ஆந்திரா: பள்ளியில் மயங்கி விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - ஆசிரியர் அடித்தது காரணமா?

கே.ஜி.ஹெச் பிணவறை அருகில் பிரணய் தேஜாவின் பெற்றோர்
படக்குறிப்பு, கே.ஜி.ஹெச் மருத்துவமனையின் பிணவறை அருகில் பிரணய் தேஜாவின் பெற்றோர்
    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுவன், பள்ளியிலேயே உயிரிழந்துள்ளார்.

ஆசிரியர் தாக்கியதாக சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வகுப்பறையிலேயே சிறுவன் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.

அந்த வகுப்பறையில் உண்மையில் என்ன நடந்தது? சிறுவன் எதற்காக மயங்கி விழுந்தான்? பள்ளி ஊழியர்கள் உடனடியாக என்ன நடவடிக்கை எடுத்தனர்? காவல்துறை கூறுவது என்ன?

சிறுவனின் மரணத்தில் நடந்தது என்ன ?

ஆறு வயது சிறுவன் பிரணய் தேஜா வழக்கம் போல வியாழக்கிழமை காலையில் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

வகுப்பு ஆசிரியர் (பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரின் பெயரை வெளியிடவில்லை) காலை 11.30 மணிக்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அனைத்து குழந்தைகளின் வீட்டுப் பாடங்களையும் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் பிரணய் தேஜாவின் முறை வந்தது.

வீட்டுப் பாடத்தை முடிக்காத காரணத்தால் ஆசிரியர் கண்டித்துக் கொண்டிருந்தபோதே, பிரணய் தேஜா ஆசிரியர் மீது அப்படியே மயங்கிச் சரிந்ததாக சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.

பள்ளி ஊழியர்கள் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், சிறுவனின் மரணத்திற்குக் ஆசிரியரின் செயல்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டி குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரணய் தேஜாவின் பெற்றோர்.

"இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும், சிறுவனின் மரணத்திற்கான துல்லியமான காரணம் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கையின் மூலமே உறுதியாகத் தெரிய வரும்" என்று விசாகப்பட்டினம் 'ஒன் டவுன்' காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

மதியம் 3 மணியளவில் கே.ஜி.ஹெச் மருத்துவமனைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்கள், வீட்டுப் பாடத்தைச் செய்யவில்லை என்ற காரணத்திற்காக ஆசிரியர் சிறுவனை கடுமையாக கண்டித்துத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, மாணவரின் மரணம் தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆசிரியர் தரப்பு விளக்கத்தை அறிய பிபிசி முயன்றபோதிலும், பள்ளி நிர்வாகமோ அல்லது கல்வித் துறை அதிகாரிகளோ அவரது இருப்பிடம் குறித்த எந்தத் தகவலையும் வழங்கவில்லை. இதனால் அந்த ஆசிரியரையோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களையோ பிபிசியால் தொடர்புகொள்ள முடியவில்லை.

சிறுவனின் தந்தை கிருஷ்ணபிரசாத்
படக்குறிப்பு, சிறுவனின் தந்தை கிருஷ்ணபிரசாத்

'சுற்றுலா சென்றதால் வீட்டுப் பாடம் முடிக்கவில்லை' - சிறுவனின் தந்தை

"நாங்கள் மூன்று நாட்கள் ஆன்மீக சுற்றுலா சென்றதால் மகன் பள்ளிக்குச் செல்லவில்லை. அதனால் அந்த மூன்று நாட்களுக்கான வீட்டுப் பாடத்தையும் அவனால் முடிக்க முடியவில்லை" என்று மாணவரின் தந்தை கிருஷ்ணபிரசாத் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "வியாழக்கிழமையன்று வீட்டுப்பாடம் பற்றி விசாரித்த ஆசிரியர், அதை முடிக்காததால் குழந்தையைக் கண்டித்துத் தாக்கியது சிசிடிவி காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் சுற்றுலா சென்றதால்தான் அவனால் வீட்டுப் பாடத்தை முடிக்க முடியவில்லை. அதற்காகத்தான் ஆசிரியர் அவனைத் தாக்கியுள்ளார்" என்று கூறினார்.

"மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும்" அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

"உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று பிபிசியிடம் பேசிய விசாகப்பட்டினம் வருவாய்க் கோட்டாட்சியர் திலீப் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

குடும்பத்தினருடன் சிறுவன் பிரணய் தேஜா (கோப்புப் படம்)

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, குடும்பத்தினருடன் சிறுவன் பிரணய் தேஜா (கோப்புப் படம்)

வழக்கு போட மறுத்த பெற்றோர்

இந்த விவகாரத்தில் மாணவர் மயங்கியதும், பள்ளி நிர்வாகத்தினர் சிறுவனை அருகிலுள்ள கே.ஜி.ஹெச் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அதற்குள் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் தீவிரம் அதிகரித்த காரணத்தால் பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டது. இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதற்காக பெற்றோரை அணுகினர். ஆனால் அவர்கள் வழக்கு வேண்டாம் என மறுத்துவிட்டுத் தனது மகனின் உடலை வழங்கினால் மட்டும் போதும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசவும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து இந்தச் சம்பவத்தின் தீவிரம் குறித்து பெற்றோரிடம் விளக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வழக்குப் பதிவு செய்ய சம்மதித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
படக்குறிப்பு, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கல்வித்துறை அமைச்சர் கூறுவது என்ன?

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ் சிறுவனின் மரணம் குறித்துத் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் சிறுவன் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

"இந்தத் துயரமான வேளையில் அவர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருக்க வேண்டும். அவர்கள் இழந்த குழந்தையை யாராலும் மீண்டும் கொண்டு வர முடியாது. அவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை எதையும் கொண்டு ஈடுசெய்ய முடியாது. அரசு எப்போதுமே அவர்களுக்குத் துணை நிற்கும்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் பெற்றோரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.

'மருத்துவ அறிக்கை கோரப்பட்டுள்ளது' - காவல்துறை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா' என்று விசாகப்பட்டினம் மகாராணிப்பேட்டையில் உள்ள 'ஒன் டவுன்' காவல்துறையிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.

"சம்பவம் நடந்த பிறகு பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வந்து, பள்ளி நிர்வாகத்தின் மீதும் அங்குள்ள ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்" என்று காவல் ஆய்வாளர் வரபிரசாத் தெரிவித்தார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், "அந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் பதிவாகியுள்ள காட்சிகள் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். தற்போது உடற்கூறாய்வு அறிக்கையைக் கோரியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

"உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். சம்பவம் நடந்தவுடனேயே வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனக் கோரிய பெற்றோர்கள், மாலையில் வழக்கு வேண்டாம் என்றனர். இருப்பினும், காவல் துறையாக நாங்கள் சட்டத்தின்படி இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பது குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. தற்போது பெற்றோர்களின் புகாரின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று 'ஒன் டவுன்' காவல் ஆய்வாளர் வரபிரசாத் விளக்கினார்.

 மாவட்ட கல்வி அலுவலர் பிரேம்குமார்.
படக்குறிப்பு, மாவட்ட கல்வி அலுவலர் பிரேம்குமார்.

மாவட்டக் கல்வி அலுவலர் கூறுவது என்ன?

"இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருப்பதாக" பிபிசியிடம் தெரிவித்தார் மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் குமார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கல்வித் துறை தரப்பில் ஆரம்பக்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளோம், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில், ஆசிரியை அந்தச் சிறுவனிடம் கோபமாகப் பேசுவது போலவும், அவனது கன்னத்தில் ஒருமுறை அடித்தது போலவும் பதிவாகியுள்ளது" என்று கூறினார்.

"பயம் மற்றும் அடிபட்டதன் காரணமாக அந்தச் சிறுவன் இறந்துவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் உடல்நல காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதா?' என்பது குறித்து உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே தெரிய வரும்" என்றார் அவர்.

மேற்கொண்டு பேசிய அவர், "அந்த அறிக்கை வந்தவுடன் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை அனுப்பி, ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் குறிப்பிட்டார்.

உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்திருக்கும் அதிகாரிகள்

இந்த வழக்கில் உடற்கூறாய்வு அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கும், அந்த அறிக்கை கிடைக்க எத்தனை நாட்களாகும் என்பதையும் காவல் ஆய்வாளர் வரபிரசாத் பிபிசியிடம் விளக்கினார்.

"பொதுவாக சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணைப் பொறுப்பேற்றதும், அவர்களுடைய கோரிக்கையின் பேரில் மருத்துவர்கள், தடயவியல் மற்றும் நோயியல் நிபுணர்கள் உடலைப் பரிசோதித்து மாதிரிகளைச் சேகரிப்பார்கள்."

"அந்த மாதிரிகளை காவல்துறையினரே சம்பந்தப்பட்ட தடயவியல் அல்லது நோயியல் ஆய்வகத்திற்கு அனுப்புவார்கள். இதற்கான அறிக்கை வந்த பிறகே உடற்கூறாய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும். இந்த முழுமையான செயல்முறை முடிவடையக் குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை ஆகும். ஆனால், வழக்கின் தீவிரத்தன்மையைப் பொறுத்து இந்தக் கால அளவு மாறுபடலாம்" என்று அவர் கூறினார்.

"இந்த அறிக்கை வந்த பிறகுதான் சிறுவனின் மரணத்திற்கான துல்லியமான காரணங்கள் தெரிய வரும். 'குழந்தையின் உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளனவா? அல்லது திடீரென ஏதேனும் உடல்நலப் பிரச்னை ஏற்பட்டதா?' என்பன போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள அந்த அறிக்கை அவசியம். அது வந்த பிறகு அதன் அடிப்படையில் விசாரணை தொடரும்" என்று காவல் ஆய்வாளர் வரபிரசாத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு