போப் பதினான்காம் லியோவை விமர்சிக்கும் டிரம்ப் - சர்ச்சைக்கு காரணமான 3 பிரச்னைகள்

போப் லியோ - அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரான் போர் விவகாரத்தில் டிரம்பின் பெயரை போப் லியோ நேரடியாகக் குறிப்பிடுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, வத்திக்கானுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் போப் பதினான்காம் லியோ ஆகிய இருவரும் வழக்கத்திற்கு மாறான வெளிப்படையான மோதலில் ஈடுபட்டுள்ளனர். முதல் முறையாக போப், டிரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசியதை அடுத்து இந்த மோதல் வெடித்துள்ளது.

முன்னாள் கார்டினல் ராபர்ட் ப்ரீவோஸ்ட்டாகிய 14-ஆம் லியோ, 2025 மே மாதம் போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பாகவும் அவர் கருதப்படுகிறார்.

டிரம்ப் நிர்வாகத்தை அடிக்கடி வெளிப்படையாக விமர்சித்து வந்த தனது முன்னோடி போப் பிரான்சிஸை விட, இவர் ஆரம்பத்தில் அமைதியான அணுகுமுறையையே கடைபிடித்தார்.

இருப்பினும், வத்திக்கான் மற்றும் வெள்ளை மாளிகை இடையிலான பதற்றம் கடந்த பல மாதங்களாக அதிகரித்து வந்தது.

இந்நிலையில் தற்போதைய நிகழ்வு, அவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகக் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளியுறவுக் கொள்கை

தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் போப்பை கடுமையாக விமர்சித்து டிரம்ப் நீண்ட பதிவை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த மோதல் ஞாயிற்றுக்கிழமையன்று பகிரங்கமாக வெடித்தது. அதில் போப்பை "குற்றவியல் விஷயத்தில் பலவீனமானவர் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்" என்று டிரம்ப் சாடினார்.

"இரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை சரி என்று நினைக்கும் ஒரு போப் எனக்குத் தேவையில்லை" என டிரம்ப் அப்பதிவில் கூறியிருந்தார்.

மேலும், "அமெரிக்காவிற்குள் பெருமளவு போதைப்பொருட்களை அனுப்பிக்கொண்டிருந்த, அதைவிட மோசமாக, கொலைகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கொலையாளிகள் உட்பட தனது சிறைகளில் இருந்தவர்களை நமது நாட்டிற்குள் அனுப்பிக்கொண்டிருந்த வெனிசுவேலாவை, அமெரிக்கா தாக்கியதை ஒரு மோசமான விஷயமாகக் கருதும் ஒரு போப் எனக்கு வேண்டாம்"என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கிடையில், டிரம்ப் தன்னை இயேசு போன்ற ஒரு உருவத்தில் சித்தரித்து, ஒரு மனிதனை "குணப்படுத்துவது" போன்ற ஒரு படத்தை பதிவிட்டார்.

இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மதத் தலைவர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்தப் படம் நீக்கப்பட்டது.

அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கோரிக்கைகளுக்கு இரான் இணங்காவிட்டால், "இரானிய நாகரிகத்தையே அமெரிக்கா அழித்துவிடும்" என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனை போப் லியோ கண்டித்ததைத் தொடர்ந்து டிரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.

டிரம்பின் அச்சுறுத்தல் "உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று வர்ணித்த போப், "அமைதிக்காக பாடுபடுமாறு" அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கத்தோலிக்கர்களை வலியுறுத்தினார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பே போப் லியோ நேரடியாக டிரம்பின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

"அதிபர் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகக் கூறியிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அமைதிக்கான ஒரு வழியைத் தேடுவார் என்று நம்புகிறேன்" என்று மார்ச் 31 அன்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, 70 வயதான போப் மீண்டும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருமாறு தலைவர்களைக் கேட்டுக்கொண்டதோடு,போர்களை தூண்டிவரும் "அனைத்தையும் கட்டுப்படுத்தும் மாயை" என்று அவர் விவரித்த மனநிலையையும் அவர் கண்டித்தார்.

போப் பதினான்காம் லியோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தனது கிறிஸ்துமஸ் பிரசங்கத்தில், போப் பதினான்காம் லியோ "மழை, காற்று மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் உள்ள கூடாரங்கள்" பற்றிப் பேசினார்.

இரான் தொடர்பாக போப் லியோ எடுத்துள்ள நிலைப்பாடு, அவர் மற்ற விஷயங்களில் எடுத்துள்ள நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாகும்.

கடந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, காஸாவில் உடனடி போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுதலை மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகளுக்கு போப் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆகஸ்ட் 2025-இல், பாலத்தீனியர்கள் மீதான "கூட்டுத் தண்டனை" மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சியையும் அவர் கண்டித்ததோடு, காஸாவில் உள்ள சூழலை "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும் விவரித்தார்.

உலகில் வாழும் 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவரான போப், தனது கிறிஸ்துமஸ் பிரசங்கத்தில், "மழை, காற்று மற்றும் குளிரில் வாடும் காஸாவின் கூடாரங்கள்" பற்றி பேசினார்.

அப்போது காஸா விவகாரத்தில் டிரம்பும் போப் லியோவும் பகிரங்கமாக மோதிக்கொள்ளவில்லை என்றாலும், போப்பின் தெளிவான தார்மீக மற்றும் சட்டரீதியான நிலைப்பாடு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு சவால் விடுப்பதாகப் பரவலாகப் புரிந்துகொள்ளப்பட்டதால், அது குறித்து வத்திக்கான் தூதர்கள் அசௌகரியத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம், வெனிசுவேலாவின் அப்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கராகஸில் கைது செய்து விசாரணைக்காக நியூயார்க்கிற்கு அழைத்து வந்ததற்கும் போப் கவலை தெரிவித்தார்.

"அன்பிற்குரிய வெனிசுவேலா மக்களின் நலனே மற்ற எல்லா விஷயங்களையும் விட மேலோங்கி இருக்க வேண்டும். இது வன்முறையைத் தாண்டி நீதி மற்றும் அமைதிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

மேலும், வெனிசுவேலாவின் இறையாண்மையை மதிக்கவும், அரசியலமைப்பில் உள்ள சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும், மனித மற்றும் குடியுரிமை உரிமைகளை முழுமையாக மதிக்கவும் போப் வலியுறுத்தினார்.

குடியேற்றம்

இரான் தொடர்பாக போப் லியோ எடுத்துள்ள நிலைப்பாடு, அவர் மற்ற விஷயங்களில் எடுத்துள்ள நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் கட்டுப்பாடுகள் மிகுந்த குடியேற்றக் கொள்கைகளை போப் தொடர்ச்சியாக விமர்சித்துள்ளார்.

அதிபர் டிரம்புக்கும், போப் பதினான்காம் லியோவுக்கும் இடையிலான மோதலுக்கு குடியேற்றம் மற்றொரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

டிரம்பின் கட்டுப்பாடு மிகுந்த குடியேற்றக் கொள்கைகளை போப் லியோ தொடர்ச்சியாக விமர்சித்துள்ளார், இந்தப் பிரச்னையை இரக்கம் மற்றும் கண்ணியம் குறித்த நற்செய்தி போதனைகளில் வேரூன்றிய ஒரு தார்மீகக் கடமையாக அவர் முன்வைத்துள்ளார்.

நவம்பர் 2025 இல், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் "மரியாதையற்ற முறையில்" நடத்தப்படுவதாக அவர் கூறினார். இது பெருமளவிலான நாடுகடத்தல்களை விமர்சித்தும், குடியேற்ற சோதனைகளால் ஏற்படும் பயம் மற்றும் பதற்றம் குறித்து எச்சரித்தும் அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்ட அறிக்கையை எதிரொலித்தது.

"ஒவ்வொரு நாட்டிற்கும் யார், எப்படி, எப்போது நுழைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உள்ளது" என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், "மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கான வழிகளை நாம் தேட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என போப் லியோ கூறியிருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் லியோ ஆற்றிய உரையில், குடியேறியவர்களை " அலட்சியமாக புறக்கணித்து அல்லது பாகுபாடு காட்டி" நடத்த வேண்டாம் என்று கத்தோலிக்கர்களை அவர் வலியுறுத்தினார், மேலும் டிரம்பின் கொள்கைகள் திருச்சபையின் 'உயிர் பாதுகாப்பு ' ('ப்ரோ-லைஃப்') தொடர்பான போதனைகளுடன் ஒத்துப்போகின்றனவா என்று பின்னர் கேள்வி எழுப்பினார்.

அந்த கருத்துக்கள் பழமைவாத கத்தோலிக்க தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பைத் தூண்டின.

மதம் மற்றும் அரசியல் அதிகாரம்

ஞாயிற்றுக்கிழமை டிரம்பின் சமூக ஊடகப் பதிவு வெளியுறவுக் கொள்கையையும் தாண்டி, போப் லியோ தனது எல்லையை மீறுவதாகக் குற்றம் சாட்டியது. "அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் ஒரு போப் எனக்குத் தேவையில்லை, ஏனென்றால் நான் அமோக வெற்றியைப் பெற்று, எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதைச் சரியாகச் செய்கிறேன்"என்று அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

போப் லியோ ஒரு அமெரிக்கர் என்பதால் மட்டுமே அவர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அதில் டிரம்ப் குறிப்பிட்டார். "நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால், லியோ வத்திக்கானில் இருந்திருக்க மாட்டார்" என்றும் அவர் கூறியிருந்தார்.

அந்தப் பதிவு குறித்து விளக்குமாறு செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்கிறார் என்று நான் நினைக்கவில்லை. அவர் குற்றங்களை விரும்புகிறார் என நினைக்கிறேன்"என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

புளோரிடாவிலிருந்து அமெரிக்காவிக்குத் திரும்பிய பின் விமான ஓடுதளத்தில் பேசிய டிரம்ப், "நான் போப் லியோவின் ஆதரவாளர் அல்ல" என்றும் கூறினார்.

இருப்பினும், திங்கட்கிழமை அன்று ஆப்பிரிக்காவிற்கு 11 நாள் பயணத்தைத் தொடங்கியபோது, ​​போப்பாண்டவரின் விமானத்தில் இருந்து பேசிய போப் லியோ, டிரம்புடன் தனிப்பட்ட முறையில் உரையாடல் மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

"நான் ஒரு அரசியல்வாதி அல்ல, அவருடன் ஒரு விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை" என்று போப் கூறினார்.

"அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் பலதரப்பு உறவுகளை ஊக்குவிக்க முயன்று, போருக்கு எதிராக நான் தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுப்பேன்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் , தமக்கு "டிரம்ப் நிர்வாகத்தைப் பற்றி எந்த அச்சமும் இல்லை" என்றும், நற்செய்தியைப் பாதுகாப்பதில் தொடர்ந்து "உரக்கப்" பேசுவேன் என்றும் போப் தெரிவித்தார்.

அசோசியேட்டட் பிரஸ் ஆய்வின்படி, 2024 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப், 55% கத்தோலிக்க வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றார். அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் உட்பட அமெரிக்க மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் கத்தோலிக்கர்கள் ஆவர்.

டிரம்ப் நிர்வாகம் பழமைவாத எவாஞ்சலிக்கல் புராட்டஸ்டன்ட் தலைவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறது, மேலும் இரான் போரை மதரீதியாக அதிகளவில் சித்தரித்து வருகிறது.

நிபுணர்கள் என்ன கருதுகிறார்கள்?

டிரம்ப் தன்னை இயேசு போன்ற ஒரு உருவத்தில் சித்தரித்து, ஒரு மனிதனை "குணப்படுத்துவது" போன்ற ஒரு படத்தை பதிவிட்டார். இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Social media

படக்குறிப்பு, டிரம்ப் தன்னை இயேசு போன்ற ஒரு உருவத்தில் சித்தரித்து, ஒரு மனிதனை "குணப்படுத்துவது" போன்ற ஒரு படத்தை பதிவிட்டார். இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மதத் தலைவர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்தப் படம் நீக்கப்பட்டது.

டிரம்ப் மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கை இலக்குகளுக்கு உலக அரங்கில் ஒரு தார்மீக எதிர்சக்தியாகச் செயல்பட, போப் விரும்புவதை அவரது தொனி மற்றும் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

"அவர் ஒரு அமெரிக்கர் என்பதால், டிரம்ப் கொள்கைகளுக்கு ஆதரவாக வத்திக்கான் மென்மையாக நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டப்படுவதை அவர் விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்" என வத்திக்கானை உன்னிப்பாகக் கவனித்து வரும் இத்தாலிய கல்வியாளர் மாசிமோ ஃபாகியோலி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

"லியோ பேசும்போது, அவர் எப்போதும் கவனமாக இருப்பார்" என்று கூறும் டப்ளின் டிரினிட்டி கல்லூரியின் பேராசிரியரான ஃபாகியோலி, "அது தற்செயலாக நடந்ததாக நான் நினைக்கவில்லை"என்கிறார்.

போப் லியோவின் நெருங்கிய நண்பரான சிகாகோ கார்டினல் பிளேஸ் குப்பிச், உலகத் தலைவர்களைப் போரிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்திய போப்பாண்டவர்களின் நீண்டகால பாரம்பரியத்தை போப் லியோ தொடர்வதாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

"இதில் என்ன வித்தியாசம் என்றால்... அதை யார் சொல்கிறார் என்பது தான். இப்போது அமெரிக்கர்களும் ஒட்டுமொத்த ஆங்கிலம் பேசும் உலகமும் தங்களுக்குப் பரிச்சயமான ஒரு மொழியில் இந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்" என்று கார்டினல் பிளேஸ் குப்பிச் கூறினார்.

சர்வதேச கத்தோலிக்க அமைதி இயக்கமான பாக்ஸ் கிறிஸ்டியின் முன்னாள் தலைவரான மேரி டென்னிஸ் இதுகுறித்துக் கூறுகையில், சமீபத்தில் போப் லியோ கூறிய கருத்துக்களும், டிரம்பிற்கு அவர் விடுத்த நேரடி வேண்டுகோளும் "தொடர்ச்சியான வன்முறையால் உடைந்த இதயத்தைப் பிரதிபலிக்கின்றன" என்றார்.

"இந்த இடைவிடாத வன்முறையால் சோர்வடைந்து, துணிச்சலான தலைமைக்காக ஏங்கும் அனைவரையும் அவர் அணுகுகிறார்" என்கிறார் மேரி டென்னிஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு