டெல்லியில் சிஜேபி முக்கிய தலைவர்கள் இன்று மீண்டும் காவலில் வைப்பு - என்ன காரணம்?

பட மூலாதாரம், Ashutosh Ranka/X
சர்ச்சைக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்காக, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த இடத்துக்குள் நுழைந்து முழக்கங்களை எழுப்பிய காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் காவலில் எடுக்கப்பட்டனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, டெல்லியில் போராட்டங்களுக்குப் பெயர்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தரில் இருந்து அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொளியில், அவர்கள் காவல்துறை தடுப்புகளைத் தாண்டிச் சென்று, இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்புவதைக் காண முடிகிறது.
"எதிர்ப்பை உங்களால் முடக்க முடியாது," என்று திப்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காணொளியில் கூறியுள்ளார்
வாக்காளர் பட்டியல் திருத்தம் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜகவும் தேர்தல் ஆணையமும் மறுத்துள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி, கடந்த சில நாட்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டங்களை நடத்துவதற்கான இடங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், டெல்லி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சௌரவ் தாசும் ஒரு பதிவை வெளியிட்டு, போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை மீண்டும் தங்கள் வசப்படுத்தியுள்ளதாகவும், தாங்களும் மற்றவர்களும் காவலில் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அவர்களை காவல்துறையினர் எங்கு அழைத்துச் சென்றனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
பின்னர், காவல்துறை பேருந்து ஒன்றிலிருந்து இன்ஸ்டாகிராமில் நேரலையாகத் தோன்றிய ரங்கா, மற்ற காவலில் வைக்கப்பட்டவர்களுடன் உற்சாகமாகக் காணப்பட்டார். போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜந்தர் மந்தர் இனி போராட்டக் களமாக இருக்காதா?
டெல்லியில் பொதுமக்கள் போராட்டங்களுடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய ஜந்தர் மந்தர் இனி அதிகாரபூர்வமாகப் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடமாக இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த மறுநாளே இந்தக் காவல் நடவடிக்கைகள் நடைபெற்றன. அதற்குப் பதிலாக, உரிய அனுமதி பெற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக மூன்று மாற்று இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த முடிவுக்கு முன்பு, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்திருந்தது. பதில் கிடைக்காவிட்டால் மேலும் போராட்டங்களை அறிவிப்போம் என்றும் அக்கட்சி எச்சரித்திருந்தது.
"ஜந்தர் மந்தரில் எப்போது போராட்டம் நடத்தலாம் என்று டெல்லி காவல்துறையிடம் கேட்டு 30 நிமிடங்களே ஆகியிருந்தன. அதற்குள் ஜந்தர் மந்தர் போராட்ட இடமாக இருப்பதற்கான அங்கீகாரம் நீக்கப்பட்டது," என்று ரங்கா முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் கடந்த சில நாட்களாக டெல்லியில் இருந்தனர். எனினும், தனது பாட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து திப்கே மகாராஷ்டிராவில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். சனிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்துக்கு முன்னதாகக் காவலில் எடுக்கப்பட்ட பல காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களில் அவரும் ஒருவர். மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார்.
சனிக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அந்த இடத்தை அடைவதைத் தடுக்கும் வகையில் டெல்லி முழுவதும் விரிவான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன; ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வார இறுதியில், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை காவல்துறையினர் காவலில் எடுத்து பின்னர் விடுவித்தனர். போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில காணொளிகளிலும் புகைப்படங்களிலும், பெண்கள் உட்படப் பலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்துகளில் ஏற்றுவதைக் காண முடிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































