'கில் இரட்டை சதம், ரோஹித் சதம்': 406 ரன் இலக்கை 2 விக்கெட் மட்டுமே இழந்து இந்தியா அபாரமாக சேஸ் செய்தது எப்படி?

சுப்மன் கில்
    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கவுஹாத்தியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் அரங்கேறியது. 405 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்து சாதனை வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்திய அணி.

மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. ஜான் கேம்பெல், ஷாய் ஹோப், அமிர் ஜாங்கோ மூவரும் சதமடித்து அசத்தினார்கள்.

மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 43.3 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டியது. கேப்டன் சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து ஆட்ட நாயகனாக ஜொலித்தார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதனால் ஒருநாள் போட்டி வரலாற்றில் இரண்டாவது பெரிய சேஸை அரங்கேற்றியது இந்திய அணி. இந்தப் பெரும் சேஸ் எப்படி நடந்தது?

விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடும் இந்திய அணி

இந்தப் போட்டி தொடங்கும்போதே இது பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடிய ஆட்டமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு முன் இந்த மைதானத்தில் நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலுமே பெரிய ஸ்கோர்கள் எடுக்கப்பட்டன. 2018ல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிராக 322 என்ற இலக்கை இந்தியா சேஸ் செய்திருந்தது. 2023ல் இலங்கைக்கு எதிராக இந்தியா 373 ரன்கள் குவிக்க, திரும்ப இலங்கை அணியும் 306 ரன்கள் எடுத்தது. சிறிய மைதானம், பெரிதாக பந்துவீச்சுக்கு உதவாத ஆடுகளம் ஆகியவை மீண்டும் அப்படியொரு போட்டியாகவே இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்பவே ஆட்டம் சென்றது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய மேற்கு இந்திய தீவுகள் அணி பவர்பிளேவிலேயே 96 ரன்கள் எடுத்தது. மிடில் ஓவர்களிலும் தங்களின் ரன் விகிதத்தை சீராக வைத்திருந்தது அந்த அணி. கேம்பெல், ஹோப், ஜாங்கோ ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 40 ஓவர்கள் முடிவில் 329/3 என்ற மிகச் சிறந்த நிலையில் இருந்தது.

8.225 என்ற சிறந்த ரன்ரேட்டில் இருந்ததால், அந்த அணி எப்படியும் 420-430 ரன்கள் வரை எடுக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், கடைசி 10 ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். சிக்கனமாகப் பந்துவீசியதோடு அவர்கள் சீராக விக்கெட்டுகளும் வீழ்த்த, 41 - 50 ஓவர்களில் மேற்கு இந்திய தீவுகள் அணி 76 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இருந்தாலும் 405 என்ற மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்தது அந்த அணி.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேம்பெல் 101 ரன்களை எடுத்தார்
படக்குறிப்பு, மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேம்பெல் 101 ரன்களை எடுத்தார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தப் போட்டிக்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் 31 முறை 400+ ஸ்கோர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர். அதுவும் 2006-ஆம் ஆண்டு நடந்தது. கடந்த 20 ஆண்டுகளில், பலமுறை 400+ ஸ்கோர்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதை எந்த அணிகளாலும் சேஸ் செய்ய முடியவில்லை. அதனால், இந்தியாவுக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், அந்த சவாலை மிகவும் எளிதாக எதிர்கொண்டனர் இந்திய பேட்டர்கள்.

ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் கூட்டணி மிகவும் உறுதியாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தது. இருவரும் அதிரடியாக விளையாட, பவர்பிளேவில் மட்டுமே 92 ரன்கள் எடுத்தது இந்தியா.

ரோஹித் ஷர்மா 32 பந்துகளில் அரைசதம் அடிக்க, சுப்மன் கில் 38 பந்துகளில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார். முன்னர் ரோஹித்தை விட சற்று மெதுவாக ஆடிய கில் அரைசதம் கடந்ததும் தன் வேகத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தினார். வேகம், ஸ்பின் என எதனாலும் அவரைத் தடுக்க முடியவில்லை.

அடுத்த 24 பந்துகளில் தன் சதத்தை நிறைவு செய்தார் கில். அந்த 24 பந்துகளில் அவர் 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் விளாசினார். அதன்பிறகு தன்னுடைய வேகத்தை அவர் குறைக்கவே இல்லை. அடுத்த 27 பந்துகளில் 150 ரன்களைக் கடந்த அவர், 117 பந்துகளில் இரட்டைச் சதத்தையே நிறைவு செய்தார். இதன்மூலம் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அவர்.

ஒருபக்கம் ரோஹித் ஷர்மா 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் கில் நிலைத்து நின்று விளையாடி இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். எந்த மேற்கு இந்திய தீவுகள் அணியின் பௌலராலும் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவருடைய சிறப்பான ஆட்டத்தால் 43.3 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

இரட்டை சதத்தை நிறைவு செய்த சுப்மன் கில்

இந்தப் போட்டிக்குப் பின் பேசிய கில், "இப்போது என் உடலின் எல்லாப் பாகங்களிலும் தசைப்பிடிப்பது ஏற்படுவதுபோல் உணர்கிறேன். மதிய நேரத்தில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. அவர்கள் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும்போது, 13 ஓவர்கள் முடிந்தபோதே நாங்கள் 25 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. இடைவேளையின் போது போர்டில் 400 ரன்கள் இருந்ததால், சற்று நெருக்கடி இருந்தது. ஆடுகளமோ, மைதானமோ எதுவாக இருந்தாலும், 400 ரன்களை சேஸ் செய்வது எளிதல்ல. இந்த ஆட்டத்தை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.

மேலும், ரோஹித் உடனான தனது பார்ட்னர்ஷிப் தாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்றதால் இந்த வெற்றி எளிதாக வசப்பட்டது என்று கூறினார் கில்.

"நான் இந்த ஆட்டத்தைச் சிறிய பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கிறேன். முதலாவதாக, பவர்பிளேயில் (முதல் 10 ஓவர்கள்) விக்கெட்டுகளை இழக்காமல் 75-80 ரன்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற இலக்கு எங்களிடம் இருந்தது. பந்து சற்று பழையதானதும் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். 25-வது ஓவர் முடியும்போது நாங்கள் 200-210 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் 230-240 ரன்கள் எடுத்திருந்தோம். அதற்குப் பிறகு அழுத்தம் எங்கள் மீது இல்லை, அவர்கள் மீதுதான் இருந்தது." என்று போட்டிக்குப் பின் கூறினார் இந்திய கேப்டன்.

ரோஹித் சர்மா

கடந்த போட்டியில் 110 ரன்கள் அடித்திருந்தபோதும், போட்டி முடிந்ததும் பேசியபோது சிறு அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் கில். சதமடித்திருந்தாலும் ஆட்டத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார் அவர்.

"இது திருப்திகரமான ஒரு ஆட்டம். ஆனால், நான் அவுட்டானபோது ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்கவேண்டும் என்று தோன்றியது" என முதல் போட்டிக்குப் பின் கூறினார் கில்.

அந்த வருத்தத்தை அடுத்த போட்டியிலேயே, அதுவும் 400+ ரன்களை சேஸ் செய்தபோது போக்கியிருக்கிறார் இந்திய கேப்டன். அதனால் தான் இம்முறை மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

கில்லின் இந்த இன்னிங்ஸ் பற்றி கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், "ஆட்டம் தொடங்கியது முதலே அவர் தன் ஆட்டத்தில் உறுதியாக இருந்தார். பவர்பிளேவில் அற்புதமான ஷாட்கள் ஆடினார். ஆரம்பம் முதலே நல்ல 'இன்டென்ட்' (intent) காட்டினார். ஆனால், அந்த இன்டென்ட் கடைசி வரை குறையவே இல்லை. அது அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. ஒரு இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்கவேண்டும், எப்படி சேஸ் செய்யவேண்டும் என்பதைக் காட்டிய மிகச் சிறந்த இன்னிங்ஸ் இது. அவர் சேஸிங்கின் மன்னனான கோலியிடமிருந்து சில விஷயங்கள் கற்றுக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டின் இளவரசனை நம்பிக்கையோடு, நேர்த்தியான ஒரு ஆட்டத்தை ஆடுவதைப் பார்ப்பதே அற்புதமாக இருந்தது." என்று கூறினார்.

இரண்டாவது முறையாக ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்து ஒரு பெரிய சேஸை அரங்கேற்றிய கில்லை கிரிக்கெட் உலகம் வெகுவாகப் பாராட்டி வருகிறது. அவர் இந்த ஃபார்மட்டில் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக வருவார் என்று பலரும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப், "சுப்மன் கில் இந்த விளையாட்டின் ஒரு மாபெரும் ஜாம்பவானாக உருவெடுப்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறார். அவரிடம் அதற்கான வெறி, நிதானம் மற்றும் சிறந்த பேட்டிங் நுட்பம் ஆகியவை உள்ளன. தான் தொடங்கும் ஆட்டத்தை, போட்டியின் முடிவை மாற்றக்கூடிய ஒரு வரலாற்று இன்னிங்ஸாக மாற்றும் அசாத்தியத் திறன், அவரை ஒரு மிகச்சிறந்த ஒருநாள் போட்டி பேட்டராக மாற்றுகிறது." என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.

கில்லின் இந்த அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கை குலுக்கி கொண்ட கேப்டன்கள்

811 ரன்கள் குவிக்கப்பட்ட இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. அந்த சாதனைகளின் பட்டியல்:

  • ஒரே ஒருநாள் போட்டியில் 5 வேறு வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல் முறை.
  • ஒருநாள் போட்டி வரலாற்றில் 2வது மிகப் பெரிய சேஸ். இந்தியாவின் மிகப் பெரிய சேஸ்.
  • ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணி ஆனது இந்தியா - 9 முறை.
  • ஒருநாள் போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைச் சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் கில்.
  • கில் அடித்த 223 ரன்கள் தான் ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் அடித்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர்
  • ஒரு கேப்டனாக ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர் சுப்மன் கில்
  • அதிவேகமாக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் கில். இந்தப் போட்டியில் 117 பந்துகளில் இரட்டைச் சதமடித்து அந்த சாதனையை நிகழ்த்தினார்.
  • ஒரு ஓடிஐ போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் 200+ ஸ்கோர் எடுத்தவர் கில் - 167.66
  • ரோஹித் - கில் இணை இந்தப் போட்டியில் 255 ரன்கள் எடுத்தது. ஒரு இந்திய தொடக்க ஜோடி அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது.
  • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கடந்த 2வது இந்தியர் குல்தீப் யாதவ் - 123 போட்டிகள். இந்திய ஸ்பின்னர்களில் முதலிடம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு