ஓபன்ஏஐ அலுவலகத்தில் 'ரகசிய ஒலிப்பதிவு கருவி' – ஊழியரை கண்டறிய ஏ.ஐ உதவியதாக கூறும் நிறுவனம்

சந்தேகத்துக்கு இடமான நபர்
படக்குறிப்பு, சந்தேகத்துக்கு இடமான நபர் ரகசிய ரெக்கார்டரைச் சோதிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வெளியிட்டனர்.
    • எழுதியவர், மேக்ஸ் மாட்ஸா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கலிஃபோர்னியாவில் உள்ள ஓபன்ஏஐ அலுவலகம் ஒன்றில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவியைப் பொருத்தியதாக சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐயில் பொறியாளராகப் பணியாற்றிய அப்துல்ரஹ்மான் அல்ஃபோசான் மீது, உரையாடல்களைப் பதிவு செய்வதற்காக மின்னணு, இயந்திர அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தியதாக அல்லது பயன்படுத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தங்களது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த "அதிநவீன பதிவு செய்யும் கருவியை" கண்டறிந்ததாகவும், இதுகுறித்து எஃப்.பி.ஐ.யிடம் தெரிவித்ததாகவும் ஓபன்ஏஐ கூறியுள்ளது.

அந்தக் கருவியைத் தங்களது நிறுவன ஊழியர் ஒருவர்தான் பொருத்தியிருந்தார் என்பதைத் தங்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்திக் கண்டறிந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும் அறையில், தொலைக்காட்சியின் பின்புறத்தில் உள்ள யுஎஸ்பி இணைப்பில் கழிப்பறைக் காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் அந்தக் கருவி செருகப்பட்டிருந்ததாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, இந்தச் சம்பவத்தில் தங்களது மூலக் குறியீடுகள், செயற்கை நுண்ணறிவு மாடல் வெயிட்ஸ் அல்லது வாடிக்கையாளர் தரவுகள் முறையற்ற வகையில் அணுகப்பட்டதற்கோ திருடப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

"தனது நிறுவனத்தின் நிர்வாகக் கூட்ட அறைக்குள் ரகசிய ஒலிப்பதிவுக் கருவியை மறைத்து வைத்து, முக்கியமான உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்ய அவர் முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது," என்று எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓபன்ஏஐயின் செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பு தொடர்பான தகவல்களைப் பெறுவதே இந்தச் செயலின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அரசு வழக்கறிஞர்களின் தகவலின்படி, அல்ஃபோசான் 2025 ஜூலை மாதம் முதல் ஓபன்ஏஐயில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

செப்டம்பர் 30-ஆம் தேதி ஓபன்ஏஐ ஊழியர்கள் அந்தக் கருவியைக் கண்டுபிடித்தனர். அரசு வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டின்படி, அது பொருத்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கருவியில் மறையாக்கத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கருவி எப்படிப்பட்டது, அது எங்கிருந்து வந்தது என்பதைப் புரிந்துகொள்ளத் தங்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தியதாகவும், சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஊழியர் ஒருவர் அதை அங்கு பொருத்தியிருந்ததை அடையாளம் கண்டதாகவும் ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.

ஓபன்ஏஐயில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எவை, ஒலிப்பதிவுக் கருவிகளை எவ்வாறு ரகசியமாகப் பொருத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய, குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒரு டூலையும், ஒரு சாட்பாட்டையும் பயன்படுத்தியதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

ஒலிப்பதிவுக் கருவியை உருவாக்குவது, மாற்றுவது, பொருத்துவது, சோதிப்பது, அது கண்டுபிடிக்கப்படாமல் தடுப்பது மற்றும் தொலைவிலிருந்து அணுகுவது தொடர்பாக அவர் சாட்பாட்டில் தேடியதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "தொடர்ச்சியாக ஒலிப்பதிவு செய்யும் கருவியை உருவாக்குவது", "வைஃபை இணைப்பை தனிப்பயனாக்குவது", "ஒலிப்பதிவையும் நேரலையில் கேட்கும் வசதியையும் மேம்படுத்துவது", "எஸ்டி கார்டை மறையாக்கம் செய்வது" போன்ற கேள்விகளையும் அவர் சாட்பாட்டில் கேட்டதாக அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அக்டோபர் 5ஆம் தேதி, அலுவலக அறையில் இருந்த அந்தக் கருவியை ஆய்வு செய்வதற்காக அவர் மீண்டும் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அவர் இருந்ததை உறுதிப்படுத்த, வழக்கறிஞர்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
படக்குறிப்பு, அந்தக் கருவி கழிப்பறை காகிதத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் 5-ஆம் தேதி, அந்தக் கருவியைச் சோதிப்பதற்காக அல்ஃபோசான் மீண்டும் அலுவலக அறைக்குச் சென்றதாக அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் அவர் அந்த இடத்துக்கு வந்ததை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே நாளில், அல்ஃபோசான் கட்டடத்தின் வேறொரு பகுதியில் ஒரு பையை கவனிக்காமல் விட்டுச் சென்றுள்ளார்.

ஓபன்ஏஐ நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவினர் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது, அதில் அவரது பணப்பை மற்றும் அடையாள அட்டை இருந்தன. மேலும், அலுவலகக் கூட்ட அறையில் கண்டெடுக்கப்பட்டதைப் போன்ற மற்றொரு பதிவு செய்யும் கருவியும் அதில் இருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அல்ஃபோசான் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்காக வழக்கறிஞர் யாரேனும் ஆஜராகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்படலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு