‘2 நாள் உதிக்காத சூரியன், மக்களை மூழ்கடித்த சுனாமி' - மிகப்பெரிய எரிமலை வெடிப்பு தந்த படிப்பினை

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images
- எழுதியவர், டெய்ஸி ஸ்டீபன்ஸ்
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தோனீசியாவில் உள்ள எரிமலைத் தீவான அனக் கிராகட்டாவ் இந்த வாரம் பல முறை வெடித்துள்ளது. உள்ளுர் ஊடகங்களின்படி, சாம்பல் மேகங்கள் வானத்தில் 250 மீட்டர் வரை உயர்ந்தன.
அந்த எரிமலை கடந்த செவ்வாய்க்கிழமை ஒருமுறையும் புதன்கிழமை இருமுறையும் வெடித்ததாக இந்தோனீசியாவின் புவியியல் முகமை கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், அந்தப் பகுதியில் எரிமலை நகர்வுகளைக் கண்காணிக்கும் ஒரு கண்காணிப்புக் குழு பக்கத்தில் வாழும் மக்களுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அனக் கிராகட்டாவ் 1927-ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் கால்டெரா என்கிற மிகப்பெரிய எரிமலைக் குழியிலிருந்து உருவானது.
இந்த கால்டெரா என்பது 1883-ஆம் ஆண்டு நிகழ்ந்த கிராகட்டாவ் எரிமலை பெருவெடிப்பிலிருந்து உருவானது. இந்த நிகழ்வு வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது மோசமான எரிமலை பேரிடராகக் கருதப்படுகிறது.
1883-ஆம் நிகழ்ந்த இந்த எரிமலை வெடிப்பால் 48 மணி நேரத்தில் 36,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர், 165 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்தன.
இந்த வெடிப்பால் உண்டான ஒலி தான் உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகவும் சத்தமான ஒலியாகக் கருதப்படுகிறது. அதன் எதிரொலி ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் கேட்டது.
அதேநேரத்தில் வளிமண்டத்தில் அதிக அளவிலான சாம்பல் பரவியதால் பல ஆண்டுகளுக்கு உலகைச் சுற்றிலும் வெப்பநிலையை அது பாதித்தது. உலகளாவிய வெப்பநிலையில் சரிவும் பதிவானது.
வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றைப் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
"இரண்டு நாட்களுக்கும் மேல் நீடித்த இருள்"

பட மூலாதாரம், DEA / BIBLIOTECA AMBROSIANA / Contributor via Getty Images
இந்தப் பேரிடரின் ஆரம்ப அறிகுறிகள் 1883-ஆம் ஆண்டு மே மாதம் தென்பட ஆரம்பித்தன. சுற்றுச்சூழல் தகவலுக்கான அமெரிக்க தேசிய மையத்தின்படி (என்.சி.இ.ஐ), கிராகட்டாவ் அருகில் ஒரு ஜெர்மானிய போர்க்கப்பல் சென்றபோது அந்தக் கப்பலின் கேப்டன் அதிக அளவிலான சாம்பல் மற்றும் புழுதி அங்கிருந்து வந்ததைக் கண்டார்.
அப்போது, இந்த எரிமலைத் தீவு 200 ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்று இருந்தது.
அடுத்த சில மாதங்களில், வணிக கப்பல்கள் மற்றும் இதர கப்பல்களில் பயணித்த குழுவினரும் இதே போன்ற காட்சிகளைக் கண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி மோசமான நிகழ்வுகள் தொடங்கின. வரலாற்றில் மிகவும் மோசமான இயற்கை பேரிடராகவும் அது பதிவானது.
கிராகட்டாவின் முதல் பெருவெடிப்பு கடலுக்குள் எரிமலைக்குழம்பு, நுண்துளைக் கல் மற்றும் சாம்பல் ஆகியவற்றை அதிக அளவில் அனுப்பியது. இது வடக்கு நோக்கிச் சென்ற மிகப்பெரிய சுனாமியைத் தூண்டி ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்தது.
எரிமலை வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்திற்குள், சாம்பல் மேகங்கள் 48 கிலோமீட்டர் உயரம் வரை சென்று அனைத்து திசைகளிலும் பரவத் தொடங்கின.
இந்தச் சாம்பல் மேகங்கள் வானத்தில் 80 கிலோமீட்டர் வரை பரவின. என்.சி.இ.ஐ வழங்கும் தகவல்களின்படி, இது சுமார் 3 லட்சம் சதுர மைல் அளவிலான இடங்களின் மீது பரவி முழு பிராந்தியத்தையும் 2 நாட்களுக்கு மேல் இருளில் மூழ்கச் செய்தது.
'ஆஸ்திரேலியா வரை கேட்ட வெடிப்புச் சத்தம்'

பட மூலாதாரம், Getty Images
சிட்னி பேக்கர் சிறு வயதாக இருந்தபோது, கொடூரமான கிராகட்டாவ் எரிமலை வெடிப்பை தனது தந்தையின் கப்பலில் இருந்து பார்த்துள்ளார்.
தன்னுடைய இறுதிக் காலத்தில் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர் அந்த நிகழ்வை விவரித்தார்.
"காற்றில் சாம்பலும் புழுதியும் எங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என நாங்கள் நினைக்கும் அளவுக்கு இருந்தது," என 1946-ஆம் ஆண்டு பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியிருந்தது, எங்களின் முன் இருந்த கைகளைக் கூட பார்க்க முடியவில்லை. கப்பல், கடல் மற்றும் எங்கள் மீதும் சாம்பல் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தது. 6 முதல் 7 அங்குலம் வரையிலான சாம்பல் ஒட்டுமொத்த கப்பலின்மீதும் படர்ந்திருந்தது." என்றார்.
வெடிப்பின் சத்தம் நம்பமுடியாத அளவிற்கு மிகவும் அதிகமாக இருந்ததாக பேக்கர் கூறுகிறார்.
"அந்த இரைச்சலையும் அழிவையும் விவரிக்க வார்த்தைகள் போதாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
'கிராகட்டாவ்: உலகம் வெடித்த நாள்' என்கிற புத்தகத்தின் ஆசிரியர் சைமன் வின்செஸ்டரின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை 10:02 மணிக்கு நிகழ்ந்த பெருவெடிப்பிற்கு முன்பாக பல பெரிய அளவிலான வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த வெடிப்பின் சத்தம் 4,600 கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸ் வரை கேட்டதாக என்.சி.இ.ஐ தெரிவிக்கிறது.
2010-இல் பிபிசியின் விட்னஸ் ஹிஸ்டரி பாட்காஸ்டில் பேசிய சைமன் வின்செஸ்டர், "தீவு முழுவதும் பல கிலோமீட்டர் நீளத்திற்குப் பாறைகள் ஏதோ ஒரு வெடிப்பினால் சிதறடிக்கப்பட்டதைப் போலத் தகர்க்கப்பட்டன. எரிமலைக் கற்களும் சாம்பலும் வானில் 17 முதல் 18 மைல் உயரம் வரை இருந்தன. அதனால் அந்தத் தீவு முழுவதுமே மறைந்துவிட்டது போல் தோன்றியது." என்றார்.
மேலும் அவர், "சில விநாடிகளுக்கு கடலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதில் பல ட்ரில்லியன் டன் அளவிலான நீர் நிரம்பியது. அதன் தாழ்வாரம் எந்த அளவிற்கு வெப்பமாக இருந்ததென்றால் நீர் உடனேயே ஆவியாக மாறியது. ஒன்றன்பின் ஒன்றாக மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாயின." என்றார்.
"36,000 பேர் உயிரிழந்த பேரிடர்"

பட மூலாதாரம், FERDI AWED/AFP via Getty Images
இந்த ஒட்டுமொத்த பேரிடரில் மிகப்பெரிய அழிவை சுனாமி ஏற்படுத்தியது. மொத்தமாக 36,000 பேர் கொல்லப்பட்டனர். அதில் 34,000 பேர் சுனாமியால் மட்டுமே உயிரிழந்தனர்.
இந்தோனீசியாவின் பேன்டன் மாகாணத்தில் மேற்கு கரையில் உள்ள நகரமான அஞ்சருக்கு தானும் தனது தந்தையும் சென்றதாக சிட்னி பேக்கர் தெரிவிக்கிறார்.
"ஒட்டுமொத்த நகரும் கடல்நீரில் மூழ்கியது," என்றும் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் தங்கியிருந்த விடுதி எந்த அளவிற்கு நீருக்குள் மூழ்கியதென்றால் ஒரு கப்பல் அதன் மீது பயணித்து அதன் நங்கூரத்தை நிலைநிறுத்தும் அளவிற்கு இருந்தது," என அவர் தந்தை கூறியதாக பேக்கர் நினைவுகூர்கிறார்.
சிலர் எப்படியோ சுனாமியிலிருந்து தப்பித்து மலைப்பகுதிகளை நோக்கி ஓடினார்கள்.
ஆனால் அவர்களும் முற்றிலும் பாதுகாப்பாக இல்லை. அதன் பின்னர் வெப்பமான வாயு, சாம்பல் மற்றும் பாறைகளால் ஆன அபாயகரமான அலை ஒன்று மிக அதிகமான வேகத்தில் தரையை ஒட்டி பாய்ந்து அவர்களை நோக்கிச் சென்று பல உயிர்களையும் பலி வாங்கியது.
கிராகட்டாவ் எரிமலை வெடிப்பின் தாக்கம் என்பது அந்த 48 மணி நேரத்திற்கு மட்டும் கட்டுப்படவில்லை.
அந்த வெடிப்பிலிருந்து வந்த சாம்பல் உலகம் முழுவதும் பரவி சூரியன் மற்றும் நிலவைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் ஒன்றை உருவாக்கியது. வளிமண்டலத்தில் இருந்த சாம்பல் சூரிய ஒளியை சிதறடிக்க தொடங்கியது.
என்.சி.இ.ஐ வழங்கும் தகவல்களின்படி, இது உலகளாவிய சராசரி வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் வரை குறைய காரணமானது. இவை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு 5 ஆண்டுகள் வரை ஆகின.
வளிமண்டலத்தில் பரவிய இந்த நுண் துகள்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய ஆஸ்தமனம் இயல்பைவிட அடர் சிவப்பாக தெரிய காரணமாக அமைந்தன. இந்த துகள்கள் இயல்பானதை விட வித்தியாசமாக ஒளியைச் சிதறடித்தன.
இந்தச் சிவப்பு வானம் அந்தக் காலகட்டத்தில் இருந்த பல்வேறு ஓவியங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எர்வட்ர் மன்சின் பிரபல ஓவியமான "தி ஸ்கிரீமில்" காட்டப்படும் சிவப்பு வானம் என்பது கிராகட்டாவ் வெடிப்பை மையப்படுத்தியதாகவே இருந்தது எனச் சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Didier Lebrun / Photonews via Getty Images
"விஞ்ஞானிகளுக்குப் புதிய பார்வையைக் கொடுத்த எரிமலை வெடிப்பு"
கிராகட்டாவ் வெடிப்பு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியிருந்தாலும் அது நம் உலகத்தைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் ஒன்றை விஞ்ஞானிகளுக்கு கற்றுக் கொடுத்தது.
இந்த வெடிப்பிற்கு முன்பாக உலகத்திற்கு ஜெட் ஸ்ட்ரீம்ஸ் பற்றி தெரிந்திருக்கவில்லை. அவை வளிமண்டத்தின் மேல் அடுக்கில் பரவும் அதி வேகமான மற்றும் கண்ணுக்குத் தெரியாத காற்றோட்டங்கள் ஆகும். உலகின் வானிலையைத் தீர்மானிப்பதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆனால் கிராகட்டாவ் வெடிப்பிற்குப் பிறகு, அதன் சாம்பல் மற்றும் தாக்கங்கள் உலகம் முழுவதும் காண முடிந்ததால் வளிமண்டலத்தில் வலுவான காற்றோட்டங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். அவை இந்த துகள்களைப் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை கடத்திச் செல்லும் திறன் கொண்டவை.
"இது ஒட்டுமொத்த உலகத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்தியது என்பதை அறிவியல் உலகத்தை உணரவைத்த முதல் நிகழ்வு," என்கிறார் வின்செஸ்டர்.
தொடர்ந்து பேசிய அவர், "இங்கு தான் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினர். இன்று புவி வெப்பமடைதல், அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் மற்றும் ஒட்டுமொத்த கிரகம் மீதான சுற்றுச்சூழல் தாக்கம் பற்றி நாம் பேசி வருகிறோம். இந்த எண்ணவோட்டத்தின் தொடக்கம் கிராகட்டாவ் வெடிப்பில் இருந்து தான் வந்தது. இந்தச் சம்பவம் தான் உலகை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பாக பார்க்கும் பார்வையை நமக்கு வழங்கியது." என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































