இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது அதிகம் விவாதிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள் எஸ்-400 (S-400) மற்றும் பிரமோஸ் (BrahMos) ஆகும்.
எஸ்-400 ஏவுகணையை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியது, பிரமோஸ் ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியாகும். எஸ்-400 தற்காப்பு ஆயுதமாகவும், பிரமோஸ் தாக்குதல் ஆயுதமாகவும் உள்ளது.
அதாவது, எஸ்-400 எதிரிகளின் தாக்குதல்களைத் தடுக்கிறது, பிரமோஸ் தாக்குதல் நடத்துகிறது.
பிரமோஸ் ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை. தற்போது இந்தியா இதை ஏற்றுமதியும் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் இந்தோனீசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, பிலிப்பின்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது.
இத்தகைய சூழலில், இந்தியா பிரமோஸ் ஏவுகணையை விற்கும் போது, ரஷ்யாவின் ஒப்புதலையும் பெற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகையில், "பிரமோஸ் ஒப்பந்தத்தில் இதுவே மிக முக்கியமான அம்சம். அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Right) யாரிடம் உள்ளது என்பது குறித்து இந்தியா இதுவரை வெளிப்படையாக எதையும் கூறவில்லை. இந்தியா பிலிப்பின்ஸிற்கு பிரமோஸை விற்றுள்ளது என்றால், அது ரஷ்யாவின் ஒப்புதல் இன்றி சாத்தியப்பட்டிருக்காது. தற்போது இந்தோனீசியாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வியட்நாமுடனும் பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது." என்றார்.
ராகுல் பேடி மேலும் கூறுகையில், "இந்த ஏவுகணைகளை விற்ற பிறகு கிடைக்கும் பணத்தில் ரஷ்யாவிற்கு எவ்வளவு பங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. நிச்சயமாக ரஷ்யாவிற்கும் பங்கு கிடைக்கும். பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை மிகவும் தனித்துவமானது. இதன் தடம் அறிவது (Tracking) கடினம். தனது பிரிவில் இது மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பல நாடுகள் பிரமோஸில் ஆர்வம் காட்டி வருகின்றன."
"பிலிப்பின்ஸ் தனது கடற்கரைப் பகுதிகளுக்காக இதைத் தற்காப்பு நோக்கத்திற்காக வாங்கியுள்ளது. இந்தோனீசியாவும் தற்காப்பு நோக்கத்திற்காகவே வாங்கியுள்ளது. மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே வியட்நாமுக்கு பிரமோஸ் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஆனால், அப்போது சீனா அதிருப்தி அடையக்கூடும் என்ற தயக்கம் இருந்தது."
"ஆனால், அந்தத் தயக்கம் தற்போது இந்தியாவிடம் இல்லை. தற்போதைய நிலவரப்படி கூட, பிரமோஸின் 20 முதல் 30 சதவீத உதிரிபாகங்கள் ரஷ்யாவிலிருந்துதான் வருகின்றன. குறிப்பாக, அதன் ராம்ஜெட் என்ஜின் ரஷ்யாவிலிருந்துதான் வருகிறது. இது இன்னும் 100 சதவீதம் இந்திய ஏவுகணை அல்ல," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அறிவுசார் சொத்துரிமை யாரிடம் உள்ளது?
பாதுகாப்பு ஆய்வாளரும், சொசைட்டி ஆஃப் பாலிசி ஸ்டடீஸின் இயக்குநருமான சி. உதய் பாஸ்கர் கூறுகையில், ரஷ்யாவின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா யாருக்கும் பிரமோஸை விற்க முடியாது என்றார்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய உதய் பாஸ்கர், "ரஷ்யாவின் ஒப்புதல் கட்டாயமானது. ஏற்றுமதிக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைக்கும் பணத்தில் ரஷ்யாவிற்கும் பங்கு உண்டு. இதன் அறிவுசார் சொத்துரிமை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளிடமும் உள்ளது. இது முழுமையான இந்திய ஏவுகணை அல்ல." என்று கூறினார்.
"இதன் ஏற்றுமதி மூலம் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் துறையில் இந்தியாவின் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன். ஏசியான் (ASEAN) பிராந்தியத்தின் பல நாடுகள் சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ ஆக்கிரமிப்பு குறித்து ஆழ்ந்த கவலையில் இருக்கும் தருணத்தில், தங்கள் பாதுகாப்பு தொடர்பான அச்சங்களைக் குறைப்பதற்கு, ஒப்பீட்டளவில் விலை குறைவான மற்றும் நம்பகமான பாதுகாப்புத் தீர்வுகளைத் தேடும் சூழலில் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது."
