காணொளி: ஸ்மார்ட்போன்களை ஒதுக்கி வைக்க விரும்பும் இளைஞர்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஸ்மார்ட்போன்களை ஒதுக்கி வைக்க விரும்பும் இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது

பல இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. தொடர்புகொள்வது, படிப்பது, வேலை செய்வது, நண்பர்களுடன் பழகுவது எனப் பலவற்றுக்கும் அவர்கள் ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சிலர் தங்கள் ஸ்மார்ட்போன்களை ஒதுக்கி வைக்க விரும்புகிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் நுழைவதற்கு முன்பு, அனைவரும் தங்கள் கைப்பேசிகளை ஒப்படைக்க வேண்டும். அடுத்த சில மணிநேரத்திற்கு அவர்கள் இணையத் தொடர்பின்றி இருக்க வேண்டும்.

சிலருக்கு, இது சொல்வதைவிடச் செய்வது கடினமாக இருக்கிறது.

அப்படியானால், வரலாற்றிலேயே அதிக தொலைத்தொடர்பு வசதிகள் கொண்ட தலைமுறையாகக் கருதப்படும் இளைஞர்கள், ஏன் தாங்களாகவே அந்தத் தொடர்பில் இருந்து விலக முடிவு செய்கின்றனர்?

தொழில்நுட்பத்தைக் கைவிடுவது நோக்கமல்ல என்று இங்குள்ள பலர் கூறுகிறார்கள். மாறாக, தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு வரம்புகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

இதற்கு முன்பும் பலர் தங்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க முயன்றுள்ளனர். எப்போது கைப்பேசியை அணைத்து வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது சவால் அல்ல. உண்மையில், அதைச் செயல்படுத்துவதுதான் சவால்.

இங்கு வந்துள்ள பலருக்கு, எப்போதும் தொடர்பில் இருப்பது சில நேரங்களில் மனதுக்கு அதிக சுமையாக இருக்கலாம். தொழில்நுட்பம் பிரச்னை அல்ல என்றும், ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்கிறது என்பதே முக்கியம் என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

அப்படியானால், கைப்பேசிகளை அணைத்து வைத்திருக்கும்போது என்ன நடக்கிறது?

தொழில்நுட்பத்தைக் கைவிடுவது நோக்கமல்ல, அதன் பயன்பாட்டில் சமநிலையைக் கண்டறிவதே நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சந்திப்புகளுக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு எதிர்பாராத ஓர் அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். எப்போதும் இணையத்தில் இருப்பதாக அடிக்கடி விவரிக்கப்படும் தலைமுறையினரிடம்கூட, இணையத் தொடர்பில் இருந்து விலகுவதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இஸ்லாமாபாத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்தக் கூட்டம் தற்போது மற்ற நகரங்களுக்கும் பரவியுள்ளது. லாகூர் மற்றும் கராச்சியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் மேலும் பல நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும், இதுபோன்ற கூட்டங்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பு, சிலருக்கு தொழில்நுட்பத்தில் இருந்து முற்றிலும் தப்புவது நோக்கமல்ல என்பதைக் காட்டுகிறது. அதற்குப் பதிலாக, தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு எங்கே வரம்பு விதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு