சாதகமற்ற சூழலிலும் சவால்களை தாண்டி அவகாடோ சாகுபடியில் சாதித்த விவசாயி

காணொளிக் குறிப்பு, அவகாடோ விவசாயத்தில் அசத்தும் ஆந்திர விவசாயி - பிரதமர் மோதி கூறியது என்ன?
சாதகமற்ற சூழலிலும் சவால்களை தாண்டி அவகாடோ சாகுபடியில் சாதித்த விவசாயி
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டம், வெதர்லா கிராமத்தில் உள்ள வரதா ரெட்டியின் பண்ணைக்கு, அவகாடோ சாகுபடி குறித்து அறிந்துகொள்ள பிபிசி குழு சென்றது. புதிய பயிர்கள் குறித்து யூடியூபில் தேடிக் கொண்டிருந்தபோது, ​​கர்நாடகாவில் அவகாடோ பயிரிடப்படுவதை கண்டறிந்ததாக வரதா ரெட்டி தெரிவித்தார். அங்குள்ள பண்ணைகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர், தானும் இந்த பயிரைச் சாகுபடி செய்ய முடிவு செய்தார்.

அவகாடோ சாகுபடியின் ஆரம்ப கட்டத்தில் பல சிரமங்களைச் சந்தித்ததாக வரதா ரெட்டி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் ஆறு மாத வயதுடைய கன்றை கொடுத்தனர். அவை மிக சிறிதாக இருந்தன. ஒட்டுக்கன்றுகள் என்பதால் மிக மெதுவாகவே வளர்ந்தன. அந்த கட்டத்தில் நான் பல சிரமங்களைச் சந்தித்தேன். அந்த சிறிய கன்றுகளால் பலமான காற்றையோ கடும் வெப்பத்தையோ தாங்க முடியவில்லை. இந்த சிக்கல்களைக் கவனித்த பிறகு, நன்கு வளர்ந்த செடிகள் சிறப்பாக வளரும் என்பதை உணர்ந்தேன். எனவே, இளம் செடிகளை வாங்கி, அவற்றை பைகளில் வைத்து மேலும் ஆறு மாதங்கள் வளர்த்த பின்னரே நிலத்தில் நட்டேன். நன்கு வளர்ந்த செடிகளை நட்டதால், பெரிய சிக்கல் ஏதுமின்றி பயிர் சாகுபடி வெற்றிகரமாக அமைந்தது."

ஒரு கட்டத்தில் அவகாடோ மரங்களை அகற்றிவிட்டு மீண்டும் வாழைப் பயிர்களை நடலாம் என யோசித்ததாக வரதா ரெட்டி கூறினார்.

அதனை மேலும் விவரித்த அவர், "இப்போது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2025-ல், மரங்களில் பூக்கள் பூத்தன. சுமார் 300 மரங்களில், ஏறக்குறைய 150 மரங்களில் பூக்கள் வந்தன. ஆனால், என்ன காரணத்தாலோ தெரியவில்லை, அந்தப் பூக்கள் அனைத்தும் உதிர்ந்துவிட்டன. நான் செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன், மருந்துகளைத் தெளித்தேன், போரான் சத்து குறைபாடு இருக்கலாம் என சிலர் கூறியதால் போரானையும் இட்டேன். ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

மூன்றாம் ஆண்டிற்கும் நான்காம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், பராமரிப்பு பணிகளை முழுமையாக நிறுத்திவிட்டேன். மூன்றாம் ஆண்டிலேயே அனைத்து பூக்களும் உதிர்ந்துவிட்டதால், நான் எதையும் செய்யவில்லை. ஒருவேளை இந்த பயிர் காலநிலைக்கு ஏற்றதாக இல்லை என நினைத்தேன். தோட்டத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, அதற்கு பதிலாக வாழையை நடலாம் என்று கூட யோசித்தேன். ஏனெனில், அப்போது வாழைக்கு நல்ல சந்தை இருந்தது.

பின்னர், இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து பார்ப்போம் என நினைத்தேன். அது வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும், சந்தை வாய்ப்புகளும் நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தன. எதிர்பாராத விதமாக, நான்காவது ஆண்டில் பூக்கள் காய்களாக மாறின. மூன்றாம் ஆண்டில் நான் அளித்த சத்துகள் நான்காவது ஆண்டில் பலனளித்து, நல்ல விளைச்சலைக் கொடுத்தன.

இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து, சுமார் நான்கு டன் (4 ஆயிரம் கிலோ) பழங்களை அறுவடை செய்தேன். அவற்றை பண்ணையிலிருந்தே நேரடியாக கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் என விற்பனை செய்தேன். ஹைதராபாத்தில் அவகாடோ பழங்கள் கிலோ ஒன்றுக்கு சுமார் 350 ரூபாக்கும், சென்னையில் சுமார் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. நான் கிலோ 100 ரூபாய்க்கு விற்றதும், அது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், பலரும் என்னிடம் நேரடியாக வந்து பழங்களை வாங்கினர். இதற்காக நான் கூலியாட்களுக்குச் செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நானே பழங்களை பறித்து, எடை போட்டு, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்தேன்." என்றார்.

ஒரு காலத்தில் தன்னை விமர்சித்த அதே விவசாயிகள், இப்போது தன்னை பாராட்டுவதாக வரதா ரெட்டி கூறுகிறார்.

"ஆரம்பத்தில் என் குடும்பத்தினரே இதை எதிர்த்தனர். எங்கள் நிதி நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லாததால், அவகாடோ பயிரிட வேண்டாம் என என்னிடம் கூறினார்கள். சிலர், "ஏன் இப்படி முட்டாள்தனமான வேலையை செய்கிறாய்? பலர் வாழை பயிரிட்டு நல்ல வருமானம் ஈட்டியிருக்கிறார்கள். வாழைக்கு நல்ல சந்தை இருப்பது உனக்கு தெரியாதா? அவகாடோ என்றால் என்னவென யாருக்கும் தெரியாதே என்று கேட்டனர். அதே நபர்கள் இப்போது என்னை பெருமையாக பேசுகிறார்கள். நேரில் வந்து பாராட்டவும் செய்கிறார்கள்."

அவகாடோ பயிரிடும்போது பெரும்பாலும் இயற்கை முறைகளையே பின்பற்றுவதாக கூறுகிறார் வரதா ரெட்டியின் மனைவி பிரமிளா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மழைக்காலத்தில் மரங்கள் மிகவும் நன்றாக வளர்கின்றன. நாங்கள் மிகக் குறைந்த அளவிலேயே பூச்சிக்கொல்லிகளையும் வேதிப்பொருட்களையும் பயன்படுத்துகிறோம். பயிர் சாகுபடியை பெரும்பாலும் இயற்கை முறையிலேயே செய்கிறோம். பூச்சிக்கொல்லி தெளிப்பதும் மிகக் குறைந்த அளவுதான்." என்றார்.

அவகாடோ சாகுபடியில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு வரதா ரெட்டி சில ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

"பயிரின் வளர்ச்சி, அதன் ரகத்தை பொறுத்தது. அவகாடோ பயிரிட விரும்பும் எவரும், முதலில் இந்த பயிர் என்ன என்பதையும், தங்கள் மண்ணுக்கு எந்த ரகம் ஏற்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். பொதுவாக நவம்பர் - டிசம்பர் அல்லது ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் அறுவடை நடைபெறும். இந்த நான்கு மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் பூக்கள் பூக்கலாம் என்பதால், விவசாயிகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

உரமிடுதல் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றை சரியாகக் கையாள்வது அவசியம். தற்போதைய நிலையில், அவகாடோ சந்தைப்படுத்துதல் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. இருப்பினும், விவசாயிகளுக்கு சாதகமான அம்சம் என்னவென்றால், பழங்கள் முதிர்ச்சியடைந்த பிறகும், அவை இரண்டு மாதங்கள் வரை மரத்திலேயே இருக்க முடியும்.

இதுவரை எனக்கு சுமார் 44 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. பெரிய சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. முதலீடு செய்த தொகையை ஏற்கனவே திரும்ப பெற்றுவிட்டேன். ஆண்டுதோறும் கவாத்து செய்தலும், நோய் குறித்து கண்காணிப்பதும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதலும் தேவைப்படும். இருப்பினும், அவை சமாளிக்க கூடியதே." என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.