You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க கடற்படை முற்றுகை என்றால் என்ன? ஹோர்மூஸ் நீரிணையில் அது எவ்வாறு செயல்படும்?
- எழுதியவர், ஜார்ஜ் ரைட் மற்றும் ரேச்சல் க்ளூன்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
திங்கட்கிழமை முதல் இரானிய துறைமுகங்களுக்குள் உள்ளே நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்தையும் தடுக்கும் வகையில் முற்றுகையை அமல்படுத்தப் போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இரானால் மூடப்பட்ட ஹோர்மூஸ் நீரிணை வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பு பேச்சுவார்த்தையாளர்களும் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"அணுசக்தி கனவுகளைக் கைவிட இரான் முன்வராததால்" பாகிஸ்தானில் இரானுடன் நடந்த நேரடிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், இரான் அந்த நீரிணையை கட்டுப்படுத்துவது உட்பட இன்னும் பல பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
டிரம்ப் என்ன கூறியுள்ளார்?
ஞாயிற்றுக்கிழமையன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயலும் அல்லது அங்கிருந்து வெளியேற முயலும் "அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிட உள்ளது" என்று தெரிவித்தார்.
"இரானுக்குக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் தேடிக் கண்டுபிடித்துத் தடுக்க எங்களது கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். சட்டவிரோதமாக கட்டணம் செலுத்தும் எவருக்கும் திறந்த கடலில் பாதுகாப்பான பயணம் அமையாது" என்று டிரம்ப் கூறினார்.
நீரிணையில் இரான் அமைத்துள்ளதாகக் கூறப்படும் கண்ணிவெடிகளை அமெரிக்கா அழிக்கத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், "எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் எந்தவொரு இரானியரும் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்!" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வது குறித்த ஒப்பந்தம் "ஏதாவது ஒரு கட்டத்தில்" எட்டப்படும், ஆனால் ''கண்ணிவெடி எங்காவது இருக்கலாம் என வெறுமனே கூறுவதன் மூலம் இரான் அதை நடக்க விடாமல் தடுத்துள்ளது" என்று டிரம்ப் கூறினார்.
மற்றொரு பதிவில், "ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதாக இரான் உறுதியளித்தது. ஆனால் அவர்கள் தெரிந்தே அதைச் செய்யத் தவறிவிட்டனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்,"அவர்கள் உறுதியளித்தபடி, இந்த சர்வதேச நீர்வழிப் பாதையை விரைவாகத் திறக்கும் செயல்முறையை அவர்கள் தொடங்குவது அவர்களுக்கு நல்லது" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு முற்றுகை எவ்வாறு செயல்படும்?
"எதிரி நாட்டுக்கு சொந்தமான, ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட துறைமுகங்கள், விமான ஓடுதளங்கள் அல்லது கடலோரப் பகுதிகளுக்குள் எதிரி நாடுகள் மற்றும் நடுநிலை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைவதைத் தடுப்பதற்கான ஒரு போர் நடவடிக்கை" என 2022-ஆம் ஆண்டின் கடற்படை செயல்பாட்டுச் சட்டத்திற்கான அமெரிக்க கடற்படைத் தளபதியின் கையேடு, முற்றுகையை வரையறுக்கிறது.
அமெரிக்க கடற்படை இந்த நீரிணையை முற்றுகையிடும் பணியை "உடனடியாக" தொடங்கும் என்று டிரம்ப் முதலில் கூறினார்.
பின்னர் அமெரிக்க மத்திய கட்டளை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திங்கட்கிழமை ஈடிடி நேரப்படி 10:00 மணிக்கு (இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 7.30 மணி) அதன் படைகள் முற்றுகையை அமல்படுத்தத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
"அரபு வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள அனைத்து இரானிய துறைமுகங்கள் உட்பட, இரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் எதிராக இந்த முற்றுகை பாரபட்சமின்றி அமல்படுத்தப்படும்" என்று அது கூறியது.
இரான் அல்லாத துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களின் சுதந்திரத்தை அமெரிக்கப் படைகள் தடுக்காது என்றும், முற்றுகை தொடங்குவதற்கு முன்பு முறையான அறிவிப்பின் மூலம் வணிகக் கப்பல் மாலுமிகளுக்கு கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.
நீரிணையை முற்றுகையிடுவதில் மற்ற நாடுகளும் ஈடுபடும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அவை எந்தெந்த நாடுகள் என்று அவர் குறிப்பிடவில்லை.
இந்த முற்றுகையில் பிரிட்டன் ஈடுபடாது என்று பிபிசி அறிகிறது.
நீரிணையை "சுத்தம் செய்ய" [கண்ணி வெடிகளை அகற்ற] நேட்டோ உதவ முன்வந்துள்ளதாக டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
மேலும் விரைவாகவே நீரிணை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூறினார்.
அமெரிக்கா கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை கொண்டு வரும் என்றும், நேட்டோவின் உறுப்பினரான பிரிட்டனும் அவ்வாறே செய்யும் என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும், "பிரிட்டன் மற்றும் இன்னும் சில நாடுகள் கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை அனுப்புவதாக நான் அறிகிறேன்" என்று அவர் கூறினார்.
பிரிட்டிஷ் ராணுவத்தின் கண்ணிவெடி தேடும் அமைப்புகள் ஏற்கனவே அந்தப் பிராந்தியத்தில் இருப்பதாகப் பிரதமர் கியர் ஸ்டார்மர் முன்னரே கூறியிருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று சட்ட நிபுணர்கள் பிபிசியிடம் கூறுகையில், இந்த முற்றுகை கடல்சார் சட்டத்தை மீறக்கூடும் என்று தெரிவித்தனர்.
மேலும், ராணுவ ரீதியாக அமல்படுத்தப்படும் இந்த முற்றுகை, தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுமா என்றும் அவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீரிணையை முற்றுகையிடுவதற்கான காரணம் என்ன?
இந்த நீரிணையின் நிலவியல் அமைப்பு, இந்தப் போர் முழுவதும் அதனை ஒரு சாதகமான கருவியாகப் பயன்படுத்த இரானுக்கு உதவியுள்ளது.
அந்த குறுகிய நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தேர்ந்தெடுத்துத் தடுப்பதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை அது அதிகரிக்கச் செய்துள்ளது.
சில கப்பல்கள் அந்தப் பாதையைக் கடந்து செல்ல இரான் பெரும் தொகையைக் கட்டணமாக வசூலித்து வருகிறது.
இந்த நீரிணையை முற்றுகையிடுவதன் மூலம், இரானிய அரசாங்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க வருமான ஆதாரத்தை டிரம்பால் துண்டிக்க முடியும்.
இருப்பினும் இது எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை இன்னும் அதிகமாக உயர்த்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
"இரான் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும் எண்ணெயை விற்று பணம் சம்பாதிப்பதையும், பிடிக்காதவர்களுக்கு விற்காமல் இருப்பதையும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை" என்று டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக இந்த முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையில் "அனைத்து கப்பல்களையும் அனுமதிப்பது அல்லது எதையுமே அனுமதிக்காமல் இருப்பது" என்பதே தங்களின் நோக்கம் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளின்படி ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரானுக்கு அழுத்தம் கொடுப்பதையே அமெரிக்க அதிபரின் இந்த கருத்து நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிபிஎஸ் தொலைக்காட்சியின் 'பேஸ் தி நேஷன்' நிகழ்ச்சியில் பேசிய ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் டர்னர், ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் சூழ்நிலைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்த இந்த முற்றுகை ஒரு வழியாகும் என்று கூறினார்.
"யார் உள்ளே செல்லலாம் என்பதை அவர்கள் தீர்மானிக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறுவதன் மூலம், அதிபர் நிச்சயமாக எங்களது அனைத்து கூட்டாளிகளையும், மற்ற அனைவரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கிறார்" என்று கூறிய அவர் "இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.
ஆனால் செனட் உளவுத்துறை குழுவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான செனட்டர் மார்க் வார்னர், ஞாயிற்றுக்கிழமை சிஎன்என் தொலைக்காட்சியிடம் கூறுகையில், "நீரிணையை முற்றுகையிடுவது எப்படி இரானியர்களை அதைத் திறக்கத் தூண்டும் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார்.
அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
நீரிணையை முற்றுகையிடுவோம் என்று டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல், அந்த நீர்வழிப்பாதையில் இன்னும் பயணம் செய்து கொண்டிருக்கும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களை மட்டுமே பாதிக்கும் என்று கப்பல் போக்குவரத்து நிபுணர் லார்ஸ் ஜென்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.
"அமெரிக்கர்கள் இதை உண்மையிலேயே செய்தால், அது மிகச் சிறிய அளவிலான கப்பல் போக்குவரத்தையே நிறுத்தும். பெரிய அளவில் பார்த்தால், இது உண்மையில் எதையும் மாற்றிவிடப் போவதில்லை," என்று அவர் கூறுகிறார்.
வெஸ்புசி மேரிடைம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன், ''இரானுக்குக் கட்டணம் செலுத்தும் எந்தவொரு கப்பலும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதைத் தடுப்போம் என்ற டிரம்ப்பின் அச்சுறுத்தலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் அவ்வாறு கட்டணம் செலுத்தும் எந்தவொரு நிறுவனமும் ஏற்கனவே அந்த ஆட்சிக்கு பணம் செலுத்தியதற்காகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்'' என்றார்.
"முதலாவதாக, மிகக் குறைவான கப்பல்களே அதனைக் கடந்து செல்கின்றன. அதில் பணம் செலுத்துபவர்கள் அதைவிடக் குறைவு, மேலும் பணம் செலுத்துபவர்கள் ஏற்கனவே அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்டிருப்பார்கள்" என்று அவர் விளக்குகிறார்.
பெரும்பாலான கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்படுகிறதா என்றும் அது நீடிக்குமா என்றும் தொடர்ந்து காத்திருந்து கவனிக்கும் என்றும், அப்படி நடந்தால் கப்பல் போக்குவரத்து மெதுவாக மீண்டும் தொடங்கலாம் என்றும் ஜென்சன் கூறுகிறார்.
ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய நிலைமை என்ன?
ஏப்ரல் 7 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போரில் எட்டப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், அந்த குறுகிய நீர்வழிப்பாதை வழியாக "பாதுகாப்பான பயணம்" உறுதி செய்யப்படும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அனுமதியின்றி கப்பல்கள் நீரிணையைக் கடக்க முயன்றால் அவை "குறிவைக்கப்பட்டு அழிக்கப்படும்" என்ற செய்திகள் அந்தப் பகுதியில் உள்ள கப்பல்களுக்குக் கிடைத்தன.
மேலும் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் ஒரு சில கப்பல்கள் மட்டுமே அங்கு பயணத்தை மேற்கொண்டன.
மெரைன் டிராஃபிக் வழங்கிய கப்பல் கண்காணிப்புத் தரவுகளை பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்ததில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏப்ரல் 10 அன்று பிஎஸ்டி நேரப்படி 17:00 மணி வரை 19 கப்பல்கள் மட்டுமே அந்த நீரிணையைக் கடந்து சென்றதாகக் கண்காணிக்கப்பட்டிருந்தன .
இவற்றில் நான்கு கப்பல்கள் எண்ணெய், எரிவாயு அல்லது ரசாயனங்களை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல்களாகும். மற்றவை பல்வேறு வகையான சரக்குக் கப்பல்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதர சில கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தாமலேயே அந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளன.
பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்குவதற்கு முன்பு, நாளொன்றுக்கு சராசரியாக 138 கப்பல்கள் அந்த நீரிணையைக் கடந்து சென்றுள்ளன.
கூடுதல் தகவல்கள்: சரீன் ஹபேஷியன்.
பிரச்னைகளைப் பேசுவோம் | போதைப்பொருள் பயன்பாடு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு