தவெக எம்எல்ஏ பல்லவி கைக் குழந்தையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சர்ச்சையாவது ஏன்? நிபுணர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், MLA Pallavi
பொது நிகழ்ச்சிகளில் தவெக எம்எல்ஏ பல்லவி தனது கைக்குழந்தையுடன் தொடர்ந்து பங்கேற்று வருவது தமிழ்நாடு அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது.
"தவெக எம்எல்ஏ-வுக்கு தகுந்த ஆலோசனைகளை முதலமைச்சர் விஜய் வழங்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஐஐடி சென்னையில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற நிகழ்வில் தனது கைக்குழந்தையுடன் எம்எல்ஏ பல்லவி பங்கேற்றதைக் குறிப்பிட்டு இவ்வாறு அவர் விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை குழந்தைகள் நல ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். கைக்குழந்தையுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சரியானதா?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் தவெக சார்பில் ஆர்.பல்லவி வெற்றி பெற்றார். இதன் பிறகு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தனது கைக்குழந்தையுடன் பங்கேற்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

பட மூலாதாரம், Pallavi
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக கடந்த ஜுன் மாதம் 'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம்' தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழாவில் கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி பங்கேற்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்தபோது கைக்குழந்தையுடன் அவர் தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார். சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்னதாக உதவியாளர் ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, அரசு நிகழ்ச்சிகள், கட்சிக் கூட்டங்கள் ஆகியவற்றில் கைக்குழந்தையுடன் பங்கேற்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். இதுதொடர்பான, புகைப்படங்கள், காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாயின.

பட மூலாதாரம், karthickChidambaram/fb
எம்எல்ஏ பல்லவி அளித்த விளக்கம்
கவன ஈர்ப்புக்காக இதுபோன்ற செயல்களில் எம்எல்ஏ பல்லவி ஈடுபடுவதாக, விமர்சனம் எழுந்தது. இதற்கு ஊடகங்களிடம் விளக்கம் அளித்த அவர், "பச்சிளம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு எப்படி வெளியில் வர முடியும். இதில் கவனத்தை ஈர்ப்பதற்கு என்ன இருக்கிறது?" எனக் கூறியுள்ளார்.
"அரசியல் செய்வதற்காக நான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வரவில்லை. மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் சிந்தித்து கருத்துகளைக் கூறுங்கள். கேலி செய்ய வேண்டாம்" என அவர் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னரும் கைக்குழந்தையுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் தவிர்க்கவில்லை. கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவரது பரப்புரை வாகனத்தின் முன்பாகத் தனது கைக்குழந்தையுடன் எம்எல்ஏ பல்லவி நின்று கொண்டிருந்தார். இதைக் கவனித்த முதலமைச்சர், சற்று தள்ளி நிற்குமாறு சைகை செய்தார். பரப்புரை கூட்டத்திலும் எம்எல்ஏ பல்லவி தனது குழந்தையுடன் பங்கேற்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

'வெளிச்சம் தேடும் நடவடிக்கை' - கார்த்தி சிதம்பரம்
அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஐஐடி சென்னையில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற நிகழ்ச்சியில் கைக்குழந்தையுடன் எம்எல்ஏ பல்லவி பங்கேற்றார். அவருடன் நடிகை கஸ்தூரி பேசிய காணொளி ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, "அவரின் (பல்லவி) செயலை மிகவும் மதிக்கிறேன். குழந்தையைத் தன்னுடன் கொண்டு வந்து வேலை பார்ப்பதை முதலமைச்சர் ஊக்குவிக்கிறார்" எனக் கூறினார்.
விளம்பரத்திற்காக குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருவதாக அவரை விமர்சிப்பதாகக் கூறிய கஸ்தூரி, "பெண்கள் நாற்று நடும்போது மரத்தில் துணியைக் கட்டி குழந்தையை உறங்க வைத்துவிட்டு வேலை பார்த்துள்ளனர். குழந்தைகளை பொது வாழ்வில் இருந்து அவர்கள் பிரித்து வைத்ததில்லை" என விளக்கம் அளித்தார்.
ஆனால், இந்த நிகழ்வை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதைக் குறிப்பிட்டு, பணியிடங்களில் குழந்தைப் பராமரிப்பு மையங்கள், மகப்பேறு மற்றும் தந்தைக்கான விடுப்பு போன்ற குடும்ப நலன் சார்ந்த கொள்கைகளை" தான் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
"ஆனாலும், கைக்குழந்தையைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது நடைமுறைத் தேவை என்பதைவிட அரசியல் ரீதியாக வெளிச்சம் தேடும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது" என அவர் பதிவிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனம் தொடர்பாக எம்எல்ஏ பல்லவியிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. அதேநேரம், குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளதைப் பார்க்க முடிந்தது.

குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுவது என்ன?
"கைக்குழந்தைக்கு பாதுகாப்பும் அரவணைப்பும் அவசியம். அவர்களுக்கு நோய்த் தொற்று எளிதாக ஏற்பட்டுவிடும் என்பதால் பொது இடங்களுக்குத் தூக்கிச் செல்லாமல் இருப்பது நல்லது" எனக் கூறுகிறார், குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு.
குழந்தையின் சிறந்த நலன் என்ற அடிப்படையிலேயே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், "மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது" என்றார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்வை மேற்கோள் காட்டிப் பேசிய தேவநேயன் அரசு, "முதலமைச்சரைப் பார்க்க அதிக கூட்டம் திரண்டது. இதுபோன்ற இடங்களில் பெரியவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அந்த இடத்திற்கு எம்எல்ஏ குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்ததை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார்.
"பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறை வசதி உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் இவற்றை ஏற்பாடு செய்வது மிகவும் சிரமம். குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும்" என்றார் தேவநேயன் அரசு.
"குடும்பத்தில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லாத சூழலில் பொது நிகழ்ச்சிகளுக்குக் குழந்தையைத் தூக்கிச் செல்வதில் எவ்விதத் தவறும் இல்லை" எனக் கூறுகிறார், தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தமயந்தி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்வது ஏற்புடையதல்ல. இப்படியெல்லாம் இருந்து சமூகத்திற்காக உழைப்பதை வெளிக்காட்டிக் கொள்வதாகவே இதைக் கருத முடியும்" என்கிறார் அவர்.

'இது கவன ஈர்ப்பு இல்லை'
இதை முழுமையாக மறுத்துப் பேசுகிறார், குழந்தைகள் நல ஆர்வலர் கன்யா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குழந்தைக்குப் பாதுகாவலர் (care Taker) வைத்துக் கொள்ளாமல் தானே குழந்தையை வெளியில் கொண்டு வருவதை நல்ல வளர்ப்பாகவே பார்க்க முடியும். சில குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தாய் தான் குழந்தைக்குத் பாதுகாப்பைத் தர முடியும். அதேநேரம் பொதுக் கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கலாம்" என்றார்.
எம்எல்ஏ பல்லவி மீதான விமர்சனங்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்டு பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், அதற்கான முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் இந்தக் கட்டுரையில் அவை சேர்க்கப்படும்.
மறுபுறம் இதுகுறித்த நிபுணர்களின் பார்வையைத் தெரிந்துகொள்ள முயன்றபோது, "பொது இடங்களுக்குக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பலரும் குழந்தையைக் கொஞ்சும்போது தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்றார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் அரசர் சீராளர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு வர முடியாத சூழல் ஏற்பட்டால் மாற்று வழிகளை ஆராய வேண்டும். அருகில் உள்ள வீடுகளில் குழந்தையை விட்டுச் செல்வதும் பாதுகாப்பற்றது. பொது நிகழ்ச்சிகளில் அதிக ஒலி, சுற்றுச்சூழல் மாசு, அதிக வெளிச்சம் போன்றவை குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஒலிப் பெருக்கிகளின் சத்தம் குழந்தைகளின் செவித்திறனை பாதிக்கக்கூடும்" எனக் கூறுகிறார் அரசர் சீராளர்.
அவரது கூற்றுப்படி, "பொது நிகழ்ச்சிகளில் தனது குழந்தையைத் தூக்கிச் சென்று காட்டுவதற்கு சிலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால், குழந்தையின் நலனில் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்திருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































