பசிபிக் பெருங்கடலில் படகு கவிழ்ந்ததால் ஐஸ் பெட்டியில் 5 நாள் தத்தளித்த மீனவர்கள்

பட மூலாதாரம், Mexican Navy
- எழுதியவர், பிபிசி முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
மெக்சிகோவில் ஒரு குளிரூட்டும் பெட்டியைப் பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 5 நாட்கள் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19) மெக்சிகோ கடற்படையினர் அவர்களை மீட்கும் வரை, அவர்கள் அந்தப் பெட்டியின் உதவியுடன் தான் கடலில் மிதந்து தப்பித்துள்ளனர்.
இது மெக்சிகோவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள சியாபாஸ் மாகாணம், டோனாலா பகுதியைச் சேர்ந்த 53 வயதான டேனியல் குரேரோ மார்டினெஸ் மற்றும் 32 வயதான ஜோஸ் லூயிஸ் போர்டெலாஸ் ஆகியோரின் கதையாகும்.
மீட்கப்பட்ட பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய மார்டினெஸ், "என் குடும்பத்தினரை நான் மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை" என்று கூறினார்.
ஐந்து நாட்களாக உணவு இல்லாததால் நீர்ச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மீனவர்கள், தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து ஓய்வெடுத்து வருகின்றனர்.
தேடுதல் வேட்டையை விரிவுபடுத்துவதற்காக கடற்படையினர் 'டிரிநாமியல்' (Trinomial) எனப்படும் ஒரு திட்டத்தைப் பயன்படுத்தினர். இத்திட்டத்தில் ஒரு ரோந்துக் கப்பல், ஒரு இடைமறிக்கும் கப்பல் மற்றும் ஒரு விமானம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது.
மீனவர்கள் தங்களிடம் இருந்த ஒரு சாக்குப் பையை அசைத்து விமானத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததாகப் பின்னர் தெரிவித்தனர்.
கடற்படை வெளியிட்டுள்ள காணொளிகளில், பல நாட்கள் கடலில் மிதக்க உதவிய அந்த நீல நிறக் குளிரூட்டும் பெட்டியை அந்த இரு மீனவர்களும் பிடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

பட மூலாதாரம், Armada de México
பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பு
பரேடோன் என்பது மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மீனவ கிராமமாகும். இது கடலுக்கும் அப்பகுதியின் காயல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியின் பொருளாதாரம் பெரும்பாலும் இறால், மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளது.
அங்கிருந்து ஆகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை டேனியல் மற்றும் ஜோஸ் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அங்குள்ள பல குடும்பங்களுக்குப் பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பதுதான் பிரதான வருமான ஆதாரமாக உள்ளது.
சனிக்கிழமை அவர்கள் கடைசியாக நிலப்பகுதியுடன் தொடர்பில் இருந்தனர்.
அவர்கள் காணாமல் போனதை அடுத்து, குடும்பத்தினர், சக மீனவர்கள் மற்றும் அப்பகுதியின் மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து, அவர்களைக் கண்டுபிடிக்கக் கடற்படையின் உதவியைக் கோரினர்.
உள்ளூர் ஊடகச் செய்திகளின்படி, அதிகாலையில் வந்த ஒரு 'பெரிய அலை' எதிர்பாராத விதமாக அவர்களின் படகின் மீது மோதி அதைக் கவிழ்த்துவிட்டது. அலை மோதியபோது, அவர்கள் சில பொருட்களையாவது காப்பாற்ற முயன்றனர். ஆனால், "சில நொடிகளிலேயே" அவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கத் தொடங்கினர். ஒரு குளிரூட்டும் பெட்டி மற்றும் சில பெட்ரோல் கேன்களை மட்டுமே அவர்களால் பற்றிக்கொள்ள முடிந்தது.
வழக்கமாகப் பிடிக்கும் மீன்களை ஐஸ் கட்டிகளுடன் பாதுகாத்து வைக்கப் பயன்படும் அந்தப் பெட்டி, இறுதியில் அவர்களைக் காப்பாற்றும் ஒரு தற்காலிக உயிர் காக்கும் படகாக மாறியது.

பட மூலாதாரம், Armada de México
'5 நாட்கள் உணவும் நீரும் இல்லாமல்'
அந்த ஐந்து நாட்களும் தங்களுக்குக் குடிநீரோ உணவோ கிடைக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து சூரிய வெப்பத்தில் இருந்த நிலையில் மழையும் பெய்யவில்லை; அதனால் அவர்களால் மழைநீரைக் கூட சேகரிக்க முடியவில்லை.
நிலப்பகுதியிலிருந்து 240 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலின் பகுதிக்கு அந்த மீனவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். நிலத்தின் அடையாளமே தெரியாத அந்த ஆழ்கடலில் அவர்களைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான பணியாகும்.
பெரிய அளவிலான தொழில்முறை மீன்பிடிப்பைப் போலல்லாமல், பல பாரம்பரிய மீனவர்கள் சிறிய படகுகளிலேயே நீண்ட தூரம் கடலுக்குச் செல்கின்றனர். இதனால் அவர்கள் கடலின் தட்பவெப்ப நிலை மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
மீட்புப் பணியை மெக்சிகோ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், படகு மூழ்கியது தொடர்பான எந்தவொரு தொழில்நுட்ப விசாரணை அறிக்கையையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை.
தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் சுருக்கமாகப் பேசியதைத் தவிர, நடுக்கடலில் நடந்த இந்த விபத்து குறித்த வேறு எந்தத் தகவலையும் டேனியல் மற்றும் ஜோஸ் ஆகியோர் இதுவரை வெளியிடவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































