"அதிவேக ஸ்பின்னராக" மிரட்டும் க்ருனால் பாண்ட்யா - லக்னௌ அணி ஆர்சிபியிடம் ஆட்டத்தை இழந்தது எங்கே?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், நிதீஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐ.பி.எல் தொடர்களில் பொதுவாகவே மூன்று வாரங்கள் கழித்துதான் களம் சூடுபிடிக்கும். ஒரு வெற்றி பெற்றாலே புள்ளிப்பட்டியலில் மூன்று நான்கு இடங்கள் முன்னேறிவிடலாம் எனும் அளவிற்கு நிறைய அணிகள் சம புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதனால் அடுத்து ஆடப்பட்டும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாக மாறும். இந்தமுறையும் அப்படியே.

இப்போது புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா தவிர மீதி அனைத்து அணிகளும் தங்கள் வெற்றிக்கணக்கை தொடங்கிவிட்டன. நான்கு அணிகள் தலா நான்கு புள்ளிகளோடு பிளே ஆப் இடத்திற்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன. அதில் ஒரு அணியான லக்னௌவிற்கும் புள்ளிப்பட்டியலில் எந்தவித இடையூறும் இன்றி மேலே அமர்ந்திருக்கும் பெங்களூருவிற்குமான போட்டி நேற்று (ஏப்ரல் 15).

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சிறிய மைதானமான சின்னச்சாமியில் பந்து பேட்டில் பட்டாலே சிக்ஸ் பறக்கும். இங்கு இதற்கு முன்னால் ஆடியிருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் 200 ரன்களைத் தாண்டியது ஆர்.சி.பி. எனவே பலவீனமாக இருக்கும் லக்னௌ பவுலிங்கை பயன்படுத்தி எளிதாக சேஸ் செய்துவிடலாம் என்பதே கணக்கு.

கடந்த ஆட்டத்திலேயே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாதி போட்டி வெளியே அமர்ந்திருந்த கோலி இந்தமுறை இம்பாக்ட் பிளேயர். கடந்த போட்டியில் ஆடாமல் ஓய்வெடுத்த ஹேசல்வுட் இந்தமுறை அணிக்குள்.

ஆனால், லக்னௌ அணியில் எந்த மாற்றமும் இல்லை.

மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்

ஐ.பி.எல் 2026, லக்னௌ , பெங்களூரு, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்க்ரம் (கோப்புப் படம்)

கடந்த சீசனில் லக்னௌவை காப்பாற்றி நிறைய போட்டிகளில் கரை சேர்த்ததே அந்த அணியின் ஓப்பனிங் இணையான மிட்ச் மார்ஷும் மார்க்ரமும் தான். இருவரும் இணைந்து 13 போட்டிகளில் அடித்த மொத்த ரன்கள் 1072. மொத்தமாய் லக்னௌ அணி எடுத்த ரன்களில் இது 42%.

இந்தமுறை நான்கு ஆட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாகவே 183 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும். லக்னௌ பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

இந்த ஆட்டத்திலும் 12 ரன்களுக்கு அவுட்டானார் மார்க்ரம். லெக் சைடில் வந்த புள் டாஸ் பாலை அவர் தொட, பேட் முனையில் பட்டு அப்படியே எதிர்ப்பக்கம் கவரில் கேட்ச் ஆனது பந்து. ஒன் டவுனில் இறங்கிய பன்ட்டும் ஹேசல்வுட்டின் ஓவரில் தொடர்ந்து இருமுறை அவரது இடது முழங்கையில் பட்டு ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.

இப்போது அணியின் ரன்குவிப்பை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு பூரன் தலையில். கடந்த சீசனில் ஓப்பனர்களை போலவே பூரனும் எக்கச்சக்க ரன்களை குவித்தார். 14 போட்டிகளில் 527 ரன்கள். ஆனால் அதன் பின் ஆடிய SA20, MLC, CPL, ILT20 என எந்த லீக் தொடரிலும் அவரால் ரன் அடிக்க முடியவில்லை.

இந்த சீசனிலும் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் சேர்த்து 41 ரன்களே அடித்திருக்கிறார். இந்தப் போட்டியில் அவர் நின்று ஆடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஒரு ரன்னில் போல்ட்டானார். அவுட்டாக்கும்போது அவரின் ஸ்ட்ரைக் ரேட் 14.28

'நிக்கி ஃபார்மில் இல்லையென்பது உண்மைதான். ஆனால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடும்போது அவர் நிச்சயம் ஃ பார்மிற்கு வந்துவிடுவார்' என சில நாட்களுக்கு முன் சொன்னார் லக்னௌ அணியின் இயக்குனர் டாம் மூடி.

பெங்களூரூவை விட பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் இனி பூரனுக்குக் கிடைப்பது சந்தேகம்தான்.

பவுலிங்கில் மிரட்டும் பாண்ட்யா

Pankaj Nangia/Getty Images

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மும்பைக்காக ஆடத்தொடங்கிய முதல் சில ஆண்டுகளில் சீசனுக்கு பத்து விக்கெட்களுக்கு குறையாமல் எடுப்பார் க்ருனால் பாண்ட்யா. ஆனால் நாள் ஆக, ஆக அவரின் ஃபார்ம் மோசமானது. 2020 தொடங்கி 2025 வரையிலான ஐ.பி.எல்லில் 64 போட்டிகளில் ஆடி வெறும் 36 விக்கெட்களே வீழ்த்தினார். அவரின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறத்தாழ முடிவிற்கு வந்துவிட்டது என எல்லோரும் அவதானித்தவேளையில் தான் நிகழ்ந்தது அவரின் பெங்களூரு 'என்ட்ரி'. ஆர்.சி.பிக்காக ஆடிய முதல் சீசனிலேயே 17 விக்கெட்கள்.

சைட் ஆர்ம் ஆக்ஷனில் பந்தை பேட்ஸ்மேனின் முழங்காலுக்கு கீழே இறக்கி அவர்களை தடுமாறச் செய்வது, மிதவேகத்தில் கட்டர்கள் வீசி பேட்ஸ்மேனை பதற்றமாக்குவது, எதிர்பாரா நேரத்தில் பவுன்சர் வீசி பேட்ஸ்மேனை ஆடத்தூண்டி அவுட்டாக்குவது என இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய வேரியேஷன்களை கற்றுத் தேர்ந்து மிரட்டுகிறார். இன்றைய தேதியில் ஒரு அதிவேக ஸ்பின் பவுலராக இருக்கிறார் க்ருனால் பாண்ட்யா, அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ.

இந்தமுறையும் மிட்ச் மார்ஷ், அப்துல் சமத் என இரு விக்கெட்கள் அவருக்கு. ஸ்கோர் 12 ஓவர்களில் 90/4. அதன்பின் லக்னௌ பேட்ஸ்மேன்கள் எவ்வளவோ முயன்றும் பந்தை தொடர்ந்து பவுண்டரிக்கு அனுப்பவே முடியவில்லை. மற்றொரு பக்கம் விக்கெட்களும் சீராய் விழுந்துகொண்டே இருக்க, இதுவரை எழவே முடியவில்லை லக்னௌ அணியால். 20 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 146/10. கடந்த போட்டியில் காயம்பட்டாலும் இந்தமுறை சிறப்பாக பந்துவீசிய ரஷீக் தாருக்கு நான்கு விக்கெட்கள்.

'நின்று ஆடிய சேஸ் மாஸ்டர்... எளிதான வெற்றி'

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

எட்டு பேட்ஸ்மேன்களைக் கொண்ட நெடிய லைன் அப் பெங்களூரு அணியுடையது. அதனால் பேட்டிங் தொடங்கும்போதே அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு 76 சதவீதமாக இருந்தது. பந்தைக் கணிக்கமுடியாமல் தடுமாறிய சால்ட் ஏழே ரன்களில் வெளியேறினார். கொஞ்ச நேரத்தில் படிக்கல்லும். ஆனால் இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வேலை சேசிங் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார் கோலி.

டீப் மிட்விக்கெட், கவர், பைன் லெக், எக்ஸ்ட்ரா கவர் என பிரின்ஸ் யாதவ்வின் ஒரே ஓவரில் மைதானம் முழுக்கப் பவுண்டரிகளாக பாய்ந்தது பந்து. மறுமுனையில் கேப்டன் படிதாரும் சிக்ஸர்களாக பறக்கவிட எளிதானது இலக்கு. ஒருகட்டத்தில் அரைசதத்தை ஒரு ரன்னில் பறிகொடுத்துவிட்டு கோலி வெளியேற அதன்பின் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா காத்திருக்கவெல்லாம் இல்லை. திக்வேஷ் ரதியின் ஒரே ஓவரில் 23 ரன்கள். எளிதாக 15 ஓவர்களில் இலக்கை எட்டியது பெங்களூரு.

யார் ஆட்டநாயகன்?

ஓப்பனிங் பேட்ஸ்மேன் மார்க்ரமை பவர்பிளேவிற்குள்ளேயே வீழ்த்தியது, நன்றாக நேரமெடுத்து ஆடிக்கொண்டிருந்த ஆயுஷ் படோனி, முகுல் சௌத்ரி ஆகியோரை பெவிலியன் அனுப்பியது என ஒரு பவுலராக தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார் ரஷீக் தார். நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்கள். ஆனால் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்த ஹேசல்வுட்டிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது பலரையும் வியப்படைச் செய்தது.

பெங்களூருவுக்கு வெற்றி, லக்னௌவிற்கு கேள்விக்குறி

சரியாக ஆடவில்லை என லக்னௌவால் வெளியேற்றப்பட்ட க்ருனாலுக்கு மறுவாழ்வு கொடுத்தது, கடந்த முறை இரண்டே போட்டிகளில் ஆடியிருந்தாலும் ரஷீக் தாரை விட்டுக்கொடுக்காமல் அவரை ஏலத்திற்கு முன் தக்கவைத்தது என பெங்களூரு அணி நிர்வாகம் தன் பவுலர்கள் மேல் வைத்த நம்பிக்கை அவர்களுக்கு இந்த ஐந்து போட்டிகளிலும் கைகொடுத்திருக்கிறது.

மறுமுனையில் லக்னௌ அணியில் மெகா ஏலத்திலும் கடந்த மினி ஏலத்திலும் பல கோடி ரூபாய் கொடுத்து தக்கவைக்கப்பட்ட மயாங்க் யாதவ் இன்னும் காயத்திலிருந்து மீண்டு முழுமையாக தயாராகவில்லை. அவர்கள் மலை போல் நம்பியிருந்த இன்னொரு பவுலரான மொஹ்சின் கானும் தொடர் காயங்களால் தொடர்ந்து ஆடமுடிவதில்லை.

அவேஷ் கான் கடந்த சீசனில் விடைபெற்றவர், அதன்பின் ஒரு வருடம் கழித்து இப்போதுதான் பவுலிங் போடவே தொடங்குகிறார். கடந்த சீசனில் லக்னௌ அணி நிர்வாகம் கண்டெடுத்த திக்வேஷ் ரதி இந்த சீசனில் ரன்களை வாரி வழங்குகிறார். 24 வயதான பிரின்ஸ் யாதவ் மட்டுமே இப்போது லக்னௌ அணியில் விக்கெட்கள் எடுக்கக்கூடிய ஒரே பவுலர்.

டாப் ஆர்டர் பேட்டிங்கும் இல்லாமல் சீரான இடைவெளியில் விக்கெட்கள் எடுக்கக்கூடிய, ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய பவுலர்களும் இல்லாமல் திணறுகிறது லக்னௌ அணி. இந்த இரண்டு பிரிவுகளும் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் மட்டுமே லக்னௌவிற்கு ப்ளே ஆப் வாய்ப்புகள் சாத்தியம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு