கொழுப்பு என்றாலே கெட்டது அல்ல: உடலுக்கு அது செய்யும் 'ஆச்சரியமான' நன்மைகள் என்ன? 4 கேள்வி - பதில்

கொழுப்பு என்றாலே கெட்டது அல்ல: உடலுக்கு அது செய்யும் 'ஆச்சரியமான' நன்மைகள் என்ன? 4 கேள்வி - பதில்
    • எழுதியவர், மெலிசா ஹோகென்பூம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஹார்மோன்களைச் சுரப்பதிலிருந்து உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது வரை, கொழுப்பு உடலில் எண்ணற்ற முக்கிய பணிகளைச் செய்கிறது. அதனால்தான் உடல் கொழுப்பை மிகவும் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அதீத முயற்சிகள் ஆரோக்கியத்திற்கு ஏன் கேடு விளைவிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

பல ஆண்டுகளாக கொழுப்பு ஓர் எதிர்மறையான விஷயமாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது. உணவுக் கட்டுப்பாட்டு கலாசாரம் அதை குறைக்க சொல்கிறது. சில உணவு நிறுவனங்கள் குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பொருட்களை சந்தைப்படுத்துகின்றன.

உடற்பயிற்சி மற்றும் எடைத் தூக்கும் ஆர்வலர்களுக்கான தளங்களில் உடல் கொழுப்பை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதற்கான ஆலோசனைகள் பகிரப்படுகின்றன. சமூக ஊடகங்களில் சில நிமிடங்கள் செலவிட்டாலே, தசைகள் தெளிவாக வெளிப்படும் அளவுக்கு உடல் கொழுப்பைக் குறைப்பது எப்படி என்ற ஆலோசனைகளை எளிதாகக் காணலாம்.

இந்த ஆண்டு, அதீத ஒல்லித்தன்மையை விரும்பும் போக்கு மீண்டும் தலைதூக்கி வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளின் அதிகரித்த பயன்பாடும் இந்தப் போக்கை ஊக்குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகப்படியான கொழுப்பு உடல்நலக் கவலைகளையும் உடல் பருமனையும் ஏற்படுத்தக்கூடியது என்றாலும் , மிகவும் குறைவான கொழுப்பும் நல்லதல்ல. உடல் கொழுப்பை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்ற நோக்கம், உயிரியல் ரீதியாக மட்டுமல்ல சமூக ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நாம் நமது கொழுப்பை நேசிக்க வேண்டும்," என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியரும் எண்டோகிரினாலஜிஸ்ட் நிபுணருமான எலிஃப் ஓரல் கூறுகிறார். "அது மிகவும் முக்கியமான உயிரியல் செயல்பாட்டை மேற்கொள்கிறது."

அப்படியானால், உண்மையில் நமக்கு எவ்வளவு கொழுப்பு தேவை? உடலில் மிகக் குறைவான கொழுப்பு இருப்பது ஏன் பாதிப்பை ஏற்படுத்துகிறது?

உடல் கொழுப்பு ஏன் முக்கியமானது?

பொதுவாகப் பார்த்தால், கொழுப்பு இரண்டு வகைப்படும்: உணவுக் கொழுப்பு மற்றும் உடல் கொழுப்பு.

பொதுவாகப் பார்த்தால், கொழுப்பு இரண்டு வகைப்படும்: உணவுக் கொழுப்பு மற்றும் உடல் கொழுப்பு.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உணவுக் கொழுப்பு என்பது நாம் உணவில் உட்கொள்ளும் கொழுப்பு. உடல் கொழுப்பு என்பது உடனடியாகத் தேவைப்படாத ஆற்றலை இயற்கையாக சேமித்து வைக்கும் முறையாகும்.

நாம் உணவு உண்ணும்போது, அதிலுள்ள கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உடலால் பயன்படுத்தக்கூடிய எளிய கூறுகளாக உடைக்கப்படுகின்றன.

கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாகவும், புரதங்கள் அமினோ அமிலங்களாகவும், கொழுப்புகள் கொழுப்பு அமிலங்களாகவும் மாறுகின்றன. உடலுக்குத் தேவையானதை விட தொடர்ந்து அதிக கலோரிகளை எடுத்துக்கொண்டால், அடிபோசைட்கள் எனப்படும் கொழுப்பு செல்கள் இந்த அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை லிபிட்களாகச் சேமிக்கின்றன. இதனால் அந்த செல்களின் அளவு பெரிதாகிறது.

ஆனால் உடல் கொழுப்பு வெறுமனே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள் அல்ல. அது உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும், செயல்பாட்டுடன் இயங்கும் ஓர் உறுப்பாகச் செயல்படுகிறது என்பது தற்போது அறியப்பட்டுள்ளது.

'கோல்டிலாக்ஸ் மற்றும் மூன்று கரடிகள்' என்ற கதையில் வருவது போல, விஷயங்கள் "சரியான அளவில்" இருக்கும்போதுதான் நமது உடல் சிறப்பாகச் செயல்படுகிறது. கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பதும், அதிகமாக இருப்பது போலவே, நமது உடல்நலத்துக்கு ஆபத்தானதாக இருக்கலாம்.

உடல் கொழுப்பை ஒரு சிறப்பு சேமிப்பு அமைப்பாக கருதலாம் என்கிறார் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் கொழுப்பு திசு ஆராய்ச்சிப் பேராசிரியர் மிகயேல் ரைடன்.

ஆற்றல் அதிகமாக இருக்கும் போது ஊட்டச்சத்துக்களை அது சேமித்துக்கொள்கிறது; தேவைப்படும் நேரத்தில் மட்டுமே அவற்றை வெளியிடுகிறது. உணவுப் பற்றாக்குறை காலங்களில் நமது முன்னோர்கள் உயிர்வாழ இந்த அமைப்பு உதவியது.

உடல் கொழுப்பின் மற்றொரு முக்கிய பணி தகவல் பரிமாற்றம் ஆகும். கொழுப்பு செல்கள், உடலில் எவ்வளவு ஆற்றல் உள்ளது, எவ்வளவு நிறைவு உணர்வு உள்ளது என்பதை உடலின் பிற பகுதிகளுக்கு தெரிவிக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் மிகவும் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட ஹார்மோன் லெப்டின்.

"லெப்டின், போதுமான ஆற்றல் சேமிப்பு இருக்கிறது என்று மூளைக்கு தெரிவிக்கிறது. அதன்பிறகு மூளை ஓரளவு நிம்மதியாக இருக்க முடியும்," என்கிறார் ஓரல்.

இதனால் இனப்பெருக்கம், தொற்றுகளை எதிர்த்துப் போராடுதல் போன்ற முக்கிய உயிரியல் செயல்பாடுகளில் உடல் கவனம் செலுத்த முடிகிறது. லெப்டின் இல்லாதபோது, உடலில் போதுமான ஆற்றல் இருக்கிறதா என்பது குறித்து மூளைக்கு கவலை ஏற்படுகிறது. அதன் விளைவாக சில அத்தியாவசிய செயல்பாடுகள் பின்தள்ளப்படுகின்றன.

உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதிலும் கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளைக் கொழுப்பு அதிகப்படியான ஆற்றலைச் சேமிப்பதோடு, வெப்பத் தடுப்புச் சவ்வாகவும் செயல்படுகிறது. இதேசமயம், பழுப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறக் கொழுப்புகளில் உள்ள சிறப்பு செல்கள் ஆற்றலை எரித்து வெப்பத்தை உருவாக்குகின்றன. இதன் மூலம் உடல் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்படுகிறது.

உடலில் மிகக் குறைவான கொழுப்பு இருந்தால் என்ன நடக்கும்?

உடலில் மிகக் குறைவான கொழுப்பு இருந்தால் என்ன நடக்கும்?

அதிகப்படியான கொழுப்பால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் நன்கு அறியப்பட்டவை. இதய மற்றும் ரத்த நாள நோய்கள், வகை 2 நீரிழிவு, சில வகை புற்றுநோய்கள் மற்றும் மூட்டு தேய்மானம் ஆகியவற்றின் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால் மிகக் குறைவான கொழுப்பும் நல்லதல்ல.

கடுமையான கலோரி கட்டுப்பாட்டின் காரணமாக உடல் கொழுப்பு மிகக் குறைந்த அளவுக்கு குறையும்போது, அது ஆரோக்கியத்திலும் உடலியல் செயல்பாடுகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் வளர்சிதை மாற்ற நோய் ஆய்வாளர் ஜெசிக்கா மாங்.

"கொழுப்பு திசு மிகக் குறைவாக இருந்தால், உறுப்புகள் மற்றும் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன," என்று அவர் கூறுகிறார்.

உடலில் கொழுப்பு மிகக் குறைவாக இருந்தால், ஆற்றலைச் சேமிக்க முயலும் வகையில் உடல் செயல்படத் தொடங்குகிறது. அதாவது, ஒரு வகையான பட்டினி நிலைக்குள் தன்னை மாற்றிக்கொள்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ளிட்ட பல அமைப்புகள் மெதுவாகச் செயலிழக்கத் தொடங்குகின்றன. உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் வளங்கள் இல்லாததால், உடல் தசைத் திசுக்களை உடைத்து ஆற்றலைப் பெறத் தொடங்குகிறது. எலும்புகளின் உருவாக்கமும் பழுதுபார்ப்பும் குறைகிறது.

இதன் விளைவாக உடல் பலவீனம் ஏற்படுகிறது; எலும்பு முறிவு அபாயமும் அதிகரிக்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வளர்சிதை மாற்ற மருத்துவப் பேராசிரியர் ஃப்ரெட்ரிக் கார்பே கூறுகிறார்.

"இது ஆரோக்கியமான நிலை அல்ல," என்று அவர் கூறுகிறார். குறிப்பாக, கடுமையான தொற்று அல்லது மருத்துவ அவசரநிலையை சமாளிக்க உடலிடம் எந்த ஆற்றல் சேமிப்பும் இல்லாத நிலையை இது உருவாக்குகிறது.

உடல் கொழுப்பு மிகவும் குறைவாக இருந்தால் ஹார்மோன் அமைப்பும் கருத்தரித்தல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். போதுமான உணவை எடுத்துக்கொள்ளாமல் மிகவும் ஒல்லியான நிலைக்குச் சென்ற ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையக்கூடும். அதோடு ஆற்றல் அளவும் உடல் செயல்திறனும் குறையலாம். மிகக் குறைந்த உடல் கொழுப்பு கொண்ட சில பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மாதவிடாய் சுழற்சி சீர்குலையலாம் அல்லது அது முற்றிலும் நின்றுவிடக்கூடும்.

பல ஆய்வுகள், நடுத்தர மற்றும் முதிய வயதில் கூடுதல் உடல் எடை கொண்டிருப்பது தீவிர நோய்நிலை காலங்களில் உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று காட்டுகின்றன. உதாரணமாக, உடல் பருமன் கொண்டவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தாலும், அதே நோயால் பாதிக்கப்பட்ட ஒல்லியானவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம். இந்த நிகழ்வு "உடல் பருமன் முரண்பாடு" என அழைக்கப்படுகிறது.

கொழுப்பு சேமிப்பு, கடுமையான இதய பாதிப்புகள், பக்கவாதம் மற்றும் பிற திடீர் உடல்நலப் பிரச்சினைகளை உடல் சமாளிக்க உதவுகிறது என்று ஓரல் கூறுகிறார்.

மிகவும் தீவிரமான சூழல்களில், உடலில் கொழுப்பு மிகக் குறைவாக இருப்பது கடுமையான உடல்நல பாதிப்புகளையோ மரணத்தையோ ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, மனநலக் கோளாறான அனோரெக்சியா நர்வோசா, நீண்டகால உறுப்புச் சேதத்திற்கோ மரணத்திற்கோ வழிவகுக்கலாம்.

உண்மையில் நமக்கு எவ்வளவு கொழுப்பு தேவை?

உண்மையில் நமக்கு எவ்வளவு கொழுப்பு தேவை?

ஒருவரின் உடலில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் துல்லியமாக அளவிடுவது எதிர்பார்த்ததை விட சிக்கலானது. மேலும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே இலக்கு சதவீதம் எதுவும் இல்லை. தனிநபர் தேவைகள் மாறுபடுகின்றன.

இருப்பினும், பொதுவான வழிகாட்டுதலாக, ஆரோக்கியமான வயது வந்த ஆண்களில் உடல் கொழுப்பு சுமார் 10 முதல் 20 சதவீதம் வரை இருக்கும்.

ஆரோக்கியமான வயது வந்த பெண்களில் அது 20 முதல் 29 சதவீதம் வரை இருக்கும். உடல் பருமன் கொண்டவர்களில் உடல் கொழுப்பு பொதுவாக 30 சதவீதத்துக்கு மேல் காணப்படுகிறது.

"எந்த அளவு சிறந்தது என்று துல்லியமாகக் கூறுவது மிகவும் கடினம்," என்கிறார் ரைடன். "இது மனிதர், பாலினம் மற்றும் இனப் பின்னணியைப் பொறுத்து மாறுபடலாம்."

விளையாட்டு வீரர்களிடம் உடல் கொழுப்பு பொதுவாக இன்னும் குறைவாக இருக்கும்.

வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு செயல்திறன் ஆய்வாளர் தமாரா ஹியூ-பட்லர் மற்றும் அவரது குழுவினர், டெக்சா ஸ்கேனரைப் பயன்படுத்தி 700-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை ஆய்வு செய்தனர். இந்த ஸ்கேன் உடலில் உள்ள கொழுப்பு, தசை மற்றும் எலும்பு அளவுகளை மதிப்பிடுகிறது.

"நாங்கள் ஒரு ஆண் விளையாட்டு வீரரிடம் கண்டறிந்த மிகக் குறைந்த உடல் கொழுப்பு 10 சதவீதம்; ஒரு பெண் விளையாட்டு வீரரிடம் அது 16 சதவீதமாக இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

இந்த முடிவு பல பங்கேற்பாளர்களை ஆச்சரியப்படுத்தியது. அவர்கள் வழக்கமாக தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டிருந்த போதிலும், தங்களின் உடல் கொழுப்பு 1 முதல் 2 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்று நம்பியிருந்தனர்.

கொழுப்பு உடலில் எங்கு சேமிக்கப்படுகிறது என்பதும் முக்கியம். உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு, பொதுவாக வயிற்றுக் கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது அதிகமாக இருந்தால் மிகவும் தீங்கு விளைவிக்கும். தோலுக்குக் கீழே இருக்கும் கொழுப்பைப் போலல்லாமல், இது முக்கிய உள் உறுப்புகளைச் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடிய அழற்சி தூண்டும் வேதிப்பொருட்களை வெளியிடுகிறது. இன்சுலின் செயல்பாட்டிலும் குறுக்கீடு செய்கிறது. இதனால் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது கடினமாகி, வகை 2 நீரிழிவு அபாயம் அதிகரிக்கிறது.

உடலில் மிகக் குறைவான கொழுப்பு இருந்தால் என்ன நடக்கும்?

உடல் கொழுப்பை எவ்வாறு அளவிடலாம்?

உடலில் உள்ள கொழுப்பின் அளவை மதிப்பிட பல வழிகள் உள்ளன.

மிகத் துல்லியமான மதிப்பீடுகள் டெக்சா முழு உடல் ஸ்கேன்கள் மூலம் கிடைக்கின்றன. இவை உடல் கொழுப்பு, தசை அளவு மற்றும் எலும்பு நிறை ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட முடியும். ஆனால் இதற்குச் சிறப்பு கருவிகள் தேவைப்படுகின்றன; செலவும் அதிகமாக இருக்கும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பிரபலமான பரிசோதனை தோல் மடிப்பு சோதனை ஆகும். இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருவியின் உதவியுடன் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்பு அடுக்கின் தடிமன் அளவிடப்படுகிறது. ஆனால் இது உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கொழுப்பு மடிப்புகளின் தடிமனை மட்டுமே அளவிட முடியும். உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பை இந்த முறையில் நேரடியாக அளவிட முடியாது.

மேலும், தோல் மடிப்பு சோதனைகள் மிகவும் துல்லியமானவை அல்ல; உண்மையை விடக் குறைவான மதிப்பீடுகளைக் காட்டக்கூடும்.

வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய மற்றொரு வழி ஸ்மார்ட் எடை அளவைகள். இவை உடலின் வழியாக மிகக் குறைந்த மின்னோட்டத்தை அனுப்பி, உடல் கொழுப்பின் அளவை மதிப்பிடுகின்றன. ஆனால் உடலில் உள்ள திரவத்தின் அளவு போன்ற காரணிகள் முடிவுகளை பாதிப்பதால், இவை துல்லியமானவை எனக் கருதப்படுவதில்லை. மேலும் கொழுப்பு உடலின் எந்தப் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது என்பதையோ, உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பையும் பிற கொழுப்புகளையும் வேறுபடுத்தியோ காட்ட முடியாது.

உண்மையில், ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க உடல் கொழுப்பை மிக விரிவாக அளவிட வேண்டிய அவசியம் பொதுவாக இல்லை. ஆனால் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும், கொழுப்பு எங்கு சேமிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கவும் இரண்டு அளவீடுகள் உதவுகின்றன.

அவற்றில் ஒன்று இடுப்பளவு மற்றும் உயரத்தின் விகிதம். இது வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பின் அளவை உயரத்துடன் ஒப்பிட்டு மதிப்பிடுகிறது. இடுப்புச் சுற்றளவை அளந்த பிறகு, இணையக் கணிப்பானைப் பயன்படுத்தி இந்த விகிதத்தைக் கணக்கிடலாம். ஆரோக்கியமான அளவு பொதுவாக 0.4 முதல் 0.49 வரை இருக்கும்.

இடுப்பு-இடுப்பு எலும்பு விகிதமும் ஒரு நல்ல அறிகுறியாக இருக்கலாம். இதைக் கணக்கிட, தொப்புளைச் சுற்றியுள்ள வயிற்றுப் பகுதியை அளந்து, அந்த அளவை இடுப்பின் மிகவும் அகலமான பகுதியின் அளவால் வகுக்க வேண்டும். அல்லது இணையதளக் கணிப்பானைப் பயன்படுத்தலாம்.

இந்த அளவு ஆண்களுக்கு 0.90-க்கும், பெண்களுக்கு 0.85-க்கும் அதிகமாக இருந்தால், அது அதிகமாகக் கருதப்படுகிறது. இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு இருப்பது மோசமான வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ) மட்டும் உடல் கொழுப்பைத் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஏனெனில் அது கொழுப்பையும் தசையையும் வேறுபடுத்திக் காட்டாது. அதிக தசைகளும் மிகவும் குறைவான கொழுப்பும் கொண்ட சிலருக்குக் கூட பிஎம்ஐ மதிப்பு உயரமாக இருக்கலாம்.

வயது அதிகரிக்கும் போது உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பது நல்லது. ஏனெனில் வயதாக வயதாக கொழுப்பின் அளவு அதிகரிக்கும் நிலையில், தசை மற்றும் எலும்பு அளவுகள் குறைவடைகின்றன. இது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதால், சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் தசை வலுப்படுத்தும் பயிற்சிகள் முக்கியமாகின்றன.

ஆனால் கொழுப்பு நமக்காகச் செய்யும் பல அத்தியாவசிய பணிகளை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உடலில் கொழுப்பை முடிந்தவரை குறைப்பதையே இலக்காகக் கொள்ளாமல், அதை சரியான அளவில் வைத்திருப்பதே முக்கியம் என்று உணர வேண்டும். ஓரலின் வார்த்தைகளில் சொல்வதானால், "கொழுப்பு என்பது சக்திவாய்ந்ததும்கூட, அழகானதும்கூட என்று நாங்கள் நம்புகிறோம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு