இரான் கடற்படைக்கு டிரம்ப் எச்சரிக்கை - அடுத்த திட்டத்துக்கான அறிகுறியா?

(கோப்புப் படம்).

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்).
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு அருகில் வந்தால் இரானின் "தாக்குதல் கப்பல்கள்" அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 07:30 மணி முதல் தொடங்கியுள்ளது.

இரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இரானின் கடற்படை முழுமையாக அழிக்கப்பட்டு, மொத்தம் 158 கப்பல்கள் கடலடியில் உள்ளன என தனது ட்ரூத் சோஷியலில் விடுத்துள்ள பதிவு ஒன்றில் டிரம்ப் கூறியுள்ளார்.

''ஆனால், அவர்கள் 'வேக தாக்குதல் கப்பல்கள்' என்று அழைக்கும் சில சிறிய கப்பல்களை தாக்கவில்லை, ஏனெனில் அவை பெரிய அச்சுறுத்தலாக கருதப்படவில்லை. இந்தக் கப்பல்களில் ஏதேனும் எங்கள் முற்றுகைக்கு அருகில் வந்தால், அவை உடனடியாக அழிக்கப்படும். கடலில் போதைப் பொருள் கடத்துபவர்களை எதிர்கொள்ள நாம் பயன்படுத்தும் அதே தாக்குதல் முறையையே பயன்படுத்துவோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
இரான் கடற்படைக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கைகள்

பட மூலாதாரம், Reuters

டிரம்ப் விடுத்த எச்சரிக்கை வரப்போகும் மாற்றங்களுக்கான அறிகுறியா?

பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர் , பிபிசி

அமெரிக்காவின் முற்றுகைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இரானின் எந்தவொரு சிறிய "வேகத் தாக்குதல் கப்பல்களையும்" மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டது போல, இரானிய கடற்படை இலக்குகளை மையப்படுத்தி அமெரிக்கா நடத்திய பெரும்பாலான தாக்குதல்கள் பெரிய ரகக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீதே இருந்தன. பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு இவை உத்தி ரீதியாக முக்கியமான இலக்குகளாகக் கருதப்பட்டன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால் பல ஆண்டுகளாக ஏன் தசாப்தங்களாகவே ராணுவ வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர். அதாவது, பெரிய வழக்கமான கடற்படை இலக்குகளை விட, எளிதில் கண்டுபிடிக்க முடியாத மிகச் சிறிய இரானியப் படகுகளும் சவாலாக அமையக்கூடும்.

இவை ஒரு பெரிய கூட்டமாகச் சேர்ந்து தாக்குதல் நடத்தும் சமச்சீரற்ற போர்த்திறனை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், அமெரிக்கா கடந்த சில மாதங்களாகவே தனது நாட்டிற்கு அருகிலுள்ள கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் சிறிய படகுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் போதைப்பொருள் சந்தைகளுக்கு இந்தப் பிராந்தியத்தின் வழியாகக் கடத்தப்படும் சட்டவிரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இத்தகைய தாக்குதல்கள் டஜன் கணக்கில் நடத்தப்பட்டிருந்தாலும், அவை மிக நிதானமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவின் தெற்கு கட்டளை, ஒவ்வொரு தாக்குதல் நடத்தப்படும்போதும் அது குறித்து தனித்தனியாக அறிவித்து வருகிறது.

பசிபிக் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் நேற்றுதான் அறிவித்தது.

மோதலின் ஆரம்பக் கட்டத்தில் நாம் பார்த்தது போன்ற ஒரு முழு அளவிலான போர் நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பாமல், இரான் மீது தொடர்ந்து அழுத்தத்தைத் தக்கவைக்க இது ஒரு சிறந்த மாதிரி என்று டொனால்ட் டிரம்ப் கருதக்கூடும்.

 வளைகுடாவுக்கு அருகில் அமெரிக்க போர் கப்பல்

வளைகுடாவுக்கு அருகில் அமெரிக்க போர் கப்பல்

மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படையின் எந்தெந்த போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள பிபிசி வெரிஃபை செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து வருகிறது.

சனிக்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் ஓமன் வளைகுடாவின் கிழக்கு விளிம்பில், இரான் கடற்கரைக்கு தெற்கே சுமார் 200 கிமீ (124 மைல்கள்) தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

போர் தொடங்கியதில் இருந்து அணுசக்தியால் இயங்கும் இந்த போர்க்கப்பல் வளைகுடாவுக்கு இவ்வளவு அருகில் இருப்பதை நாங்கள் கவனிப்பது இதுவே முதல் முறையாகும்.

செயற்கைக்கோள் படங்களில் தென்படும் அருகிலுள்ள மற்ற இரண்டு போர்க்கப்பல்களின் அளவு மற்றும் வடிவம், அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிக்கும் கப்பல்களின் அளவு மற்றும் வடிவத்துடன் ஒத்துப்போகின்றன.

அவை லிங்கன் விமானம் தாங்கி கப்பல் தாக்குதல் குழுவின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் கண்ணுக்குத் தெரியும் அந்த கப்பல்கள் எவை என்பதை எங்களால் துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை.


உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு