சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட மனைவியை 13 ஆண்டுகளாக கடலில் மூழ்கி 'தேடும்' கணவர்

 யசுவோ தகமாட்சு
படக்குறிப்பு, சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் நீர்மூழ்கி வீரர்களைப் பார்த்த பிறகு, தனது 50 வயதில் யசுவோ தகமாட்சு கடலில் மூழ்கிக் கற்றுக்கொண்டார்.
    • எழுதியவர், பெக்கா ஜான்ஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை, யசுவோ தகமாட்சு ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மியாகி மாகாணத்தின் ஒனகவா துறைமுகத்தில் ஒரு சிறிய மீன்பிடிப் படகில் ஏறி, கடலில் சில கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார்.

13 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இதே வழக்கத்தைப் பின்பற்றி வருகிறார். முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் எடை பெல்ட்டை அணிந்துகொள்கிறார்.

படகு போதுமான தொலைவுக்குச் சென்றதும், குளிர்ந்த கடல் நீருக்குள் அவர் குதிக்கிறார்.

ஒவ்வொரு முறையும் கடலுக்குள் மூழ்கும்போது, தனது மனைவி யூகோவை தன்னிடமிருந்து பறித்துச் சென்ற அதே கடலுக்குத் திரும்புகிறார்.

சுனாமி

ஒரு பெரிய, கருமையான சுனாமி அலை கடலோர நகரத்துக்குள் சீறிப்பாய்கிறது. சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வழியாக வெள்ளநீரை வாரிச் செல்லும் அந்த வேகமான நீரில், முன்புறத்தில் வெளிர் நிறத்திலான இரண்டு கார்கள் அடித்துச் செல்லப்படுகின்றன.
பின்னணியில், வெள்ளத்தில் மூழ்கிய துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகள் தொடர்ந்து காணப்படுகின்றன.
படக்குறிப்பு, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.0 முதல் 9.1 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கத்தால் இந்த சுனாமி ஏற்பட்டது.

2011-ஆம் ஆண்டு ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி, அதன் பாதையில் இருந்த அனைத்தையும் அழித்துச் சென்றது. அப்போது, தான் பணியாற்றிக் கொண்டிருந்த வங்கியின் கூரையில் இருந்து யூகோ அடித்துச் செல்லப்பட்டார். அந்தப் பிரமாண்டமான அலை, கடலிலிருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ. தொலைவு வரை நிலத்துக்குள் புகுந்தது.

அன்று காலையில் யசுவோ, யூகோவை அவரது பணியிடத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

அவர்கள் காரில் சென்றுகொண்டிருந்த அந்த சிறிய பயணத்தின்போது, இரவு உணவுக்கு என்ன சாப்பிடலாம் என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியபோது, யூகோவும் அவருடன் பணியாற்றிய 12 பேரும் கட்டடத்தின் கூரைக்குச் சென்றனர்.

அங்கிருந்து, அவர் தன் கணவருக்கு, "நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? வீட்டிற்குச் செல்ல வேண்டும்" என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.

அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்தபோது, தனது மனைவி பாதுகாப்பாக இருப்பதாக யசுவோ நம்பினார்.

ஆனால், மறுநாள் உயிர் பிழைத்தவர்கள் தஞ்சமடைந்திருந்த நகராட்சி மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு யூகோ இல்லை என்பதை அவர் கண்டறிந்தார்.

"சுனாமி அவரை அடித்துச் சென்றுவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது. அதன்பிறகு என்னால் நிற்கவே முடியவில்லை. எனது பலம் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது போல் உணர்ந்தேன்" என்கிறார் அவர்.

குடும்பப் புகைப்படத்தில் யசுவோ, யூகோ மற்றும் அவர்களது குழந்தைகள்.
படக்குறிப்பு, குடும்பப் புகைப்படத்தில் யசுவோ, யூகோ மற்றும் அவர்களது குழந்தைகள். இரு குழந்தைகளும் அப்போது பள்ளியில் இருந்ததால், இந்தப் பேரழிவில் உயிர் தப்பினர்.

கடல் நீர் வடியத் தொடங்கியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களிலும் வாரங்களிலும் ஜப்பானின் கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டன.

ஆனால், யூகோவைப் போல பலர் தொடர்ந்து காணாமல் போனவர்களாகவே இருந்தனர்.

இரண்டு ஆண்டுகளாக, ஜப்பான் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் குழுவினர் உடல்களைத் தேடுவதையும், உடைமைகள் மற்றும் நினைவுப் பொருட்களை மேலே கொண்டு வருவதையும் யசுவோ பார்த்துக்கொண்டிருந்தார்.

பின்னர் அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

"நான் டைவிங் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து கடலில் மூழ்கித் தேடிக்கொண்டிருந்தால், ஒருநாள் நான் அவரைச் சந்திக்க முடியும் என்று உணர்ந்தேன்" என்கிறார் அவர்.

யசுவோ தொடர்ந்து கடலில் மூழ்கித் தேடி வருகிறார். தனது 50 மற்றும் 60 வயதுகளில் இதுவரை 760க்கும் மேற்பட்ட முறை கடலில் மூழ்கியுள்ளார்.

 யசுவோ தகமாட்சு
படக்குறிப்பு, 2014ஆம் ஆண்டு யசுவோ தகமாட்சு மேற்கொண்ட ஆரம்பகால கடலுக்கடிப் பயணங்களில் ஒன்று.

உயிருடன் இருப்பவர்களுக்கிடையே வாழும் இறந்தவர்கள்

ஜப்பானிய கலாசாரத்தில், இறந்தவர்களும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறார்கள். அவர்கள் இறந்த பிறகும் நம்முடன் இருப்பதாக பலர் நம்புகின்றனர்.

பௌத்த மரபில் உள்ள 'குயோ' நடைமுறையில், இறந்தவர்களின் அமைதி மற்றும் நலனுக்காக, அவர்களின் கல்லறை அல்லது நினைவுப் பீடத்தின் அருகில் படையலிட்டு பிரார்த்தனை செய்வது உள்ளிட்ட சடங்குகள் இடம்பெறுகின்றன.

ஆனால் யுகோவின் உடல் இதுவரை மீட்கப்படாததால், யசுவோவால் அவரது கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை.

அதற்குப் பதிலாக, மனைவியைத் தேடும் இந்த முயற்சியே அவருக்கு ஒரு தனித்துவமான சடங்காக, நினைவுகூரலாக, உறவைத் தொடரும் வழியாக மாறியுள்ளது.

"மீண்டும் மீண்டும் கடலில் மூழ்கித் தேடிய பிறகு, அவர் அருகிலேயே இருக்கலாம் என்று உணரத் தொடங்கினேன்" என்று கூறும் யசுவோ,

"இது கல்லறைக்குச் செல்வதிலிருந்து சற்று வித்தியாசமானது. ஏனென்றால், அவர் கல்லறையில் இல்லை. அவரைச் சந்திக்கச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது"என்கிறார்.

யசுவோ.
படக்குறிப்பு, 2014ஆம் ஆண்டு யசுவோ கடலுக்குள் மூழ்கித் தேடியபோது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இயற்கை பேரழிவால் யசுவோவின் நம்பிக்கையும் சோதனைக்கு உள்ளானது.

கடலுக்கு அடியில் ஆழமாகச் செல்லும்போது, பல ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் ஏற்பட்ட அழிவைக் காணும்போது, அவர் சோகமடைகிறார்.

"இடிபாடுகளைப் பார்க்கும்போது, 'இவ்வளவு இடிபாடுகளுக்குள் இருந்து அவரால் மீண்டும் மேலே வந்திருக்க முடியாது' என்று நினைப்பேன். அப்படி நினைக்கும்போது, எனக்கு அழுகை வருவது போல் இருக்கும்"என பகிர்ந்து கொண்டார் யசுவோ.

இருப்பினும், யசுவோ கடலை வெறுக்கவில்லை. காலப்போக்கில், இயற்கைப் பேரழிவுகள் தவிர்க்க முடியாதவை என்றும், அவற்றை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

"நான் அதை வெறுப்பதோ அல்லது அதுபோன்ற எதையுமோ செய்வதில்லை. அந்த நேரத்தில் சுனாமியும், கொந்தளிப்பான கடலும் இருந்தன. ஆனால், மறுபுறம் கடல் பல சுவையான உணவுப் பொருட்களையும் தருகிறது. அதேபோல் அங்கு அழகான காட்சிகளும் இருக்கின்றன" என்கிறார் யசுவோ .

இந்த வகையில், தொடர்ச்சியாக இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்ட மக்களின் மனநிலையை யசுவோ பிரதிபலிக்கிறார்.

இயற்கையின் பேராற்றலையும், மனிதர்கள் அந்த இயற்கைச் சூழலின் ஒரு பகுதிதான் என்பதையும் நினைவூட்டும் வகையில், கடற்கரை முழுவதும் கோவில்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பேரிடர்களின் எச்சங்கள் இன்னும் காணப்படுகின்றன

 யசுவோ.
படக்குறிப்பு, 2026ஆம் ஆண்டு கடலுக்குள் மூழ்குவதற்கு முன்பு யசுவோ.

கடலில் மூழ்கிச் செல்லும்போதும், திரும்பி வரும் நேரங்களிலும் யசுவோ புன்னகையுடனும் நட்பாகவும் இருக்கிறார். யூகோவைப் பற்றி அவர் பேசும்போது, அவரது குரலில் ஒருவித நகைச்சுவை தெரிகிறது.

"நாங்கள் சந்தித்துக்கொண்டால், ஆச்சரியப்படும் விதமாக, அவர் என்னிடம் முதலில், 'உனக்கு வயதாகிவிட்டது ' எனக் கூறுவார் என்று நினைக்கிறேன்"என்கிறார் யசுவோ.

ஆனால், அவர் கடலுக்குள் மூழ்கும் நேரம் சிந்தனைக்கான நேரமாக இருக்கிறது.

கடல் மட்டத்துக்கு 50 மீட்டர் கீழே, தொடர் அழிவுகளால் உருவான சிதைந்த நீருக்கடி நிலப்பரப்பிற்கு மேலே அவர் நீந்திச் செல்கிறார்.

"கடலுக்கு அடியில் பல்வேறு வகையான அமைப்புகள் உள்ளன. சில மலைகளைப் போல இருக்கும். அவற்றின் மேலே மிதந்து கொண்டு கீழே பார்க்க முடியும். அதனால், உண்மையிலேயே வானில் பறப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது."என்கிறார் அவர்.

யசுவோவும் யூகோவும்.
படக்குறிப்பு, திருமணப் புகைப்படத்தில் யசுவோவும் யூகோவும்.

யசுவோ, யூகோவைச் சந்திப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே இந்தக் கடலுக்கு அருகிலேயே வளர்ந்தார். அதன் நீரில் நீந்தவும் மீன்பிடிக்கவும் அவர் கற்றுக்கொண்டார். அவருக்கு நினைவு தெரிந்த காலம் முதல், இந்தக் கடல் அவரது வாழ்க்கையை வடிவமைத்துள்ளது.

இப்போது, கடலுக்கடியில் காணப்படும் சிதிலங்களைப் பார்க்கும்போது, அவற்றை இயற்கையின் இடையறாத மாற்றச் சுழற்சியின் ஒரு பகுதியாகவே அவர் கருதுகிறார்.

"பாதி நசுங்கிய நிலையில் இருப்பது போல் தோன்றும் கார்கள் உள்ளன. மேலும், செயற்கைப் பாறைகளாக மாறியுள்ள பிற பொருட்களும் உள்ளன. அங்கு மீன்கள் வருகின்றன. பின்னர் முட்டைகளும் இடுகின்றன"என்கிறார் யசுவோ.

பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டாலும், துக்கம் அவரை விட்டு நீங்கவில்லை. கடலும் அவருடன் இருக்கிறது.

இது அவரது 763-ஆவது கடல் பயணம்.

விரைவில், யூகோவுக்கு அருகில் இருப்பதற்காக அவர் மீண்டும் கடலுக்குள் செல்வார்.

இந்தக் கட்டுரை, பிபிசி டபிள்யூஎஸ்-ன் 'ஹார்ட் அண்ட் சோல்' நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை மெசேஜ் ஹியர்ட் மற்றும் ஹிரோமி டானோவ் தயாரித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு