You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாம்பியன் அணிகளை அதிரடியால் மிரட்டிய ராஜஸ்தானை சுருட்டி வீசிய இரு அறிமுகங்கள் - யார் அவர்கள்?
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டிக்கு முன்பாக பெரிதளவு விவாதிக்கப்பட்ட விஷயம் - 'சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி என பல முன்னணி அணிகளின் பந்துவீச்சைப் பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ், தடுமாறும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை என்னவெல்லாம் செய்யும்' என்பதுதான்.
இந்த சீசனில் மிகவும் பலவீனமான பந்துவீச்சைக் கொண்ட அணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு. இதற்கு முன் விளையாடிய 4 போட்டிகளில் இரண்டில் அவர்கள் 200+ ரன்கள் எடுத்திருந்தும் அதை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றார்கள்.
மறுபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ, விளையாடிய 4 போட்டிகளிலுமே 10+ ரன்ரேட்டில் பேட்டிங் செய்திருந்தது.
இப்படி இரு துருவங்களாக இருந்த இரு அணிகளுக்கு இடையிலான மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 216 ரன்கள் எடுக்க, அதை ராயல்ஸும், அவர்களின் இளம் டாப் ஆர்டரும் எப்படி சேஸ் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
ஆனால், அப்படி எதிர்பார்த்திருந்தவர்களுக்கு 2 அறிமுக வீரர்கள் பேரதிர்ச்சி கொடுத்தார்கள். முதல் முறையாக ஐபிஎல் அரங்கில் ஆடும் இரு சன்ரைசர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ராயல்ஸ் பேட்டர்களை நிலைகுலையச் செய்தார்கள். 216 ரன்களை டிஃபண்ட் செய்யுமா என்று கேட்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணிக்கு 57 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன் - அந்த இரு அறிமுக வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் மிகச் சிறந்த பந்துவீச்சின் மூலம் சன்ரைசர்ஸ் பந்துவீச்சையுமே எழுச்சி பெறச் செய்திருக்கிறார்கள்.
19 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை
217 ரன்களை சேஸ் செய்யும் நோக்கத்தோடு ராஜஸ்தான் களமிறங்க, முதல் ஓவரை வீசவந்தார் பிரஃபுல் ஹிங்கே. முதல் பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் எடுக்க, ஸ்டிரைக்குக்கு வந்தார் வைபவ் சூர்யவன்ஷி. ஜஸ்ப்ரித் பும்ரா, ஜாஷ் ஹேசில்வுட் போன்ற பௌலர்களின் முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசியவர். தன் இரண்டாவது பந்தை அப்படியொரு பேட்டருக்கு வீசவேண்டும் என்ற பெரும் நெருக்கடிக்கு மத்தியில் தான் பந்துவீசினார் பிரஃபுல்.
எதிர்பார்த்ததைப் போலவே தான் சந்தித்த முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடிக்க முயற்சியெடுத்தார் சூர்யவன்ஷி. ஆனால், பந்தை நன்கு பலமாக ஆடுகளத்தில் வீசக்கூடிய பிரஃபுல் கூடுதல் பவுன்சை ஏற்படுத்தினார். அது சூர்ய்வன்ஷியை ஏமாற்ற, பந்து டாப் எட்ஜாகி கீப்பர் வசம் கேட்சானது.
சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற பெரிய பெரிய அணிகளுக்கு எதிராகவெல்லாம் 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டிக்கொண்டிருந்த சூர்யவன்ஷியை ஒரே பந்தில் வெளியேற்றினார் பிரஃபுல் ஹிங்கே. அதன்மூலம், தன் ஐபிஎல் விக்கெட் கணக்கையும் தொடங்கினார்.
அந்த பெரிய விக்கெட்டோடு பிரஃபுல் திருப்தியடைந்துவிடவில்லை. அதே ஓவரில் இன்னும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். மூன்றாவது பந்தை ஜுரெலுக்கு ஃபுல் லென்த்தில் வீசினார். அடுத்த பந்தில் லென்த்தை மாற்றி, 'பேக் ஆஃப் லென்த்' வீசினார். இம்முறை இன்சைட் எட்ஜ். ஜுரெல் கிளீன் போல்ட்.
அடுத்து களம் கண்ட லுவான் ட்ரே பிரிடோரியஸுக்கு அதே திட்டம் வேறு மாதிரி செயல்படுத்தப்பட்டது. முதலில் 'பேக் ஆஃப் லென்த்', அதன்பிறகு ஃபுல் லென்த். அதுவரை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைத்துக்கொண்டிருந்தவர், இம்முறை பேட்டரின் கால்களைக் குறிவைத்தார். பெரிய ஷாட் அடிக்க முயற்சித்த பிரிடோரியஸ் டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் ஆனார். முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள்.
19 வருட ஐபிஎல் வரலாற்றில், நேற்று (ஏப்ரல் 13) வரை எந்தவொரு பௌலருமே ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதில்லை. பும்ரா, மலிங்கா, புவனேஷ்வர் குமார், பிரெட் லீ போன்ற மிகப் பெரிய பௌலர்கள் கூட அதைச் செய்ததில்லை. ஆனால், தன் அறிமுக போட்டியில் விளையாடிய பிரஃபுல் ஹிங்கே அந்த சாதனையை அரங்கேற்றினார்.
அடுத்த ஓவரைப் பந்துவீச வந்த பிரஃபுல் டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவதுபோல் வீசினார். தொடர்ச்சியாக பேக் ஆஃப் லென்த்தில் பிட்ச் செய்த அவர், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்து செல்லும் வகையில் வீசிக்கொண்டிருந்தார். முதல் 5 பந்துகளுமே அதுதான் நடந்தது. முதல் 4 பந்துகளிலும் ரன் அடிக்க முடியாத பராக், ஐந்தாவது பந்தில் மட்டும் பவுண்டரி அடித்தார். ஆனால், ஆறாவது பந்து வழக்கம்போல் லென்த்தை மாற்றி ஏமாற்றினார். பவுண்டரி அடித்த வேகத்தில் இருந்த பராக், ஃபுல் லென்த்தில் பிட்சான அந்தப் பந்தில் ஏமாந்து 'வைட் ஸ்லிப்' பொசிஷனில் நின்றிருந்த அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் அரங்கில் வீசிய முதல் 12 பந்துகளில் 4 விக்கெட்டுகள். அப்போதே தன் அணியின் வெற்றியையும், தனக்கு ஆட்ட நாயகன் விருதையும் அவர் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டிருந்தார்.
யார் இந்த பிரஃபுல் ஹிங்கே?
24 வயதான பிரஃபுல் ஹிங்கே நாக்பூரில் பிறந்தவர். 13 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர், தன்னை ஒரு கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்துவிடுமாறு தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். அப்படித்தான் அவருடைய கிரிக்கெட் பயணம் தொடங்கியது.
கடந்த 2024-ஆம் ஆண்டு விதர்பா அணிக்காக அவர் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகம் ஆனார். இந்த ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக அவர் ஒரேயொரு அதிகாரப்பூர்வ டி20 போட்டியில் (சையது முஸ்தாக் அலி தொடர்) மட்டுமே விளையாடியிருந்தார்.
சொல்லப்போனால் முந்தைய போட்டியே ஹிங்கேவுக்கு அறிமுக போட்டியாக இருந்திருக்க வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான அந்த போட்டியின் டாஸின்போது ஹிங்கே விளையாடுவார் என்று இஷான் கிஷன் கூறியிருந்தார். சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் செய்ததால் அவர் சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். பந்துவீசும்போது இம்பேக்ட் வீரராக களமிறக்கப்படுவார் என்று கருதப்பட்டது. ஆனால், அந்த அணி பந்துவீசச் சென்றபோது உனத்கட்டை இம்பேக்ட் வீரராகக் களமிறக்கினார்கள்.
பிரஃபுல் ஹிங்கே அந்தப் போட்டியின்போது தன் வாய்ப்பு பறிபோனதை நினைத்து வருந்தியிருக்கலாம். ஆனால், வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
ஆர்சிபி அணியின் ஜாஷ் ஹேசில்வுட், ஜேக்கப் டஃபி ஆகியோர் 'ஹிட் தி டெக்' (Hit the deck) பௌலர்களாகக் கருதப்படுப்பவர்கள். அதாவது பந்தை நன்கு உயரமாக ரிலீஸ் செய்து நன்கு பலமாக ஆடுகளத்தில் பிட்ச் செய்வார்கள். அதன்மூலம் எதிர்பார்த்ததை விட கூடுதலான பவுன்ஸ் கிடைக்கும். இது பேட்டர்களை பெருமளவு ஏமாற்றும்.
அப்படியொரு பௌலர் தான் பிரஃபுல் ஹிங்கேவும். வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை அவர் வீழ்த்தியது அப்படியொரு பந்தில் தான். "பவுன்சர் வீசி சூர்யவன்ஷி விக்கெட்டை வீழ்த்துவேன் என்று போட்டிக்கு முன்பாக சிலரிடம் சொன்னேன். அவரை நான் முதல் பந்திலேயே வீழ்த்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதுதான் என் திட்டமாக இருந்தது" என்று போட்டி முடிந்த பிறகு கூறினார் பிரஃபுல்.
அதுமட்டுமல்லாமல், புதிய பந்தில் நன்றாக இன்ஸ்விங் செய்யக்கூடியவர்.
இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை அடிப்படை விலையான 30 லட்ச ரூபாய்க்கு வாங்கியது.
வேரியேஷன்கள் மூலம் மிரட்டிய சாகிப் ஹுசைன்
மற்றொரு அறிமுக வீரரான சாகிப் ஹுசைனும் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய அங்கம் வகித்தார். தான் வீசிய நான்காவது பந்திலேயே யஷஷ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார் சாகிப். ஷார்ட் லென்த்தில் பிட்ச் செய்து அவர் வீசிய பவுன்சர் ஜெய்ஸ்வாலின் அந்த பெரிய விக்கெட்டைப் பறித்தது. தன் முதல் ஸ்பெல்லில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்த அவர், இரண்டாவது ஸ்பெல்லில் அதைவிடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தன் முதல் போட்டியாக இருந்தாலும் தேர்ந்த பௌலரைப் போல் வேரியேஷன்கள் காட்டினார் சாகிப். யார்க்கர்கள், ஸ்லோயர் பால்கள், ஆஃப் கட்டர்கள் என தொடர்ச்சியாக மாற்றி மாற்றி வீசினார். அதனால் பேட்டர்களால் அவர் பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை.
அவர் வீசிய அந்த இன்னிங்ஸின் 15வது ஓவர், ஒரு சிறந்த ஓவராக அமைந்தது. ஜடேஜாவுக்கு வீசிய முதல் பந்து அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் வீசப்பட்ட யார்க்கர்; 2வது பந்து ஃபெரீராவுக்கு ஸ்லோயர் பால்; 3வது பந்து 'சீம் அப்' யார்க்கர்; 4வது பந்து ஃபுல் லென்த்தில் வீசப்பட்ட பந்து; 5வது பந்து ஆஃப் கட்டர்; கடைசிப் பந்து ஸ்லோயர் ஆஃப் கட்டர் - அது ஃபெரீராவின் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது.
இதேபோல் அடுத்த ஓவரிலும் அவருடைய ஸ்லோயர் பால்கள் பேட்டர்களை ஏமாற்றின. அதை சரியாக கணிக்க முடியாமல் ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னாய் இருவரும் ஆட்டமிழந்தார்கள். இறுதியில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார் சாகிப் ஹுசைன். அறிமுக ஐபிஎல் போட்டியில் ஒரு பௌலரின் நான்காவது சிறப்பாக பந்துவீச்சு இது.
போட்டியின்போது வர்ணனையில் இருந்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸி, "சாகிப் ஹசனின் ஆஃப் கட்டர்கள், முஸ்தாஃபிசுர் ரஹ்மானின் கட்டர்களை வலது கையால் வீசுவதைப் போலவே இருக்கின்றன" என்று கூறினார். உலக அளவில் ஆஃப் கட்டர்கள் வீசும் மிகச் சிறந்த பௌலர்களுள் ஒருவரான முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பந்துவீச்சுடன் அறிமுக பௌலர் சாகிப் ஹுசைனின் பந்துவீச்சை ஒப்பிட்டார் டுப்ளெஸி. அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது சாகிப்பின் பந்துவீச்சு.
யார் இந்த சாகிப் ஹுசைன்?
பிஹாரைச் சேர்ந்த சாகிப் ஹுசைனுக்கு தற்போது 21 வயது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவர், ராணுவத்தில் சேரும் ஆர்வத்தோடு அருகில் இருக்கும் மைதானத்தில் பயிற்சி எடுத்துவந்தார். பின்னர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சாகிப், சிறு தொகைக்காக சுமார் 150 கிலோமீட்டர் வரை பயணித்து டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடிவந்தார். அவருக்கு காலணி வாங்கக் காசில்லாத நிலையில், அவருடைய அம்மா தன் நகையை விற்று அதற்குப் பணம் கொடுத்திருப்பதாக தகவல்கள் உள்ளன..
2022-ஆம் ஆண்டு பிஹார் அணிக்காக சையது முஸ்தாக் அலி தொடரில் அறிமுகமான சாகிப், 2024 சீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கேகேஆர் அணியில் அவருக்கு வாய்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை. 2026 சீசனுக்கான ஏலத்தில் அவரை அடிப்படை விலையான 30 லட்ச ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு