'6 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றது செல்லும்' - தகுதி நீக்கம் பற்றி உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த போது எடுக்கப்பட்ட படம் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த போது எடுக்கப்பட்ட படம் (கோப்புப் படம்)
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

'அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆறு பேரின் ராஜிநாமாவை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக் கொண்டது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) தீர்ப்பளித்துள்ளது.

அவைத் தலைவரின் முடிவை எதிர்த்து அ.தி.மு.க சட்டப்பேரவை கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக, 'தேவையற்ற விசாரணையை நடத்த வேண்டியதில்லை' எனக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, '6 பேரின் தகுதிநீக்கம் தொடர்பாக இரண்டு மாதங்களில் பேரவைத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களாக போட்டியிட்டு 47 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 25 பேர் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்தனர்.

கட்சிக் கொறடா உத்தரவை மீறியதால் 25 பேரையும் தகுதிநீக்கம் செய்யுமாறு, அவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அ.தி.மு.க மனு அளித்தது. இந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைந்த போது எடுக்கப்பட்ட படம் (கோப்புப் படம்)

இந்தநிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இவர்களின் ராஜிநாமா முடிவை அவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து நான்கு பேரும் த.வெ.கவில் இணைந்தனர். இதனை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

'தகுதிநீக்கம் தொடர்பாக அவைத் தலைவரிடம் அளித்த மனு நிலுவையில் உள்ளபோது, நான்கு பேரின் ராஜிநாமாவை ஏற்றது சட்டவிரோதம்' என மனுவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.

கட்சி கொறடா உத்தரவை மீறிய மீதமுள்ள 21 சட்டப்பேரவை உறுப்பினர்களை மன்னிப்பதாக அவைத் தலைவரிடம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்ததால், அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

இதன்பிறகு விராலிமலை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

'அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானது' - மனுதாரர்

இவர்களின் பதவி விலகல் கடிதங்களை அவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ரவி தனியாக வழக்கு தொடர்ந்தார்

தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தகுதிநீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது பதவி விலகலை ஏற்றுக் கொண்டது அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானது என, மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

'எந்தவித அவமரியாதை நோக்கமும் இல்லை' - ஜே.சி.டி.பிரபாகர்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வழக்கில் அவைத் தலைவர் தரப்பில் சட்டமன்ற செயலாளர் ஆர்.சாந்தி பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதனைக் குறிப்பிட்டு வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் வி.கிரி, 'சாந்தி மூலமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததன் மூலம் உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் அவைத் தலைவர் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை' எனக் கூறினார்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்தார். 'சட்டப்பேரவை செயலாளர் மூலம் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததில் எந்தவிதமான அவமரியாதை நோக்கமும் தனக்கு இல்லை' என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆறு அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவி விலகலை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக, வரையறுக்கப்பட்ட விசாரணையை தான் மேற்கொண்டதாக, அவைத் தலைவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாமாக முன்வந்து ராஜிநாமா செய்கிறார்களா, அவர்கள் அளிக்கும் கடிதங்கள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதாக, ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை நேரில் மற்றும் சொந்தக் கையெழுத்தில் சமர்ப்பித்ததாகக் கூறிய ஜே.சி.டி.பிரபாகர், அவர்களின் முடிவுகளுக்குப் பின்னால் தேவையற்ற செல்வாக்கோ அல்லது கட்டாயமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கின் மனுதாரர் முன்வைக்கும் கருத்துகள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவற்றைத் தான் திட்டவட்டமாக மறுப்பதாகவும், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் கூறப்பட்டது.

'பதவி விலகிய உறுப்பினர்கள் உண்மையைக் கூறுகிறார்கள் என்றும் வேறு யாரின் அழுத்தத்திற்கும் ஆளாகவில்லை என்றும் தோன்றியது. இத்தகைய சூழலில் மேலும் விசாரணை நடத்த வேண்டியதில்லை என்பதே எனது பார்வையாக இருந்தது' என, ஜே.சி.டி.பிரபாகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, (கோப்புப் படம்)

நீதிபதிகள் கூறியது என்ன?

இந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பில், 'ஆறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை அவைத் தலைவர் ஏற்றது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும்' என கூறியது

அதேநேரம், ராஜிநாமா செய்துவிட்டதால் அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கைகளைக் கைவிட வேண்டியதில்லை எனக் கூறிய நீதிபதிகள், 'கட்சித் தாவல் தடைச் சட்டத்தினகீழ் தகுதிநீக்கம் செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

5 தொகுதி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் பதவியை ராஜிநாமா செய்தார்.

விராலிமலை, கரூர், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தனர்.

இவற்றில் திருச்சி கிழக்குத் தொகுதியில் ஜோசப் விஜயின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அடுத்து, விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் செல்லப்பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல், கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிமன்ற தடை காரணமாக இந்த ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

அக்டோபர் 9 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க இரண்டாம் இடத்தையும் அ.தி.மு.க மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

'ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' எனக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஆறு மாதங்களுக்குள் தேர்தல் அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' எனவும் முதலமைச்சர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு