'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' - தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன?

முதலமைச்சர் விஜய், திமுக, அதிமுக
படக்குறிப்பு, தாராபுரத்தில் சத்தியபாமாவை ஆதரித்து இன்று(செப்டம்பர் 30) முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்தார்.
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரத்தில் வென்ற சத்தியபாமாவும் மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமரவேலுவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்துவிட்டனர். தற்போது அவர்கள் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர்.

தாராபுரத்தில் சத்தியபாமாவை ஆதரித்து இன்று (செப்டம்பர் 30) முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, "எம்.ஜி.ஆர் போலவே, ஜெயலலிதா போலவே இன்றைக்கு தைரியமாக திமுக-வை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும்தான். அது எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும்" எனக் கூறினார்.

மேலும், கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் 'அதிமுக' குறித்தும் விமர்சனங்களை முன்வைத்த அவர், "தீயசக்தி திமுக-வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டுமென ஒரு திட்டத்தைப் போட்டால், அது எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துவது போலத் தானே? ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போலத் தானே?" எனக் கேள்வியெழுப்பினார்.

கடந்த செப்டம்பர் 25ஆம் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்துப் பரப்புரை செய்தபோதும், திமுக, அதிமுக மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் முதலமைச்சர் விஜய். இந்த நிலையில், முதலமைச்சரின் கருத்துகளுக்கு திமுக மற்றும் அதிமுக எதிர்வினையாற்றியுள்ளது.

"ஒரு பொய்யைப் பலமுறை சொன்னால் உண்மை ஆகிவிடும் என்று நினைத்து அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி பிபிசி தமிழிடம் கூறினார். அதேபோல, "குதிரை பேரம் நடத்தி, எங்கள் கட்சியினரைத் தங்கள் கட்சிக்கு இழுத்தவர்களின் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

மேடையில் கண்ணீர்விட்ட சத்யபாமா

தமிழக வெற்றிக் கழகத்தின் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சத்யபாமா, "திமுகவின் துணையோடு நான் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூறினார். அதனால்தான் பல அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறினோம்" எனப் பேசினார்.

"நாங்கள் அந்தக் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை. தலைமை பிடிக்காமல்தான் வெளியேறினோம். அம்மாவை (ஜெயலலிதா) பார்த்து அரசியலுக்கு வந்தேன். திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் விருப்பம் இல்லாததால்தான் அதிமுகவில் இருந்து விலகினேன். ஆனால் ஒரு பெண் என்றும் பாராமல் என்னை சமூக ஊடகங்களில் மிக மோசமாக, ஆபாசமாகப் பேசுகிறார்கள்" எனக் கூறி அழுதார்.

"நான் தவறு செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால், தைரியமாக வந்து மக்கள் முன் நின்று வாக்கு சேகரிக்க மாட்டேன். ஆளும் கட்சியில் சேர்ந்தால் எனது தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும் எனச் சேர்ந்தேன்" என்று சத்யபாமா கூறினார்.

முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?

அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தவெக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், திருப்பூர் மாவட்டத்திற்கான திட்டங்கள் குறித்தும் பேசினார்.

திருப்பூர் பகுதியில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகக் கூறிய அவர், குறிப்பாக, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படாதது, கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாதது உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதாகவும், பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், "நாம் 'எம்மதமும் நம்மதம்' என்று சொல்லிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிவிட்டுத்தான் அரசியலுக்குள் வந்திருக்கிறோம். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை. உங்களுடைய நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். மற்றவர்களைப் போல வெளியே வேடம் போட்டுக் கொண்டு, வீட்டிற்குள் பம்மிப் பதுங்கிக்கொண்டு திமுக-காரர்களைப் போல நாம் எப்போதுமே இருக்க மாட்டோம்" என்று கூறினார்.

முதலமைச்சர் விஜய், திமுக, அதிமுக
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"மக்களிடம் செல், மக்களுடன் வாழ் என்ற அண்ணா சொன்னதையே நாம் கடைபிடிக்கிறோம்" எனக் கூறிய விஜய், "திமுக பொதுச் செயலாளர் பேசும்போது, 'அண்ணா காலத்தில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஆட்களைத்தான் தேர்தலில் நிற்க வைத்து அன்றிருந்த மன்னர்களை தோற்கடித்தார்கள்' என்று கூறுகிறார். அண்ணா காலத்தில் அப்படித்தான் நடந்தது, எம்.ஜி.ஆர் காலத்தில் அப்படித்தான் நடந்தது, ஏன் இன்று நம் காலத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. அதைவிட சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த ஆட்களைத்தான் தேர்தலில் நிற்க வைத்து, இன்று இருக்கின்ற திமுக மன்னரையும் குறுநில மன்னர்களையும் நம் தவெக தோற்கடித்தது" எனக் குறிப்பிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த அவர், "திமுகவின் ஆட்சியில் அவ்வளவு தவறுகள் நடந்துள்ளன. அதனால்தான் கொளத்தூர் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. இனி வரப்போகின்ற எல்லா தேர்தல்களிலும் இதே மாதிரி கையெடுத்துக் கும்பிட்டு, 'மக்கள் நமக்கு வாக்களிக்கவில்லை, மக்கள் நமக்கு வாக்களிக்கவில்லை, கோடான கோடி நன்றி' என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்" என்றார்.

"எம்.ஜி.ஆர் யாரை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தார்? ஜெயலலிதா யாரை எதிர்த்து அரசியல் செய்தார்? அப்படிப்பட்ட அந்தத் தீயசக்தி திமுக-வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டுமென ஒரு திட்டத்தைப் போட்டால், அது எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துவது போலத் தானே? ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போலத் தானே?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

"அதனால்தான் இந்தத் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வென்றும், சத்யபாமா அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நம்மோடு வந்தார்கள்" என்று குறிப்பிட்ட விஜய், "சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொண்டு ஒன்றும் கட்சி தாவவில்லை. முறையாகப் பதவி விலகிவிட்டுத்தான் வந்தார்கள். உடனே அந்த பேரம், இந்த பேரம், ஏதோ கழுதை, குதிரை என்றெல்லாம் பேரங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். மக்கள் ஆதரவு நம்மோடு இருக்கும்போது நமக்கு எதற்கு இந்த பேரங்கள் எல்லாம்?" எனப் பேசினார்.

"எம்.ஜி.ஆர் போலவே, ஜெயலலிதா போலவே இன்றைக்கும் தைரியமாக இந்த திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும்தான். அது எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் என்னென்னவோ கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை" என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

முதலமைச்சர் விஜய், திமுக, அதிமுக
படக்குறிப்பு, தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி

திமுக கூறுவது என்ன?

"பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளரை அழ வைத்து, ஒரு நாடகத்தை முதலமைச்சர் நடத்தியிருப்பதாக" விமர்சித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அண்ணா பற்றியோ, அண்ணாவின் கொள்கை பற்றியோ அவருக்கு எதுவும் தெரியாது. எழுதிக் கொடுத்ததைப் படிக்கிறார், அவ்வளவுதானே தவிர அவருக்குச் சிந்தனைத் திறன் இல்லை" என்றும் அவர் விமர்சித்தார்.

அதோடு, "திமுகவை எதிர்த்த அனைத்துக் கட்சியுமே இன்றைக்கு என்ன ஆனது என்று மக்களுக்குத் தெரியும். 77 ஆண்டுகளில் பல கட்சிகள் எங்களை எதிர்த்தன. ஆனால் நாங்கள் மட்டும்தான் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ கட்சிகள் தோன்றின, திமுகவை அழிக்க வேண்டுமென நினைத்து அவர்கள்தான் அழிந்து போனார்களே தவிர, திமுக அழிந்து போகவில்லை. ஆக ஒவ்வொருவரும் எங்களை வைத்துத்தான் பெருமை தேடிக்கொள்கிறார்கள். 'திமுகவை நான் எதிர்க்கிறேன்' என்று சொன்னாலே திமுக வலுவான கட்சி என்றுதானே அர்த்தம்?" என்று கூறினார்.

'திமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அதிமுக முயன்றது' என்ற குற்றச்சாட்டு குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "அது தவறான ஒன்று. ஒரு பொய்யைப் பலமுறை சொன்னால் உண்மை ஆகிவிடும் என்று நினைத்து அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்றார்.

முதலமைச்சர் விஜய், திமுக, அதிமுக
படக்குறிப்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி

அதிமுக கூறுவது என்ன?

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பெயர் குறிப்பிடாமல் 'மற்றும் பலர்' என்றே அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் விஜய், "இந்தத் தீயசக்தி திமுகவுக்கு வாக்கு அளிப்பீர்களா? அதே போல எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த 'மற்றும் பலருக்கு' வாக்கு அளிப்பீர்களா?" எனக் கேள்வியெழுப்பினார்.

அதே போல, "ஏதோ கழுதை, குதிரை என்றெல்லாம் பேரங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். மக்கள் ஆதரவு நம்மோடு இருக்கும்போது நமக்கு எதற்கு இந்த பேரங்கள் எல்லாம்? மக்கள் இந்த அவதூறுகளை எல்லாம் பரப்புவதே இல்லை. அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திமுக-வும் இந்த 'மற்றும் பலரும்' சேர்ந்துதான் இந்த அவதூறுகளைப் பரப்புகிறார்கள்" என்றும் விமர்சித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, "அதிமுக, பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திய கட்சி, 54 ஆண்டுகள் வரலாறு கொண்ட கட்சி. இந்தக் கட்சியை அவர் கொச்சைப்படுத்துவது போலப் பேசியுள்ளார் என்றால், அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

'திமுக-அதிமுக கூட்டணி அமைக்க முயன்றது' என்ற குற்றச்சாட்டு பொய் எனக் குறிப்பிட்ட அவர், "ஒரே பொய்யை எத்தனை முறை சொல்வார்கள்? குதிரை பேரம் நடத்தி, எங்கள் கட்சியினரைத் தங்கள் கட்சிக்கு இழுத்தவர்களின் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள்" என்றார்.

"அப்படியெனில் இந்தத் தேர்தலில் தவெக-வை தோற்கடிக்க நாங்கள் சேர்ந்து நின்றிருக்கலாமே. ஏன் தனித்தனியாக நிற்கிறோம்? எந்தக் காலத்திலும் திமுக-அதிமுக சேராது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு