கால்சட்டை முதல் கீரை வரை - பாரசீகத்திலிருந்து உலகம் முழுவதும் பரவிய 8 விஷயங்கள்

இஸ்லாமியத்திற்கு முந்தைய பாரசீகக் காலத்தில், "நாம் மிகவும் பழகிப்போன பல கருத்துக்கள் உருவாயின. அந்த உலகத்திலிருந்து வந்த எண்ணற்ற கூறுகளை நாம் நமக்கு உரியதாக்கிக் கொண்டோம்" என்கிறார் பேராசியர் ஜோஸ் குட்டிலாஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புராணக்கதைகள் நிறைந்த பெர்சப்போலி நகரம், பண்டைய பாரசீகப் பேரரசின் சடங்கு ரீதியான தலைநகரமாக விளங்கியது.
    • எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்

"மேற்கத்திய நாடுகளில் உள்ள பல கருத்துக்களுக்கு பாரசீக உலகமே காரணம்," என்று இரானில் படித்துப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜோஸ் குட்டிலாஸ் (José Cutillas) கூறுகிறார்.

"நமது பார்வையில், எல்லாமே ஐரோப்பிய மையமானது என்றும், எல்லாவற்றிற்கும் கிரேக்க-ரோமானிய உலகமே ஆதாரம் என்றும், எந்தவொரு கருத்துக்குமான தொடக்கப் புள்ளி அங்கிருந்து தான் உருவானது என்றும் நாம் நினைக்கிறோம்," என்று அலிகாண்டே பல்கலைக்கழகத்தின் பாரசீக மொழி மற்றும் இரானிய கலாசாரப் பேராசிரியர் கூறுகிறார்.

ஆனால், இஸ்லாமிற்கு முந்தைய பாரசீகக் காலத்தில், " நமக்கு மிகவும் பழக்கமான பல கருத்துக்கள் உருவாயின. அந்த உலகத்திலிருந்து வந்த எண்ணற்ற கூறுகளை நாம் நமக்கு உரியதாக்கிக் கொண்டோம்" என்கிறார் பேராசியர் ஜோஸ் குட்டிலாஸ்.

உதாரணமாக, ஐரோப்பிய சமூகங்கள் அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன என்பதை ஆராயும்போது, பிரம்மாண்டமான அகாமெனிட் பாரசீகப் பேரரசில் (கி.மு. 550-330) தெளிவாக நிறுவப்பட்ட பண்புகளைக் காணலாம்.

மத ரீதியாகப் பார்த்தால், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஜொராஸ்டர் என்பவர் ஜொராஸ்ட்ரிய மதத்தை நிறுவியபோது, பண்டைய இரானில் ஏகதெய்வ வழிபாடு (ஒரே கடவுள் கொள்கை) நிலவியது.

"தேவதூதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் பற்றிய கருத்துக்கள் ஏற்கெனவே ஜொராஸ்ட்ரிய மதத்தில் உள்ளன, அதேபோல் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய கருத்துக்களும் அங்கு உள்ளன," என்று பேராசியர் ஜோஸ் குட்டிலாஸ் கூறுகிறார்.

வரலாற்றாசிரியர் டாம் ஹாலண்டின் கூற்றுப்படி, "உலக வரலாற்றில் ஏதென்ஸ் நகரத்திற்கு இணையான அல்லது அதைவிட அதிகமான செல்வாக்கை பாரசீகம் கொண்டுள்ளது."

லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளி மற்றும் பிரிட்டிஷ் இரானிய சங்கம் ஏற்பாடு செய்த "பாரசீகர்கள் நமக்கு என்ன செய்திருக்கிறார்கள்?" என்ற கருத்தரங்கில் அந்த ஆசிரியர் பங்கேற்றார்.

மேற்கத்திய நாடுகளில் வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் ஹெரோடோடஸ், பாரசீகர்களின் தீவிர ரசிகராக இருந்தார் என்று அவர் கூறினார்.

"பாரசீகர்கள் மூன்று விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அவர் ஒரு புகழ்பெற்ற பொன்மொழியைக் கூறியுள்ளார். வில் எய்தல், குதிரை சவாரி செய்தல் மற்றும் உண்மையைச் சொல்லுதல்."

பாரசீகப் பேரரசின் மன்னர்களைப் பொறுத்தவரை, உண்மை என்பது பொய்மைக்கு எதிரான "ஒரு பெரிய போரில்" மூழ்கியிருந்தது. அது இருளுக்கு எதிரான ஒளியைப் போலவும், தீமைக்கு எதிரான நன்மையைப் போலவும் அமைந்தது.

பிபிசி முண்டோவில், இஸ்லாமுக்கு முன்னும் பின்னும் இருந்த பாரசீகத்தின் பண்டைய கலாசாரத்தின் எட்டு பங்களிப்புகள் வழியாக, உங்களை ஒரு சுவாரஸ்யமான பயணத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.

1. கால்சட்டை அணியும் பழக்கம்

5000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுமேரியர்கள், அசிரியர்கள், கிரேக்கர்கள் எனப் பல்வேறு நாகரிகங்களைச் சேர்ந்த ஆண்கள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்திருந்ததாக ஜெர்மன் தொல்பொருள் நிறுவனம் "தி இன்வென்ஷன் ஆஃப் ட்ரௌசர்ஸ்" என்ற ஆவணப்படத்தில் கூறுகிறது.

ரோமானியர்கள் தங்கள் கால்களை மறைக்காமல் அங்கி அணிந்தே போருக்குச் சென்றனர். கால்சட்டைகள் எங்கே, எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது மிகவும் சிக்கலானது.

இருப்பினும், யூரேசியப் புல்வெளிகளில் செழித்தோங்கிய இரானிய வம்சாவளியைச் சேர்ந்த சிதியர்கள் போன்ற நாடோடி இன மக்கள் இதன் வளர்ச்சியில் ஈடுபட்டதாகப் பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரோமானியர்கள் தங்கள் கால்களை மறைக்காமல் அங்கி அணிந்தே போருக்குச் சென்றனர். கால்சட்டைகள் எங்கே, எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது மிகவும் சிக்கலானது.

பட மூலாதாரம், Bildagentur-online/Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, இந்த ஓவியம், கி.மு. 8 அல்லது 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தியர்களின் ஒரு குழுவைக் காட்டுகிறது.

"கி.மு. 600-ஆம் ஆண்டளவில், கிரேக்கக் கலையில் கால்சட்டைகள் என்பது வெளிநாட்டு வில்வித்தைக்காரர்களின், குறிப்பாக சிதியர்கள், பாரசீகர்கள் மற்றும் அமேசான்களின் அடையாளமாக மாறியது" என்று அட்ரியன் மேயர் 'நேச்சுரல் ஹிஸ்டரி' இதழில் எழுதிய "யார் கால்சட்டையைக் கண்டுபிடித்தார்கள்?" என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்க ஜாடிகளில் பெண் போர்வீரர்களின் உருவங்கள் காணப்படுகின்றன.

அவர்களில் பெரும்பாலோர் "சிதிய ஆண்கள் அணிவதைப் போன்ற மேலாடைகளையும் கால்சட்டைகளையும் அணிந்துள்ளனர்," என்று வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.

கிரேக்க ஜாடிகளில் பெண் போர்வீரர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் "சிதிய ஆண்கள் அணிவதைப் போன்ற மேலாடைகளையும் கால்சட்டைகளையும் அணிந்துள்ளனர்" என்று வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, கி.மு. 470-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் கிரேக்க அலபாஸ்டர் குவளை ஒன்றில் உள்ள அமேசான் வீராங்கனை.

கிரேக்கத் தொல்பொருள் அருங்காட்சியகத்தின்படி, பாரசீகர்கள் "தங்கள் தலைகளில் தளர்வான தொப்பிகளையும்," கைகளுடன் கூடிய அங்கிகளையும், "கால்சட்டைகளையும்" அணிந்திருந்ததாக ஹெரோடோடஸ் விவரித்துள்ளார்.

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் வீடியோவான "பெர்சியா அண்ட் கிரீஸ் - ஆப்ஜெக்ட்ஸ் இன் ஃபோகஸ்: ஆக்ஸஸ் ட்ரெஷர் ஃபிகர்ஸ்" என்பதில் கார்டிஃப் பல்கலைக்கழகப் பேராசிரியர் லாயிட் லெவெலின்-ஜோன்ஸ் விளக்குகையில், பாரசீகர்கள் தங்களின் மூதாதையர் மரபு காரணமாகவே கால்சட்டைகளை அணிந்ததாகக் கூறுகிறார்.

"பாரசீகர்கள் யூரேசியாவின் புல்வெளிகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் குதிரை சவாரி செய்யும் நாடோடிகளாக இருந்தனர்."

அந்தச் செயல்பாடு அவர்களின் வாழ்க்கையில் அடிப்படையானதாக இருந்தது.

நீண்ட தூரம் பயணம் செய்யும்போது தங்கள் உடலைப் பாதுகாக்கவும், வசதியாக இருக்கவும் அவர்கள் கால்சட்டைகளை அணிந்தனர்.

"பாரசீகர்கள் யூரேசியாவின் புல்வெளிகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் குதிரை சவாரி செய்யும் நாடோடிகளாக இருந்தனர்."

பட மூலாதாரம், Spencer Platt/Getty Images

படக்குறிப்பு, இந்தக் கல்வெட்டு, 2013-ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற "சைரஸ் உருளை மற்றும் பண்டைய பாரசீகம்" என்ற கண்காட்சியின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

அந்த ஆடையைப் பரப்புவதற்குப் பாரசீகர்கள் உதவியிருக்க அதிக வாய்ப்புள்ளது.

உதாரணமாக, பாரசீக மொழியில் "கால் ஆடை" என்று பொருள்படும் 'பா[ய்]ஜாமே' என்ற சொல் உள்ளது.

ஸ்பானிஷ் மொழி அகராதியின்படி, அந்தச் சொல்லிலிருந்து இந்தியில் 'பா[ஏ]ஜாமே' என்ற சொல்லும் , அதிலிருந்து ஆங்கிலத்தில் 'பைஜாமாஸ்' என்ற சொல்லும் உருவானது .

இந்தக் கடைசி வார்த்தையிலிருந்து தான் உறங்கும் நேரத்துக்கான ஆடையாக அறியப்படும் 'பைஜாமா' உருவானது.

இந்தியாவில் வசிப்பவர்கள் தளர்வான சட்டை மற்றும் கால்சட்டை அணிந்திருப்பதை பிரிட்டிஷார் பார்த்த பிறகு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த ஆடை பிரபலமடைந்தது.

2. மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை குறித்த "முதல்" பிரகடனம்

செப்டம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், 2,500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஒரு பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை ஊக்குவிக்கும் முயற்சி ஒன்று முன்வைக்கப்பட்டது.

சைரஸ் சிலிண்டர் என்று அழைக்கப்படும் இது ஒரு களிமண் துண்டாகும்.

இதில் பாரசீக மன்னரின் சீர்திருத்தங்கள் கியூனிஃபார்ம் எழுத்துக்களில் செதுக்கப்பட்டுள்ளன. "பல நிபுணர்கள் இதனை மனித உரிமைகளுக்கான உலகின் முதல் சாசனமாகக் கருதுகின்றனர்."

அது கி.மு. 539-ஆம் ஆண்டு. அப்போதுதான் பாபிலோனைக் கைப்பற்றியிருந்த மகா சைரஸ், உலகின் முதல் பெரிய பேரரசை வழிநடத்தினார்.

1879-ல் இராக்கில் கண்டெடுக்கப்பட்ட 'சைரஸ் உருளை

பட மூலாதாரம், Tish Wells/Tribune News Service via Getty Images

படக்குறிப்பு, 1879-ல் இராக்கில் கண்டெடுக்கப்பட்ட 'சைரஸ் உருளை', அரசியல் பிரச்சாரத்தின் ஆரம்பகால எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

அந்த ஆட்சியாளர் அடிமைப்படுத்தப்பட்ட கைதிகளை விடுவித்தது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பவும் அனுமதித்தார். மேலும் அவர் பல்வேறு இன சமூகங்களின் மரபுகளையும், மதங்களையும் மதித்தார்.

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான நீல் மெக்ரிகோர், "ஒரே பொருளில் 2600 ஆண்டுகால வரலாறு" என்ற தனது டெட்-டாக் உரையில், சைரஸ் பாபிலோனுக்குள் "எதிர்ப்பின்றி" நுழைந்தது "யூத மக்களின் வரலாற்றில் ஒரு மாபெரும் தருணம்" என்று நினைவு கூர்ந்தார்.

பாரசீக மன்னரின் செயலால், பாபிலோனியர்களால் கொள்ளையடிக்கப்பட்ட எருசலேமுக்கு யூதர்களால் மீண்டும் திரும்ப முடிந்தது.

தாமஸ் ஜெஃபர்சன்

பட மூலாதாரம், VCG Wilson/Corbis via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படும் தாமஸ் ஜெஃபர்சன், சைரஸின் கொள்கைகளை பெரிதும் விரும்பினார் என்கிறார் மெக்ரெகர். (ரெம்ப்ராண்ட் பீல் வரைந்த ஓவியம்)

சைரஸ் தலைமையிலான பேரரசு, "முதல் பெரிய அளவிலான பன்முகப் பண்பாட்டு மற்றும் பன்முக மதங்களைக் கொண்ட அரசாக" விளங்கியதுடன், 200 ஆண்டுகள் நிலையான அதிகாரத்துடன் திகழ்ந்தது.

சைரஸின் மரபு ஐரோப்பாவைச் சென்றடைந்தது, அங்கு அவர் ஒரு முன்மாதிரியாகப் போற்றப்பட்டார்.

அவரைப் பற்றி செனோபோன் (பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்) எழுதிய புத்தகம், "அமெரிக்கப் புரட்சியின் நிறுவனர்களுக்கு உத்வேகம் அளித்த சிறந்த நூல்களில் ஒன்றாகும்." என்று மெக்ரிகோர் கூறினார்.

"இந்தப் படைப்பு ஒரு மனித லட்சியத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். இது அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, இது மாக்னா கார்ட்டாவை விட உண்மையான சுதந்திரங்களைப் பற்றி அதிகம் பேசுகிறது."

இன்று இது "வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் ஒரே நாட்டில் சுதந்திரமாக இணைந்து வாழ்வதற்கான உரிமை." குறித்து நமக்கு நினைவூட்டுகிறது.

3. தோட்டங்களும் சொர்க்கமும்

"பெரும்பாலான வீடுகளில் தோட்டம் அல்லது முற்றம் இருப்பதற்குப் பாரசீகர்களே காரணமாக இருக்கலாம்," என்று ஜானி தாம்சன், "பண்டைய பாரசீகம் நமது நவீன உலகத்தை வடிவமைத்த 5 வழிகள் " என்ற பிக் திங்க் கட்டுரையில் எழுதியிருந்தார் .

எகிப்தியர்களிடம் சோலைகளும், பாபிலோனியர்களிடம் தொங்கும் தோட்டங்களும் இருந்தபோதிலும், தோட்டங்களைப் பிரபலப்படுத்தியது பாரசீகர்களே என்று அந்தத் தத்துவஞானி சுட்டிக்காட்டுகிறார்.

இவை ஆட்சியாளர்களின் மகிழ்ச்சிக்கான இடங்களாக மட்டுமல்லாமல், பிரபஞ்சத்துடன் நல்லிணக்கத்தைத் தேடும் மற்ற மக்களுக்கான இடங்களாகவும் இருந்தன.

பாரசீகத் தோட்டங்கள்

பட மூலாதாரம், Kaveh Kazemi/Getty Images

படக்குறிப்பு, பாரசீகத் தோட்டங்கள் "மனிதனின் படைப்பாற்றல் திறனின் ஒரு தலைசிறந்த படைப்பு" என யுனெஸ்கோ கூறுகிறது. இது இரானில் உள்ள ஷாஜ்தே தோட்டம், அல்லது இளவரசரின் தோட்டம் (புகைப்படம்: 2011).

"பாரசீகத் தோட்டம்" என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

"நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருப்பதோடு, நீர்ப்பாசனம் மற்றும் அலங்காரத்திற்காக நீர் எங்கும் நிறைந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ள பாரசீகத் தோட்டம், ஏதேன் தோட்டம் மற்றும் ஜொராஸ்ட்ரியத்தின் நான்கு கூறுகளான ஆகாயம், பூமி, நீர் மற்றும் தாவர உலகின் அடையாளமாகக் கருதப்பட்டது," என்று யுனெஸ்கோ கூறுகிறது.

தோட்டத்தை பூமியில் உள்ள ஒரு சொர்க்கத்துடன் ஒப்பிடும் அந்தத் தொடர்பு, 'பாரடைஸ்' என்ற சொல்லின் பிறப்பிடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

ஸ்பானிஷ் மொழி அகராதியின்படி, 'பாரடைஸ்' என்ற சொல் லத்தீன் சொல்லான 'பாரடிசஸ்' என்பதிலிருந்து வந்தது; இது கிரேக்கச் சொல்லான 'பாரடைசோஸ்', என்ற சொல்லிலிருந்து உருவானது , அதன் பொருள் 'தோட்டம்', 'சொர்க்கம்'.

கிரேக்கர்கள் இதனை அரச தோட்டங்களைக் குறிக்கும் 'பைரிடேசா' என்ற அவெஸ்தான் (பண்டைய இரானிய பேச்சுவழக்கு) சொல்லிலிருந்து பெற்றனர்.

பாரசீகத் தோட்டம் 'சஹார் பாக்' என்று அழைக்கப்படுகிறது

பட மூலாதாரம், Eric Lafforgue/Art in All of Us/Corbis via Getty Images

படக்குறிப்பு, பாரசீகத் தோட்டம் 'சஹார் பாக்' என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் 'நான்கு தோட்டங்கள்' என்பதாகும். இது இந்தியாவில் உள்ள ஒரு எடுத்துக்காட்டு.

சொற்பிறப்பியல் அம்சத்தைத் தாண்டி, பாரசீகத் தோட்டம் எவ்வாறு "மேற்கு ஆசியா, அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் தோட்ட வடிவமைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது" என்பதை யுனெஸ்கோ எடுத்துக்காட்டுகிறது.

"கட்டிடக்கலையின் வடிவியல் மற்றும் சமச்சீர் தன்மை, சிக்கலான நீர் மேலாண்மை அமைப்புடன் இணைந்து, இந்தத் தோட்டங்கள் அனைத்தின் வடிவமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது."

4. ஒரு முறையான அஞ்சல் சேவை

எகிப்தியர்களும் அசிரியர்களும் தூதர் சேவைகளைக் கொண்டிருந்த போதிலும், உலகிற்கு "அதன் முதல் தொடர் அஞ்சல் மற்றும் அஞ்சல் நிலையங்களின் வலையமைப்பை" வழங்கியது பாரசீகர்களே என்று தாம்சன் கூறுகிறார்.

கி.மு. 521-ல் ஆட்சிக்கு வந்த முதலாம் டேரியஸ், பேரரசை வழிநடத்திய காலம் இது.

அந்தக் கல்வியாளரின் கூற்றுப்படி, தூதர்கள் குதிரை மீதேறி நீண்ட தூரம் பயணம் செய்து, ஓய்வெடுப்பதற்காகத் தீர்மானிக்கப்பட்ட இடங்களை வந்தடைவார்கள்.

எகிப்தியர்களும் அசிரியர்களும் தூதர் சேவைகளைக் கொண்டிருந்த போதிலும், உலகிற்கு "அதன் முதல் தொடர் அஞ்சல் மற்றும் அஞ்சல் நிலையங்களின் வலையமைப்பை" வழங்கியது பாரசீகர்களே என்று தாம்சன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "அக்காலத்தில் கடிதங்கள் இல்லை, அவர்கள் ஒருவித களிமண் பந்தைப் பயன்படுத்தினார்கள். இவை மத்திய நிர்வாகத்திற்கும் பல்வேறு மாகாணங்களுக்கும் இடையேயான பரிமாற்றங்களாக இருந்தன" என்கிறார் குட்டிலாஸ்.

அடுத்த நாள், அவர்கள் காலை உணவை உண்டுவிட்டு, மற்றொரு குதிரையை எடுத்துக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடருவார்கள்.

