48,000க்கும் மேலான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

48,000க்கும் மேலான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி காலமானார்

பட மூலாதாரம், S JANAKI/X

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார்.

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அழைக்கப்படுகிறார்.

மைசூரில் 88 வயதில் அவர் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, 1957இல் 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், நான்கு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தான் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து அவர் 33க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனது தனித்துவமான குரலால் இந்திய இசைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய எஸ். ஜானகியின் மறைவு, இசையுலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறுவயது முதலே இசையில் தீவிர ஆர்வம்

இசைக் குயில் என்று மொத்த தென்னிந்திய திரையுலகமும் கொண்டாடும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ராமமூர்த்தி-சத்தியவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.

சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் இருந்ததால், நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்ற இவர் அகில இந்திய வானொலி 1956இல் பாட்டுப் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் கலந்துகொண்டு, அப்போதைய ஜானாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றார்.

ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக இருந்த இவருக்கு தமிழில் முதன்முதலாக பின்னணிக் குரலில் பாடக்கூடிய வாய்ப்பு, 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில் கிடைத்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், ஜானகி தன்னுடைய ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமே போதும் என்று கூறி அதை நிராகரித்து விட்டார்.

பட மூலாதாரம், S JANAKI/FB

படக்குறிப்பு, கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், ஜானகி தன்னுடைய ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமே போதும் என்று கூறி அதை நிராகரித்து விட்டார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டி.சலபதிராவ் இசையில் அவர் பாடிய அந்தப் பாடல் அடுத்த நாளே, கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பைப் பெற்று தந்தது. அறிமுகமான முதல் வருடத்திலேயே ஆறு மொழிகளில் நூறு பாடல்களைப் பாடி புதிய சாதனையைப் புரிந்தார்.

ஜானகியின் வாழ்க்கையில், 'கொஞ்சும் சலங்கை' திரைப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் காரு குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையோடு இணைந்து இந்தப் படத்திற்காக இவர் பாடிய, 'சிங்காரவேலனே தேவா...' என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்த அந்தப் பாடலைத் தொடர்ந்து ஜானகிக்கு பரவலாக வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் அவரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்ற படம் என்றால் அது இளையராஜா இசையில் இவர் அன்னக்கிளி திரைப்படத்தில் பாடிய பாடல்கள்தான்.

அந்தப் படத்திற்காக இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்கள் என்றாலும் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று தொடங்கும் பாடல் இவருக்குத் தனியொரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சௌராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி என 1 7 மொழிகளில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

ஐந்து வயது குழந்தையின் குரலிலும், அறுபது வயது முதியவரின் குரலிலும் குரலை மாற்றிப் பாடக் கூடிய திறமையும் இவருக்கு உண்டு.

ஜானகி முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் "விதியுடன் விளையாட்டு" என்ற தமிழ் திரைப்படத்திற்காக பாடினார்.
படக்குறிப்பு, ஜானகி முதன்முதலில் 1957ஆம் ஆண்டில் "விதியுடன் விளையாட்டு" என்ற தமிழ் திரைப்படத்திற்காக பாடினார்.

ஓய்வு பெற்றது ஏன்? பிபிசி தமிழ் பேட்டியில் ஜானகி அளித்த பதில்

தமிழ் திரை உலகின் பழம்பெரும் மூத்த பாடகியான எஸ்.ஜானகி ஓய்வு பெறப் போவதாக 2016ஆம் ஆண்டில் அறிவித்தார். அப்போது பிபிசி தமிழுக்குப் பேட்டியளித்த அவர், ''இத்தனை வருடங்கள் நிறைய பாடல்கள் பாடிவிட்டேன். இது போதுமென நிறுத்திவிட்டேன். திருப்தியாக ஓய்வு பெறுகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

ஓய்வு பெறுவதற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, "பாட முடியாமல் போய், ஏன் இன்னும் இவர் பாடுகிறார் என்று பிறர் சொல்லி, அதன் பிறகு பாடுவதை நிறுத்துவதைவிட, மரியாதையாக ஒதுங்கிவிடலாம் என்று நினைத்தேன்" என இசையரசி ஜானகி கூறியிருந்தார்.

பல தசாப்தங்களாக பல்வேறு பாடல்களைப் பாடியுள்ள உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது என்ற கேள்விக்கு அவரது பதில் என்ன தெரியுமா?

"பல மொழிகளில் பல்வேறு அருமையான பாடல்களைப் பாடியுள்ளேன். ஒரு பாடல் என்று சுருக்கிவிட முடியாது. இந்த மன்றத்தில் ஓடி வரும், பொன் என்பேன் சிறு பூ என்பேன், தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, சிங்கார வேலனே தேவா, தென்னங்கீற்று ஊஞ்சலிலே, ஊரு சனம் தூங்கிடுச்சு, காற்றில் எந்தன் கீதம், செந்தூரப் பூவே என்று பிடித்த பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்."

"இளையராஜா, கே.வி மகாதேவன், எம்.எஸ் விஸ்வநாதன், ஏ.ஆர். ரஹ்மான், தேவா, புதுப்புது இசையமைப்பாளர்கள் என அநேகமாக அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறேன். தமிழ் மட்டுமல்ல, பல மொழிகளில் அருமையான பாடல்களைப் பாடியுள்ளேன். ஒரியா மொழியிலும் நல்ல பாடல்களைப் பாடியுள்ளேன், இவற்றில் எதை எனக்குப் பிடித்தது எனப் பிரித்துச் சொல்லிவிட முடியும்?" என்று ஜானகி கேட்டார்.

இளம்வயதிலேயே 1979 ஆம் ஆண்டில் வெளியான உதிரிப்பூக்கள் படத்தில் ‘போடா போடா பொக்கை’ என்ற பாடலை முதியோர் குரலிலும் பாடியிருப்பார் எஸ். ஜானகி.

பட மூலாதாரம், WIKIPEDIA

படக்குறிப்பு, இளம்வயதிலேயே 1979 ஆம் ஆண்டில் வெளியான உதிரிப்பூக்கள் படத்தில் 'போடா போடா பொக்கை' என்ற பாடலை முதியோர் குரலிலும் பாடியிருப்பார் எஸ். ஜானகி.

பிரபலங்கள் இரங்கல்

ஜானகி மறைவைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்," என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்கள் ஆசீர்வாதங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்," என்று கூறியுள்ளார்.

நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில், "சில குரல்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக என்றென்றும் நிலைத்துவிடுகின்றன. ஜானகி அம்மாவின் குரலும் அத்தகையதே. தனது இசையின் மூலம் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த அவர், பல தலைமுறையினரும் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளை உருவாக்கினார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது பாடல்கள் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும். அவரது அன்புக்கு உரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா, அமைதியில் துயில்கொள்ளுங்கள்," என்று தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

ஜானகியின் மறைவைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பின்னணி பாடகி சின்மயி, "அவர் ஒரு தேவி. சுமார் 20-23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடன் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் மேடையில் நேரடியாக ஒரு பாடலைப் பாடினார், அதில் அவரது குரல் ஒரு குழந்தை போல, ஒரு பெண் போல, ஒரு ஆண் போல என பல்வேறு வடிவங்களில் ஒலித்தது" என்று கூறியுள்ளார்.

மேலும், "நான் மேடைக்குப் பின்னால் இருந்தேன், அந்தப் பாடலை முழுவதுமாகப் பாடுவது அவர்தான் என்பதை அறியும் வரை, அந்த ஆண் பாடகர் யார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் மதிக்கும் ஒரு பாடகி அவர்," என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் இரங்கல்

"இந்திய திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது" என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பல முறை தேசிய திரைப்பட விருதுகள் உள்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

எஸ். ஜானகி

பட மூலாதாரம், FB

'பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம் தமிழ்க்குமரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் 48000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய தேன் குரலுக்குச் சொந்தகாரர், எம்.எஸ்.வி முதல் இன்றைய அனிருத் வரை அனைவரின் இசையிலும் பாடல்கள் பாடிய இசை பேரரசி என்று பெயர் பெற்ற எஸ். ஜானகி அவர்கள் காலமான செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

எஸ். ஜானகி மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் அவர். அவரது தாய் மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழிப் பாடல்களையும் மிகச் சிறப்பாக, இனிமையாகப் பாடியவர். தான் பாடிய பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்."

"அவர் பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். ஜானகி அம்மாளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்துகிறது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

'இந்திய திரைத் துறைக்கு பேரிழப்பு' - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், X

'இந்திய திரைத் துறைக்கு பேரிழப்பு' - மு.க.ஸ்டாலின்

இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகியின் இசைப் பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரை அவரது அமுத கானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு ரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பு," என்று கூறியுள்ளார்.

மேலும், "இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறை கலைஞர்கள், ரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு