'லுங்கி, இட்லி, சாம்பார், பிராமணர்': பாலிவுட் சினிமா தமிழர்களை எவ்வாறு சித்தரிக்கிறது?

பட மூலாதாரம், UTV Motion Pictures, Red Chillies Entertainment
'ரா ஒன்' (2011) பாலிவுட் திரைப்படத்தின் நாயகன் சேகர் சுப்பிரமணியன் (ஷாருக்கான்) பிரிட்டனில் பணிபுரியும் ஒரு தமிழன். ஒரு கேம் டிசைனரான சேகருக்கு ஒரு வித்தியாசமான உணவுப் பழக்கம் இருக்கும், அது தயிருடன் நூடுல்ஸ் கலந்து சாப்பிடுவது.
அதேபோல, சென்னை எக்ஸ்பிரஸ் (2013) திரைப்படத்தில் கதாநாயகி மீனம்மா (தீபிகா படுகோன்) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது கிராமத்தில் எல்லோரும் ஆயுதங்களுடன் திரிவது போலவும், முரட்டுத்தனமானவர்களாக, ஆங்கிலம் தெரியாதவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். அதிகாலையில், பல இட்லிகளை சாப்பிடுவார்கள்.
அந்த ஊரில் காவல்துறைக்கு அதிகாரம் இருக்காது. நாயகன் ராகுல் (ஷாருக்கான்), எப்படி அந்த ஊரையும் மீனம்மாவின் குடும்பத்தையும் மீறி நாயகியோடு சேர்கிறான் என்பதே கதை.
இந்த இரு திரைப்படங்களிலும் தமிழ் கதாபாத்திரங்களைத் தாண்டி இன்னொரு பொதுவான அம்சம், 'ரஜினிகாந்த்'. குறிப்பாக, சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் 'தலைவருக்கு' சமர்ப்பணம் என வரும் 'லுங்கி டான்ஸ்' பாடல்.
'மீசையை முறுக்கி, அண்ணனை போல கண்ணாடி அணிந்து, இளநீருடன் லஸ்ஸி சேர்த்து'- இது அந்தப் பாடலின் தொடக்க வரிகள்.
"ஆனால், எந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீசையை முறுக்கி, லுங்கி மற்றும் கண்ணாடி அணிந்து, இளநீருடன் லஸ்ஸி சேர்த்து குடித்து, ஆடினார் எனத் தெரியவில்லை. ஆனால், அவருக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் 'லுங்கி டான்ஸ்' பாடல். உண்மை என்னவென்றால், வட இந்தியாவில் பலருக்கும் லுங்கிக்கும் வேஷ்டிக்கும் வித்தியாசம் தெரியாது என்பது தான்" என்கிறார் டெல்லியில் பல ஆண்டுகளாக வசிக்கும் தமிழரான அபிஷேக்.
"எனது மனைவி பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஆனால் நாங்கள் காதலிப்பதற்கு முன்பு வரை அவரைப் பொறுத்தவரை, தமிழ், மலையாளம், தெலுங்கு எல்லாமே ஒரே மொழி தான். தென்னிந்தியர்கள் அனைவரும் 'மதராஸிகள்' தான். அதுவே நான் சந்தித்த பல வட இந்தியர்களின் எண்ணமாக உள்ளது" என்கிறார் அபிஷேக்.
'லுங்கி வாலா' சர்ச்சை

பட மூலாதாரம், Salman Khan Films
சில நாட்களுக்கு முன்பாக, கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், அவை நடவடிக்கைகளின்போது பாஜக எம்.பி சுஷ்மிதா தேவ் தன்னை பலமுறை 'லுங்கி வாலா' என அழைத்ததாக குற்றம்சாட்டினார்.
அவைக்கு தான் வேஷ்டி அணிந்து வந்ததைக் குறிப்பிட்டு, "நான் ஒரு மலையாளி. கேரளாவைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், தென் மாநிலங்களை அவமதிக்கும் வகையில், பாஜக எம்.பி சுஷ்மிதா தேவ் 'லுங்கி வாலா' என, அழைப்பது ஏற்புடையதல்ல," எனக் கூறியிருந்தார்.
ஆனால், எந்தவொரு மாநிலத்தின் உடை அல்லது அடையாளத்தையும் அவமதிக்கும் நோக்கம் தமக்கு இருந்ததில்லை என்று கூறி சுஷ்மிதா தேவ் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
2023ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' என்ற திரைப்படத்தில், நாயகன் மற்றும் பலர் வேஷ்டி அணிந்து திரையில் ஆடுவார்கள். ஆனால் பாடல் வரிகள் முழுக்க 'லுங்கி' என்றே அது குறிப்பிடப்படும்.
"2019இல் இங்கு வேலைக்கு வந்தபோது நான் தினமும் இட்லி, சாம்பார், தயிர் தான் சாப்பிடுவேன், கேரளா என்பது சென்னைக்கு மிக அருகில் உள்ளது என்பதே எனது சக ஊழியர்களின் எண்ணமாக இருந்தது" எனக் கூறுகிறார் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பொறியாளரும், தமிழ்நாட்டின் திருநெல்வேலியை பூர்வீகமாகவும் கொண்டவரான தீக்ஷணா.
"பல விஷயங்களை அவர்களுக்கு சொல்லி புரிய வைத்தேன். ரஜினிகாந்த் மட்டுமே இங்கு பிரபலமான நடிகர் அல்ல, எல்லா திரைப்படங்களும் கவர்ச்சிப் பாடல்கள், அரிவாள் கலாசாரத்துடன் இருக்காது என்பதை தமிழ், மலையாள திரைப்படங்களை சிலவற்றைக் காட்டிச் சொன்னேன். இப்போது அவர்கள் எனக்கு சிறந்த தென்னிந்தியப் திரைப்படங்களைப் பரிந்துரை செய்கிறார்கள்" எனச் சொல்கிறார் தீக்ஷணா.

பட மூலாதாரம், Dharma Productions
"பாலிவுட் மூலம் தமிழ்நாட்டைப் பற்றி உருவாக்கப்படும் பரிச்சயமான பிம்பங்களில் 'வெள்ளை வேஷ்டி/சட்டை அல்லது பட்டுப் புடவை அணிந்து சத்தமாக, அதீத உணர்ச்சிகளுடன் பேசும் கதாபாத்திரங்கள், 'ஐயோ!' என்று அடிக்கடி யாராவது கத்துவது, 'கருமையான' வில்லன்கள், இட்லி, சாம்பார், தேங்காய், பில்டர் காபி, தயிர், மல்லிப்பூ மற்றும் பெரும்பாலான தமிழர்கள் நன்கு படித்த, பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள்' எனக் காட்டுவது, ஆகியவை அடங்கும்" என 'இந்தித் திரைப்படங்களில் தமிழ் கலாசாரத்தின் சித்தரிப்பு' என்ற ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
"குறிப்பாக பல பாலிவுட் திரைப்படங்களில் தமிழர்கள் என்றாலே பிராமணர்கள் என்று காட்டுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா.
இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடித்த முதல் திரைப்படமான 'ராஞ்சனா'வில் (2013) வாரணாசியில் வசிக்கும் ஒரு தமிழ் பிராமண குடும்பத்தின் பையனாக நடித்திருப்பார். அதுவே 'ஆதரங்கி ரே' (2021) திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் வெங்கடேஷ் விஸ்வநாத் ஐயர். கடந்தாண்டு வெளியான 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படத்தில் 'சங்கர் குருக்கள்' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.
"90களின் பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு நல்ல, விசுவாசமான நண்பன் என்ற வகையில் தமிழ் கதாபாத்திரங்கள் இடம்பெற்றன. பெரும்பாலும் அதில் மராட்டிய அல்லது மேற்கு வங்க நடிகர்கள் நடிப்பார்கள், காரணம் அந்தக் கதாபாத்திரம் மாநிறமாக அல்லது கருப்பாக இருக்க வேண்டும் என்று" என்கிறார் புனே திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போது பாலிவுட் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவருமான கேதார் குல்கர்னி.
"அதேபோல, பஞ்சாபி மக்கள் என்றால் அவர்கள் எப்போதும் அதீத உற்சாகத்தோடு இருப்பார்கள், 'பல்லே, பல்லே' என ஆடுவார்கள், சத்தமாக சிரிப்பார்கள் என்றும் பாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படுவது வழக்கம்" என்கிறார் கேதர்.
நடிகர் அமிதாப் பச்சனின் திரைவாழ்க்கையில் 1990ஆம் ஆண்டு வெளியான 'அக்னிபத்' மிக முக்கியமான திரைப்படம். அதில் ஆபத்தான சூழல்களில் இருந்து அமிதாப்பை காப்பாற்றும் ஒரு தமிழராக நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடித்திருப்பார். அத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் 'கிருஷ்ணன் ஐயர்'.
அதேபோல, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பாலிவுட் திரைப்படமான 'ஏக் துஜே கே லியே'-வில் (1981), நாயகன் வாசுதேவனும் ஒரு தமிழ் பிராமணனாக இருப்பார்.
ஆனால், இதில் விதிவிலக்குகளும் உள்ளன. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் நடிகர் ரஜினிகாந்த். பாலிவுட்டில் இவர் நடித்த பல திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றன, அதில் பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு வட இந்திய நபராகவே தோன்றியிருப்பார் ரஜினிகாந்த்.

பட மூலாதாரம், Raam Raj Kalamandir
இருப்பினும் ஓடிடி தளங்களின் வருகையால் தற்போது இந்தச் சித்தரிப்புகள் மாறிவருகின்றன என்கிறார் கேதார்.
"'ஃபேமிலி மேன்', 'ஃபர்ஸி' இணையத் தொடர்களில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் யதார்த்தமாக இருந்தது. இப்போது நேரடியாக தென்னிந்திய மொழிகளின் திரைப்படங்களை வட இந்திய மக்கள் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு 'புஷ்பா' திரைப்படத்திற்கு முன்பே, நடிகர் ஃபஹத் பாசில் அவரது மலையாள திரைப்படங்களுக்காக இங்கு பிரபலம்" என்கிறார் அவர்.
இருபதாண்டுகளுக்கு மேலாக பாலிவுட் திரையுலகில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கட்யானி, "பாலிவுட் எப்போதும் தென்னிந்தியாவை அல்லது தமிழர்களை தவறாக சித்தரிக்கவில்லை. ஆனால் நீண்ட காலமாக அது தென்னிந்தியாவை அதன் முழு பன்முகத்தன்மையுடன் பார்க்கவில்லை என்பது நிச்சயம்." என்கிறார்.
உதாரணத்திற்கு 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர்' (2002) திரைப்படத்தில் கொங்கனா சென் சர்மாவின் மீனாட்சி எஸ். ஐயர் என்ற தமிழ் பிராமணக் கதாபாத்திரம், மற்றும் 'கம்பெனி' (2002) படத்தில் நடிகர் மோகன்லாலின் 'வீரப்பள்ளி சீனிவாசன் ஐ.பி.எஸ்' கதாபாத்திரம் ஆகியவை அத்திரைப்படங்களுக்கு பெரும் பலம் சேர்த்தன, ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின எனக் குறிப்பிடுகிறார் அவர்.
"சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொச்சியை வெறும் 'தென்னிந்தியா' என்று சொல்வது, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகியவற்றை ஒரே கலாசாரமாக கருதுவது போன்றது அல்லது வெறுமனே வட இந்தியா என சொல்வது போல" என்றும் அவர் கூறுகிறார்.
தமிழ் சினிமா வட இந்தியர்களை எப்படி சித்தரித்துள்ளது?

பட மூலாதாரம், Vishal Film Factory
"பாலிவுட், தனித்துவமான கலாசார நுணுக்கங்களைப் புறக்கணித்து, வரலாற்று ரீதியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற பல்வேறு தென்னிந்திய மாநிலங்களை ஒரே மாதிரி 'மதராஸி' என்ற அடையாளத்திற்குள் சித்தரிக்கிறது" என வியன்னா பல்கலைக்கழகத்தில் 2016இல் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
அதேசமயம், "தமிழர்களை சுரண்டக்கூடிய அல்லது ஏமாற்றக்கூடிய வட இந்திய கதாபாத்திரங்கள் பல தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன" என்றும் அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
"'சேட் ஜி' என்ற கதாபாத்திரம் எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம் அல்லவா. அவர்கள் அதிக வட்டி வாங்குபவர்கள், அவர்களிடம் கடன் வாங்கினால் வாழ்க்கையே வட்டி கட்டி சீரழிந்து விடும் என்றெல்லாம் பல தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுகின்றன" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா.
"'பூஜை' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் பிகார் மாநிலத்திலிருந்து வந்து கோவையில் கூலிப்படை வைத்து நடத்துபவன், வட்டி தொழில் செய்பவன் என சித்தரிக்கப்படும். அதேபோல பிகார் மாநிலமே குற்றங்கள் மிக சகஜமாக நடக்கும் ஒரு மாநிலம், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு கூட அங்கு பாதுகாப்பு இல்லை என காட்டப்படும். எனது மனைவி பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் என்பதால், அவர் இந்தப் படத்தை பார்த்துவிட்டு இப்படியெல்லாமா காட்டுவார்கள் என என்னிடம் கேட்டார்" என்கிறார் டெல்லியில் வசிக்கும் தமிழர் அபிஷேக்.

பட மூலாதாரம், Prasanna Rs/Instagram
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான ஆர்.எஸ்.பிரசன்னா, ஆமிர்கான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சித்தாரே சமீன் பர்' (2025) திரைப்படத்தை இயக்கியவர். அதற்கு முன் அவர் இயக்கிய 'சுப மங்கல் சாவ்தான்' (2017) திரைப்படமும் வெற்றி பெற்றது.
பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.எஸ்.பிரசன்னா, "90களின் தமிழ் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்து 'ஆப்பிரிக்க காட்டுப் பன்றி' என அழைப்பார். காரணம், அந்த நபர் சுருட்டை முடியுடன், கருப்பாக இருப்பார். இதை இன்று ஒரு திரைப்படத்தில் வசனமாக வைத்து, அதை ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நபர் ஓடிடி தளத்தில் பார்த்தால் என்ன நினைப்பார்?" என்கிறார்.
"ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பு நமது மொழி ரசிகர்கள் மட்டும் தானே பார்ப்பார்கள் என சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. இப்போது அந்த எல்லை விரிந்துவிட்டது." என்று அவர் கூறுகிறார்.
"பல வருடங்களாக பாலிவுட் திரையுலகில் நான் உள்ளேன். ஆனால் தமிழன் என்பதற்காக என்னிடம் எந்தப் பிரிவினையும் காட்டப்படவில்லை. இங்கு திறமைக்கு மட்டுமே மரியாதை. தென்னிந்திய சித்தரிப்பு தொடர்பான சிக்கல்கள் கடந்த காலத்தில் இருந்தன, ஆனால் இப்போது அவை பெருமளவு குறைந்துவிட்டன" என்கிறார் ஆர்.எஸ்.பிரசன்னா.
"சர்ச்சைக்குரிய அல்லது ஒரே மாதிரியான சித்தரிப்புகள் என்பது இயக்குநர்கள் அல்லது திரைக்கதை எழுத்தாளர்களின் தவறு" என்கிறார் பாலிவுட் பத்திரிகையாளர் சஞ்சய் கட்யானி.
"ஒரு திரைப்படத்திற்கு போதுமான ஆய்வுகளை செய்யாமல், பொதுவான தமிழர் அல்லது தென்னிந்திய 'பிம்பங்களை' வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதக்கூடாது. இது வட இந்தியக் கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை எழுதும் தென்னிந்திய படைப்பாளர்களுக்கும் பொருந்தும்" என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































