அமெரிக்காவில் 'சூப்பர் நாய்' ஒன்றை உருவாக்கும் பரிசோதனை தோல்வியடைந்த கதை

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ The University of Chicago Press
- எழுதியவர், லாரி கிளார்க்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
1940களில் அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில், 'சூப்பர் நாய்' ஒன்றை உருவாக்குவதற்காக இனப்பெருக்கம் செய்ய விஞ்ஞானிகள் 'நாய்களுக்கான பள்ளி' என்ற ஒரு மிகப்பெரிய ஆய்வு மையத்தை அமைத்தனர். ஆனால், திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுக்கு நாய்கள் மீது ஒரு வித ஈர்ப்பு இருந்து வருகிறது. ஆனால், 1940களின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆய்வு, அதற்கு முன்பும் அதற்குப் பிறகும் காணப்படாத அளவுக்கு அந்த ஈர்ப்பை புதிய கட்டத்துக்குக் கொண்டு சென்றது.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், அறிவியல் வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவர உதவின.
அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் இதற்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஆய்வு மையத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது. 13 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் காக்கர் ஸ்பேனியல், பீகிள், ஷெட்லண்ட் ஷீப் டாக், பாசென்ஜி மற்றும் வயர்-ஹேர்டு ஃபாக்ஸ் டெரியர் ஆகிய இனங்கள் அடங்கும்.
ஒவ்வொரு நாய்க்குட்டியும் பிறந்தது முதல் அதன் வளர்ச்சி குறித்த ஒவ்வொரு விவரமும் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டது. முதன்முதலில் திடுக்கிடும் எதிர்வினையை வெளிப்படுத்தியது, முதன்முறையாக திட உணவை உண்ண முயன்றது, உடன்பிறந்த நாய்க்குட்டியுடன் முதன்முறையாக விளையாட்டாகச் சண்டையிட்டது, முதன்முறையாக வாலை ஆட்டியது என அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. ஐந்து வாரங்கள் ஆனதும், அவற்றின் அறிவுத்திறன், ஆதிக்கப் பண்பு, உணர்ச்சிகரமான எதிர்வினை, பயிற்சி பெறும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பிடும் தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்பட்டன.
"ஒரு நாய்க்குட்டிக் கூட்டம் பிறந்துவிட்டால், அடுத்த 12 மாதங்களில் ஒவ்வொரு நாளும் நான் எங்கு இருப்பேன் என்பது எனக்கு துல்லியமாகத் தெரியும்," என்று ஆய்வின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான ஜான் ஃபுல்லர் 1985ஆம் ஆண்டு எழுதியிருந்தார்.
ஆய்வாளர்கள் பல்வேறு கேள்விகளுக்கு விடை காண முயன்றனர். சில நாய் இனங்கள் மற்றவற்றைவிட அதிக புத்திசாலித்தனமாக இருக்கின்றனவா? வெவ்வேறு இனங்களுக்கு வெவ்வேறு குணநலன்கள் உள்ளனவா? நாய்க்குட்டிகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு எவ்வளவு முக்கியமானது? ஒரு நாய்க்குட்டியின் இயல்பான வளர்ச்சியில் குறுக்கிட்டால் என்ன நடக்கும்? அதிக அறிவுத்திறன் கொண்ட 'சூப்பர் நாய்' ஒன்றை இனப்பெருக்கம் மூலம் உருவாக்க முடியுமா?
நாய்களின் மரபணுக்களைப் புரிந்துகொள்வது முதல் நாய்க்குட்டிகளை சமூகத்துடன் பழகச் செய்வதற்கான சிறந்த வழியைக் கண்டறிவது வரை, இந்த மாபெரும் ஆய்வின் முடிவுகள் நாய்களைப் பற்றிய நமது புரிதலை என்றென்றும் மாற்றின. அதோடு, யூஜெனிக்ஸ் எனப்படும் மரபணு மேம்பாட்டு கொள்கைக்கும் இது இறுதியாக ஒரு பெரிய பின்னடைவைக் கொடுத்தது.
ஒரு மாபெரும் நாய் ஆய்வுத் திட்டம்
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருந்தது. அமெரிக்காவில் அறிவியலின் பொற்காலம் தொடங்கிக் கொண்டிருந்தது. ஆராய்ச்சிகளுக்கு பெருமளவில் நிதி வழங்கப்பட்டது. விஞ்ஞானிகள் பெரிய அளவில் சிந்திக்க சுதந்திரம் இருந்தது; அதிகமான கேள்விகள் கேட்கப்படாமலேயே பெருந்தொகையான பணம் ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டது.
அன்புடன் 'நாய்களுக்கான பள்ளி' என்று அழைக்கப்பட்ட இந்த ஆய்வுக்கும் பெருமளவு நிதி கிடைத்தது. இதற்காக 6,32,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரு. 6.08 கோடி) வழங்கப்பட்டது. இன்றைய மதிப்பில் இது சுமார் 90 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.86.54 கோடி) ஆகும். இதே அளவிலான ஒரு திட்டத்துக்கு இன்றைய காலகட்டத்தில் வழங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய தொகை இது.
அந்தக் காலகட்டத்தில், மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் மூலம் மரபணு ரீதியான மேன்மையை உருவாக்க முடியும் என்ற கருத்தான யூஜெனிக்ஸ் ஏற்கனவே மதிப்பிழந்திருந்தது. ஹோலோகாஸ்ட்டின்போது நாஜிக்களின் கொடூரங்களில் அது வகித்த பங்கு மற்றும் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள் மீதான கவனம் ஆகியவற்றின் காரணமாக, அது முக்கிய அறிவியல் ஆய்வுகளில் பொருத்தமற்றதாகவும் நெறிமுறையற்றதாகவும் கருதப்பட்டது. இருப்பினும், பல முக்கிய கல்வியாளர்கள் யூஜெனிக்ஸ் கொள்கையின் தாக்கத்தில் தொடர்ந்து இருந்தனர். மரபணுக்களே நடத்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதாகவும், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் மூலம் மனிதர்களில் மேம்பட்ட ஒரு வகையை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் தொடர்ந்து நம்பினர்.

பட மூலாதாரம், The University of Chicago Press
அவர்களில் ஒருவரான ஆலன் கிரெக், அப்போது ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் மருத்துவ அறிவியல் பிரிவின் இயக்குநராகவும், அந்த அமைப்பின் தனியார் நிதியை ஒதுக்கும் பொறுப்பில் இருந்தவராகவும் இருந்தார். உளவியலை நவீனப்படுத்துவதிலும், விரும்பத்தகாத நடத்தைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வதிலும் கிரெக் ஆர்வமாக இருந்தார். "குற்றவாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளிகள், உணர்ச்சி ரீதியாக நிலையற்றவர்கள், மனநோய் சார்ந்த ஆளுமைகள்" ஆகிய அனைத்துக்கும் மோசமான மரபணுக்களே காரணம் என்று அவர் நம்பினார். (உண்மையில், நமது ஆளுமையும் செயல்பாடுகளும் எந்த அளவுக்கு நமது மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்பது இதைவிட மிகவும் சிக்கலானது.)
கல்விக்காகச் செலவிடப்படும் பணம் வீணாகிறது என்று அவர் கருதியது கிரெக்குக்கு குறிப்பாக கவலை அளித்தது. மரபியல் குறித்த சிறந்த புரிதல் கிடைத்தால், மனிதனுக்கு "8 லட்சம் டாலர் செலவில் அமைக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகளைவிட, அறிவார்ந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இணைகளின் மூலம் அதிக அறிவுத்திறன் சார்ந்த பலன்கள் கிடைக்கும்" என்பதை உணர முடியும் என்று அவர் 1945ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். (இந்தக் கட்டுரைக்காக பிபிசி கருத்து கேட்டபோது ராக்ஃபெல்லர் அறக்கட்டளை பதிலளிக்கவில்லை.)
அந்தக் காலத்தில் பெரும்பாலான மரபியல் ஆய்வுகள் பழ ஈக்கள் அல்லது எலிகளை வைத்து நடத்தப்பட்டன. ஆனால் கிரெக் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். மிகவும் புத்திசாலித்தனமான ஒரு நாயை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முயன்றால் என்ன? மக்களின் கற்பனையை ஈர்க்கத் தவறாத ஒரு உயிரினமான நாயை வைத்து, அறிவுத்திறன் பெருமளவில் மரபுரீதியாக வரக்கூடியது என்ற தனது கருத்தை ஆதரிக்க முடியும் என்று அவர் கருதினார். இந்தக் கற்பனையான 'சூப்பர் நாய்' திட்டத்துக்கு நிதியளிக்க கிரெக் தயாராக இருந்தார்.
'சூப்பர் நாய்'கான தேடல்
நாய் இனங்கள் தோற்றத்தில் ஏன் இவ்வளவு வேறுபடுகின்றன என்பது மரபியலாளர்களுக்கு நீண்ட காலமாகவே ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இருந்து வருகிறது. கிரேட் டேன் மற்றும் பொமரேனியன் ஆகிய இரண்டும் உண்மையிலேயே ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க முடியுமா?
நாய்களின் அபரிமிதமான வேறுபாடே அவற்றை மரபியல் ஆய்வுக்கு ஏற்ற உயிரினமாகக் கருதப்பட்டதற்கான ஒரு காரணமாக இருந்தது. தோற்றத்தில் இவ்வளவு வேறுபட்ட ஒரு உயிரினம், அறிவுத்திறன் மற்றும் குணாதிசயங்களிலும் பரந்த அளவிலான வேறுபாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
உடலியல் நிபுணரான ஃபுல்லரும், இந்தத் திட்டத்துக்குத் தலைமை வகித்த விலங்கு நடத்தை மரபியலாளரான ஜான் பால் ஸ்காட்டும் இந்தக் கேள்வியில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால், நாய் ஆய்வின் முடிவுகள் விரைவில் அதற்கு நிதியளித்தவரின் நோக்கங்களிலிருந்து வேறுபட்ட பாதையில் சென்றன.
ராக்ஃபெல்லர் அறக்கட்டளை குறிப்பிட்ட சில நாய் இனங்கள் அதிக அறிவுத்திறன் கொண்டவையாக இருக்கும் என்று எதிர்பார்த்தது.
அதற்கேற்ப, நாய்களுக்கு பல்வேறு அறிவுத்திறன் சோதனைகள் நடத்தப்பட்டன. உதாரணமாக, உணவை அடைவதற்காக சிக்கலான பாதைகளைக் கொண்ட அமைப்புக்குள் செல்ல வேண்டிய புதிர் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், ஒரே பிரச்னை மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டு, அவற்றின் செயல்திறன் மேம்படுகிறதா என்பதைப் பார்க்கும் கற்றல் சோதனைகளும் நடத்தப்பட்டன.
ஆனால், சில நாய் இனங்கள் சில சோதனைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், எந்த ஒரு இனமும் அனைத்து சோதனைகளிலும் மற்றவற்றைவிட அதிக திறனை வெளிப்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. இறுதியில், எந்த ஒரு நாய் இனத்தையும் மற்றொரு இனத்தைவிட "அதிக புத்திசாலித்தனமானது" என்று கூற முடியாது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
குணநலன்களைப் பொறுத்தவரை, வெவ்வேறு இனங்களுக்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிந்தது. ஃபாக்ஸ் டெரியர்கள் அதிக வன்முறைத் தன்மையைக் கொண்டிருந்தன. அவை வேட்டையாடும் நாய்களாக வளர்க்கப்பட்டவை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்தப் பண்பு சூழ்நிலையைப் பொறுத்து பெரிதும் மாறுபட்டது. "ஒரே இனத்தைச் சேர்ந்த நாய் ஒரு சூழ்நிலையில் பயந்ததாகவும் மற்றொரு சூழ்நிலையில் தன்னம்பிக்கையுடனும் இருக்கலாம். பாசென்ஜி நாய்கள் அறிமுகமில்லாத சூழ்நிலைகளைக் கண்டு பயந்தன; ஆனால் மற்ற நாய்களைக் கண்டு அவை அஞ்சவில்லை" என்று ஸ்காட்டும் ஃபுல்லரும் 1965-ஆம் ஆண்டு எழுதினர்.

பட மூலாதாரம், The University of Chicago Press
ஒட்டுமொத்தமாக, உயர்ந்த தரமான இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்படும் 'சூப்பர் நாய்கள்' குறித்த யூஜெனிக்ஸ் ஆதரவாளர்களின் கருத்துகளுக்கு தங்கள் ஆய்வு முடிவுகள் மறுப்பாக அமைந்ததாக ஸ்காட்டும் ஃபுல்லரும் கூறினர்.
இந்தக் கண்டுபிடிப்பு மனிதர்களுக்கும் முக்கியமான தாக்கங்களைக் கொண்டிருந்தது.
"கிரேக்கர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே... கொரில்லாவின் உடல் வலிமையையும் ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனையும், பீத்தோவனின் இசைத் திறனையும் கிரேக்கக் கடவுளின் அழகையும் ஒருங்கே கொண்ட கடவுள் போன்ற அல்லது வீரத்தன்மை கொண்ட மனிதர்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கனவு கண்டுள்ளனர்" என்று அவர்கள் எழுதினர்.
இது ஏன் சாத்தியமற்றது என்பதை அவர்களின் ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்தின. சமூகமாக வாழும் ஓர் உயிரினத்தில், வெவ்வேறு பண்புகள் இயல்பாகவே அந்தச் சமூகத்தில் உள்ள உறுப்பினர்களிடையே பரவிக் காணப்படும்.
உதாரணமாக, துணிச்சல் என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். சில நாய்களிடமும் மனிதர்களிடமும் இருக்கும் துணிச்சல் ஆபத்தைத் தடுக்க உதவலாம். அதே நேரத்தில், அதிகம் துணிச்சல் இல்லாத ஒரு நாய் முதலில் ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்ய உதவலாம். வெற்றிகரமான ஒரு சமூகக் குழுவுக்கு இத்தகைய அனைத்து பண்புகளும் தேவை.
"ஒரு தனி மனிதராக 'சூப்பர் மனிதன்' இருப்பதில்லை; மாறாக, நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மனித சமூகமே 'சூப்பர் மனிதன்'" என்று ஸ்காட்டும் ஃபுல்லரும் முடிவு செய்தனர்.
நாய்களின் பிணைப்பு முறைகள்
இறுதியில், துணிச்சலான 'சூப்பர் நாய்' ஒன்றை உருவாக்குவதைவிட, ஒரு நாய்க்குட்டியின் ஆரம்பகால அனுபவங்கள் அது வளர்ந்து பெரிய நாயாக மாறும்போது அதன் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் ஸ்காட்டும் ஃபுல்லரும் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
அந்தக் காலத்தில் ஃப்ராய்டின் குழந்தைப் பருவ வளர்ச்சி குறித்த கோட்பாடுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அதேவேளை, ஜான் போல்பி தனது செல்வாக்குமிக்க பிணைப்பு முறைகள் குறித்த கருத்துகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு வழங்கப்படும் பராமரிப்பு, அதன் எதிர்கால உணர்வுபூர்வ வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தக் கருத்துகளை நாய்களுக்கும் பொருத்திப் பார்க்க ஸ்காட்டும் ஃபுல்லரும் தொடங்கினர்.
நாய்க்குட்டிகளைத் தனிமையில் வளர்த்தால் என்ன நடக்கும்? அது அவற்றின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும்? இன்றைய காலத்தில் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத இந்தப் புதிய பரிசோதனையில், நாய்க்குட்டிகள் பெரிய வெளிப்புறப் பகுதிகளில் தனித்தனியாக வளர்க்கப்பட்டன. அவற்றைச் சுற்றி எட்டு அடி உயர வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த வேலிகள் வழியாக உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டன. இதனால் அவை மனிதர்களையோ மற்ற நாய்களையோ பார்க்க முடியவில்லை.
நாய்க்குட்டிகள் தனிமையில் செலவிட்ட கால அளவை மாற்றியமைத்ததன் மூலம், நான்கு முதல் 12 வாரங்கள் வரையிலான வயதில் ஒரு "முக்கியமான காலகட்டம்" இருப்பதாக ஸ்காட்டும் ஃபுல்லரும் கண்டறிந்தனர். இந்தக் காலகட்டத்தில் தனிமையில் வளர்க்கப்பட்ட ஒரு நாய்க்குட்டி மனிதர் அல்லது மற்றொரு நாயுடன் தொடர்பு கொண்டால், அது இயல்பாக சமூகத்துடன் பழகும் திறனைப் பெற முடியும்.
ஆனால், "இந்தக் காலகட்டத்தில் அவை பிணைப்புகளை உருவாக்க அனுமதிக்கப்படவில்லை என்றால், அவற்றை ஒருபோதும் முழுமையாகத் திருப்திகரமான நாயாக மாற்ற முடியாது. மனிதர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தால்... 14 அல்லது 15 வாரங்கள் ஆகும்போது அவை சிறிய காட்டுவிலங்குகளைப் போல ஆகிவிடும்" என்று ஸ்காட் 1986-ஆம் ஆண்டு வாய்மொழி வரலாற்று பதிவாளர் சூசன் மெஹர்டென்ஸிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், The University of Chicago Press
சுமார் 1958-ஆம் ஆண்டில் "நாய்களுக்கான பள்ளி" ஆய்வு முடிவுக்கு வந்தது. ஆய்வின் மூலம் எந்த ஒரு "சூப்பர் நாயும்" உருவாகப் போவதில்லை என்பது தெளிவான நிலையில், ராக்கஃபெல்லர் அறக்கட்டளை தொடர்ந்து நிதியளிக்க மறுத்தது.
அதன்பின்னர் ஆய்வில் பயன்படுத்தப்பட்ட நாய்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.
அதன் அடுத்த பத்தாண்டில், அமெரிக்காவின் அறிவியல் பொற்காலமும் முடிவுக்கு வந்தது.
ஒரு மாபெரும் ஆய்வு
இன்றும்கூட, ஸ்காட்டும் ஃபுல்லரும் மேற்கொண்ட ஆய்வின் அளவும் அதன் இலட்சியமும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.
"இது பல ஆண்டுகள் நீடித்தது, நூற்றுக்கணக்கான நாய்களை உள்ளடக்கியது. ஏக்கர் கணக்கில் ஆய்வு வசதிகள் இருந்தன. டஜன் கணக்கான பணியாளர்கள் இருந்தனர். இதைத்தான் நாங்கள் 'பெரிய அளவிலான அறிவியல் ஆய்வு' என்று அழைக்கிறோம்" என்கிறார் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள நாய் அறிவியல் கூட்டு ஆய்வு மைய இயக்குநர் கிளைவ் வின்.
நாய்கள் குறித்த அறிவியல் ஆய்வுக்கு அடித்தளமிட்டதற்காக ஸ்காட்டும் ஃபுல்லரும் இன்றும் ஆய்வாளர்களால் பாராட்டப்படுகின்றனர்.
"அறிவுத்திறன் மற்றும் நடத்தை அறிவியல் ஆய்வுக்கான ஒரு முக்கியப் பொருளாக நாய்களை நிலைநிறுத்துவதில் இவர்களின் பணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று இந்தத் துறை இருக்கும் நிலைக்கு அது வழிவகுத்தது" என்கிறார் அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் பப்பி கிண்டர்கார்டன் இயக்குநர் வனேசா வுட்ஸ்.
இருப்பினும், ஸ்காட்டும் ஃபுல்லரும் மேற்கொண்ட சில பரிசோதனைகள் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்கிறார் வின்.
நாய்க்குட்டிகளை முழுமையாகத் தனிமைப்படுத்தி வளர்ப்பது இன்று மிகவும் கொடூரமானதாகக் கருதப்படும். குறிப்பாக, அந்தப் பரிசோதனைகளின் முடிவில் உருவான "காட்டு" மற்றும் மனிதர்களால் அடக்க முடியாத நாய்க்குட்டிகள் இறுதியில் கருணைக் கொலை செய்யப்பட்டன.
"இன்றைய காலத்தில், மனிதர்களின் நாய்களை வைத்து நீங்கள் ஆய்வு செய்யப் போகிறீர்கள் என்றால், ஒரு குழந்தையிடம் செய்யத் தயங்கும் எதையும் அந்த நாயிடம் செய்யாமல் இருப்பது நல்லது," என்கிறார் வின்.
ஆய்வின் அளவை மட்டும் கருத்தில் கொண்டால், "நாய்களுக்கான பள்ளி"க்கு இணையான மற்றொரு திட்டத்தை நாம் விரைவில் பார்க்க வாய்ப்பில்லை.
"இப்போது இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் முறை வேறுபட்டுவிட்டது. நாங்கள் நாய்களை வாங்குவதில்லை; மக்களின் செல்லப்பிராணிகளை ஆய்வுக்காகக் கடனாகப் பெறுகிறோம்," என்கிறார் வின்.
உதாரணமாக, டியூக் பல்கலைக்கழகத்தின் பப்பி கிண்டர்கார்டன் திட்டத்தில் 101 நாய்க்குட்டிகள் பரிசோதிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டன. அவற்றில் எந்த நாய்க்குட்டிகள் பின்னர் வழிகாட்டி நாய்களாக வெற்றிபெறும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியுமா என்பதே இதன் நோக்கம்.
"ஸ்காட்டும் ஃபுல்லரும் செய்ததைப் போன்ற ஆய்வை மேற்கொள்ளும் அளவுக்கு லட்சியம் கொண்டவராகவோ முட்டாள்தனமானவராகவோ யாரும் இருக்கவில்லை; நாங்கள் வரும் வரை" என்று வுட்ஸ் சிரித்தபடி கூறுகிறார்.
இதுவரை அவரது ஆய்வுகள், வெற்றிக்கு முக்கியமான சில குணாதிசயங்களை அடையாளம் கண்டுள்ளன. அவற்றில் சுயக் கட்டுப்பாடு, நினைவாற்றல் மற்றும் மனிதர்களின் சமூகக் குறிப்புகளை நாய்க்குட்டிகள் எவ்வளவு சிறப்பாகப் புரிந்துகொள்கின்றன என்பவை அடங்கும்.
ஆனால், ஒரு நாய் இனம் மற்றொரு இனத்தைவிட திட்டவட்டமாக "அதிக புத்திசாலித்தனமானது" என்று கூற முடியாது என்ற ஸ்காட் மற்றும் ஃபுல்லரின் முடிவையும் வுட்ஸ் ஏற்றுக்கொள்கிறார்.
"அந்தக் கண்டுபிடிப்பு இன்றும் மாறாமல் நிலைத்திருக்கிறது," என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























