"பாலியல் தொல்லையால்" மாமனாரைக் கொன்ற மருமகள் - காவல்துறை கைது செய்யாதது ஏன்?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சென்னையில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற மாமனாரை கொலை செய்துவிட்டதாகக் கூறிய இளம்பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் தற்காப்புக்காக அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை" என பிபிசி தமிழிடம் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

"கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டாலும் நீதிமன்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண் தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்" என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் புதன்கிழமை (ஜூலை 1) அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வயதான மாமனார் தன்னிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றதாக, 28 வயதான இளம்பெண் காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.

மீன் வியாபாரியின் மகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். கணவரின் வீட்டில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருடன் இளம்பெண் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக மருமகளுக்கு பாலியல்ரீதியாக மாமனார் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறுகிறார், வழக்கை விசாரித்து வரும் காவல் ஆய்வாளர்.

"அந்த நபர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். 'உங்களுக்கு நான் சம்பாதித்துக் கொடுக்கிறேன். அதனால் என்னுடைய தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்' எனக் கூறி மருமகளுக்கு அவர் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாமனாரின் நடவடிக்கைகள் குறித்து மாமியாரிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

"கணவருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பெண்ணின் மாமியார் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்" என்கிறார் காவல் ஆய்வாளர்.

'தற்காப்புக்காக நடந்த கொலை' - காவல் ஆய்வாளர்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்படி, புதன்கிழமையன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் தனது குழந்தைகளுடன் இளம்பெண் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாமனார் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

"தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அந்தப் பெண் கையில் கிடைத்த ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளார்" என்கிறார், காவல் ஆய்வாளர்.

இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டதாகவும் அருகில் இருந்தவர்களிடம் அந்தப் பெண் தகவலைக் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக, அருகில் இருந்த பொதுமக்களில் சிலர் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இதனைக் கொலை வழக்காக காவல்துறை பதிவு செய்துள்ளது.

"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34, தனி நபரின் தற்காப்பு உரிமை (Right of Private Defence) குறித்துக் கூறுகிறது. இந்தப் பிரிவின்படி, 'தனி நபர் தன்னையோ அல்லது சொத்தையோ ஆபத்தில் இருந்து காப்பதற்கு மேற்கொள்ளும் செயல் எதுவும் குற்றம் ஆகாது' எனக் கூறப்பட்டுள்ளது.

"தற்காப்புக்காக நடந்த கொலை என்பதால் தற்போது நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யும்போது தெரிவிப்போம்" என காவல் ஆய்வாளர் குறிப்பிட்டார்.

வழக்கில் இளம்பெண் கைது செய்யப்படவில்லை. "மாமனாரின் குடும்பத்தினர் உள்பட உறவினர்கள் அனைவரும் பெண்ணுக்கு சாதகமாக உள்ளனர். இந்த வழக்கில் கைது நடவடிக்கை அவசியமானது இல்லை" எனக் காவல் ஆய்வாளர் கூறுகிறார்.

மாமனாரின் செயல் குறித்து அவர்களின் குடும்பங்களுக்குள் தகவல் தெரிந்துள்ளதாகக் கூறிய அவர், "ஆனால், காவல்நிலையத்துக்குப் புகாராக எதுவும் வரவில்லை. இதுகுறித்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்" என்கிறார்.

"குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு மனநலரீதியாக ஆலோசனை எதுவும் வழங்கப்பட்டதா?" எனக் கேட்டபோது, "அந்தப் பெண் தைரியமாக இருக்கிறார். அவருக்கு மனநலரீதியான ஆலோசனை எதுவும் தேவைப்படவில்லை" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

'கொலை என எடுத்துக் கொள்ள முடியாது'

சாந்தகுமாரி.

பட மூலாதாரம், FB/Shanthakumari

படக்குறிப்பு, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சாந்தகுமாரி.

"தற்காப்புக்காக தாக்குதல் நடத்துவதை தனிநபரின் உரிமை என பி.என்.எஸ் சட்டம் 34 கூறுகிறது. அந்தவகையில் பெண்ணைக் கைது செய்யாமல் காவல்துறை எடுத்த நடவடிக்கை சரியானது" என்கிறார், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சாந்தகுமாரி.

"அந்த நபரின் தவறான நடவடிக்கைகளை அறிந்த பிறகு சம்பந்தப்பட்ட பெண் விலகிய பிறகும் தொடர்ந்து தவறு செய்வதற்கு முயற்சித்துள்ளார். அதன் காரணமாக நடந்த சம்பவத்தைக் கொலை என எடுத்துக் கொள்ள முடியாது" என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, "தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடந்த மோதலில் பெண்ணின் மாமனார் இறந்துவிட்டார். ஆனால், இதனை நீதிமன்றத்தில் அவர் நிரூபிக்க வேண்டும்" என்கிறார்.

தர்ஷன் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கு

இதுதொடர்பாக, 2010 ஆம் ஆண்டு தர்ஷன் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கை அவர் மேற்கோள் காட்டினார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1991 ஆம் ஆண்டு நிலத் தகராறு காரணமாக நிகழ்ந்த மோதலில், தர்ஷன் சிங் என்பவர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு நபர் உயிரிழந்தார். 'இது சட்டப்படி குற்றம் அல்ல' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய வழக்கறிஞர் சாந்தகுமாரி, "ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தும் போராட்டத்தில் எதிராளி கொல்லப்பட்டாலோ கொடூர காயத்துக்கு ஆளானாலோ குற்றமாக கருத முடியாது என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெரிவிக்கிறது" என்கிறார்.

"அந்தவகையில், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இளம்பெண் இவ்வாறு செய்ததாகவே பார்க்கப்படும்" என அவர் கூறுகிறார்.

மதுரை சம்பவம்

தற்போது நடந்த சம்பவம் போன்று கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரையில் நடந்தது.

தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் தன்னுடைய மகளின் மானத்தைக் காப்பாற்றுவதற்காகவும் கணவரைக் கொன்ற பெண்ணை 'தற்காப்பு' எனக் கூறி காவல் கண்காணிப்பாளர் விடுதலை செய்தார்.

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 19 வயது மகளைக் கணவர் வீரணன் என்கிற ஜோதிபாசு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவரைக் கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

"இந்தச் சம்பவம் தனிநபர் தற்காப்புக்காகவும் மகளின் மானத்தைக் காக்கவும் நடந்த செயல் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆகவே அவரை நாங்கள் விடுவித்தோம்" என ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் அப்போதைய மதுரை எஸ்.பி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு இந்தத் தம்பதி விவகாரத்து பெற்றுவிட்டனர். ஆனால், 2011 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால், அவர்களுக்குள் தொடர்ந்து மோதல் இருந்து வந்துள்ளது.

2012 மே மாதம் தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயன்ற வீரணனை அவரின் மனைவி கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 100ன்படி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் தற்காப்புக்காக தாக்குதல் நடத்தும் உரிமை குறித்து இந்தச் சட்டப்பிரிவு கூறுகிறது. இதன்படியே அவர் விடுவிடுக்கப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 100க்கு நிகராக தற்போது பி.என்.எஸ் 34 என மாற்றப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு