அங்கிதா பண்டாரி கொலை வழக்கு: சிக்கிம் ஆளுநர் நியமனத்தால் மீண்டும் விவாதப் பொருளாவது ஏன்? 8 கேள்வி-பதில்கள்

அங்கிதா பண்டாரி, கொலை வழக்கு, சிக்கிம் மாநில ஆளுநர், துஷ்யந்த் குமார் கௌதம்
படக்குறிப்பு, அங்கித் பண்டாரி கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தக் கோரும் பெண் போராட்டக்காரர்கள். இந்தப் புகைப்படம் 2025-ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தங்கள் மகள் அங்கிதா பண்டாரியின் கொலைக்கு நீதி கோரி, டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவரது பெற்றோரை வியாழக்கிழமை அதிகாலையில் காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை முடியும் வரை, பாஜக தலைவர் துஷ்யந்த் குமார் கெளதம் சிக்கிம் மாநில ஆளுநராகப் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

இதற்கு முன்பு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், அங்கிதா பண்டாரியின் தந்தை வீரேந்திர பண்டாரி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தராகண்ட் மாநிலத்தில் அங்கிதா பண்டாரி கொலை வழக்கு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. அங்கிதா பண்டாரி யார்? அவரது கொலை வழக்கில் பாஜக தலைவர் துஷ்யந்த் குமார் கெளதம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1. யார் இந்த அங்கிதா பண்டாரி?

அங்கிதா பண்டாரி, கொலை வழக்கு, சிக்கிம் மாநில ஆளுநர், துஷ்யந்த் குமார் கௌதம்
படக்குறிப்பு, நீதி கோரி இந்தியா கேட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கிதா பண்டாரியின் பெற்றோருடன், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்

உத்தராகண்ட் மாநிலத்தின் பௌரி கார்வால் பகுதியைச் சேர்ந்தவர் அங்கிதா பண்டாரி. ரிஷிகேஷுக்கு அருகே, லக்ஷ்மண் ஜூலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சில்லா அருகே அமைந்துள்ள வன்தாரா ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தார்.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி அங்கிதா காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. ஆறு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 24ஆம் தேதி காலை, சில்லா கால்வாயிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, மேலாளர் சௌரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின்போது, அங்கிதாவைக் கால்வாயில் தள்ளியதாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. 2025ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்த மூவரும் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. குற்றவாளிகளில் ஒருவரான புல்கித் ஆர்யா, அப்போது பாஜக தலைவராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் என்பதால், இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, வினோத் ஆர்யா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

2. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் யார்?

அங்கிதா பண்டாரி, கொலை வழக்கு, சிக்கிம் மாநில ஆளுநர், துஷ்யந்த் குமார் கௌதம், உத்தராகண்ட் கிராந்தி தளம் கட்சி
படக்குறிப்பு, உத்தராகண்ட் கிராந்தி தளம் கட்சியினர் துஷ்யந்த் கெளதமுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது...
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காவல்துறையின் கூற்றுப்படி, 19 வயதான அங்கிதா பண்டாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சௌரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் தொடர்புடையவர்கள். புல்கித் ஆர்யா, பாஜக தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் ஆவார்.

புல்கித் ஆர்யாவின் சகோதரர் அங்கித் ஆர்யா, உத்தராகண்ட் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அங்கிதாவைத் தவறான செயல்களில் ஈடுபடுமாறு அவர்கள் வற்புறுத்தியதாகவும், இதைப் பற்றிய உண்மையை வெளியில் சொல்லிவிடுவதாக அங்கிதா எச்சரித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான புல்கித் ஆர்யா, அங்கித் குப்தா மற்றும் சௌரப் பாஸ்கர் ஆகிய மூவரும் 2025ஆம், ஆண்டு மே மாதத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

3. யார் அந்த 'விஐபி'?

அங்கிதா பண்டாரி, கொலை வழக்கு, சிக்கிம் மாநில ஆளுநர், துஷ்யந்த் குமார் கௌதம்
படக்குறிப்பு, இந்த விவகாரம் தொடர்பாக துஷ்யந்த் கெளதம் தரப்பில் எஃப்.ஐ.ஆர் ஒன்று பதிவு செய்யப்பட்டது

'தி இந்து' நாளிதழ், அதன் துணைப் பதிப்பான 'ஃபிரண்ட்லைன்' இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி, அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் ஒரு 'விஐபி' நபருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளது.

2026ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான 'தி இந்து' செய்தியின்படி, உத்தராகண்டின் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் ரத்தோரின் தோழியும் நடிகையுமான உர்மிளா சனாவர், இந்த வழக்கில் குறிப்பிடப்படும் 'விஐபி' நபர் பாஜகவின் மூத்த தலைவர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அங்கிதாவைத் தொடர்ந்து 'அறநெறிக்கு முரணான செயல்களில்' ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து வந்ததை வாட்ஸ்அப் உரையாடல்கள் உறுதிப்படுத்துவதாக 'ஃபிரண்ட்லைன்' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக தலைவர் துஷ்யந்த் குமார் கௌதம், இதுதொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளார்.

4. துஷ்யந்த் கௌதமின் பெயர் இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்படுவது ஏன்?

அங்கிதா பண்டாரியின் கொலைக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 'விஐபி' நபர் துஷ்யந்த் குமார் கௌதம் என்று அங்கிதாவின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள துஷ்யந்த் கௌதம், குற்றம் சாட்டியவர்களுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். பாஜகவின் முன்னாள் தேசியப் பொதுச் செயலாளரான அவர், உத்தராகண்ட் மாநிலத்துக்கான கட்சியின் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அக்டோபர் 12ஆம் தேதி, அவர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அங்கிதா பண்டாரியின் பெற்றோர், இந்த வழக்கில் குறிப்பிடப்படும் 'விஐபி விருந்தினர்' தொடர்பான விசாரணை முடியும் வரை, துஷ்யந்த் கௌதம் சிக்கிம் மாநில ஆளுநராகப் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

துஷ்யந்த் கௌதமை பாதுகாக்கும் நோக்கத்திலேயே அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதே அவரை அந்தப் பதவியில் நியமித்ததற்கான காரணம் என்று காங்கிரஸ் கட்சி வாதிடுகிறது.

5. துஷ்யந்த் கௌதமின் குற்றச்சாட்டு என்ன?

அங்கிதா பண்டாரி, கொலை வழக்கு, சிக்கிம் மாநில ஆளுநர், துஷ்யந்த் குமார் கௌதம்
படக்குறிப்பு, 2025ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் ஆதரவாளர்களுடன் தேசியக் கொடி ஊர்வலத்தில் பங்கேற்ற துஷ்யந்த் கௌதம்

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள துஷ்யந்த் கௌதம், அவதூறு நடவடிக்கைகளைத் தொடங்கியதுடன், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்துள்ளார்.

டேராடூனில் உள்ள டாலன்வாலா காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்படி, ஹரித்வாரின் ஜுவாலாபூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர், நடிகை உர்மிளா சனாவர் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் இணைந்து, தனக்கு எதிராகத் திட்டமிட்டுக் குற்றச் சதியில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கு எதிராக அவதூறான உள்ளடக்கங்களைப் பரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று துஷ்யந்த் கௌதம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும், "இதுபோன்ற உள்ளடக்கங்களைச் சமூக ஊடகத் தளங்களிலிருந்து நீக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதைத் தடுக்கவும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்" என்று அவர் கோரியுள்ளார்.

அங்கிதா பண்டாரி கொலை வழக்கின் விசாரணை, குற்றப்பத்திரிகை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் என எதிலும் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார்.

தனது புகாரில் காங்கிரஸ் கட்சியின் மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

6. அங்கிதாவின் பெற்றோரின் கோரிக்கைகள் யாவை?

அங்கிதா பண்டாரி, கொலை வழக்கு, சிக்கிம் மாநில ஆளுநர், துஷ்யந்த் குமார் கௌதம்
படக்குறிப்பு, அங்கிதா பண்டாரியின் தந்தை, இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

பிபிசிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், துஷ்யந்த் கௌதம் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து அங்கிதா பண்டாரியின் தந்தை வீரேந்திர பண்டாரி தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த நியமனம் குறித்த தகவலைக் கேட்டதும், தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இரவு முழுவதும் தூக்கமின்றி வேதனையில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

பிபிசி செய்தியாளர் ஆசிஃப் அலியிடம் பேசிய வீரேந்திர பண்டாரி, இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பின்வரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

1. சிபிஐ விசாரணை: அங்கிதா கொலை வழக்கின் சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்.

2. ரேணு பிஷ்ட்டிடம் விசாரணை: யம்கேஷ்வர் தொகுதி எம்எல்ஏ ரேணு பிஷ்ட்டிடம் விசாரணை நடத்த வேண்டும். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் அவரது தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், வன்தாரா ரிசார்ட்டை இடிக்க உத்தரவிட்டது யார் என்பதையும் கண்டறிய வேண்டும்.

3. உர்மிளா சனாவர், சுரேஷ் ரத்தோர் தொடர்பான விசாரணை: உர்மிளா சனாவர் மற்றும் அவரது கணவரின் அதிகாரப்பூர்வ வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், சுரேஷ் ரத்தோருக்கு நார்கோ பரிசோதனை நடத்த வேண்டும்.

4. தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்தல்: 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 24ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அஜய் குமார் மற்றும் துஷ்யந்த் குமார் கௌதம் ஆகியோரின் தொலைபேசி இருப்பிட விவரங்கள் மற்றும் முழுமையான அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

5. புல்கித் ஆர்யாவின் அழைப்பு விவரங்கள்: 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் குற்றம் சாட்டப்பட்ட புல்கித் ஆர்யாவின் தொலைபேசியில் பதிவான அழைப்பு விவரங்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் அந்தக் காலகட்டத்தில் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

7. விசாரணை அதிகாரி கூறியது என்ன?

இந்த வழக்கை விசாரித்த மூத்த காவல்துறை அதிகாரி ஷேகர் சுயால், கொலைச் சம்பவத்தில் எந்தவொரு 'விஐபி' நபருக்கும் தொடர்பு இல்லை என்று கூறியிருந்தார்.

அங்கிதா பண்டாரி கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தராகண்ட் மாநில அரசு விசாரணைக்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. அப்போது பௌரி மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஷேகர் சுயால், அந்தக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் அவர் கூறுகையில், "2022ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை அந்த ரிசார்ட்டில் தங்கியிருந்தவர்கள் அல்லது அறைகளை முன்பதிவு செய்தவர்கள் என அனைவரையும் பல்வேறு கோணங்களில் விசாரித்தோம். ஆனால், அவர்களில் யாரேனும் 'விஐபி' ஒருவர் இருந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

8. விசாரணை குறித்து முதல்வர் தாமி கூறியது என்ன?

அங்கிதா பண்டாரி, கொலை வழக்கு, சிக்கிம் மாநில ஆளுநர், துஷ்யந்த் குமார் கௌதம்
படக்குறிப்பு, அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்றும், தற்போது இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாகவும் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்

அங்கிதா பண்டாரி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி, உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன.

இதற்கிடையில், மாநிலத்தின் மகளான அங்கிதாவுக்கு நீதி கிடைக்கச் செய்வதே அரசின் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வந்துள்ளதாக உத்தராகண்ட் அரசு தெரிவித்தது. இந்த நோக்கத்துடன் அரசு மிகுந்த கவனம், உணர்வுபூர்வ அணுகுமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டதாகவும் கூறியது.

மாநில அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை குறித்து கீழமை நீதிமன்றம் மட்டுமின்றி, உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் திருப்தி தெரிவித்ததாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறினார். இது, விசாரணையின் நேர்மையையும் வலுவையும் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஒரு ஆடியோ பதிவு தொடர்பான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, மாநிலத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெறுவதாக அவர் கூறினார். ஆனால், நீதிமன்ற நடைமுறைகள் தீவிரமாக நடைபெற்று முடிவை எட்டியுள்ளன என்றும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு