You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி
நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார்.
இந்த ஊக்கத்தொகை நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாகக் குறிப்பிட்டு, மத்திய நிதியமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
"நெல் உற்பத்தி அதிகரித்திருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. எனவே நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது," என ஸடாலின் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் களத்தில் எதிர் தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் வாரியிறைக்கப்படும் இந்த வேளையில், ஸ்டாலினின் இந்த பேச்சு விவசாயிகளிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கங்கள் என்ன சொல்கின்றன? பாஜக கூறுவது என்ன?
மத்திய நிதியமைச்சகத்தின் கடிதம் கூறியது என்ன?
கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாடு, கேரளா உள்படப் பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "சமீபத்திய ஆண்டுகளில் கோதுமை மற்றும் நெல்லின் அபரிமிதமான உற்பத்தி, பொது விநியோக அமைப்பு, இடையக விதிமுறைகள் மற்றும் பிற நலன்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்கான தேவைகளைவிட மிக அதிகமாக கோதுமை மற்றும் அரிசி கையிருப்பு உருவாவதற்கு வழிவகுத்துள்ளது.
இந்த உபரி ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து, அரசு கருவூலத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தொடர்ச்சியான சுமையை உருவாக்குகிறது. சில மாநில அரசுகளால் நெல் மற்றும் கோதுமைக்கு (குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேற்பட்டு) கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கப்படுவது, இந்த உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கோதுமை, நெல் ஆகியவை ஒப்பீட்டளவில் அதிக நீர், உரம் மற்றும் உள்ளீடுகள் தேவைப்படும் பயிர்களாகும். அவற்றின் விகிதாசாரமற்ற சாகுபடியானது நிலத்தடி நீர் குறைவது, மண் சீர்கேடு, பல்லுயிர்வள இழப்பு ஆகியவற்றை மோசமாக்குகிறது.
இந்த விளைவுகள் நிலைத்தன்மை, காலநிலை மீள்திறன், பொது சுகாதாரம் ஆகியவற்றில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், எண்ணெய் விதைகள் (நிலக்கடலை, எள், சூரியகாந்தி விதை போன்றவை) மற்றும் பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாதது, அதிக இறக்குமதிக்கு வித்திடுகிறது," என்று அக்கடிதம் கூறுகிறது.
எனவே, "இவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் தற்போதைய ஊக்கத்தொகை கொள்கையை மறுபரிசீலனை செய்து, கோதுமை மற்றும் நெல் மீதான ஊக்கத்தொகையை நிறுத்துவதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதோடு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேளாண்மைக்கான தேசிய முன்னுரிமைகளுக்கு இணங்க, பயறு வகைகள், சிறுதானியங்களை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் மீது கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது," என்று மத்திய நிதியமைச்சகம் தனது கடிதத்தில் கூறியுள்ளது.
கடந்த மார்ச் 13ஆம் தேதி, கேரள மாநிலங்களவை உறுப்பினரான ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவையில் ஊக்கத்தொகை கொள்கையை நிறுத்துமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர், "மத்திய அரசு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிடம், அரிசி மற்றும் கோதுமைக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டது ஏன், இதைச் செய்வதால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டதா, தற்போதுள்ள குறைந்தபட்ச ஆதார விலை மூலப்பொருட்களுக்கான செலவு, விலைவாசி உயர்வு, வாழ்வாதார செலவு ஆகியவற்றை ஈடு செய்யாத நிலையில், ஊக்கத்தொகை இல்லாமல் அதை ஈடு செய்வதற்கான வழிகள் குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டனவா" என்பன போன்ற கேள்விகளை எழுப்பினார்.
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தரப்பில் இருந்து அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய ஜனவரி 9ஆம் தேதியிட்ட மேற்கூறிய கடிதத்தில் இருந்த விஷயங்களையே தனது விளக்கமாக அளித்தார்.
'ஸ்டாலின் மிகவும் தாமதமாக மக்களிடம் கூறுகிறார்'
மத்திய அரசு நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்துமாறு அறிவுறுத்தி கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகின்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை மிகவும் தாமதமாக மக்களிடம் தெரிவிப்பதாகக் கூறுகிறார் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்.
"மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகவும் எதேச்சதிகாரமானது, வரம்பு மீறியது. அந்தந்த மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி நெல், கோதுமை, கரும்பு என பல்வேறு பயிர்களுக்கு ஊக்கத்தொகை தருகிறார்கள். அதைக் கொடுக்கக் கூடாது எனச் சொல்வதற்கு மத்திய அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இது விவசாயிகளின் நேரடியான வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடிய செயல். மத்திய அரசு தருகின்ற குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதாக இல்லை." என்று தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், "அந்தந்த மாநில அரசுகள், தங்கள் விவசாயிகள் பயனடைவதற்காகச் சிறிய அளவிலான ஊக்கத்தொகையைத் தருகிறார்கள். அப்படியிருக்கும்போது, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் மத்திய அரசு கடிதம் அனுப்பி, நெல் மற்றும் கோதுமை உற்பத்தி அதிகமாக இருக்கிறது, எனவே அதற்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார்கள். இது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது," என்றார் சுவாமிமலை விமல்நாதன்.
'திமுக திசை திருப்புகிறது'
மறுபுறம், மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட இந்தச் சுற்றறிக்கை என்பது மத்திய அரசின் செலவினக் கட்டுப்பாட்டுத் துறை செயலாளர் நெருக்கடிக் காலங்களில் வழக்கமாக அனுப்புவதுதான் எனக் கூறுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
"கூட்டுறவுக் கடன் தள்ளுபடி தொடர்பாக அதிமுக அளித்துள்ள வாக்குறுதியை திசை திருப்புவதற்காகவே இதை முன்னிலைப்படுத்தி முதலமைச்சர் பேசுகிறார்" என்று கூறும் அவர், மாநில விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்குவது போன்ற விஷயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியது என்றும் அதற்கான நிதிச்சுமையை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்போது மத்திய அரசு அதில் தலையிட வாய்ப்பில்லை எனவும் குறிப்பிடுகிறார்.
திமுக கூறியது என்ன?
ஆனால், இந்த அறிவிப்பு மத்திய பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாகக் கூறுகிறார் திமுக சுற்றுச்சூழல் பிரிவின் செயலாளரான கார்த்திகேய சிவசேனாபதி.
அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கூறுகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கமே, தென்னிந்திய மாநிலங்களின் வருமானத்தை எடுத்துக் கொண்டு, உத்தர பிரதேசம், பிகார் போன்ற அவர்களுக்குச் சாதகமான மாநிலங்களுக்கு நான்கு, ஐந்து மடங்கு அதிகமாகக் கொடுப்பதுதான்.
இப்படியாக, தென்னிந்திய மாநிலங்களுக்கு துரோகம் செய்வதையே மத்திய பாஜக அரசு முழுநேர வேலையாகச் செய்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. திமுக அரசு இதற்கு எதிராகத் தொடர்ந்து தனது போராட்டத்தை முன்னெடுக்கும்," என்று கூறினார்.
நெல் ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்வது ஏன்?
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தையே முற்றிலுமாகத் தவறான திசையில் எடுத்துச் செல்வதாகக் கூறுகிறார் பாஜக வேளாண் பிரிவின் தமிழ்நாடு மாநில தலைவரான ஜி.கே.நாகராஜ்.
பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசிய அவர், "நெல் உற்பத்தி அதிகமாகிவிட்டது, ஆனால் அவற்றுக்கான உற்பத்திக் கிடங்குகளை மாநில அரசு போதுமான அளவுக்கு அமைக்கவில்லை. இதனால் கடந்த முறை 20 லட்சம் டன் நெல் வீணானது" என்று தெரிவித்தார்.
நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுக்கக் கொடுக்க, அனைத்து விவசாயிகளும் தங்களது நிலத்தில் நெற்பயிர்களையே அதிகமாகப் பயிரிடத் தொடங்குவார்கள் எனக் கூறும் ஜி.கே.நாகராஜ், "சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவுக்கு இல்லாமல், இதைச் செய்வது, நெற்பயிர்கள் வீணாவதற்கே வித்திடும். அதைச் சரி செய்யாமல் வெற்று அரசியல் நோக்கத்திற்காக அறிவிப்புகளை மட்டும் கொடுத்துவிடுவதால் எவ்வித பயனும் இல்லை.
இதுதான் மத்திய நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் முக்கியமான நோக்கம். ஏனெனில், உற்பத்திப் பற்றாக்குறை மட்டுமே பிரச்னையல்ல, அதீத உற்பத்தியும் ஒரு பிரச்னைதான். நெல், கோதுமை போன்றவை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, பிற பயிர்களின் உற்பத்தி மிகக் குறைவாக இருந்தால் சிக்கல்தான். எனவே, இவற்றுக்கு மட்டுமின்றி, சிறுதானியங்கள், பயறுகள் எனப் பலவகை பயிர்களில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்" என்று விளக்கினார்.
"நெல்லுக்கு கொடுப்பதற்கு பதிலாக அதே ஊக்கத்தொகையை சிறுதானியங்களுக்கு மாநில அரசு கொடுத்தால், அதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம். அத்தகைய நோக்கத்துடன்தான் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது," என்றும் ஜி.கே.நாகராஜ் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு