முருகன் வழிபாட்டு முறை தமிழ்நாடு, வட இந்தியா இடையே வேறுபடுவது ஏன்? நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில், 'வட இந்தியாவில் பிறந்தவர்' என்று முருகக் கடவுள் குறித்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் நாகவம்சி வெளியிட்ட எக்ஸ் பதிவு, தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
"வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
நாக வம்சியின் பதிவுக்கு சைவ சிந்தாந்த அறிஞர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், ஒரு தெலுங்கு ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த சர்ச்சை குறித்து நெறியாளர் நாகவம்சியிடம் கேள்வி எழுப்பியபோது, "நான் இந்த விஷயத்தை புறந்தள்ளிவிடவில்லை. நான் உடனடியாக அவசரகதியில் இதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை. என் விளக்கம் சரியான நேரத்தில் வரும்," என்று மட்டும் அவர் பதிலளித்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து அவரது விளக்கத்தைப் பெற பிபிசி தமிழ் முயன்றும் பதில் கிடைக்கவில்லை.
உண்மையில், தமிழ்க் கடவுளாகப் பார்க்கப்படும் முருகன், வட இந்தியாவில் எவ்வாறு வழிபடப்படுகிறார்?
சர்ச்சைக்கு வித்திட்ட புதிய பட அறிவிப்பு
இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 'காட் ஆஃப் வார்' என்ற தலைப்பில் படத்தின் டீசர் காட்சிகள் வெளிவந்தன.
படம் தொடர்பான அறிவிப்பைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் நாகவம்சி, "வடக்கில் பிறந்து, மையப் பகுதியில் உருப்பெற்று, தெற்கில் போற்றப்பட்டு... இப்போது, பிரபஞ்சத்திற்கே சொந்தமாக இருக்கும் ஒரு காவியம்" எனப் பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நாகவம்சியின் இந்தப் பதிவு தமிழ்நாட்டில் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது.

பட மூலாதாரம், X/Naga Vamsi
'தவறாக கட்டமைக்கக் கூடாது' - சீமான்
"கலைப் படைப்பு என்ற பெயரில் அடிப்படைப் புரிதலின்றி இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மை எனக் கட்டமைக்க முயல்வது கண்டனத்துக்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.
ஜூலை 4ஆம் தேதி சீமான் வெளியிட்ட அறிக்கையில், "ஐவகைத் திணைகளில் ஒன்றான குறிஞ்சித் திணையின் தலைவன் முருகனை முப்பாட்டன் என அழைத்து வணங்கிப் போற்றுவது தமிழரின் மரபுசார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறை" எனக் கூறியுள்ளார்.
"தமிழ்தான் முருகன், முருகன்தான் தமிழ். இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த ஒன்று. அதைத் தவறாகக் கட்டமைத்து இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை" எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் பலவும் சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு எனப் பல செந்தமிழ்ப் பெயர்களால் முருகனைப் போற்றியதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களும் முருகனைப் போற்றுவதாகக் கூறியுள்ள சீமான், "சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கு குறித்து குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும்" குறிப்பிட்டார்.
நாம் தமிழர் கட்சியின் எதிர்ப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் நாகவம்சியோ படக்குழுவோ இதுவரை அதிகாரபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. நாகவம்சி தரப்பு விளக்கத்தை அறிய பிபிசி தமிழ் பலமுறை முயன்றும் பதில் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
என்ன வேறுபாடு?
"தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலத் தலைவராக முருகன் பார்க்கப்படுகிறார். ஓர் இனத்தின் தலைவராக மக்கள் வணங்குகின்றனர்" என்கிறார், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் சொ.சாந்தலிங்கம்.
வட இந்தியாவில் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த இரண்டாவது மகன் முருகன் என்று புராணம் கூறுவதாக பிபிசி தமிழிடம் விவரித்த சொ.சாந்தலிங்கம், "வட இந்தியாவில் முருகனுக்கு மனைவி இல்லை. இங்கு முருகனுக்கு வள்ளி, தெய்வானை என இரண்டு மனைவிகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது" என்கிறார்.
முருகன் வேடர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த வள்ளியை திருமணம் செய்துகொண்டார் எனவும் தமிழ்நாட்டில் பேசப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அறுபடை வீடுகள், முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் உள்ளன நிலையில், அறுபடை வீடு வழிபாட்டு முறை வட இந்தியாவில் இல்லை என்கிறார் சொ.சாந்தலிங்கம்.
'முருகனுக்குப் பொருந்தாது'
"முருகன் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். அவர் பிறந்தார் என்று கூறுவதே தவறானது. சரவணப் பொய்கையில் அவர் உதித்தார் எனக் கந்த புராணம் கூறுகிறது" என்கிறார், சைவ சித்தாந்த அறிஞர் சத்தியவேல் முருகனார்.
"உதித்தல் என்றால் முன்பும் பின்பும் இருக்கும். சூரியன் உதிப்பதுடன் இதனைத் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். ஒருவர் பிறந்தார் எனக் கூறினால் தோற்றம் மறைவு என இரண்டையும் எழுத வேண்டும். முருகனுக்கு இது பொருந்தாது" என அவர் குறிப்பிட்டார்.
"முருகனுக்கு குறிஞ்சி நிலத் தலைவன் எனப் பெயர் வைத்தனர். தமிழ்க் கடவுள் என்றால் அவர் தமிழ்நாட்டுக்கும் மட்டும் உரியவராக இல்லை. அவர் உலகம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார்" என்கிறார் சத்தியவேல் முருகனார்.
"வடஇந்தியாவில் முருகன் என்ற சொல்லே கிடையாது" எனக் கூறும் அவர், "அவர்கள் கார்த்திகேயன் என்ற பெயரில் முருகனை வணங்குகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதே கருத்தை முன்வைக்கும் முனைவர் சரவணன், "கடவுள் பிறத்தல் என்ற ஒன்று இல்லை. கடவுள் என்பவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர். ஒவ்வோர் உயிருக்குள்ளும் முருகன் இருக்கிறார் என்பது தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கையாக உள்ளது" என்கிறார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்த துறைத் தலைவராக இருக்கும் நல்லூர் சா.சரவணன், 'முருகன்.. முன்னே வரும் முன்னவன்' என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.

பட மூலாதாரம், FB/Saravanan
'தமிழில் சேய்... சமஸ்கிருதத்தில் குமாரன்'
கடவுள் வழிபாட்டை கொடிநிலை, கந்தழி, வள்ளி என மூன்று வகையாக தொல்காப்பியம் (புறத்திணையியல்) பிரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "கந்தழி என்பதைப் பிரித்தால் கந்து எனவும் அழிதல் எனவும் பொருள்படும்" என்றார்.
"தொல்காப்பியத்தில் வரும் உன்ன மரத்தை (சங்க காலத்தில் இருந்த மரங்களில் ஒன்று) காவல் மரம் எனக் கூறுவார்கள். இந்த மரத்தை எதிரிகள் வெட்டுவார்கள். அழிவை அடையாளப்படுத்தும் வகையில் நிமித்தம் (குறி) காட்டிய மரம் என்பதால் அதை மக்கள் வழிபட்டார்கள்" என்று அவர் விளக்கினார்.
மேலும், "காவல் மரத்தின் அடிமரத்தைக் கும்பிடுவதை கந்திழி வழிபாடு என்றனர். அந்தவகையில் கந்தன் என முருகன் அழைக்கப்பட்டார்" என முனைவர் நல்லூர் சா.சரவணன் கூறினார்.
தமிழ் மரபில் சேய் எனப்பட்ட முருகன், சமஸ்கிருதத்தில் குமாரன் என அழைக்கப்பட்டதாகவும் சமஸ்கிருதத்தில் ஸ்கந்தன் என அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வட இந்தியாவில் முருகனுக்கு உள்ள பெருமைகள் குறித்துப் பேசும் நல்லூர் சா.சரவணன், "ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு வேதகால நாகரிகம் விவரிக்கப்படுகிறது. ரிக் வேதத்தில் குமாரன் என்ற சொல் 17 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
'ஸ்கந்த' என்ற வார்த்தை பிற்காலப் பயன்பாடாகவும் சேனைத் தலைவராகவும் முருகன் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 1967ஆம் ஆண்டு வெளியிட்ட பி.கே.அகர்வால் எழுதிய ஸ்கந்தா-கார்த்திகேயா (SKANDA - KARTTIKEYA) புத்தகத்தில் விவரிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மௌரியர்களும் குப்தர்களும் குமரனை, ஸ்கந்தனாக பரவச் செய்ததாகவும் முனைவர் சரவணன் எழுதிய 'முருகன்.. முன்னே வரும் முன்னவன்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் புராதன (பாட்னா) அரச வம்சம், குமாரன் என்ற சொல்லை அரசப் பெயராக அமைத்துக் கொண்டதாகவும் மயில், குன்று, வேல் போன்ற அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, "புராண ரீதியாக முருகனின் தோற்ற வரலாறுகள் கூறப்படவில்லை" எனக் கூறும் முனைவர் சரவணன், "தமிழ்நாட்டில் முருக வணக்கம் பழமையானது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் கூறப்படும் முருகனின் உருவத்துக்கும் பிற்கால சங்க நூல்களான பரிபாடல், முருகாற்றுப்படை போன்றவை கூறும் உருவத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன" என்றார்.
"வேலன்மார் என்னும் குலம் கேரளத்தில் உள்ளது. முருகனுக்கு சடங்கு நிகழ்த்தும் பூசாரியாக வேலன் உள்ளதாக சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"முருகனுக்கு வேலனால் ஆடு பலியிடப்படும். தரையில் களம் அமைத்து பலியிடப்பட்ட ஆட்டின் குருதியைத் தெளிப்பார்கள். இந்த ஆட்டத்தின் நீட்சி கேரளாவில் உள்ள வடமலபாரில் வேலன் பூஜைகளில் காணப்படுவதாகவும்" எனவும் முனைவர் சரவணன் விவரித்தார்.

பட மூலாதாரம், FB/Vishambhar Nath Mishra
வட இந்தியாவில் முருக வழிபாடு எப்படி இருக்கும்?
"வட இந்தியாவில் முருகன் எவ்வாறு வழிடப்படுகிறார்?" என்று பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் (IIT BHU) எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பேராசிரியரும் சங்கத் மோச்சன் கோவிலின் மத போதகருமான விஷாம்பர் நாத் மிஸ்ராவிடம் பிபிசி தமிழ் பேசியது.
'வியாச முனிவர் இயற்றிய 18 புராணங்களில் ஸ்கந்த புராணம் முக்கியமானது. கார்த்திகேயனின் பெயர்களில் ஒன்றாக ஸ்கந்தன் உள்ளது. தென்னிந்தியாவில் அவரை முருகன் எனக் கூறுகின்றனர்" என்கிறார். தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கார்த்திகேயன் வழிபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே உடலில் ஆறு தலைகளைக் கொண்டவர் ஸ்கந்தன் எனவும் சண்முகம் எனவும் வட இந்தியாவில் அழைக்கப்பட்டதாக பேராசிரியர் விஷாம்பர் நாத் மிஸ்ரா குறிப்பிட்டார்.
"முருகன் கங்கை ஆற்றில் சரவணப் பொய்கை (நாணல் புற்கள் நிறைந்துள்ள பகுதி) பிறந்தார் எனப் புராணம் கூறுகிறது. பிறகு தெற்கே உள்ள ஸ்ரீசைல மலைக்குச் சென்று தேவர்களைப் பாதுகாத்தார் எனவும் இதில் தேவர்களின் தலைவனான தேவேந்திரனின் வம்சாவளி திராவிடத்தைச் சேர்ந்தது எனவும் பேசப்படுகிறது" என்றார் விஷாம்பர் நாத் மிஸ்ரா.
முருகனை முன்வைத்து நடந்த சர்ச்சைகள்
தமிழ்நாட்டில் முருகனை முப்பாட்டன் எனவும் குறிஞ்சித் தலைவன் எனவும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பேசி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்கட்சியின் சார்பில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு வேல் அரசியலை பா.ஜ.க கையில் எடுத்தது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன், வேல் யாத்திரையை நடத்தினார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை கோவில்களை அடிப்படையாக வைத்து வேல் யாத்திரையை அவர் மேற்கொண்டார். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்தியது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































