எஸ்ஐஆர்: தேர்தல் ஆணைய சர்ச்சையில் அடுத்தது என்ன? நீடிக்கும் கேள்விகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமை தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு எஸ்.ஐ.ஆர்தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளும் ஒருமித்த கருத்துடன்தான் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எஸ்.ஐ.ஆர் நடைமுறையிலும் சில மாற்றங்களை ஆணையம் அறிவித்தது.
ஆனால், இதற்குப் பிறகும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள் முடிவுக்கு வரவில்லை.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.
இந்த சர்ச்சை இனி எந்தத் திசையில் செல்லும்? இன்னும் நீடிக்கும் கேள்விகள் என்ன?
எஸ்ஐஆர் தொடர்பாக மூன்று தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து இருந்தது என்பதுதான், தேர்தல் ஆணையத்தின் முக்கியமான விளக்கம்.
இதனுடன், எஸ்ஐஆர் நடைமுறையில் சில மாற்றங்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், இந்த விளக்கத்தை சர்ச்சைக்கான தீர்வாக காங்கிரஸ் கருதவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பை, "மிகவும் பலவீனமானது, போதுமானதல்ல, மிகவும் தாமதமானது" என விமர்சித்தார்.
படிவம்-6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள், இளம் வாக்காளர்கள் தொடர்பான கேள்வி மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான 'ECINET ஆகிய மூன்று முக்கிய கேள்விகளுக்கு அந்தச் செய்திக்குறிப்பு பதிலளிக்கவில்லை என்று அவர் கூறினார்.
பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட சட்டரீதியான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை, எத்தனை நீண்ட செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டாலும், ஒருமித்த கருத்து இருந்ததாக எத்தனை முறை கூறப்பட்டாலும், அல்லது வேறு எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது ஞானேஷ் குமாரின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டாது என்று பதிவிட்டார்.
மேலும், இப்போதும் அவருக்கு தாமதமாகிவிடவில்லை என்றும், அவர் பதவி விலகி அரசு தரப்பு சாட்சியாக மாற வேண்டும் என்றும், இல்லையெனில் சிறை செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் பவன் கேரா கூறினார்.
படிவம்-6 மற்றும் இளம் வாக்காளர்கள் தொடர்பான கேள்வி என்ன?
ஃபார்ம்-6 என்பது வாக்காளர் பட்டியலில் புதிய பெயரைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் படிவம்.
எஸ்ஐஆர் தொடர்பான மாற்றங்களின்போது, இந்தப் படிவத்தில் புதிய கேள்வி ஒன்று சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
இதன்படி, புதிய வாக்காளர்கள் தங்களுக்கோ, அல்லது தங்களது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டிக்கோ, பழைய எஸ்ஐஆர் பதிவுடன் இருந்த தொடர்பு குறித்து தகவல் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் கூறுகிறது.
இளம் வாக்காளர்கள் தொடர்பான கேள்வி (2.07)
எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பிறகு தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களில், இளம் வாக்காளர்களின் நிலை என்ன என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. குறிப்பாக, பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-க்குப் பிறகு, சிறப்புச் சுருக்கத் திருத்தம் (Special Summary Revision) எனப்படும் SSR நடத்தப்படாமலேயே தேர்தல்கள் நடைபெற்றதாகக் கூறும் பவன் கேரா, எஸ்ஐஆர்-ன் போது வாக்காளர் பட்டியலில் சேர முடியாமல் போன இளம் வாக்காளர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2024 ஜனவரிக்குப் பிறகு எஸ்எஸ்ஆர் நடத்தப்படவில்லை என்றால், பழைய ஃபார்ம்-6-ன் முக்கியத்துவம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் பதில் என்ன?
மறுபுறம், தேர்தல் ஆணையத்தின் விளக்கம் தங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளுக்கு முக்கியமான பதில் என பாஜக கூறுகிறது. பாஜக எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பாத்ரா, தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், அந்த விவகாரம் அமைச்சரவை செயலர் வரை சென்றதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது எனத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் அறிக்கை இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகளின் கூட்டத்தையும், நிர்வாக ரீதியான விஷயங்கள் குறித்த ஆலோசனைகளையும், தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடாகச் சித்தரிப்பது தவறு என்றும் சம்பித் பாத்ரா கூறினார்.
பாஜக தலைவர் நிதின் நட்டாவும், அரசமைப்பு அமைப்புகளை இழிவுபடுத்துவதற்காக காங்கிரஸ் பிரசாரம் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
தேஜ கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் தேஜ கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடும் முக்கியமானது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய விளக்கத்தை வரவேற்றார்.
இது ஒருமித்த கருத்துடன் அளிக்கப்பட்ட விளக்கம் என்றும், அரசமைப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து உருவான தவறான புரிதல்களை இது நீக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இதற்கு முன்னதாக சில தேஜ கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் நிலைமையைத் தெளிவுபடுத்துமாறு கேட்டிருந்தன.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் அரசமைப்பு அமைப்பின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தக்கவைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அடுத்து என்ன நடக்கும்?
காங்கிரஸ் ஏற்கனவே ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது.
ராகுல் காந்தியும் தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்ஐஆர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் மட்டுமின்றி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், எஸ்ஐஆர் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் ஆணையம் போன்ற அரசமைப்பு அமைப்புகள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கும்போதுதான் ஜனநாயகம் வலுவாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜி, செப்டம்பர் 26ஆம் தேதி செராம்பூரில் நடைபெற்ற பேரணியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.
எஸ்ஐஆர் நடைமுறை மூலம் மேற்கு வங்கத்தில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதன் மூலம் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட முயற்சி நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



