காணொளி: தேர்வில் ஆசிரியர்கள் தோல்வி - அமைச்சர் ராஜ்மோகன் கூறியது என்ன?
டெட் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்கள் காரணமாக கல்வியின் தரம் கேள்விக்கு உள்ளாகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.
தகுதித் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களை அரசு ஒருபோதும் கைவிடாது. அவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்தடுத்த சிறப்புத் தேர்வுகளை எழுதி அவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெறலாம் என அமைச்சர் தெரிவித்தார். தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் பணிச் சூழல் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அவர்களால் இந்தத் தேர்வுக்கு முழுமையாகத் தயாராக முடியாமல் போயிருக்கலாம் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். தோல்வியடைந்த ஆசிரியர்கள் அடுத்த தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலமாக இனி நேரடிச் சிறப்புப் பயிற்சிகள் பிரத்தியேகமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க ஆகஸ்ட் 31, 2028 வரை அவகாசம் உள்ளது. எனவே, ஆசிரியர்கள் தங்களின் வேலைவாய்ப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் உறுதி தெரிவித்தார்,
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கான சிறப்பு, டெட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை, 58,902 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை, 1,58,617 பேரும் எழுதினர். இந்நிலையில் இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் முதல் மற்றும் இரண்டாம் தாள் என, மொத்தமாக தேர்வெழுதிய 2,17,519 ஆசிரியர்களில், 1,8326 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