"இது முந்தைய எந்த அமைப்பையும் விட மிகவும் வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மற்றும் மிகவும் திறமையானதாகவும் இருந்தது."

மூன்று கண்டங்களில் பரவியிருந்த பாரசீகப் பேரரசு எவ்வளவு விரிவானது என்பதைப் பேராசிரியர் குட்டிலாஸ் நமக்கு நினைவுபடுத்துகிறார்.

"தொடர்பு கொள்வதற்காக அவர்கள் அஞ்சல் முறையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பேரரசின் அனைத்துப் பகுதிகளையும் இணைத்து வைத்திருப்பதற்கான வழியாக இருந்த அது, இன்றுவரை நிலைத்திருக்கிறது."

5. புகழ்பெற்ற கம்பளங்கள்

1929-ஆம் ஆண்டில், ஒரு கண்டுபிடிப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சைபீரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கல்லறைகள், ஒரு சடங்குத் தேர் மற்றும் கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகள் பழமையான பல பொருட்களை அவர்கள் கண்டெடுத்தனர்.

"பசிரிக் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அனைத்துப் புதையல்களிலும், மிக முக்கியமானது ஒரு தடிமனான, பல வண்ணங்களைக் கொண்ட கம்பளம் ஆகும். இது ஒரு சிறப்பு நுட்பத்துடன் நெய்யப்பட்டுள்ளது. அதன் சதுர வடிவிலான மேற்பரப்பில் (சுமார் 2x2 மீ) குதிரைகளும் அவற்றின் மீது அமர்ந்திருக்கும் வீரர்களும், மேயும் மான்கள், கிரிஃபின்கள் மற்றும் கலைநயமிக்க தாவரங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன," என்று மரியா ஜவிதுகினா "பசிரிக்: தி ஃபிரோசன் வில்லேஜ் ஆஃப் தி ஆல்டாய்" என்ற நூலில் எழுதியுள்ளார்.

"உலகிலேயே இவ்வகையான விரிப்புகளில் மிகவும் பழமையான இது, இரானிய நெசவாளர்களின் திறமைக்குச் சான்றாகத் திகழ்கிறது."

"உலகிலேயே இவ்வகையான விரிப்புகளில் மிகவும் பழமையான இது, இரானிய நெசவாளர்களின் திறமைக்குச் சான்றாகத் திகழ்கிறது."

பட மூலாதாரம், Ambrosiana Library/Getty Images

படக்குறிப்பு, "இரானின் பாரசீக இசைக்கலைஞர்கள்" என்பது 1860-ஆம் ஆண்டில் எமில் துஹௌசெட் என்பவரால் வரையப்பட்ட ஒரு சித்திரம் ஆகும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

யுனெஸ்கோ கூரியர் இதழில் வெளியான அந்தக் கட்டுரையின்படி, அந்தப் பகுதியின் நாடோடிகள் கால்நடைகள் மற்றும் விலையுயர்ந்த உலோகங்களைக் கொடுத்து, மத்திய ஆசியா வழியாக வந்த "இரானின் சிறப்பியல்பு பாணியில் தயாரிக்கப்பட்ட" விரிப்புகள் மற்றும் கம்பளி ஆடைகளைப் பரிமாற்றம் செய்திருக்க வாய்ப்புள்ளது.

கம்பளம் எப்போது, எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடுவது கடினம் என்றாலும், அதன் வளர்ச்சி மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட 'விரிப்பு மண்டலம்' எனப்படும் பரந்த பிராந்தியத்தில் நடந்ததையே அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தப் பகுதிகளில் இன்றைய இரானும் அடங்கும் என்று லண்டனில் உள்ள கோர்டால்ட் கலை நிறுவனத்தின் விரிவுரையாளரான மார்கரெட் ஸ்கொயர்ஸ் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

மேலும், "கம்பளம் நெய்யும் கலை குறைந்தது 2,500 ஆண்டுகள் பழமையானது, அநேகமாக அதைவிடவும் பழமையானதாக இருக்கலாம்" என்று கூறும் அவர், ஆனால் அதன் தோற்றம் எதுவாக இருந்தாலும், அது செழித்தோங்குவதில் இரான் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தது என்கிறார்.

"சந்தேகத்திற்கு இடமின்றி, முடிச்சுகள் இடப்பட்ட விரிப்பு என்பது இரானின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார ஏற்றுமதிப் பொருளாகும். இது 16-ஆம் நூற்றாண்டின் சபாவிட் காலத்தில் ஒரு தூதரகப் பரிசாகப் பயன்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது."

இந்த ஓவியம், 1662-ல் பிறந்த டச்சு ஓவியரான வில்லெம் வான் மியரிஸால் வரையப்பட்டது.

பட மூலாதாரம், Heritage Art/Heritage Images via Getty Images

படக்குறிப்பு, "ஐரோப்பிய ஓவியங்களில் பாரம்பரிய பாரசீக வடிவமைப்புகள் கொண்ட பல கம்பளங்களை நாம் காண்கிறோம்," என்கிறார் ஸ்குவைர்ஸ். இந்த ஓவியம், 1662-ல் பிறந்த டச்சு ஓவியரான வில்லெம் வான் மியரிஸால் வரையப்பட்டது.

சில விரிப்புகள் கலைஞர்களால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, கையால் முடிச்சுகள் இடப்பட்ட ஆடம்பரப் பொருட்களாக இருந்தன. அவை அரசர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் பரிசாக வழங்கப்பட்டன.

பல நூற்றாண்டுகளாக, இது ஒரு வணிகப் பொருளாகவும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கலை வெளிப்பாடாகவும் உருவெடுத்தது.

"மேற்கத்திய, கிறிஸ்தவச் சூழலில், விரிப்புகள் ஒரு இடத்தை அடையாளப்படுத்துகின்றன என்ற கருத்து, கடந்த மூன்று போப்பாண்டவர்களின் இறுதிச் சடங்குகளின் போது அவர்களின் சவப்பெட்டியின் கீழ் ஒரு பாரசீக விரிப்பை வைத்ததன் மூலம் தெளிவாக வெளிப்பட்டது. அவை ஒரு புனிதமான இடத்தை அடையாளப்படுத்தின."

பல நூற்றாண்டுகளாக, இது ஒரு வணிகப் பொருளாகவும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கலை வெளிப்பாடாகவும் உருவெடுத்தது.

பட மூலாதாரம், Jakub Porzycki/Anadolu via Getty Images

படக்குறிப்பு, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பாரசீகக் கம்பளங்கள் ஆற்றிய குறியீட்டுப் பங்கை ஸ்குவைர்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.

மேலும் இது ஒன்றும் புதிதல்ல; 14 ஆம் நூற்றாண்டு முதலே மதக் கட்டிடங்களில் பாரசீகக் கம்பளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று அந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.

"நான் பல நாடுகளிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்குச் சென்றிருக்கிறேன், அங்கு பீடத்தின் அடியில் பாரசீகக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நமது அன்றாட வாழ்க்கையில் அவற்றைப் பார்த்துப் பழகிவிட்டதால், அவற்றின் கலாச்சாரத் தொடர்புகளை நாம் உணர்வதில்லை."

6. ஒரு பிரம்மாண்டமான மருத்துவக் கலைக்களஞ்சியம்

நவீன மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் வில்லியம் ஆஸ்லர், 1913-ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் "நவீன மருத்துவத்தின் பரிணாமம்" என்ற தலைப்பில் விரிவுரைகளை வழங்கினார்.

அந்த கனடிய மருத்துவர், "மருத்துவ வரலாற்றிலேயே மிக முக்கியமான பெயர்களில் ஒன்றான" இப்னு சினா (மேற்கத்திய நாடுகளில் அவிசென்னா என்று அறியப்படுகிறார்) குறித்துப் பேசினார்.

"இதுவரை எழுதப்பட்ட மருத்துவப் பாடப்புத்தகங்களிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒன்றை அவரே எழுதியுள்ளார். மற்ற எந்தப் படைப்பையும் விட 'கேனன்' எனும் அந்த நூல், அதிக காலம் ஒரு மருத்துவ வேதநூலாக நீடித்திருந்தது என்று உறுதியாகக் கூறலாம்.

இஸ்லாமிய பொற்காலத்தின் மாமேதையான பாரசீக மருத்துவர் அவிசென்னா, 1012-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கிய ஐந்து தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியமான "கானூன் ஃபி அல்-திப்" குறித்து ஆஸ்லர் பேசிக்கொண்டிருந்தார்.

உடற்கூறியல் துறையின் வளர்ச்சி மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அவிசென்னாவின் 'கேனன்' தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டது. இது கல்விசார் மருத்துவத்தில் அதன் ஆழமான ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கிறது.

பட மூலாதாரம், Bettman/Getty Images

படக்குறிப்பு, வில்லியம் ஓஸ்லர், அவிசென்னாவை "மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான ஒருவர்" என்று குறிப்பிட்டார்.

980-இல் பிறந்த அவிசென்னா, அந்தப் படைப்பில் கிரேக்க, ரோமானிய, இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமிய மூலங்களிலிருந்து கிடைத்த அறிவைத் தொகுத்ததுடன், தனது சொந்த கண்டுபிடிப்புகளையும் சோதனைகளையும் அதில் சேர்த்திருந்தார்.

அவரது 'கேனன்' ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில், "குறிப்பாக மறுமலர்ச்சி காலத்தில்," மருத்துவக் கல்வியின் அடிப்படை அங்கமாக இருந்ததாக நியூயார்க் பல்கலைக்கழகம் குறிப்பிடுகிறது.

உடற்கூறியல் துறையின் வளர்ச்சி மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அவிசென்னாவின் 'கேனன்' தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டது. இது கல்விசார் மருத்துவத்தில் அதன் ஆழமான ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கிறது.

இது 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஐரோப்பிய மருத்துவப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டது, மேலும் பதுவா பல்கலைக்கழகத்தில் 1715-ஆம் ஆண்டு வரை இது பயன்பாட்டில் இருந்தது.

அல்-ராசி மற்றும் அல்-மஜூசி ஆகிய இரு பாரசீக அறிஞர்கள் தலைசிறந்த மருத்துவ நூல்களை எழுதியிருந்தாலும், அவிசென்னாவின் அறிவியல் முறையையும், அது 'கேனன்' நூலில் எவ்வளவு ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் தெளிவாகவும் இருந்தது என்பதையும் வல்லுநர்கள் சிறப்பித்துக் காட்டுகின்றனர்.

அவிசென்னா

பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, அவிசென்னா, 400-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளர்

அவிசென்னாவின் சிந்தனை மிகவும் விரிவானது என்பதால், அவரது மிகவும் உயர்ந்த தாக்கம் தத்துவத்தில் இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டோனி ஸ்ட்ரீட் என்பவரின் கூற்றுப்படி, அவிசென்னா தனது வாழ்நாளின் இறுதியில், "எல்லா காலத்திற்குமான மிக முக்கியமான தத்துவஞானியாக அரிஸ்டாட்டிலை விஞ்சிவிட்டார், குறைந்தபட்சம் இஸ்லாமிய அறிஞர்களுக்காவது அவர் முதன்மையானவர்."

அனைத்தும் அவர் தனது இளம் வயதில் ஒரு சுல்தானைக் குணப்படுத்திய பிறகு தொடங்கியது. கல்வியை ஊக்குவித்த இரானிய வம்சமான சாமானிட்களின் பிரம்மாண்டமான நூலகத்தைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டபோதுதான் இவையனைத்தும் தொடங்கியது.

7. கன சமன்பாடுகள்

இயற்கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அல்-குவாரிஸ்மி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்தப் பாரசீகக் கணிதவியலாளரின் புத்தகத்தின் மூலமாகவே, மேற்கத்திய நாடுகள் இந்திய-அரபு எண் முறையைப் பற்றித் தெரிந்துகொண்டன.

இதுவே தசமப் புள்ளி அல்லது காற்புள்ளியுடன் இணைந்து நாம் பயன்படுத்தும் எண்களின் அடிப்படையாக உள்ளது.

அல்-குவாரிஸ்மி 780-இல் பிறந்து, கிழக்கு பாரசீகத்திலிருந்து பாக்தாத்திற்கு குடிபெயர்ந்தார்.

அங்கு அவர் இஸ்லாத்தின் பொற்காலத்தில் நிறுவப்பட்ட 'அறிவு இல்லம்' என்ற புகழ்பெற்ற கல்விக்கூடத்திற்குத் தலைமை தாங்கினார்.

அந்தக் காலத்தின் மற்றொரு சிறந்த கணிதவியலாளர் உமர் கயாம் ஆவார், இவர் 1048-இல் இரானிய அறிவுசார் மையமான நிஷாபூரில் பிறந்தார்.

இயற்கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அல்-குவாரிஸ்மி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தப் பாரசீகக் கணிதவியலாளரின் புத்தகத்தின் மூலமாகவே, மேற்கத்திய நாடுகள் இந்திய-அரபு எண் முறையைப் பற்றித் தெரிந்துகொண்டன.

பட மூலாதாரம், Bettman/Getty Images

படக்குறிப்பு, ஜெயாம் இரானில் ஒரு வானியல் ஆய்வகத்தை வழிநடத்தி, அங்கு முக்கியமான வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

"உமர் கயாம், பொதுவான பாரசீக அறிவியல் மற்றும் கணிதம் போன்ற காரணிகள் அரபு உலகில் ஏற்பட்ட அனைத்து வளர்ச்சிகளாலும் ஆழமாகப் பாதிக்கப்பட்டிருந்தன," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் மார்கஸ் டு சௌட்டாய் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

"அறிவு இல்லம் மற்றும் அல்-குவாரிஸ்மி அறிமுகப்படுத்திய புதிய கணித மொழியான இயற்கணிதத்தைப் பயன்படுத்தி, எண்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவிய முன்னோடிகளில் கயாம் ஒருவராகத் திகழ்ந்தார்.

தனது புரட்சிகரமான "இயற்கணிதம் பற்றிய ஆய்வுக் கட்டுரை" மூலம், கயாம் அந்தத் துறையை முப்படிச் சமன்பாடுகள் வரை விரிவுபடுத்தினார்.

அதாவது முப்பரிமாண உருவங்கள் மற்றும் கன அளவுகள் தொடர்பான சிக்கல்களில் எழும் சமன்பாடுகள் வரை அவர் விரிவுபடுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை, இயற்கணிதம் என்பது வடிவியல் மற்றும் எண்கணிதத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழியாக இருந்தது. அவர் 14 வெவ்வேறு வகையான முப்படிச் சமன்பாடுகளை அடையாளம் கண்டு, அவற்றில் சிலவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் வழங்கினார்.

கணிதத்தின் நோபல் பரிசு என்று கருதப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி, இரானைச் சேர்ந்த மரியம் மிர்சகானி

பட மூலாதாரம், ATTA KENARE/AFP via Getty Images

படக்குறிப்பு, கணிதத்தின் நோபல் பரிசு என்று கருதப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி, இரானைச் சேர்ந்த மரியம் மிர்சகானி என்றும், அவர் 2017 ஜூலை 15 அன்று புற்றுநோயால் காலமானார் என்றும் சௌட்டாய் நமக்கு நினைவூட்டுகிறார். மறுநாள் இரானிய செய்தித்தாள்களின் முதல் பக்கங்கள் இப்படித்தான் இருந்தன.

