கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 13ஆம் தேதி விஜயவாடாவுக்கு பயணித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு கூடுதல் நீரை வழங்க வேண்டும் என்கிற இரண்டு விஷயங்கள்தான் இந்தப் பயணத்தின் பின்னணியாக அமைந்தது. இது தொடர்பான கடிதத்தை சந்திரபாபு நாயுடுவிடம் விஜய் அளித்தார்.
தமிழ்நாடு, ஆந்திரா இடையே தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின் கீழ் கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
கோதாவரி - காவிரி திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டைவிட ஆந்திராவுக்கே பலன்கள் அதிகம் என்கிறார் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளரான அ.வீரப்பன்.
இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இது தமிழ்நாட்டுக்கு பின்னடைவாக அமைந்துவிடக் கூடாது என்கிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர் பாண்டியன்.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் என்றால் என்ன? இந்த இரண்டு திட்டங்கள் தற்போது விவாதப் பொருளாவது ஏன்? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுவது என்ன?
இரு மாநில முதலமைச்சர்கள் சந்திப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு தனது நீர்த் தேவைகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டமானது, இரு மாநிலங்களுக்கும் மேற்பரப்பு நீர் (Surface water) இருப்பை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நீண்டகால வாய்ப்பாக அமைகிறது," என்று தெரிவித்ததாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் குறிப்பில், "இத்திட்ட முன்மொழிவை முன்னெடுத்துச் செல்லுமாறு மாண்புமிகு ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டதுடன், இந்தத் திட்டத்தை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்குமாறு இந்திய பிரதமரிடம் தான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்" என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது 35% மட்டுமே இருப்பதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பு நீர் ஆண்டில் கூடுதலாக தண்ணீரை விடுவிக்குமாறு ஆந்திர முதலமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், TNDIPR
ஆந்திர அரசின் செய்திக் குறிப்பு கூறுவது என்ன?
இந்தச் சந்திப்பு தொடர்பாக ஆந்திர மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், "கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைப்பதன் அவசியத்தை முதல்வர் சந்திரபாபு விளக்கினார். இந்த நதி இணைப்புத் திட்டம் வறட்சிக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக விவரிக்கப்பட்டது."
சென்னைக்கு தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் கூடுதல் தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் விஜய் கோரியதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அந்தச் செய்திக் குறிப்பின்படி, "இந்த ஆண்டு 'எல் நினோ' விளைவால் கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்திருந்தாலும், கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தாலும், சென்னையின் தாகத்தைத் தீர்ப்பதில் ஆந்திர பிரதேச அரசு நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்."
மேலும், "சென்னைக்கு ஏற்கெனவே 4.08 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்தார். நீர் இருப்பு மற்றும் தேவையைப் பொறுத்து, மேலும் தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்" என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு நீர் எப்படி கிடைக்கிறது?
காவிரியைப் போல கிருஷ்ணா நதியின் நீரைப் பகிர்ந்து கொள்வதும் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே முக்கியமான விவகாரமாக இருந்து வந்தது.
கடந்த 1976ஆம் ஆண்டு ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி மூன்று மாநிலங்களும் கிருஷ்ணா நீரில் இருந்து தலா 5 டிஎம்சி என மொத்தம் 15 டிஎம்சி நீரை சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக வழங்க ஒப்புக் கொண்டன.
அதன்பிறகு, 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா இடையே தெலுங்கு - கங்கைத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 15 டிஎம்சி கிருஷ்ணா நீரை ஆந்திரா விடுவிக்கும். கசிவு மற்றும் ஆவியாதல் காரணமாக, தமிழ்நாட்டின் எல்லையை அடையும்போது நீரின் அளவு 12 டிஎம்சியாக குறையும்
ஆந்திராவில் இருந்து பல்வேறு கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஊத்துக்கோட்டையில் நுழைந்து பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக விநியோகிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அரசு இணைந்து செயல்படுத்துகின்றன.

'கிருஷ்ணா நதி நீர் முழுமையாக கிடைத்ததில்லை'
இந்த 12 டிஎம்சி நீரை ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாதங்களில் 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 4 டிஎம்சி என வழங்க வேண்டும். ஆனால் கிருஷ்ணா நதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு எந்த ஆண்டும் முழுமையாகக் கிடைத்ததில்லை என்கிறார் அ.வீரப்பன்.
கடந்த 2025ஆம் ஆண்டு நீர்வளத் துறையின் கொள்கைக் குறிப்பின்படி, 1996 முதல் 06.01.2025 வரை 114.262 டிஎம்சி கிருஷ்ணா நீர் சென்னைக்கு விநியோகிக்கப்பட்டது.
தெலுங்கு - கங்கைத் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கால்வாயில் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாகக் கூறும் வீரப்பன், 12 டிஎம்சி ஒதுக்கீடு என்பது எந்த ஆண்டும் முழுமையாகக் கிடைத்ததில்லை என்றும் கூறுகிறார்.
இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "கிருஷ்ணா நீரில் இந்த ஆண்டு 4 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு கூடுதல் நீர் வழங்க வேண்டுமெனக் கேட்பது வேடிக்கையானது. ஏனெனில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கே கிடைப்பதில்லை. தமிழ்நாடு தனக்கு உரிய நீரைக் கேட்க வேண்டும்" என்றார்.

காவிரி நீரைப் போல கிருஷ்ணா நீரை உரிமையுடன் பெற முடியுமா?
காவிரி நீர் தொடர்பான உத்தரவை கர்நாடகா அரசு முழுமையாக அமல்படுத்தியதில்லை என்று கூறும் அ.வீரப்பன், கிருஷ்ணா நதி நீர் விவகாரத்திலும் அதேதான் நடப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் "காவிரி - கிருஷ்ணா விவகாரத்தை ஒப்பிட முடியாது" எனக் குறிப்பிட்ட அவர், "கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் என்பது தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம். எனவே ஆந்திரா நீரை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. காவிரி விவகாரத்திற்கு நடுவர் மன்றம் இருப்பது போல் இதற்கு எந்தக் கண்காணிப்புப் பொறிமுறையும் இல்லை" என்றார்.
கிருஷ்ணா நீர்ப் பங்கீடு தொடர்பான விவாதங்களில் கோதாவரி - காவிரி இணைப்பும் சேர்ந்தே பேசப்படுகின்றன.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் என்றால் என்ன?
நதிகளை இணைக்கும் திட்டம் என்பது தேசிய அளவில் மிகவும் லட்சியகரமான திட்டமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணார் - பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் முன்வைக்கப்படுகிறது.
கோதாவரி நீரை காவிரியில் உள்ள கல்லணையில் இணைப்பதுதான் முதலில் முன்மொழியப்பட்ட திட்டமாக இருந்தது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீர் வளர்ச்சி முகமை 2004ஆம் ஆண்டு தயாரித்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இதற்காக காவிரியின் குறுக்கே கட்டளை என்கிற இடத்தில் தமிழ்நாடு அரசு புதிய அணைக்கட்டு ஒன்றைக் கட்டியுள்ளதாக நீர்வளத் துறையின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. இந்தத் திட்டத்தை கல்லணையில் அல்லாமல் இந்தப் புதிய அணைக்கட்டில் இணைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அதன் பலன்கள் உடனடியாகத் தெரியாது என்கிறார் பி.ஆர் பாண்டியன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது ஒரு முயற்சிதான். கோதாவரியில் உபரி நீர் பாய்ந்து கடலில் கலக்கின்ற அதே வேளையில்தான் தமிழ்நாட்டிலும் உபரி நீர் கடலில் கலக்கிறது. நம்மால் மழைநீரைச் சேமித்து வைக்க முடியவில்லை. இதில் கோதாவரியில் கிடைக்கும் நீரை எங்கு சேமித்து வைக்க முடியும் என்பது கேள்விக்குறி. புவியியல் ரீதியாக தமிழ்நாடு சமதள விளைநிலப் பகுதி. மலைகளைத் தவிர்த்து தமிழ்நாட்டில் வேறு பெரிய அணைகளை எங்கும் கட்ட முடியாது" என்றார்.

பட மூலாதாரம், Facebook/PR Pandian
'காவிரிக்கு கோதாவரி மாற்றாகாது'
அதோடு, கோதாவரி திட்டம் முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குப் பின்னடைவாக மாறிவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
பிபிசி தமிழிடம் அதுகுறித்து விளக்கிய அவர், "தமிழ்நாடு முல்லைப் பெரியாறு மற்றும் காவிரியில் அதன் உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும். அந்தப் பங்கும்கூட தமிழ்நாட்டுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இந்த நிலையில் கோதாவரி திட்டம் வருவதால் மற்ற இரு திட்டங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் நீர்த்துப் போய்விடக் கூடாது. கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் நமக்கு உரிய நீரைப் பெற வேண்டும். கோதாவரி நீரை காவரியில் கொண்டு வந்து சேர்ப்பதைப் பற்றி யோசிப்பதற்கு இன்னும் காலம் இருக்கின்றது" என்றார்.
காவிரிக்கு கோதாவரி மாற்றாகாது, முல்லைப் பெரியாறுக்கு கோதாவரி மாற்றாகாது என்று கூறும் அவர் சட்டப்படி நமக்கு உரிய நீர்வளத்தைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும், "தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி ஆழப்படுத்தி நீரைச் சேமிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து நமது நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும். அதனால்தான் ராசிமணல் அணைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனக் கோரி வருகிறோம். கோதாவரி - காவிரி திட்டத்தில் பெரிய அளவில் பலன்கள் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் சவால்களே அதிகம் உள்ளன" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
'தமிழ்நாட்டைவிட ஆந்திராவுக்கே பலன்கள் அதிகம்'
இந்தச் சூழலில் கோதாவரி - காவிரி இணைப்பு என்பது தமிழ்நாட்டை விடவும் ஆந்திராவுக்கே அதிக பலன்களைக் கொடுக்கும் என்கிறார் அ.வீரப்பன். "ஏனெனில் அந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 84 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டை அடையும்போது சுமார் 50 டிஎம்சியாக குறைந்துவிடும். இதற்கு ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்ய வேண்டுமா என்பதை தமிழ்நாடு அரசு யோசிக்க வேண்டும்" என்றார்.
தேசிய நீர் வளர்ச்சி முகமை தயாரித்த வரைவுத் திட்ட அறிக்கையின்படி, 2018 - 2019 விலை நிலவரத்தின்படி இந்தத் திட்டத்தின் செலவு ரூ.60,361 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைய கணக்கீட்டின்படி இது மேலும் அதிகரித்திருக்கும் என்று கூறும் அ.வீரப்பன், இந்தச் செலவில் ஒரு பகுதியை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால் இந்த 84 டிஎம்சி ஒதுக்கீட்டை 200 டிஎம்சியாக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரி வருவதாக நீர்வளத் துறையின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.
"அதோடு கோதாவரியின் உபரிநீர் அளவு என்னவென்பதும் உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த அளவுக்குப் பலன் இருக்கும் என்பது உறுதியில்லை," என்கிறார் அ.வீரப்பன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































