You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'2 அறிமுக பந்துவீச்சாளர்கள் தலா 4 விக்கெட்' - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிரட்டல் வெற்றி
ஐபிஎல் 2026 தொடரின் 21வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.
இதற்கு முன் விளையாடியிருந்த 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் சந்திக்கும் முதல் தோல்வி இது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 91 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் அணியின் இரு அறிமுக வேகப்பந்துவீச்சாளர்கள் பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன் இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
சதத்தைத் தவறவிட்ட இஷான் கிஷன்
நல்ல தொடக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். அவர் பவுன்சராக வீசிய முதல் பந்தை பேக்வேர்ட் பாயின்ட் திசையில் நின்றிருந்த பிஷ்னாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அபிஷேக் ஷர்மா.
மற்றொரு ஓப்பனரான டிராவிஸ் ஹெட் கூட அதிரடியாக ஆடுவதற்குத் தடுமாறினார். அவர் 18 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷன் மற்றும் ஹெய்ன்ரிக் கிளாசன் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக சற்று நிதானம் காட்டிவரும் கிளாசன் இந்தப் போட்டியிலும் அதே அணுகுமுறையைக் கையில் எடுத்தார். ஆனால், மறுபக்கம் ஆடிய இஷான், பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார்.
30 பந்துகளில் அரைசதம் கடந்த இஷான், 44 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு கிளாசன் உடன் இணைந்து 88 ரன்கள் எடுத்தார் கிஷன்.
மெல்ல அதிரடியாக ஆடத் தொடங்கிய கிளாசன் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் வெளியேறினார். வேகமாக விளையாடி 4 சிக்ஸர்கள் விளாசிய நித்திஷ் குமார் ரெட்டி 28 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் சலீல் அரோரா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ராயல்ஸ் கேப்டன் பராக் ஒரு ஓவர் கூட பௌலிங் கொடுக்கவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெருமளவு விவாதிக்கப்பட்டது.
ராயல்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிமுக பௌலர்கள்
அனைத்து எதிரணி பௌலர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் இந்தப் போட்டியில் எதிர்பார்க்காத அதிர்ச்சியை சந்தித்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே தான் வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மிகப் பெரிய பௌலர்களையெல்லாம் எளிதாகக் கையாண்ட வைபவ் சூர்யவன்ஷியை ஐபிஎல் வரலாற்றில் தான் வீசிய இரண்டாவது பந்திலேயே வெளியேற்றினார் பிரஃபுல். தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி. அதே ஓவரில் ஜுரெல், ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.
அடுத்த ஓவரை வீசவந்த மற்றொரு அறிமுக வீரர் சகிப் ஹுசைன் தான் வீசிய நான்காவது பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஹிங்கே வீசிய அடுத்த ஓவரில் ராஜஸ்தான் கேப்டன் பராக் வெளியேற, 3 ஓவர்கள் முடிவில் 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அதன்பிறகு ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா - டானவன் ஃபெரீரா ஜோடி அந்த விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்தது. அந்த இணை 118 ரன்கள் எடுத்தது. ஃபெரீரா 69 ரன்கள் எடுத்தும், ஜடேஜா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் மீண்டும் பந்துவீச வந்த சகிப் ஹுசைன் ஸ்லோயர் பால்கள் உள்ளிட்ட தன் வேரியேஷன்களால் மற்றுமொரு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சகிப் ஹுசைன், பிரஃபுல் ஹிங்கே இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பிரஃபுல் ஹிங்கே ஆட்ட நாயகன் விருது வென்றார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய சாகிப் ஹுசைன், "ஒவ்வொரு வீரரும் இது போன்ற ஒரு அறிமுக ஆட்டத்தையே விரும்புவார்கள், அதனால் இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். போட்டிக்கு ஒரு நாள் முன்பே நான் விளையாடப் போவதை பந்துவீச்சு பயிற்சியாளர் என்னிடம் தெரிவித்தார். அந்தத் தருணத்திலிருந்து, நன்றாக விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் இருந்தது. எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மனதளவில் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்." என்றார்.
சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் வருண் ஆரோனின் உதவி பற்றிப் பேசிய சாகிப், "அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றி வருகிறார். எனது பந்துவீச்சில் நீங்கள் காணும் முன்னேற்றங்கள் அனைத்தும் அவரால் தான். இதற்கான முழு பெருமையும் அவரையே சாரும்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு