"அச்ச உணர்வு, பதற்றம்"; ரியாத்தில் ஹூத்தி தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்கள் எப்படி உள்ளனர்?

பட மூலாதாரம், Reuters
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபியாவை நோக்கி மேற்கொண்ட தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளில் வாழும் வெளிநாட்டு சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சௌதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது கடந்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
சௌதியில் உள்ள தமிழர்கள் பலரிடமும் பிபிசி தமிழ் அங்குள்ள நிலைமைகள் குறித்து தெரிந்து கொள்ள பேசியது. ஏவுகணை தாக்குதல்கள் குறித்து அரசின் எச்சரிக்கை செய்திகள் வரும் நேரத்தில் யாரும் வெளியில் வருவதில்லை எனவும், பிற நேரங்களில் அன்றாட வாழ்க்கை எப்போதும் போல் தொடர்கிறது என்றும் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது தாக்குதலில் ரியாத் விமான நிலைய பயணிகள் முனையத்தின் ஒரு பகுதியில் ஏவுகணை தாக்கியது. இதில் பாகிஸ்தான் குடியிருப்பாளர் ஒருவர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்தனர். இதற்கு முந்தைய நாள் அதே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு ஏமனின் ஹூத்தி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ரியாத் மட்டுமின்றி கிழக்கு சௌதியில் உள்ள தம்மாம் விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிலையங்களும் குறிவைக்கப்பட்டதாக, ஹூத்தியின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"ஆன்லைனில் வகுப்புகள், வீட்டிலிருந்து அலுவலக வேலைகள்"
ரியாத்தில் வசிக்கும் மருத்துவர் பஷீர் அஹ்மது (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள சூழலைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசுகையில், "சௌதி மீது ஏவப்படும் ஏவுகணைகளை வானில் கண்ணால் பார்க்க முடிகிறது. போர் சூழலில் இருக்கும் யாருக்கும் இயல்பாக எழும் அச்ச உணர்வு உள்ளது, பதட்டமாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான ஏவுகணைகளை சௌதி அரசு தடுத்து விடுகிறது. அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிக்கக்கூடிய வகையில் சூழல் இல்லை. நான் தினமும் என் மருத்துவமனைக்கு வருகிறேன், நோயாளிகளும் எப்போதும் போல் வருகிறார்கள். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளன. பெரும்பாலான அலுவலகங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளன. ஆபத்து வரும் போது, அரசிடமிருந்து எச்சரிக்கை அனைவரது செல்போன்களுக்கும் வரும், அப்போது வெளியில் வரக் கூடாது," என்றார்.
விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது பலரது தனிப்பட்ட திட்டங்களையும் பாதித்துள்ளது என அவர் கூறுகிறார்.
"விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விடுமுறைக்கு இந்தியா வர வேண்டும் என்று நினைத்து டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் தற்போது வர இயலாது. திருமண நிச்சயம் போன்ற முக்கிய நிகழ்வுகள் கூட இதனால் ரத்தாகியுள்ளன," என்றார் அவர்.

பட மூலாதாரம், EPA/Shutterstock
ஹூத்திகள் ஏமனின் வடமேற்குப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுவாகும். 2015ஆம் ஆண்டு முதல் ஹூத்திகள் பலமுறை சௌதி அரேபியாவை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பினருக்கிடையே பதற்றம் குறைந்திருந்தாலும், சமீபத்திய மோதல்கள் மீண்டும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.
மேலும், மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள விமான நிலையங்களைத் தவிர சௌதியின் அனைத்து விமான நிலையங்களும் தங்களது இலக்குகளாக இருக்கலாம் என ஹூத்திகள் எச்சரித்துள்ளனர். சௌதி அரேபியா ஏமன் உள்நாட்டு போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும், சனாவில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சௌதி அதிகாரிகள் பெரும்பாலான ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர்.
"அன்றாட வாழ்வு முடங்கவில்லை"
சவுதியில் வசிக்கும் பீர் முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நிலைமைகள் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறுகிறார்.
"இங்கு தினசரி வாழ்வு எப்போதும் போல் நடைபெற்று வருகிறது. சௌதி அரசும், இந்திய தூதரகமும் தேவையான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். அன்றாட வாழ்வை முடக்கும் வகையில் எந்த பாதிப்பும் இல்லை. ஏவுகணைகள் வந்தாலோ, அல்லது ஆபத்தான சூழல் உருவாகலாம் என்றாலோ, அரசின் எச்சரிக்கை அமைப்பு எல்லாருக்கும் தகவல் வழங்கிவிடும்," என்றார்.
எனினும் தாக்குதல்களின் பொருளாதார தாக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்படுகிறது. பஹ்ரைனில் வசிக்கும் கண்ணன், "பஹ்ரைனுக்கு பெரும்பாலான சரக்குகள் சாலை மார்க்கமாக சௌதியிலிருந்து வரும். அது தற்போது தடைப்பட்டுள்ளது. எனது மருத்துவக் கருவிகள் விற்பனை தொழிலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய சரக்குகள் தாமதமாகியுள்ளன," என்றார்.
குவைத்தில் வசிக்கும் சையத் மரைக்காயர், சமீபத்திய பதற்றத்தால் விமானப் பயணச்சீட்டு விலைகள் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
தமாம் நகரில் வசிக்கும் அர்ஷ்த் கான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வெகு நாட்களுக்குப் பிறகு செவ்வாய்கிழமை இரவு அரசு எச்சரிக்கை வந்ததாக கூறுகிறார். "கடந்த சில வாரங்களில் நேற்று இரவே முதல் முறையாக எச்சரிக்கை செய்தி வந்தது. தொலைபேசி எந்த மோடில் இருந்தாலும் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அன்றாட வாழ்வுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் எந்த சேதமும் இல்லை" என்கிறார் 30 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் அவர்.

பட மூலாதாரம், Getty Images
போர் நிறுத்தம் முறிந்த பின் அதிகரித்த தாக்குதல்கள்
2022ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலையில் முறிந்ததைத் தொடர்ந்து பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. செங்கடல் கடற்கரைப் பகுதிகளில் ஹூத்திகள் முன்னேற்றம் கண்டதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் சவுதி தலைமையிலான கூட்டணி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதும் மோதலை மேலும் தீவிரமாக்கியது.
ஏமனின் சுமார் 25 சதவிகித நிலப்பரப்பையும், அந்நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவிகித மக்களையும் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இரானின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பு முழு ஏமன் மீதும் கட்டுப்பாட்டைப் பெற விரும்புவதாக கருதப்படுகிறது. அப்படி நடந்தால் தனது தெற்கு எல்லையில் இரானுக்கு நெருக்கமான ஒரு ஆட்சி உருவாகும் என்ற அச்சம் சௌதி அரேபியாவுக்கு உள்ளது.
இந்த சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல்களை கண்டித்துள்ளன. சௌதி தலைமையிலான கூட்டணி இந்த தாக்குதல்களை "போர்க்குற்றம்" என விவரித்து பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், சௌதியில் உள்ள நிலைமைகள் குறித்து பிபிசி தமிழ் தொடர்புகொண்ட மேலும் சில தமிழர்கள் பேச மறுத்தனர். தாங்கள் கருத்து தெரிவித்தால் அரசாங்க நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் இருப்பதாக அவர்கள் கூறினர். அவர்களில் ஒருவர், தாக்குதல் தொடர்பான வீடியோவை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த தனது நண்பர் அதிகாரிகளின் கவனத்துக்கு ஆளானதாகக் கூறினார். எனினும், அந்தக் கூற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்த பிபிசி தமிழால் முடியவில்லை.
தொடர்ச்சியான தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும், சௌதியில் வாழும் தமிழர்கள் பலர் கூறுவது, பாதுகாப்பு குறித்த கவலை இருந்தாலும் அன்றாட வாழ்க்கை முடங்கவில்லை என்பதே ஆகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































