அமெரிக்கா: முன்னாள் ராணுவ மேஜருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை - எதற்காக?

பட மூலாதாரம், Bell County Sheriff's Office via Getty Images
- எழுதியவர், சரீன் ஹபேஷியன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவருக்குத் துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று பென்டகன் அறிவித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் தளத்தில் ஆயுதமின்றி இருந்த 13 அமெரிக்க வீரர்களை நிதால் மாலிக் ஹசன் சுட்டுக் கொன்றதுடன், மேலும் 32 பேரை காயப்படுத்தினார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாகவும், அதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் திங்கள்கிழமை சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்படும் முதல் ராணுவ மரண தண்டனை இதுவாகும்.
மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதியையும் இடத்தையும் ராணுவச் செயலாளர் நிர்ணயிப்பார் என்று பார்னெல் கூறினார்.
"ஹசனுக்கான தீர்ப்பு நாள் இறுதியாக வந்துவிட்டது" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
வெர்ஜீனியாவைச் சேர்ந்த அமெரிக்க ராணுவ உளவியலாளரான ஹசன், 2009ஆம் ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அந்தத் தளத்தில் 13 வீரர்களைக் கொன்றார். பின்னர் நீதிமன்ற விசாரணையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டதுடன், தவறுக்கு மன்னிப்பும் கோரினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களையும் முஸ்லிம்களையும் தான் பாதுகாப்பதாக நம்பியதாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ நீதிமன்ற விசாரணையின் போது அவர் தெரிவித்தார்.
நவம்பர் 5, 2009 அன்று நடைபெற்ற இந்தக் படுகொலைகள், அமெரிக்க ராணுவத் தளம் ஒன்றில் போர் அல்லாத தாக்குதல்களில் மிகக் கொடூரமானவையாகும்.
பணி அமர்த்தப்படுவதற்காக காத்திருந்த ராணுவ வீரர்கள் மருத்துவப் பரிசோதனைகளும் தடுப்பூசிகளும் பெறுவதற்காகக் கூடியிருந்த நெரிசலான மருத்துவக் கட்டடத்தில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க ராணுவத்தின் மரண தண்டனைப் பட்டியலில் தற்போது உள்ள நால்வரில் ஹசனும் ஒருவர்.
ராணுவச் சட்டத்தின்படி, ராணுவ மரண தண்டனைக்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
மேல்முறையீட்டு மதிப்பாய்வு மற்றும் அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்த இறுதித் தீர்ப்புக்குப் பிறகே தண்டனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
ஆயுதப் படைகளுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் 1983 ஆம் ஆண்டில் ராணுவ மரண தண்டனையை அரசமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், அப்போதைய அதிபர் ரொனால்ட் ரேகன் நிர்வாகத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட நிறைவேற்று உத்தரவு மூலம் அடுத்த ஆண்டே அது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
மாகாண மட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளிலிருந்து ராணுவ மரண தண்டனைகள் மாறுபடுகின்றன.
அமெரிக்காவில் பெரும்பான்மையான மரண தண்டனைகள் மாகாண அளவிலேயே நிறைவேற்றப்படுகின்றன. 27 மாகாணங்கள், ராணுவம் மற்றும் பெடரல் அரசு ஆகியவற்றில் மரண தண்டனை சட்டப்பூர்வமான ஒரு வாய்ப்பாக இன்னும் நடைமுறையில் உள்ளது.
துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது அரிதான ஒன்றாகும். கடந்த ஆண்டு தெற்கு கரோலினா மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது அந்த மாநிலத்திற்கு முதன்முறையாகும். அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல்முறையாகும்.
இடாஹோ, மிஸிஸிப்பி, ஓக்லஹோமா மற்றும் உட்டா (Utah) உள்ளிட்ட பிற நான்கு மாகாணங்களும் துப்பாக்கிச் சூடு முறையைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.
பெடரல் மரண தண்டனையின் தீவிர ஆதரவாளரான டிரம்ப், 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது ஆட்சியின் முதல் நாளிலேயே நிறைவேற்று உத்தரவு மூலம் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
அவருக்கு முந்தைய அதிபரான ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில், நீதித்துறை பெடரல் அளவிலான மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதித்திருந்தது.
டிரம்ப் கையெழுத்திட்ட நிறைவேற்று உத்தரவு, மரண தண்டனையை "அமெரிக்க குடிமக்கள் மீது கடுமையான குற்றங்கள் மற்றும் கொடூரமான வன்செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் அவசியமான ஒரு கருவி" என்று விவரிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































