பிரான்சை உலுக்கிய மாணவர் போராட்டம்: 5.5 லட்சம் பேர் வீதிகளில் திரண்டதாக மதிப்பீடு
பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
இந்தப் போராட்டங்களில் சுமார் ஐந்தரை லட்சம் பேர் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது. என்ன நடக்கிறது பிரான்ஸில்? ஏன் இந்த போராட்டம்?
15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் படிக்கும் பிரான்ஸின் மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் சிதிலமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கண்டித்து, கடந்த சில வாரங்களாக லட்சக்கணக்கான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிற்சங்க உறுப்பினர்களும் பிற போராட்டக் குழுக்களும் இந்தப் போராட்டங்களில் இணைந்ததால், பெரிய அளவிலான போராட்டமாக மாறி உள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. பாரிஸில் கலவரத் தடுப்புப் போலீஸாருடன் கடுமையான மோதல்கள் நீடித்தன. கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தினர்.
தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. லிமோஜ் நகரில் உள்ள நகர சபை கட்டடத்தின் கோபுரம் இடிந்து விழுந்தது.
பல நகரங்களில் கொள்ளைச் சம்பவங்களும் நடந்தன. ராய்ட்டர்ஸ் பகிர்ந்த ஒரு காணொளியில் கடைகளில் கொள்ளையடிக்கப்படுவதை காண முடிகிறது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் 150 போலீஸார் காயமடைந்ததாக பிரதமர் செபாஸ்டியன் லுகோர்னு தெரிவித்தார்.
பாரிஸில், பிற்பகலில் நடந்த முக்கிய பேரணி பெரும்பாலும் அமைதியாகவே காணப்பட்டது. தாங்கள் அமைதி விரும்பிகள் என்றும், மாற்றத்தை ஏற்படுத்த மட்டுமே முயற்சி செய்கிறோம் என்றும் ஒரு இளைஞர் குழு பிபிசியிடம் கூறியது.
இருப்பினும் நேரம் செல்ல செல்ல சில குழுக்கள் தெருக்களில் தீ மூட்டின. தீயணைப்பு வீரர்களை விரோத மனப்பான்மை கொண்ட நபர்கள் பாதுகாப்பாக தீயை அணைக்க விடாமல் தடுத்ததாக உள்ளூர் காவல்துறை கூறியது.
வன்முறை சம்பவத்தின் போது பாரிஸ் போர்க்களம் போல இருந்ததாக ஒருவர் கூறினார்.
சனிக்கிழமை நடந்த போராட்டங்களில் தலைநகரின் சில பகுதிகள் உட்பட பல இடங்களில் 'முகமூடி அணிந்த நபர்களால் குறிவைக்கப்பட்ட வன்முறைச் செயல்கள் நடந்ததாக பிரான்சின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



