காணொளி: சிக்கிம் ஆளுநருக்கு எதிராக இந்த பெற்றோர் போராடுவது ஏன்?
2022-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட 19 வயது அங்கிதா பண்டாரியின் பெற்றோர், இந்தியா கேட் அருகே போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களின் போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த வழக்கில் சிபிஐ நடத்தி வரும் விசாரணை முடியும் வரை, துஷ்யந்த் குமார் கௌதமை சிக்கிம் மாநில ஆளுநராக நியமித்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அங்கிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாஜக தலைவராக இருந்த துஷ்யந்த் குமார் கௌதமின் பெயர், இந்த வழக்குடன் தொடர்புடையதாக அங்கிதாவின் குடும்பத்தினராலும் சமூக ஆர்வலர்களாலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ரிஷிகேஷில் உள்ள வனந்தரா ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்த அங்கிதா, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் நான்கு நாட்களுக்குப் பிறகு சில்லா கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வழக்கில், பாஜக முன்னாள் நிர்வாகி வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட்டின் உரிமையாளருமான புல்கித் ஆர்யா மற்றும் அவருடன் தொடர்புடைய இருவர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது மகளின் கொலைக்கு தற்போது சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள துஷ்யந்த் குமார் கௌதம்தான் காரணம் என அங்கிதாவின் தந்தை குற்றம் சாட்டுகிறார்.
இந்நிலையில் துஷ்யந்த் குமார் கௌதம் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



