அரிசி விலை கிடுகிடு உயர்வு: தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக சமூக ஊடக தளங்கள் பலவற்றிலும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் சில இடங்களில் மக்கள் அரிசியை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்கவும் தொடங்கி உள்ளனர். ஆனால், அரிசி தட்டுப்பாடு உண்மையிலேயே நிலவுகிறதா?
மாநிலத்தில் அரிசியே கிடைக்காத நிலை ஏற்படவில்லை என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உற்பத்தி குறைந்துள்ள குறிப்பிட்ட வகை அரிசி மட்டுமே சந்தையில் குறைவாக கிடைப்பதாகவும், மற்ற வகை அரிசி வகைகள் எப்போதும் போல் கிடைத்து வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்கள் பெரும்பாலும் சாப்பிடுவது சன்ன ரக அரிசியை தான். சன்ன ரகம் என்பது பார்ப்பதற்கு மெல்லிதாக இருக்கும், சமைத்தால் மென்மையாக இருக்கும், கையில் ஒட்டாது. தமிழ்நாட்டில் அதிகம் தேவைப்படும் இந்த அரிசி பெரும்பாலும் அண்டை மாநிலங்களிலிருந்தே வாங்கப்படுகின்றன.
"சன்ன ரக அரிசி தேவையில் பெரும்பாலும் வெளி மாநிலங்களிலிருந்து பெறப்பட்டு, பூர்த்தி செய்யப்படுகின்றன" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தினேஷ் குமார்.
அட்சயா, அம்மன் சோனா, ஆர்என்ஆர் ஆகியவை மாநிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சன்ன ரக அரிசி வகைகள் ஆகும்.
சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏன்?
சன்னரக அரிசி தமிழ்நாட்டில் பரவலாக விளைவிக்கப்படாததால் அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படுகின்றன. இந்த வகை அரிசியே தற்போது சந்தையில் குறையத் தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆங்காங்கே மட்டுமே சன்ன ரக அரிசி விளைவிக்கப்படுகிறது.
"சன்ன ரக அரிசி விளைவிக்கப்படும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளது. எனவே அங்கே நெல் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே அவர்கள் தமிழ்நாட்டு அனுப்பும் நெல் குறைந்துள்ளது" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கே.ராஜேந்திரன்.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தென் மாநிலங்களில் இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது. ஆந்திராவில் 29% குறைவாகவும், தெலங்கானாவில் 17 முதல் 18% குறைவாகவும், கர்நாடகாவில் 24% குறைவாகவும் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"எனது ஆலையில் தினசரி 20 முதல் 40 டன் நெல் வீதம் வாரத்தில் ஏழு நாளும் வெளிமாநிலங்களிலிருந்து வரும். ஆனால் இப்போது வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே நெல் வருகிறது. " என்கிறார் ராஜேந்திரன்.

பட மூலாதாரம், Getty Images
அரிசி விலையேற்றம் ஏன்?
இதனால் சன்ன ரக அரிசியின் விலை ஏறியுள்ளது.
"சன்ன ரக அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.75க்கு ஆலையிலிருந்து வியாபாரிகளுக்கு விற்கிறோம். சன்ன ரகத்தில் அட்சயா எனும் முதல் தர அரிசி ரூ.80க்கு விற்கிறோம். விலையேற்றத்தின் முன்பு, அதிகபட்சம் ரூ.60க்கு விற்று வந்தோம்" என்றும் ராஜேந்திரன் குறிப்பிடுகிறார்.
சில்லறை வர்த்தகத்தில் சன்ன ரக அரிசி அதிகபட்சமாக ரூ.90 வரை விற்கப்படுகிறது நாமக்கல்லை சேர்ந்த அரிசி வியாபாரி கந்தசாமி கூறுகையில், "கன்னட ஆர்என்ஆர் வகை ரூ.75 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. வெள்ளை பொன்னி ரூ.70க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.90க்கு விற்கப்படுகிறது. சன்ன ரக அரிசி வகைகளில் பிபிடி பொன்னி சற்று கனமாக இருக்கக் கூடியது. அது ரூ.60க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.70 முதல் ரூ.75 வரை விற்கப்படுகிறது." என்கிறார்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் விளைவிப்பது 'மோட்டா' வகை எனப்படும் கனரக அரிசியாகும்.
"கனரக அரிசியை சந்தையில் மக்கள் வாங்குவது இல்லை. நாங்கள் அந்த நெல்லை வாங்கி எங்கள் ஆலைகளில் பயன்படுத்தினாலும், அதை எங்களிடமிருந்து வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. மக்கள் அந்த அரிசியை விரும்புவதில்லை" என்கிறார் ராஜேந்திரன்.
அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் மோட்டா ரக அரிசியை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்கிறது. "பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மோட்டா ரக அரிசி வழங்கப்படுகிறது. அதற்காக அரசு மோட்டா ரக அரிசியை தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது" என்கிறார் தினேஷ்குமார்.
சன்னரக அரிசியை விட கனரக அரிசி அதிக விளைச்சலை தரும் என்பதாலும், கனரக அரிசியை அரசு கண்டிப்பாக கொள்முதல் செய்யும் என்பதாலும் விவசாயிகள் கனரக அரிசியை விளைவிப்பதாக கீழ் பவானி பாசன பயனாளிகள் சங்கத் தலைவர் நல்லசாமி தெரிவிக்கிறார். "கன ரக அரிசியை விட சன்ன ரக அரிசிக்கு ஒரு குவிண்டாலுக்கு 100 முதல் 200 ரூபாய் மட்டுமே அதிகமாக கிடைக்கலாம். அதே நேரம் சன்ன ரக அரிசியை விட மோட்டா ரக அரிசி ஒரு ஏக்கருக்கு சுமார் 25% அதிக விளைச்சல் தரும். விளைவிக்கும் நெல்லை தொடர்ந்து கொள்முதல் செய்ய அரசு தயாராக இருக்கிறது" என்கிறார் நல்லசாமி.
அரசு கனரக அரிசியை கொள்முதல் செய்வதை குறைத்துக் கொண்டு சன்ன ரக அரிசியை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். சன்ன ரக அரிசிக்கு கூடுதல் விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்ய தொடங்கினால் விவசாயிகள் அதை விளைவிப்பார்கள் என்கிறார் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தினேஷ்குமார்.
"அண்டை மாநிலங்கள் சிலவற்றில் சன்ன ரக அரிசி விளைவிக்கும் விவசாயிக்கு கிலோவுக்கு ரூ.5 கூடுதலாக கொடுத்து அரசு கொள்முதல் செய்கிறது. அதே போன்று தமிழ்நாட்டிலும் விவசாயிகளுக்கு சலுகை வழங்கலாம். வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து சன்ன ரக அரிசியை குறுகிய காலத்தில் எப்படி லாபகரமான பயிராக மாற்றலாம் என்று அரசு யோசிக்க வேண்டும்" என்கிறார்.
வட மாநிலங்களிலிருந்து பெறப்படுமா அரிசி?
அண்டை மாநிலங்களிலிருந்து அரிசி கிடைப்பது தொடர்ந்து சிக்கலானால் வட மாநிலங்களிலிருந்து அரிசியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.ராஜேந்திரன்.
"மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தற்போது நெல் அறுவடை காலம். அங்கிருந்து சன்ன ரக அரிசியை பெறலாம். அவை அண்டை மாநிலங்களில் கிடைக்கும் அளவுக்கு சன்னமாக இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் மோட்டா ரக அரிசியை விட சன்னமாக இருக்கும்" என்கிறார்.
அண்டை மாநிலங்களிலிருந்து பெறுவதை விட, வட மாநிலங்களிலிருந்து பெறும் போது போக்குவரத்து செலவு கிலோவுக்கு ரூ.2 அல்லது ரூ.3 மட்டுமே உயரலாம் என்றும் குறிப்பிடுகிறார் ராஜேந்திரன்.
இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கருத்துகளைப் பெறுவதற்கு, அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டுள்ளது. அவர்களின் கருத்து கிடைத்தவுடன் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































