அமெரிக்கா - இரான் பேச்சு தோல்வி: பாகிஸ்தானின் 'மிகப்பெரிய வெற்றி' என்ன?

பட மூலாதாரம், Farooq NAEEM/AFP via Getty Images
- எழுதியவர், அசாத் சுஹைப்
- பதவி, பிபிசி உருது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
'இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில்' உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமெரிக்கா மற்றும் இரான் இடையே மத்தியஸ்தராகத் தொடர்ந்து செயல்படும் தனது நோக்கத்தை பாகிஸ்தான் மீண்டும் தெளிவிபுடுத்தியுள்ளது.
இரு தரப்பினரும் போர் நிறுத்தத்துக்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வார்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீருடன் இணைந்து, இரு தரப்புக்கும் இடையே பல சுற்று "கடினமான ஆனால் நேர்மறையான பேச்சுவார்த்தைகளை" முன்னெடுத்ததாக இஷாக் தார் கூறினார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் இரானிய தூதுக்குழுவினர், பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பதில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினர். அதனை ஒரு 'சிறந்த விருந்தோம்பல் பண்பு கொண்ட நாடு' என்று அழைத்தனர்.
பாகிஸ்தானின் முயற்சிகள் ஒரு பெரிய ராஜீய வெற்றியாகக் கருதப்பட்டன. இந்த முயற்சி, உலகளாவிய அளவில் பாகிஸ்தானின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது.
இருப்பினும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படாததால் இஸ்லாமாபாத்தில் ஏமாற்றமும் நிலவுகிறது.
"இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை" மூலம் பாகிஸ்தானுக்கு என்ன பலன் கிடைத்தது? இரு தரப்பினருக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் திறன் பாகிஸ்தானுக்கு இன்னும் இருக்கிறதா? மீண்டும் போர் மூண்டால் பாகிஸ்தானின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையைக் கண்டறிய பிபிசி பல நிபுணர்களிடம் பேசியது.
மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணரும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் (லாகூர்) அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவருமான முனைவர் ஃபரூக் ஹஸ்னத் கூறுகையில், இத்தகைய பேச்சுவார்த்தைகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், இதனை பயனற்றது எனக் கூற முடியாது என்றார்.
பிபிசியிடம் பேசிய அவர், "பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக இரு தரப்பினரும் கூறவில்லை. மாறாக தங்களின் சில நிபந்தனைகளில் உடன்பாட்டை எட்ட முடியவில்லை என்று தான் கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் 'மிகப்பெரிய வெற்றி' என்ன?

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல அம்சங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் இரண்டு அல்லது மூன்று முக்கியமான அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக இன்னும் விரிவான ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும் இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரானிய செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறுகையில், பேச்சுவார்த்தைகள் "நம்பிக்கையற்ற சூழலில்" தொடங்கியதாகவும், ஒரே சந்திப்பில் உடன்பாட்டை எட்டுவதற்கு அதிக வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த முழு மோதலிலும் பாகிஸ்தான் தன்னை ஒரு நடுநிலையான தரப்பாக நிரூபித்துள்ளது என்று முனைவர் ஃபரூக் ஹஸ்னத் கூறுகிறார்.
"அதனால் தான் இரு தரப்பினரும் இஸ்லாமாபாத்திற்கு வர ஒப்புக்கொண்டனர்."
எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றாலும், சில விஷயங்களில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக இரு தரப்பினரும் நம்புவதாக அவர் கூறினார்.
1979-ஆம் ஆண்டிலிருந்து ஒருபோதும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தாத இரு தரப்பினரை ஒன்றிணைத்தது பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இரு தரப்பையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தது பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றியாகும்."
மூத்த அரசியல்வாதியும் முன்னாள் செனட்டருமான முஷாஹித் ஹுசைன் சையத் கூறுகையில், அமெரிக்காவும் இரானும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தை செயல்முறையைத் தொடர ஒரு வாய்ப்பைத் திறந்து வைத்துள்ளன என்றும், இது பாகிஸ்தானின் முயற்சிகளால் மட்டுமே சாத்தியமானது என்றும் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய முஷாஹித் ஹுசைன் சையத், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் மூன்று விதமானது என்று கூறினார்.
அவரது கூற்றுப்படி, 21 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை என்பது இரு தரப்பினரும் மிக விரிவாக விவாதித்ததைக் குறிக்கிறது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களும் பங்கேற்றனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது இரண்டாவது முக்கியமான விஷயம் என்று முஷாஹித் ஹுசைன் சையத் கூறினார்.
பாகிஸ்தானின் பங்கை இரு தரப்பினரும் நேர்மறையாகச் சித்தரித்தது, அமைதி முயற்சிகளுக்காகப் பாகிஸ்தான் எவ்வளவு தீவிரமாக முயற்சி செய்தது என்பதற்கான சான்று என்று முஷாஹித் ஹுசைன் சையத் கூறினார்.
மூத்த பத்திரிகையாளரும் ஆய்வாளருமான ஜாஹித் ஹுசைன் கூறுகையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு 'முன்னேற்றமும்' ஏற்படவில்லை, "இருப்பினும் பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை என்பது ஒரு நல்ல அறிகுறி" என்றார்.
பிபிசி உருது சேவையிடம் பேசிய அவர், "இரு தரப்பினரும் பாராட்டும் அந்தப் பங்கை பாகிஸ்தான் தொடர்ந்து வகிக்கும். ஆனால் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் ஏதேனும் நடந்தால், அது பாகிஸ்தானில் நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
"பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தானின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது, ஏனெனில் பாகிஸ்தான் அந்தச் சிக்கலான 21 மணிநேரப் பேச்சுவார்த்தையில் ஒரு அங்கமாக இருந்தது. அடுத்தக்கட்டமாக எந்த ஒரு பேச்சுவார்த்தை நடந்தாலும் இரு தரப்பினரும் பாகிஸ்தானையே தொடர்புகொள்வார்கள்" என்கிறார் ஜாஹித் ஹுசைன்.
அவரைப் பொறுத்தவரை, தற்போது பாகிஸ்தானுக்கு மாற்றாக எந்த நாடும் இல்லை.
'ராஜீய நடவடிக்கை என்பது ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போன்றது'

பட மூலாதாரம், Getty Images
முனைவர் ஃபரூக் ஹஸ்னத்தின் கருத்துடன் முஷாஹித் ஹுசைன் சையத்தும் உடன்படுகிறார்.
இரு தரப்பினரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தது பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி என்று அவர் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையிலும், இரு தரப்பினரின் அறிக்கைகளும் சமநிலை கொண்டதாகவும், நிதானமாகவும் இருந்தன. எனவே, எச்சரிக்கையுடன் செயல்படும் அதே வேளையில் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
மூத்த பத்திரிகையாளரும் ஆய்வாளருமான தலாத் ஹுசைன் கூறுகையில், உலகிற்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது என்றார்.
'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு போரை நிறுத்தியதன் மூலம், சர்வதேச அளவில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக தனது பங்கை நிலைநாட்டியுள்ளதுடன், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நிலையான அமைதி கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளது என்று தலாத் ஹுசைன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இரான் இடையே நின்று போன உரையாடலை மீண்டும் தொடங்கியது தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி என்றும், ராஜீய நடவடிக்கை என்பது ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போன்றது என்றும் அவர் கூறினார்.
தற்போது பந்து அமெரிக்காவின் வசம் உள்ளது என்றும், இரான் போர் எனும் 'சேற்றுக்குழியில்' இருந்து தன்னை வெளியே இழுத்துக் கொள்வதா அல்லது நெதன்யாகு போன்ற 'போர் வெறி' கொண்ட தலைவர்களின் வார்த்தைகளுக்கு இரையாவதா என்பது அதிபர் டிரம்பைப் பொறுத்தது என்றும் முஷாஹித் ஹுசைன் சையத் கூறுகிறார்.
அட்லாண்டிக் கவுன்சிலின் தெற்காசியாவுக்கான மூத்த ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், தனது உள்நாட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக, அமெரிக்கா இந்தப் போரிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு சமரசத்தை விரும்பியது என்றார்.
துணை அதிபர் தலைமையில் உயர்மட்டக் குழுவை அனுப்பியது அமெரிக்காவின் உறுதியை வெளிப்படுத்தியது என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, "துணை அதிபர் வான்ஸின் செய்தியாளர் சந்திப்பு இருந்தபோதிலும், இந்த (தீர்வுக்கான முயற்சி) இன்னும் முடிவடையவில்லை. மேலும் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம், ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடக்குமா அல்லது வேறு எங்காவது நடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை."
மீண்டும் போர் மூண்டால் பாகிஸ்தானின் நிலை என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமை, பாகிஸ்தானைச் சேர்ந்த போர் விமானங்களை உள்ளடக்கிய ஒரு ராணுவக்குழு, கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஷா அப்துல் அஜீஸ் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்ததை சௌதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
"இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு உத்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படியே இந்த ராணுவக் குழுவின் வருகை அமைந்துள்ளது" என்று சௌதி பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் இந்த படைப்பிரிவில் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே ராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, செயல்பாட்டுத் தயார்நிலையை விரைவுபடுத்துவது மற்றும் பிராந்திய, சர்வதேச அளவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுவது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது."
போர் மீண்டும் தொடங்கினால் பாகிஸ்தான் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று முனைவர் ஃபரூக் ஹஸ்னத் கூறுகிறார்.
"இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், இரானும் அப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளைத் தாக்கும்" என்று அவர் கூறுகிறார்.
இதுவரை இரான் சௌதி அரேபியா மீது மிகக் குறைவான தாக்குதல்களையே நடத்தியுள்ளது, ஆனால் போர் மீண்டும் தொடங்கி, இரான் சௌதி அரேபியாவையும் தாக்கினால் பாகிஸ்தான் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்கிறார் முனைவர் ஃபரூக் ஹஸ்னத்.
அவரது கூற்றுப்படி, "சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே நேரடிப் போர் தொடங்கினால், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபியா மீது தாக்குதல் நடத்தத் தொடங்க வாய்ப்புள்ளது."
அப்படி நடந்தால், பாகிஸ்தான் ராணுவம் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும், ஆனால் பாகிஸ்தான் இரானுடன் நேரடிப் போரில் ஈடுபடாது என்று முனைவர் ஃபரூக் ஹஸ்னத் கூறுகிறார்.
'இரானுடனான எந்தவொரு மோதலையும் பாகிஸ்தானால் தாங்க முடியாது'

பட மூலாதாரம், Getty Images
2015-ஆம் ஆண்டில், ஏமன் ஆக்கிரமிப்புக்கு முன்னதாக சௌதி அரேபியா பாகிஸ்தானிடம் ராணுவ வீரர்களை அனுப்புமாறு கோரிக்கை வைத்து. ஆனால் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பிறகு அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பதை நினைவுகூர வேண்டும்.
அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு சௌதி அரேபியாவுடன் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும், இப்போது கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பும் முன்பும் நாடாளுமன்றத்திடம் அனுமதி பெறப்படவில்லை என்றும் ஃபரூக் ஹஸ்னத் கூறுகிறார்.
அண்டை நாடுகள் என்பதால் இரானுடன் மோதல் ஏற்படும் அபாயத்தைப் பாகிஸ்தான் முன்னெடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
"பாகிஸ்தான் எந்த நிலையிலாவது ஒரு தரப்பைச் சார்ந்ததாக மாறினால், அது நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்று முடிவுகளை எடுக்க வேண்டும்."
முன்னதாக 2018-ஆம் ஆண்டில், ஆலோசனை மற்றும் பயிற்சிப் பணிக்காக சௌதி அரேபியாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பும் தனது முடிவைப் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட், அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டது.
அந்த நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 1982-இல் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஏற்கெனவே 1,180 பாகிஸ்தான் வீரர்கள் சௌதி அரேபியாவில் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்தது.
பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்பது மாதங்களுக்கு முன்பே கையெழுத்தானது என்றும், அது அனைவருக்கும் தெரியும் என்றும் ஜாஹித் ஹுசைன் கூறுகிறார்.
'இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்' முடிவடையாத போதிலும், இரு தரப்பினரும் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கவில்லை. ஏனெனில், இரு தரப்பினரும் இனி போரிட விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார்.
"எனவே, இந்த நேரத்தில் மீண்டும் போர் தொடங்கும் என்றோ இரான் சௌதி அரேபியாவைக் குறிவைக்கும் என்றும் தோன்றவில்லை."
இரான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் எட்டியுள்ள நிலையை உணர்ந்து, பாகிஸ்தானை இந்த மோதலில் ஈடுபட கட்டாயப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இரானும் எடுக்காது என்று ஜாஹித் ஹுசைன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