கன சமன்பாடுகள் குறித்த பொதுவான கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தவர் மற்றும் அவற்றைப் பற்றி முறையான அறிவியல் ஆய்வை மேற்கொண்டவர் என்று சிலர் அவரைப் போற்றுகிறார்கள்.

"இதற்கு முன்பு எந்த வழிமுறையும் இல்லாத நிலையில், அத்தகைய சமன்பாடுகளைத் தீர்த்ததே உமர் கயாமின் தனித்துவமாகும்," என்று வலாடோலிட் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் அல்போன்சோ ஜே. போப்லாசியன் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு, 16-ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் அந்தத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நீங்கள் x³ கொண்ட ஒரு சமன்பாட்டைப் பார்க்கும்போது கயாம் நினைவுக்கு வரலாம். ஏனெனில், பொருளாதாரம், பொறியியல், கணினி போன்ற பலதரப்பட்ட துறைகளில் எழும் எண்ணற்ற கணக்குகளில் அந்த கன வடிவிலான அறியப்படாத மதிப்பு காணப்படுகிறது.

நீங்கள் ஒரு நாட்காட்டியைப் பார்க்கும்போது கூட இந்தக் கணிதவியலாளரை நினைக்கக்கூடும். வரலாற்றிலேயே மிகவும் துல்லியமான ஒன்றாகக் கருதப்படும் பாரசீக நாட்காட்டியை (கிரிகோரியன் நாட்காட்டியை விட மிகவும் துல்லியமானது) உருவாக்க இவரது கணக்கீடுகள் உதவின.

உமர் கயாமை அவரது கவிதைகளில் ஒன்றின் மூலம் நீங்கள் ஏற்கெனவே இணையத்தில் அறிந்திருக்கலாம்.

உண்மையில், மேற்கத்திய நாடுகளில் பலர் அவரைத் தெரிந்துகொள்ள அவரது 'ருபாயத்' கவிதைகளே காரணமாகும்.

8. பிரபலமான உணவு

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பாரசீகத்தில் தான் முதன்முதலில் கீரை பயிரிடப்பட்டது.

விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, 6-ஆம் நூற்றாண்டிலேயே சீனர்கள் இதனை உட்கொண்டதாகவும், சுமார் 11-ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதனை ஸ்பெயினுக்குக் கொண்டு வந்ததாகவும் நம்பப்படுகிறது.

"14-ஆம் நூற்றாண்டிற்குள், இது ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது, மேலும் முதல் குடியேற்றவாசிகளுடன் இது அமெரிக்காவைச் சென்றடைந்தது."

கீரைக்கான 'ஸ்பினச்' என்ற சொல் அரபு சொல்லான 'இஸ்பானக்' அல்லது 'இஸ்பானாக்' என்பதிலிருந்து வந்தது. இது பாரசீகச் சொல்லான 'எஸ்பெனாக்' என்பதிலிருந்து உருவானது.

நீங்கள் ஒரு சுவையான கீரை எஸ்காபேச் தயாரித்தால், அந்த 'எஸ்காபேச்' என்ற சொல்லும் பாரசீக சொல் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரானிய உணவுகளைப் பற்றி நினைத்ததும் எனக்குப் பசி எடுத்ததால் இத்துடன் இந்தச் செய்தியை முடிக்கிறேன்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இரானியர்களின் (மற்றும் இரானியர் அல்லாதவர்களின்) ஆன்மாவுக்கு உணவாக இருந்து வரும் அவர்களின் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடாமல் என்னால் இச்செய்தியை முடிக்க முடியாது.

வால்டேர், கதே மற்றும் விக்டர் ஹியூகோ ஆகியோரால் போற்றப்பட்ட கவிஞரான சாடியின் சில கவிதைகள், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள ஒரு பாரசீகக் கம்பளத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளன.

மெக்சிகோவில் உள்ள இரானிய தூதரகத்தின் ஒரு பிரசுரத்தில் அதன் மொழிபெயர்ப்பை நான் கண்டேன்.

"மனிதர்கள் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள்.

ஒரே சாரத்திலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் படைக்கப்பட்டவர்கள் .

உடலின் ஒரு உறுப்பு வலியில் இருந்தால் மற்ற உறுப்புகளால் அமைதியாக இருக்க முடியாது.

மனிதத் துயரங்களைக் கண்டு நீ இரக்கம் கொள்ளவில்லை என்றால் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கே உனக்கு தகுதி கிடையாது"

"ரோஜா தோட்டத்தில் சாடி" (Sa'di in a rose garden) என்பது 1645-ஆம் ஆண்டு கோவர்தன் என்ற கலைஞரால் உருவாக்கப்பட்ட ஒரு ஓவியமாகும்.

பட மூலாதாரம், History/Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, "ரோஜா தோட்டத்தில் சாடி" (Sa'di in a rose garden) என்பது 1645-ஆம் ஆண்டு கோவர்தன் என்ற கலைஞரால் உருவாக்கப்பட்ட ஒரு ஓவியமாகும். இது 'குலிஸ்தான்' அல்லது "ரோஜா தோட்டம்" போன்ற நூல்களின் ஆசிரியரான பாரசீகக் கவிஞரைச் சித்தரிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு