பாஜக ஆதரவு குடும்பத்தில் பிறந்து இளைஞர், இடதுசாரி இயக்கத்தின் முகமாக மாறிய நேஹா போரா

 நேஹா போரா
படக்குறிப்பு, சமீப காலங்களில் நேஹா போரா நாட்டின் இளைஞர் இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அபிஜித் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோருடன், மற்றொரு முகமும் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

அவர், காக்ரோச் ஜனதா கட்சியின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தனது நண்பர்கள் சிலருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேஹா போரா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவரான நேஹா போரா, ஜார்க்கண்ட் பொதுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் பங்கேற்க ராஞ்சிக்குச் சென்றபோது மீண்டும் கவனம் பெற்றார்.

அந்தப் போராட்டத்தின் போது, அவரது முகத்தில் மை வீசப்பட்டது.

ஆனால், "என் மீது மை வீசப்படுவதைப் பற்றி நான் பயப்படவில்லை. டெல்லி போராட்டங்களின் போதும் பெல்லட் குண்டுகள் மற்றும் தடியடிகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன்" என்று நேஹா கூறினார்.

போராட்டக்காரர்களிடம் அவர், "நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள கோபத்தை மை வீசுவதன் மூலம் அடக்கிவிட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்களா?" என்று கேட்டார்.

அதன் பின்னர், போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி நேஹா பிகாருக்கு சென்றார்.

கடந்த சில ஆண்டுகளாக மாணவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நேஹா, தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களில் முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நேஹா போரா தற்போது தனது வெளிப்படையான அணுகுமுறை, வெளிப்படையான பேச்சுகள் மற்றும் போராட்டத் தீவிர அணுகுமுறைக்காக செய்திகளில் இடம்பெற்று வருகிறார். அவரது பேச்சுகள் அடங்கிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

தற்போது நேஹா மீண்டும் டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த முறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அவர் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடைமுறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு ஞானேஷ் குமார் பொறுப்பானவர் என்றும், இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளதாகவும் பல எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

சமீபத்தில், ஆங்கில நாளிதழான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' தனது புலனாய்வு செய்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடைமுறை தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறியிருந்தது.

'பல்கலைக்கழகத்திலிருந்து இளைஞர் இயக்கத்தின் முகமாக மாறியது வரை'

நேஹா போரா
படக்குறிப்பு, நேஹா போரா டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யுவின் மாணவர் அரசியலில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

நேஹா உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

முதலில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், பின்னர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு முனைவர் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யுவில் நடைபெறும் இடதுசாரி மாணவர் இயக்கத்தின் முக்கிய முகமாக நேஹா உள்ளார்.

தற்போது, நாட்டில் நடைபெற்று வரும் மக்கள் இயக்கங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் குரலாகவும் நேஹா உருவெடுத்து வருகிறார்.

 நேஹா போரா
படக்குறிப்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நடந்த போராட்டத்தின்போது நேஹா போரா (கோப்புப் புகைப்படம்)

கடந்த மாதம் ஃபிரன்ட்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நேஹா, "ஜந்தர் மந்தரில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், 'நீங்கள் கோட்சேவை நம்புகிறீர்கள், நாங்கள் பகத் சிங்கை நம்புகிறோம். இதுதான் உங்களுக்கும் எனக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு. அதனால் தான் நீங்கள் (ஆட்சியில் இருந்து) விலக வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கோட்சேவை நம்புபவர்கள் இந்த நாட்டை ஆளக் கூடாது என்று மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய நேஹா, "இந்தப் போராட்டங்கள், நாட்டின் இளைஞர்கள் தற்போதைய ஆட்சியிடமிருந்து இனி எதை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியதாக நான் நினைக்கிறேன். பாசிஸ்டுகளைக்கூடப் பொறுப்புக்கூற வைக்க முடியும் என்பதைத் தாண்டி, இந்த இயக்கம் நம் அனைவருக்கும் கற்பித்த பாடங்கள் ஆழமானவை.

அதனால் தான், உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து திரும்பி வந்து மைக்கில் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர்கள் இந்த உணர்வை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினேன். ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போராடாமல், ஒருவருக்காக ஒருவர் போராட வேண்டும் என்ற உணர்வை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

சித்தாந்தம் தொடர்பாக குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள்

 நேஹா போரா
படக்குறிப்பு, தன் குடும்ப உறுப்பினர்களே பாஜக ஆதரவாளர்கள் என்று நேஹா போரா கூறுகிறார்.

நேஹா, பாஜகவை ஆதரிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இந்தப் பேட்டியில் நேஹா கூறுகையில், "எனது குடும்பமே தீவிரமான பாஜக ஆதரவாளர்களைக் கொண்டது. இதனால் எங்கள் குடும்பத்திற்குள் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த முரண்பாடு நீண்ட காலமாகவே எங்கள் குடும்பத்தில் இருந்து வருகிறது. நான் டெல்லிக்கு வந்து அரசியலில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியதில் இருந்து, இந்தக் கருத்து வேறுபாடு எங்கள் குடும்பத்திற்குள் இருந்து வருகிறது" என்றார்.

"சில நேரங்களில் சூழல் மிகவும் அழுத்தத்தை கொடுக்கும். எனது சொந்த முடிவுகளை எடுப்பதில், குறிப்பாக பொருளாதார விஷயங்களிலும் எனது வாழ்க்கை தொடர்பான விஷயங்களிலும், எனக்கு நிறைய சுதந்திரம் இருந்ததாக உணர்கிறேன். பட்டப்படிப்பின் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டிலேயே இந்த சுதந்திரத்தைப் பெற்றேன். ஏனெனில், அது எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்றார்.

'இளைஞர் அரசியல் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது'

 நேஹா போரா
படக்குறிப்பு, இளைஞர்கள் ஒருவருக்கொருவர் எதிராக நிற்பதற்குப் பதிலாக, ஒருவருக்காக ஒருவர் போராடுவதன் மூலமே மாற்றம் சாத்தியம் என்று இப்போது உணர்கிறார்கள் என நேஹா போரா கூறுகிறார்.

நேஹாவின் கூற்றுப்படி, சிஜேபி இயக்கத்தின் முக்கியத்துவம் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைத் தாண்டியது.

ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தாமல், ஒருவருக்காக ஒருவர் போராடுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இளைஞர்கள் கற்றுக்கொண்டுள்ளதாக அவர் நம்புகிறார்.

ஜந்தர் மந்தர் போராட்டத்தின் மூலம் உருவான ஆற்றல், எஸ்ஐஆர், தொகுதி மறுவரையறை, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற பிற பிரச்னைகள் தொடர்பான இயக்கங்களையும் சென்றடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த இயக்கம் ஜனநாயகத்துக்கான மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

'மக்கள் ஒருவருக்கொருவர் கைகோர்க்கப் பழகியுள்ளனர்'

போராட்டத்தின்போது பாஜக ஆதரவாளர்களான பெற்றோர்களும் பெரியவர்களும் தன்னை அணுகியதாகவும், அவர்களில் சிலர் மாணவர்களின் நிலைமைக்காக அழுது மன்னிப்புக் கேட்டதாகவும் இந்தப் பேட்டியில் நேஹா தெரிவித்தார்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இயக்கம் குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் பேசிய நேஹா, இந்த இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட வகைக்குள் அடக்கிவிட முடியாது என்பதை அது வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

இதுதான் இந்த இயக்கத்தின் பலம் என்றும், அது அப்படியே தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது, பலர் தாய்மார்கள் தங்களைப் போராட்டத்துக்குச் செல்லுமாறு கூறியதாகத் தெரிவித்தனர். பலர் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பள்ளிக்குச் செல்லாமல் வந்ததாகக் கூறினர். வெறுப்புக்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நாட்டில், மக்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக் கொள்ளக் கற்றுக்கொண்டுள்ளனர் என்பதற்கான அறிகுறி இது" என்றார்.

போராட்டத்தின்போது பாஜக ஆதரவு பெற்றோர்களும் பெரியவர்களும் தன்னை அணுகியதாகவும், அவர்களில் சிலர் மாணவர்களின் நிலைமைக்காக அழுது மன்னிப்புக் கேட்டதாகவும் இந்தப் பேட்டியில் நேஹா தெரிவித்தார்.

ஃபிரன்ட்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது குடும்பத்தையே உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறையின் நடவடிக்கையை நேரில் பார்த்த பிறகு பாஜக ஆதரவாளரான தனது தாயார் போராட்டக்காரர்களின் முயற்சிகளைப் பாராட்டியதாகக் கூறினார்.

நேஹாவின் கூற்றுப்படி, இதுபோன்ற மாற்றம் இந்த இயக்கத்துக்கு பரவலான சமூக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிஜித் தீப்கேவுடன் ஒப்பீடு

நேஹா- அபிஜீத் தீப்கே
படக்குறிப்பு, சமூக வலைதளங்களில் சிலர் நேஹாவை அபிஜீத் தீப்கேவுடன் ஒப்பிட்டபோது, ​​அவர், "ஒப்பீடு அல்ல, ஒற்றுமை" என்று பதிவிட்டார்.

சமீபத்தில், சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடைபெற்றது. சிஜேபி-யின் நிறுவனர்அபிஜித் தீப்கே மற்றும் நேஹா போராவை ஒப்பிட்டு, அவர்களில் யார் அதிக முதிர்ச்சியுடையவர் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அமோக் என்ற எக்ஸ் தளப் பதிவர், நேஹா போராவின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "நேஹா போரா, அபிஜீத் திப்கேவை விட திறமையானவர் என்பதை நீங்கள் உணரும்போதுதான் பக்குவம் வருகிறது. அவர் உண்மையான ஜென்ஸி தலைமுறையின் சின்னம். அவரிடம் அபாரமான ஸ்டைல் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவை மறுபதிவு செய்த அபிஜீத், 'இதற்கு நான் உடன்படுகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவு வெளியான சிறிது நேரத்திலேயே, "ஒப்பீடு அல்ல, ஒற்றுமை. நாம் ஒன்றாகப் போராடுகிறோம்" என்று நேஹா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த அபிஜீத், "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று பதிவிட்டார்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சிஜேபி போராட்டத்தின் போது, திப்கே மிகவும் எளிமையானவர் என்றும், ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர் என்றும், போராட்டக்காரர்களும் தங்களைப் போலவே அவரும் ஒரு மாணவர், இந்தப் போராட்டத்தில் தங்களுடன் இணைந்து போராடும் ஒருவர் என்ற உணர்வை அவர் ஏற்படுத்தியதாகவும் நேஹா கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு