அமெரிக்காவின் ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை இந்தியாவை எவ்வாறு பாதிக்கக் கூடும்?

பட மூலாதாரம், Reurters/ANI
- எழுதியவர், சந்தீப் ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
அதிபரின் உத்தரவின் படி, இரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7:30 மணி) அமெரிக்கப் படைகள் தொடங்கியுள்ளன.
இரான் அல்லாத பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுக்காது என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) அறிவித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியது.
எண்ணெய் விலை உயர்வு ஏற்கெனவே பல சிரமங்களை எதிர்கொண்டு வரும் உலகுக்கு மேலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து, அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு சரக்கு போக்குவரத்துத் துறையை கடுமையாகப் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் விலையைக் குறைக்க ஜெர்மனியும் வரிகளைக் குறைத்துள்ளது.
இந்தியா எரிசக்தி இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருப்பதாலும், அதன் பெட்ரோலியப் பொருட்களின் பெரும்பகுதி வளைகுடா நாடுகளில் இருந்து வருவதாலும், தற்போதைய நெருக்கடி இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'எண்ணெய் போக்குவரத்துக்காக' ஹோர்மூஸ் நீரிணையைச் சார்ந்துள்ள இந்தியா

பட மூலாதாரம், Planet Lab
உலகிலேயே மிக முக்கியமான கடல்வழி எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக ஹோர்மூஸ் நீரிணை உள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (எல்என்ஜி) சுமார் 20 சதவிகிதம் இந்த நீர்வழிப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
இந்தியா தனது பெட்ரோலிய நுகர்வில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியின் கணிசமான பகுதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே வருகிறது. கச்சா எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது .
இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியா கடந்த ஆண்டுகளில் தனது பெட்ரோலிய இறக்குமதியை கணிசமாகப் பன்முகப்படுத்தியுள்ளது மற்றும் தற்போது 41 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
ஆனால், ஹோர்மூஸ் நீரிணை வழியாக, தனக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவின் பெரும் பகுதியை இந்தியா இறக்குமதி செய்வது குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய சர்வதேச விவகார நிபுணர் ஹர்ஷ் பந்த், "இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது, அதில் 50 சதவிகிதம் ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது. இப்போது செய்யப்படும் அனைத்து கொள்முதல்களும் அதிக விலையிலேயே செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் இந்த முற்றுகை சிக்கலை மேலும் தீவிரப்படுத்தும்" என்று கூறினார்.
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, குறிப்பாக இராக், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தன.
ஆனால் 2019 மற்றும் 2022-க்கு இடையில், மத்திய கிழக்கு நாடுகளின் மீதான இந்தியாவின் சார்பு நிலை 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது.
அப்பகுதியை அதிகளவில் சார்ந்திருப்பதால், இதில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் விநியோகங்களைப் பாதிக்கக்கூடும்.
இருப்பினும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் படி (PIB), மார்ச் 11 அன்று இந்திய அரசு அளித்த தகவலின்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 70 சதவிகிதம் தற்போது ஹோர்மூஸ் நீரிணைக்கு வெளியிலிருந்து வருவதாகவும், எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
எல்பிஜி, எல்என்ஜி சப்ளை மீதான தாக்கம்

பட மூலாதாரம், AFP via Getty Images
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின்படி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) இறக்குமதி செய்வதில் இந்தியா உலகில் நான்காவது இடத்திலும், எல்பிஜி-யை (எல்பிஜி) இறக்குமதியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த இறக்குமதி முதன்மையாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. ஹர்ஷ் பந்த் கூறுகையில், "இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது, அதில் 90 சதவிகிதம் ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது" என்றார்.
திரவ இயற்கை எரிவாயுவின் மிகப்பெரிய உற்பத்தியாளரான கத்தார், தனது உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அல் ஜசீரா செய்தி கூறுகிறது.
ப்ளூம்பெர்க் அளித்துள்ள தகவல்படி, இந்தியா தனது எல்பிஜி தேவையில் பெரும்பகுதியையும், எல்என்ஜி தேவையில் மூன்றில் இரண்டு பங்கையும் மத்திய கிழக்கிலிருந்து வாங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய எல்என்ஜி விநியோகஸ்தராக கத்தார் உள்ளது. கத்தார் உலகின் முன்னணி எல்என்ஜி உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.
உலகின் எல்என்ஜி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை கத்தார் வழங்குகிறது, இதில் ராஸ் லஃப்பான் எரிவாயு வயல் முக்கிய பங்கு வகிக்கிறது. கத்தாரின் "மகுடத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம்" என்று அழைக்கப்படும் இது, சமீபத்தில் இரான் நடத்திய தாக்குதலால் பெரும் சேதமடைந்துள்ளது.
இந்தச் சூழல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (எல்என்ஜி) தொழில்முறை விநியோகத்தில் ஏற்கெனவே 20 சதவிகிதக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள், போக்குவரத்துத் துறை மற்றும் எல்பிஜி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
முதலில் இரானாலும், தற்போது அமெரிக்காவாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள முற்றுகை காரணமாக, ஹோர்மூஸ் வழியாக எரிசக்தி விநியோகம் மிகவும் சிக்கலாகியுள்ளது என்றும், இது சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அதிகம் பாதிக்கும் என்றும் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்க ராணுவம் முற்றுகையிடும் என்று டிரம்ப் அறிவித்த அதே நேரத்தில், 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து கொண்டு இரானிய டேங்கர் கப்பல்கள் இந்தியாவுக்குப் புறப்பட்ட செய்தியும் வந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த எண்ணெயை இறக்குமதி செய்யும் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் நாட்களில் இரானிலிருந்து இன்னும் பல மில்லியன் பேரல் எண்ணெய் இந்தியாவுக்கு வரவுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரானியக் கொடி ஏந்திய மூன்று கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து அரபிக்கடலை வந்தடைந்ததாக கடல்சார் போக்குவரத்து நிறுவனத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி பிபிசி பெர்ஷியன் தெரிவித்துள்ளது.
உரத்தின் மீதான விளைவு

பட மூலாதாரம், AFP via Getty Images
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, யூரியா, பொட்டாஷ், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் போன்று உலகம் பயன்படுத்தும் உரங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
உலக வர்த்தக அமைப்பின் தரவுகளின்படி, போர் தொடங்கியதிலிருந்து இந்த வழித்தடம் வழியாக உரம் சார்ந்த பொருட்களின் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது.
மார்ச் மாத இறுதியில் வெளியான பிபிசி செய்தியின்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக உரம் நுகர்வில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
இந்தியா தனது மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகிய இரண்டுக்கும் இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளது.
இவற்றின் பெரும் பகுதி வளைகுடா நாடுகளில் இருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே வருகின்றன.
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 40 மில்லியன் டன் யூரியாவைப் பயன்படுத்துகிறது, இதற்கு அரசாங்கம் மானியம் வழங்குகிறது.
சப்ளை பாதிப்பு காரணமாக, விவசாயிகள் பயிரிடும் செயல்முறை பாதிக்கப்படலாம் என்று ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, "இந்தியாவின் முக்கிய விதைப்பு காலம் ஜூன்-ஜூலை மாதங்களில் வரவுள்ளது. யூரியா தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள் இயற்கை எரிவாயு ஆகும், இந்தியா அதன் தேவையில் சுமார் 85% இறக்குமதி செய்கிறது, இது பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்தே கிடைக்கிறது."
பல ஆய்வாளர்களைப் போலவே ஹர்ஷ் பந்தும், ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் கூட, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும் என்று கூறுகிறார்.
எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள சேதம், ஹோர்மூஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து காப்பீட்டுத் தொகை பெருமளவு அதிகரித்திருப்பது போன்றவை உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.
மருந்து சந்தையில் ஏற்படும் தாக்கம்

பட மூலாதாரம், AFP via Getty Images
வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளின் உலகளாவிய உற்பத்தியில், மெத்தனால் மற்றும் எத்திலீன் போன்ற பெட்ரோலிய வேதிப்பொருட்கள் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன.
பிபிசி வெரிஃபை செய்தியின் படி, சௌதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள், உலகளாவிய பெட்ரோலிய வேதிப்பொருள் உற்பத்தித் திறனில் சுமார் 6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன.
ஃபோர்ப்ஸ் இதழின் படி, உலகளாவிய மருந்து விநியோகச் சங்கிலியில் இந்தியா 20 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது, இதில் பெரும்பாலான மருந்துகள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த மருந்துப் பொருட்களில் பல, வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், குறிப்பாக துபை வழியாக உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
போர் காரணமாக இந்த வழித்தடமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியா 9 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
போரின் நிச்சயமற்ற தன்மை உலகளாவிய மருந்து விநியோகச் சங்கிலியைப் பெருமளவில் பாதித்துள்ளது என்றும், இதிலிருந்து இந்தியா தப்ப முடியாது என்றும் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, "ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக மூடப்படாவிட்டாலும் கூட, போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன. இது தவிர, விநியோக நேரமும் நீட்டிக்கப்படுகிறது. இது பணவீக்கத்தை அதிகரிக்கும்".
இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்

பட மூலாதாரம், AFP via Getty Images
எகனாமிக் டைம்ஸ் செய்தியின் படி, இரான் போர் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி 2027 நிதியாண்டுக்கான தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 6.9 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. முந்தைய நிதியாண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.6 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.
எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் இந்தியப் பொருளாதாரத்தில் பரவலான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்து வருவதை இது தெளிவாகக் காட்டுகிறது.
ஹர்ஷ் பந்த் கூறுகையில், "கச்சா எண்ணெய் தவிர, திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி), உரங்கள் மற்றும் ரசாயனங்கள் தொடர்பான சிக்கல்கள் தொழில்துறைகளுக்கு ஒரு சவாலாக உள்ளன. இது சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்னைகளை அதிகரிப்பதுடன், அரசாங்கத்திற்கும் இது ஒரு கடினமான காலமாக அமையும்" என்றார்.
அவரது கூற்றுப்படி, அதிகரித்து வரும் இறக்குமதி விலைகள் நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து, வர்த்தக சமநிலையைப் பாதிக்கும். மறுபுறம், இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்திய மாதங்களில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதிக்கு சாதகமாக இருந்தாலும், இறக்குமதியின் விலை அதிகரிக்கும். இது அரசாங்கத்திற்கு ஒரு பெரிய கவலையாகவும் உள்ளது.
இருப்பினும், போர் விரைவில் முடிவுக்கு வந்தால், இந்தியப் பொருளாதாரம் நிலைத்தன்மையை அடைவதற்கு குறைந்தது இரண்டு காலாண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தனது மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் எதிர்கொள்ளும் உடனடி சவால் வர்த்தகப் பற்றாக்குறைதான் என்றும், இதைத் தொடர்ந்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் ஒரு சவாலாக இருக்கும் என்றும் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
இந்தப் போர் வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு நடந்தால், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பணம் (அங்கே பணிபுரியும் இந்தியர்களால் அனுப்பப்படும் பணம்) பாதிக்கப்படும்.
9 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் வாழ்வாதாரத்திற்காக அங்கு சென்றுள்ளனர் என்றும் சில மதிப்பீடுகள் கூறுகின்றன.
அமெரிக்கா ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிட விரும்புவது ஏன் ?

பட மூலாதாரம், AFP via Getty Images
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியபோது, இரானிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) ஹோர்மூஸ் நீரிணையை மூடியதுடன், தனது அனுமதியின்றி எண்ணெய் ஏற்றிச் செல்லும் எந்தக் கப்பல்களும் கடந்து செல்ல அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்தது.
பின்னர், சுங்கக் கட்டணம் விதிப்பது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கான ஒரு முன்மொழிவு இரானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மீது அழுத்தம் கொடுக்க, இரான் ஹோர்மூஸ் நீரிணையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவும் இப்போது அதையே செய்ய விரும்புவதாக ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, "ஹோர்மூஸை முற்றுகையிடுவதன் மூலம், இந்த கடல் வழியை அதிகம் நம்பியிருக்கும் சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா விரும்புகிறது."
இருப்பினும், ஹோர்மூஸை மூடுவதாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களை மட்டுமே பாதிக்கும் என்று கப்பல் போக்குவரத்து நிபுணரும், வெஸ்பூசி மெரைன் தலைமை நிர்வாக அதிகாரியுமான லார்ஸ் ஜென்சன் பிபிசி பெர்ஷியனிடம் தெரிவித்தார்.
"அமெரிக்கர்கள் உண்மையிலேயே இதைச் செய்தால், ஒரு சில கப்பல்கள் மட்டுமே நிற்கும். ஒட்டுமொத்த அளவில் பார்த்தால், அதனால் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்படாது" என்று அவர் கூறியுள்ளார்.
இரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதை கிடைக்காது என்ற டிரம்பின் அச்சுறுத்தலும் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும், ஏனெனில் அவ்வாறு செய்யும் நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்கத் தடைகளை எதிர்கொண்டுள்ளன.
ஜென்சனின் கூற்றுப்படி, பெரும்பாலான கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்படுகிறதா மற்றும் அது நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கும்.
இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே ஹோர்மூஸ் நீரிணையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த விரும்புவதாக ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
இருப்பினும், நிலைமை இன்னும் தெளிவாகவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