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான சிறப்பு மையத்தின் இணைப் பேராசிரியர் லக்ஷ்மண் குமார் கூறுகையில், பிரமோஸ் என்பது இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு விவகாரம் என்பதால், பல விஷயங்கள் பொதுவெளியில் இல்லை. இருப்பினும், ரஷ்யாவின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா பிரமோஸை விற்க முடியாது என்பது தெளிவு என்று குறிப்பிட்டார்.
லக்ஷ்மண் குமார் கூறுகையில், "பிரமோஸ் ஏரோஸ்பேஸ் வாரியமே இந்த முடிவை எடுக்கிறது, இதில் ரஷ்ய அதிகாரிகளும் அடங்குவர். எந்த நாட்டிற்கு விற்கலாம், எதற்கு விற்கக்கூடாது என்பதை வாரியத்தின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்கிறார்கள். தொடக்கத்தில் பிரமோஸ் பெரும்பாலும் ரஷ்யாவின் தயாரிப்பாகவே இருந்தது, ஆனால் இப்போது டிஆர்டிஓ இதைத் தங்களது தயாரிப்பாக பெருமளவு மாற்றியுள்ளது. இருப்பினும், ரஷ்ய உதிரிபாகங்களுக்கான சார்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை."
லக்ஷ்மண் குமார் மேலும் கூறுகையில், "பிரமோஸை வெறும் பாதுகாப்பு ஏற்றுமதியாக மட்டும் பார்க்கக்கூடாது. இதற்குப் புவிசார் அரசியல் முக்கியத்துவமும் உண்டு. மலாகா நீரிணையில் இந்தோனீசியா மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சீனா மீதான தனது சார்புநிலையைக் குறைக்க இந்தோனீசியா விரும்புகிறது. இந்தோனீசியா தனது கடல்சார் திறனை இந்தியாவிலிருந்து பெறுகிறது என்றால், அது மூலோபாய சுயாட்சியை விரும்புவதற்கான ஒரு சமிக்ஞையாகும். அதாவது, சீனாவின் ஆக்கிரமிப்பு என்று கருதப்படுவதற்கு எதிராக அவர்கள் உள்ளனர் என்று பொருள்."
இந்தியாவின் பாதுகாப்புத் தொழில் அளவில் பெரியது, ஆனால் அதன் உற்பத்தியில் பெரும்பாலானவை இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பயன்படுத்தப்படுகின்றன. இதில் பெருமளவிலான உபகரணங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டிற்குள் ஐந்து பில்லியன் டாலர் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி என்ற லட்சிய இலக்கை அரசாங்கம் நிர்ணயித்திருந்தது. அதே நேரத்தில், பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பிரமோஸை விற்பது ஏன்?

பட மூலாதாரம், @narendramodi
பிரமோஸ் ஏவுகணை ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. இது ரஷ்யாவின் பி-800 ஒனிக்ஸ்/யாகோந்த் ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டது.
இதன் தற்போதைய பதிப்பின் தாக்குதல் திறன் சுமார் 500 கிலோமீட்டர்கள் ஆகும். இருப்பினும், ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின் (MTCR) 300 கிலோமீட்டர் வரம்பிற்குள் இருக்கும் வகையில், இதன் ஏற்றுமதிப் பதிப்பின் வரம்பு 290 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
2004-ஆம் ஆண்டு முதல்முறையாகப் பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 2007-ஆம் ஆண்டு இந்தியப் படைகளில் சேர்க்கப்பட்டது. இதன் பல்வேறு பதிப்புகள் இந்திய தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளன.
பிலிப்பின்ஸிற்கு வழங்கப்பட்டுள்ள பதிப்பு, கடற்படை சார்ந்தது. இது குறித்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்புச் செயலாளர் கூறுகையில், "பிலிப்பைன்ஸ் கடற்படையின் கடற்கரை பாதுகாப்புப் படைப்பிரிவு இந்த நவீன மூலோபாய பாதுகாப்புத் திறனின் முதன்மை பயனாளியாக இருக்கும்," என்று தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் இந்த ஒப்பந்தம் குறித்துத் தகவல் பகிர்ந்த லோரென்சானா, "கொள்முதல் நிறுவனத்தின் தலைவராக, பிலிப்பின்ஸ் கடற்படையின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை கையகப்படுத்துதல் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பில் நான் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்தத் திட்டத்தில் மூன்று ஏவுகணை பேட்டரிகளின் விநியோகம், இயக்குபவர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களுக்கான பயிற்சி, அத்துடன் அவசியமான ஒருங்கிணைந்த தளவாட ஆதரவு தொகுப்பு ஆகியவையும் அடங்கும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் சீனாவுடன் கடல்சார் மற்றும் பிராந்திய எல்லைப் பிரச்னைகளைக் கொண்டுள்ளன. இது குறித்து டாக்டர் லக்ஷ்மண் குமார் கூறுகையில், அந்த நாடுகளின் ராணுவத் திறனை அதிகரிப்பதன் மூலம், தென் சீனக் கடலில் சீனாவுக்கு இந்தியா சவால்களை அதிகரிப்பதாகக் குறிப்பிடுகிறார்.
டாக்டர் லக்ஷ்மண் குமார் மேலும் கூறுகையில், "சீனா தனது அண்டை நாடுகளிலேயே அதிக சவால்களில் சிக்கியிருப்பது இந்தியாவுக்கு மூலோபாய ரீதியாகச் சாதகமானது. இது சீனாவின் கவனத்தைத் திசைதிருப்புவதுடன், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா மீது அவர்கள் அதிக அழுத்தம் கொடுப்பதைத் தடுக்கும்." என்றார்.
இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளரும், ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனத்தின் (ASPI) மூத்த ஆய்வாளருமான ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலனின் கூற்றுப்படி, பிரமோஸ் ஏவுகணை ஒப்பந்தம் என்பது ராணுவ வலிமையை அதிகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அது ஒரு பெரிய மூலோபாயச் செய்தியையும் தாங்கி நிற்கிறது.
பிரமோஸ் ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், Getty Images
ராஜகோபாலன் ஹாங்காங் செய்தி பகுப்பாய்வு இணையதளமான 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' (SCMP)-இடம் கூறுகையில், "தென் சீனக் கடல் விவாதத்தில் இந்தோனேசியா ஒரு போட்டியாளர் நாடாக இல்லாவிட்டாலும், அதன் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் நதுனா தீவுகளைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் அத்துமீறல்கள் கவலைக்குரியதாக இருந்து வருகிறது. இந்த பிரமோஸ் ஒப்பந்தத்தை, கடல்சார் பிராந்தியத்தில் குறைந்தபட்சத் தடுப்புத் திறனை வளர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்க வேண்டும்." என்றார்.
மேலும் அவர், "இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மூலோபாய மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியா இறுதியாகத் தனது பழைய தயக்கத்தைக் கைவிட்டு, சீனாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்க மற்ற நாடுகளுக்குத் திறம்பட உதவி வருகிறது." என்று கூறினார்.
அதே எஸ்.சி.எம்.பி (SCMP) இணையதளத்திடம், சிங்கப்பூரின் எஸ். ராஜரத்னம் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் இந்தோனேசியத் திட்டத்தைச் சேர்ந்த ஆய்வு ஆய்வாளர் அதி பிரியமரிஸ்கி கூறுகையில், "இந்தோனேசியாவிடம் ஏற்கெனவே ரஷ்ய தயாரிப்பான சுகோய் போர் விமானங்கள் உள்ளன, அவை பிரமோஸ் ஏவுகணையுடன் ஏற்கனவே இணக்கமானவை. எனவே, இந்த ஒப்பந்தம் இயற்கையாகவே பொருத்தமானதாக உள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிக்கு இந்தோனேசியா ஒரு வாடிக்கையாளராகப் பெரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது." என்றார்.
மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செல்லானி, குறைந்த வருவாய் உடைய நாடுகளுக்கு பிரமோஸ் ஒரு முக்கிய ஆயுதமாக உருவெடுத்துள்ளதாகக் கருதுகிறார். இது குறித்து அவர் ஜூன் 2-ஆம் தேதி 'எக்ஸ்' தளத்தில் எழுதிய பதிவில், "மூலோபாயக் கண்ணோட்டத்தில், குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளுக்கு கடல்சார் அதிகார சமநிலையை மாற்றக்கூடிய ஒரு ஆயுதமாக பிரமோஸ் உருவெடுத்துள்ளது. ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் கிடைக்கும் இந்த ஏவுகணை, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது." என்று குறிப்பிட்டிருந்தார்.
செல்லானி மேலும் கூறுகையில், "ஒலியை விட சுமார் மூன்று மடங்கு வேகத்தில், அதாவது மேக் 2.8 முதல் 3.0 வரையிலான வேகத்தில் பாயும் பிரமோஸ், உலகின் மிக முக்கியமான சூப்பர்சோனிக் குரூயிஸ் ஏவுகணையாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மெஷினோஸ்ட்ரோயெனியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட பிரமோஸ், அமெரிக்காவின் ஹார்பூன் மற்றும் பிரான்சின் எக்சோசெட் போன்ற வழக்கமான சப்சோனிக் குரூயிஸ் ஏவுகணைகளை விட அதிக சேதத்தை விளைவிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































