இதயம் முரளி: தந்தை 'சொல்லாத காதலை' மகன் சொன்னாரா? ஊடக விமர்சனம்

இதயம் முரளி பட விமர்சனம்

பட மூலாதாரம், X/Dawn Pictures

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் தயாரான 'இதயம் முரளி' திரைப்படம் நேற்று (ஜூலை 10) வெளியானது.

அதர்வாவின் தந்தையும் மறைந்த நடிகருமான முரளி நடித்த 'இதயம்' திரைப்படத்தை நினைவுபடுத்தும் விதமாக இந்தப் படத்தின் தலைப்பு அமைந்துள்ளது.

அதர்வா உடன், கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நிஹாரிகா, சுதாகர், டிராவிட், தமன் என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கின்றனர். தமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசையும் அவரே. ஃபஹத் ஃபாசில், மாளவிகா மோகனன், ஜொனிடா காந்தி ஆகியோர் கௌரவ தோற்றங்களில் நடித்துள்ளனர்.

காதல் கதையான இதயம் முரளி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.

கதை என்ன?

இதயா எனும் கதாபாத்திரத்தில் அதர்வா பள்ளி பருவத்தில் ஆங்கிலப் பேராசிரியராக வரும் ஜொனிடா காந்தி மீது காதல் வயப்படுகிறார்.

அதன்பிறகு மேல்நிலைப்பள்ளி வருகிறபோது சாம் (சமந்தா) ஆக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தனைக் ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் அவர் இரட்டையர் எனத் தெரிந்த பிறகு தான் எந்தச் சகோதரியைக் காதலித்தோம் என்பது தெரியாமல் மனவேதனை அடைந்து காதலை வெளிப்படுத்தாமல் செல்கிறார்.

அதன்பிறகு கல்லூரி படிக்கிறபோது அவர் உடன் படிக்கும் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார். ஆனால் அப்போதும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். இதயா கதாபாத்திரம் தனது சொல்லப்படாத உணர்வுகளை எவ்வாறு கையாண்டார், காதலில் அவர் வெற்றி கண்டாரா என்பதே படத்தின் கதையாக உள்ளது.

இதயம் முரளி, அதர்வா

பட மூலாதாரம், X/Dawn Pictures

அதர்வா நடிப்பு, கதாபாத்திரம் எப்படி உள்ளது?

"கவர்ச்சிகரமான நடிகர்கள், துல்லலான இசை, அசத்தலான ஆடைகள், இதமான காட்சிகள், நாகரிகமான நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நாடகத்தனமானதாக மாறிவிடாததை உறுதி செய்யும் இதமான பாணி என ஒரு காதல் திரைப்படத்தில் வேண்டிய அனைத்தும் இதயம் முரளி படத்தில் இருக்கிறது." என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதயாவாக நடித்திருக்கும் அதர்வா படம் முழுக்க காதலை சொல்ல தவிக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக தாங்கி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் படம் முழுக்க நடிப்பதற்கான ஒரே வாய்ப்புள்ள நடிகராக அவரே கண் முன் தோன்றுகிறார் என்று தினமணி விமர்சனம் கூறுகிறது.

அதர்வா மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளதாக மாலைமலர் விமர்சனம் தெரிவிக்கிறது, "பள்ளி பருவ பையன், கல்லூரி பருவ இளைஞர் என இரண்டு கெட்டப்புகளிலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் அதர்வா." என்கிறது அந்த விமர்சனம்.

"வயது வந்த பிறகும் இதயா கதாபாத்திரம் சொல்லப்படாத உணர்வுகளில் இருந்து மீண்டுவரவில்லை என்பது கதாபாத்திரத்தின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது." என்று தி ஹிந்து விமர்சனம் தெரிவிக்கிறது.

இதயம் முரளி, அதர்வா

பட மூலாதாரம், X/Dawn Pictures

மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு எப்படி இருக்கிறது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கதாநாயகன், கதாநாயகிகள் போக இந்தப் படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.

கதாநாயகிகள் மற்றும் துணை கதாபாத்திரங்கள் பற்றி குறிப்பிடுகையில், "ப்ரீத்தி முகுந்தன் அழகிலும், நடிப்பு மற்றும் டான்ஸிலும் ஸ்கோர் செய்துவிட்டார். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் கயாடு லோஹர் அழகாக நடித்திருக்கிறார். சின்னி ஜெயந்த், தமன் காதலியாக வரும் நிஹாரிகா, டீச்சராக வரும் ஜொனிட்டா மனதில் நிற்கிறார்கள். தமன், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் மற்றும் ரக்ஷன் வரும் காட்சிகள் கலகல. பஹத் பாசில் நடிப்பு ஏமாற்றம்." எனத் தெரிவிக்கிறது.

இந்தப் படம் நட்பு என்பதைப் பல்வேறு விதங்களில் கொண்டாடுவதாக தி ஹிந்து விமர்சனம் கூறுகிறது.

"அதர்வா, கயாடு, நிஹாரிகா, தமன், ஏஞ்சலின், சுதாகர், டிராவிட் மற்றும் ரக்ஷன் வரும் கல்லூரி நண்பர்கள் வட்ட காட்சிகள் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை தருகின்றன. இவர்கள் தான் கதைக்கு தேவையான நகைச்சுவையையும் வழங்குகின்றனர்," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை கதாபாத்திரங்கள் மற்றும் கௌரவ தோற்றங்கள் பற்றி குறிப்பிட்ட தினமணி விமர்சனம், "இவ்வளவு கதாபாத்திரங்கள் இருந்தும் எதையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். ஏன் இத்தனை கதாபாத்திரங்கள்?" என்று கேள்வி எழுப்புகிறது.

இதயம் முரளி, அதர்வா

பட மூலாதாரம், X/Dawn Pictures

படத்தின் கதை, திரைக்கதை எப்படி இருக்கிறது?

பள்ளிப் பருவ நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம் என அனைத்தும் கலந்த யூத்புல்லான கதையை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி இருப்பதாக மாலை மலர் விமர்சனம் கூறுகிறது.

"அதர்வா, அப்பா முரளி பாணியில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் ஓஜி (OG) முரளியை நினைவுப்படுத்துகிறது."

தினமணி விமர்சனத்தில், "பால்ய வயதில் தோன்றிய காதலை இளைஞனான பிறகும் சுமக்கும் இடங்கள் எல்லாம் அவரை குழப்பவாதியாக காட்டுகிறதே தவிர காதலால் கசிந்துருகும் கதாபாத்திரமாக நிலைநிறுத்தவில்லை. இதயம் முரளி திரைப்படத்தில் முதல் பாதி முடியும் வரை கதை எதை நோக்கி செல்கிறது என்பதே கண்டுபிடிக்க முடியாத அளவு அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்."

"ஒட்டுமொத்த படத்திலும் ரயில் நிலையத்தில் காதலை சொல்வதற்காக தடுமாறிக் கொள்ளும் அதர்வாவுக்கும் கயடு லோகருக்கும் இடைப்பட்ட காட்சிகள் படத்திற்கு சற்று நம்பிக்கை தருகின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த காட்சி மட்டுமே பார்வையாளர்களுக்கு ஒரு உணர்வை கடத்துகின்றது." என்கிறது அந்த விமர்சனம்

'பொட்டு வைத்த வட்ட நிலா' படத்திற்கு உதவியதா?

இதயம் முரளி, அதர்வா

பட மூலாதாரம், X/Dawn Pictures

இதயா பாடல், இடைவேளையின் போது வரும் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" பாடல் உள்ளிட்டவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளதாக மாலை மலர் விமர்சனம் கூறுகிறது.

"இதயம் படத்தில் வந்த பிரபலமான 'பொட்டு வைத்த வட்ட நிலா' பாடலுக்கான அஞ்சலி இந்தப் படத்தில் சரியான இடத்தில் வந்தாலும் அந்தக் காட்சி சரியாக கட்டமைக்கப்படவில்லை." என்று தி ஹிந்து விமர்சனம் கூறுகிறது.

பருவங்கள் கடந்த காதல் கதை என்கிற மிகவும் பிடித்தமான கதைக்களத்தை இதயம் முரளி வழங்கினாலும் போதுமான உள்ளடக்கம் இல்லாதது மற்றும் கதையின் முக்கியமான தருணங்களை சரியாக திரைகளில் வழங்க முடியாதது போன்ற சிக்கல்களால் படம் சில இடங்களில் தவிப்பதாக அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

படம் தவறவிட்ட விஷயங்கள் என்ன?

இதயம் முரளி, அதர்வா

பட மூலாதாரம், X/Dawn Pictures

படம் இன்னும் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கலாம் என்று கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், ஆனால் பெரும்பாலும் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கிறது.

"பழக்கமான கதைக்களத்தில் உள்ள சிறுசிறு திருப்பங்கள் இந்தப் படம் ஒரு இனிமையான பொழுதுபோக்காக இருப்பதற்கு தேவையான புத்துணர்ச்சியைத் தருகிறது."

"கைகூடாத காதலின் உணர்வை படம் புரிந்துகொண்டாலும் அவை நிலைத்திருக்க தேவையான ஆழமான உணர்வுகளைப் படம் உருவாக்கவில்லை. இதயம் படத்தில் வரும் முரளி, மனதளவில் கவிஞர், ஒரு பாடல் அவருக்கு அதைச் செய்தது. ஆனால் இதயம் முரளி இன்னும் கூடுதலாகச் செய்திருக்க வேண்டும்." என்று தி ஹிந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி இசை ஆங்காங்கே கை கொடுத்துள்ளதாக தினமணி விமர்சனம் தெரிவிக்கிறது. "கட்டழகி எனும் பாடலைத் தவிர மற்ற எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. கேமரா மனோஜ் பரமஹம்சா தனது வேலையை சரியாக செய்துள்ளார். படத்தொகுப்பில் பிரதீப் சற்று மெனக்கெட்டு இருக்கலாம்." என்று அந்த விமர்சனம் கூறுகிறது.

"படத்தில் தேவையில்லாமல் 2 சண்டைக் காட்சிகளை திணித்ததுபோல உள்ளது. ஆங்காங்க லாஜிக் அடி வாங்குகிறது. ஏகப்பட்ட கேள்விகள் எழுவது படத்திற்கு மைனஸ். மொத்தத்தில், ரசிக்கக்கூடிய, வண்ணமயமான, பொழுதுபோக்கான, மனதிற்கு இதமான காதல்-நகைச்சுவைத் திரைப்படம்." என்று மாலை மலர் விமர்சனம் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு