகவும்" அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் தென் கொரியாவுக்கான வங்கதேசத்தின் தூதராகப் பணியாற்றிய எம். ஷாஹிதுல் இஸ்லாமும், இது வங்கதேசத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்று கருதுகிறார்.

"உண்மையில், மெக்கா ஒப்பந்தத்தில் இணைவதால் ஏற்படும் செலவுகள் மற்றும் பலன்களை நாம் மதிப்பிட வேண்டும்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"செலவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. வங்கதேசத்தின் சொந்த தேசிய நலன்களுக்கு அவசியமில்லாத மோதல்களுக்குள் அது இழுக்கப்படலாம்" என்கிறது அந்தப் பதிவு.

"ஆனால், இதனால் கிடைக்கும் பலன்கள் இன்னும் தெளிவாகவில்லை. இந்த ஒப்பந்தத்தில் சௌதி அரேபியா முக்கியப் பங்கு வகிப்பதால், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பது, முதலீடுகள் அதிகரிப்பது, எரிசக்தி பாதுகாப்பு மேம்படுவது போன்ற பலன்களை வங்கதேசம் இயல்பாகவே எதிர்பார்க்கலாம். இந்த எதிர்பார்ப்புகளை நாம் சௌதி அரேபியாவிடம் தெரிவித்துள்ளோமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வங்கதேசம் மெக்கா ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்தது தொடர்பான ரந்திர் ஜெய்ஸ்வாலின் கருத்தை எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்த உலக அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஆய்வாளர் சோராவர் துலத் சிங், "சௌதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசம் ஆகிய அரசாங்கங்களை அமெரிக்காவின் உலக அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் இடைநிலை ஆட்சிகளாகப் பார்க்கப்படலாம்" என்று எழுதினார்.

"இந்தக் கண்ணோட்டத்தின்படி, யூரேசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதிகாரம் மற்றும் ராணுவ செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முக்கிய மையமாக இஸ்ரேல் உள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் முன்னணி ராணுவத் தளங்கள் அகற்றப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் அமெரிக்க மத்திய கட்டளையின் தலைமையகத்துக்கான சாத்தியமான இடமாக இஸ்ரேல் மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது."

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தாரிக் ரஹ்மானின் தாயார் கலீதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டாக்கா சென்றிருந்தார்.

தாரிக் ரஹ்மான் இந்தியா மீது இப்படியொரு மனப்பான்மையை கொண்டிருப்பது ஏன்?

மூலோபாய விவகாரங்கள் ஆய்வாளர் பிரம்மா செல்லானி, தாரிக் ரஹ்மான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகக் கருதுகிறார்.

"மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்டுள்ள வங்கதேசத்தின் நிலவியல் அமைப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அதன் பெரிய அண்டை நாடான இந்தியாவை சார்ந்திருக்கச் செய்கிறது" என்று செல்லானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"எனவே, வங்கதேசத்தின் பொருளாதார பாதுகாப்புக்கும் வளத்துக்கும் இந்தியாவுடனான நிலையான உறவு மிகவும் முக்கியமானது. இருப்பினும், வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அரசு முறைப் பயண அழைப்பை ஏற்றுக் கொள்வதைக் கடந்த ஆறு மாதங்களாகத் தாமதித்து வருகிறார். இந்தியா செல்வது இந்தியாவுக்கு செய்யும் உதவி என்பது போல் அவர் நடந்துகொள்கிறார்."

"மேலும், அத்தகைய பயணத்துக்கு ரஹ்மான் நிபந்தனைகளையும் விதித்துள்ளார். கடந்த திங்கள் கிழமை டாக்காவில் உள்ள இந்திய தூதரிடம் பேசிய அவர், இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு முன்பு இந்தியா 'சாதகமான சூழலை' உருவாக்க வேண்டுமெனக் கூறினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென்றும் அவரது ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்."

"முரண்பாடாக, சீனாவுடன் வெளிப்படையாக சமத்துவமற்ற உறவைப் பின்பற்றுவதில் ரஹ்மானுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஜூன் மாதம் அவர் சீனா சென்று, சீனாவுக்கு பணிந்து போவது போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும், பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானவை என்று விவரிக்கக்கூடிய பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்."

இருப்பினும், வங்கதேசத்தின் முன்னாள் அமெரிக்கத் தூதர் முகமது ஹுமாயூன் கபீர் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார். வங்கதேசம் மாறிவிட்டதாக அவர் கூறுகிறார்.

"கடந்த 2024ஆம் ஆண்டின் ஜூலை எழுச்சி, மக்களின் எதிர்பார்ப்புகளை மாற்றியுள்ளதாக" வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான தி டெய்லி ஸ்டாரில் ஆகஸ்ட் 16 அன்று வெளியான கட்டுரையில் ஹுமாயூன் கபீர் எழுதினார்.

"வங்கதேச மக்கள் இப்போது தங்கள் எதிர்பார்ப்புகளில் அதிக சுயச்சார்புடனும், அதிக லட்சியத்துடனும், உறுதியுடனும் உள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்கள் நியாயமானதாகவும் பெரும்பாலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பரவலாகக் கருதப்பட்டன. இதன் மூலம் பிஎன்பி மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது."

அதோடு, "இந்த இரண்டு உள்நாட்டு மாற்றங்களும் எல்லை தாண்டிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. வங்கதேசம் இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளை அணுகும் விதத்திலும் இவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இயல்பாகவே புதிய அரசின் தொலைநோக்குப் பார்வையையும் முன்னுரிமைகளையும் புரிந்துகொள்ள இந்தியா விரும்புகிறது. இந்தக் கேள்விகளை இறுதியில் முடிவுகளை எடுக்கும் பிரதமருடன் இந்தியா விவாதிப்பதே சிறந்ததாக இருக்கும். வங்கதேசம் யாருக்கும் அடிபணியவோ அல்லது யாருடைய கைப்பாவையாகவோ இருக்காது என்பதையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி - வங்கதேச பிரதமர் தாரிக்

பட மூலாதாரம், @ihcdhaka

படக்குறிப்பு, இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை ஆகஸ்ட் 10, 2026 அன்று சந்தித்தார்.

'இந்தியா தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

இந்தியா, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை, விரைவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 'அவுட்ரீச்' அமர்வில் பங்கேற்க அழைத்துள்ளது. எனினும், தாரிக் ரஹ்மான் இந்தியா வருவாரா என்பது குறித்து வங்கதேசம் இன்னும் உறுதி செய்யவில்லை. பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12,13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் சார்புடைய குரலாகக் கருதப்படும் 'ஆர்கனைசர்' என்ற ஆங்கில பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சேஷாத்ரி சாரி, தாரிக் ரஹ்மானின் நிலைப்பாடு குறித்து 'தி பிரின்ட்' இதழில், "எந்தவொரு நடைமுறை சிந்தனையுள்ள தலைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தனது நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருப்பார்" என்று எழுதியுள்ளார்.

"புது டெல்லிக்கு வருகை தருவதற்கான இந்தியாவின் அழைப்பை ஏற்றுக் கொள்வதில் வங்கதேச பிரதமர் தயக்கம் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது. உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ள அவரது ஆலோசகர்கள், இதைச் செய்யவிடாமல் தடுத்திருக்கலாம்."

மேலும், "நரேந்திர மோதி அரசின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையைப் பொறுத்தவரை, எதார்த்தவாதத்திற்குப் பதிலாக லட்சியவாதம் இடம்பிடித்துள்ளது. பரஸ்பர ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும் அண்டை நாடுகளுக்கு சலுகைகளை வழங்குவது இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது."

"நேபாளம் சீனாவை நோக்கியும், வங்கதேசம் சீனா மற்றும் பாகிஸ்தானை நோக்கியும் சாய்ந்த போதிலும், அவற்றின் கோரிக்கைகளை ஏற்க இந்தியா தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது."

"இதன் விளைவாக, பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பு கடுமையாகச் சீர்குலைந்துள்ளது. நிலம் மற்றும் கடல் வழியாக இந்தியாவின் பாதுகாப்புக்கு இது குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில், புதுடெல்லி தனது வெளியுறவுக் கொள்கையின் திசையை அவசரமாக மாற்றியமைத்து, டாக்காவின் பிடிவாதமான மற்றும் உறுதியான நிலைப்பாட்டைப் பரிசீலிக்க வேண்டும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், "அரசியல் பழிவாங்கலை மட்டுமே நம்பும் ஓர் அரசிடம் ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்காது என்ற தெளிவான, வலுவான செய்தியை அரசு டாக்காவுக்கு அனுப்ப வேண்டும்" எனவும் அவர் எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு