'செல்போன் வெளிச்சத்தை விட இதுதான் உங்கள் தூக்கத்தை கெடுக்கும்' - ஆய்வு கூறும் புதிய தகவல்கள்

- எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
பத்தாண்டுகளாக, திரைகள் நமது தூக்கத்தைக் கெடுப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி உங்கள் அலைபேசியின் வெளிச்சத்தை விட மிகப் பெரியது.
கடந்த சில வாரங்களாக, உறங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே பிரத்யேக ஆரஞ்சு நிறப் பாதுகாப்பு கண்ணாடிகளை நான் அணிந்து வருகிறேன். அவை தடிமனான, உறுதியான பிளாஸ்டிக்கால் ஆனவை; உலகையே மங்கலான ஆம்பர் நிறத்தில் காட்டுகின்றன. இதனால் நீல நிறத்தில் எதையும் பார்ப்பது கடினம். ஆனால் நான் அத்துடன் நிறுத்தவில்லை. ஜன்னல்களைக் கருப்புத் திரைகளால் மூடிவிட்டு, எனது விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கிறேன். அவற்றுக்குப் பதிலாக, மெழுகுவர்த்திகளால் மட்டுமே எனது குடியிருப்பை ஒளிரச் செய்கிறேன். எனது தூக்க வழக்கம் அசாதாரணமாக இருக்கிறது, ஆனால் இது ஒரு சோதனைக்காக. நீல நிற ஒளியை முற்றிலுமாக நீக்கினால் என்ன நடக்கும் என்பதை நான் கண்டறிந்தேன்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த ‘நீல ஒளி என்ற பயமுறுத்தும் விஷயத்தைப்’ பற்றி உலகம் அதிக அளவில் பீதியடைந்துள்ளது. நமது அலைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் எல்இடி விளக்குகள் நம்மை மிக அதிகமான நீல நிற ஒளிக்கு ஆளாக்குகின்றன என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இது நம் உடலியக்க கடிகாரத்தைப் பாதிக்கும், பகல் நேரத்தின் இயற்கையான சுழற்சியைச் சிதைப்பதன் மூலம் நமது தூக்கத்தைக் கெடுப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்குப் பின்னால் சில அறிவியல் ஆதாரங்கள் இருந்தாலும், சமீபத்திய ஆய்வுகளும் பகுப்பாய்வுகளும் விஷயங்கள் இன்னும் சிக்கலானவை என்று கூறுகின்றன. உண்மையில், இந்த விஷயத்தில் நீங்கள் சில கடுமையான தவறான கருத்துகளை நம்பியிருக்க வாய்ப்புகள் அதிகம். உங்கள் அலைபேசியிலிருந்து வரும் ஒளி உங்கள் தூக்கத்தைக் கெடுப்பது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் என்னிடம் கூறுகிறார்கள்.
ஆராய்ச்சிகள் முரண்படுகின்றன. உதாரணமாக, உறங்கும் நேரத்தில் உங்கள் அலைபேசியில் நீல நிற ஒளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்சங்கள், உங்கள் தூக்கத்தை மேம்படுத்துவதில் மிகக் குறைந்த அளவே பங்களிக்கின்றன. ஆனால் நவீன வாழ்க்கையின் விளக்கு அமைப்பு உங்கள் தூக்கத்தின் மீது உண்மையிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?
நான் உண்மையை அறிய விரும்பினேன். எனவே, நிபுணர்களுடன் பேசினேன், அறிவியலுக்குள் மூழ்கினேன்.
வேறுபாட்டை என்னால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்க, என்னால் முடிந்தவரை முழுக்க நீல ஒளி இல்லாத கடுமையான மாலை வாழ்க்கைக்குள் நான் என்னைத் தள்ளிக்கொண்டேன். இறுதியில், நீங்கள் பயன்படுத்தக்கூடிய நடைமுறை ஆலோசனைகளை நான் கண்டடைந்தேன் - அதற்கு அந்த அசாதாரணமான வண்ணக் கண்ணாடிகள் தேவையில்லை. அது ஒரு நல்ல உறக்கத்திற்கான ரகசியமாக இருக்கலாம்.
மரணத்தின் நீலத் திரையா?
நீல நிற ஒளியைப் பற்றிய பொதுமக்களின் பயம் 2014-ஆம் ஆண்டு ஒரு ஆய்வின் மூலம் தொடங்கியது. 12 பங்கேற்பாளர்களில் பாதி பேர் படுக்கைக்கு முன் ஐபேடில் (iPad) படித்தனர். மீதமுள்ளவர்கள் சாதாரண புத்தகங்களைப் படித்தனர். ஐபேட் பயனர்கள் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டனர், அடுத்த நாள் மந்தமாக உணர்ந்தனர் மற்றும் மெலடோனின் குறைவாகவே உற்பத்தி செய்தனர். ஐபேடின் LED திரையிலிருந்து வெளிவரும் ஒளியே இதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நீல நிறம் செறிந்த ஒளி நமது தினசரி 'சர்க்காடியன் ரிதம்' - அதாவது எப்போது சோர்வாக உணர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் பகல் வெளிச்சத்தைப் பயன்படுத்தும் நமது உடலின் இயற்கை கடிகாரத்தை - சீர்குலைக்கிறது. அடுத்தடுத்த ஆராய்ச்சிகளும் இதையே உறுதிப்படுத்துவது போல் தோன்றின. எளிமையாகத் தெரிகிறது, இல்லையா? ஆனால் அது அப்படி இல்லை.
"இது ஒரு நம்பமுடியாத ஏமாற்று வேலை," என்கிறார் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மனநல மற்றும் நடத்தை அறிவியல் பேராசிரியரான ஜேமி ஜெய்ட்ஸர். அவர் சர்க்காடியன் அமைப்பில் ஒளியின் தாக்கத்தைப் பற்றி ஆய்வு செய்கிறார். அந்த அறிவியல் தவறல்ல, ஆனால் அது மக்களைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் சென்றதுதான் பிரச்னை என்கிறார் அவர்.
நமது திரைகள் அதிக நீல நிறத்தில் இருப்பது உண்மைதான். நவீன திரைகளும் மின்விளக்குகளும் எல்இடிகளைப் பயன்படுத்துகின்றன, அவற்றால் தூய வெள்ளை ஒளியை உருவாக்க முடியாது. அதற்குப் பதிலாக, அவை நீல நிற எல்இடிகளைப் பயன்படுத்தி, அவற்றில் சிலவற்றை 'மஞ்சள் பாஸ்பர்' என்ற வேதிப்பொருளால் மூடுகின்றன. நீலமும் மஞ்சளும் கலந்து உங்கள் மூளையை வெள்ளை நிறத்தைப் பார்ப்பது போல் ஏமாற்றுகின்றன, ஆனால் கூடுதல் நீலம் எப்போதும் வெளியே கசிந்துகொண்டே இருக்கும்.

பட மூலாதாரம், Hana Mendel
நீல நிற ஒளி உண்மையில் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கலாம். ஜெய்ட்ஸர் கூறுகையில், உங்கள் கண்களில் 'மெலனோப்சின்' (melanopsin) என்ற ஒளி-உணர்திறன் கொண்ட புரதம் உள்ளது, இது உங்கள் தூக்க அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. "மெலனோப்சின் என்பது நீல நிற உணர்திறன் கொண்ட புரதம், அதாவது இது நீல நிற ஒளிக்கு அதிக உணர்திறன் கொண்டது," என்கிறார் அவர். மெலனோப்சின் மற்ற நிற ஒளிகளுக்கும் வினைபுரிகிறது, நீல நிறத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது, அவ்வளவுதான்.
"ஆனால் நமது திரைகளில் இருந்து வெளிவரும் ஒளியின் அளவு உண்மையில் மிகக் குறைவானது," என்கிறார் ஜெய்ட்ஸர். உங்கள் வாழ்க்கை பல நீல ஒளி ஆய்வுகளின் நிபந்தனைகளுடன் பொருந்தவில்லை. "நாங்கள் ஒருவரை ஆய்வகத்திற்கு அழைத்து வந்து, நாள் முழுவதும் மிகவும் மங்கலான ஒளியில் வைக்கிறோம். பின்னர் அவர்களுக்குப் பிரகாசமான ஒளி தூண்டுதல் வழங்கப்படுகிறது," என்கிறார் அவர். அந்தச் சூழ்நிலையில், நீல நிற ஒளி மனிதர்களைப் பாதிக்கிறது, ஆனால் அது மனித வாழ்க்கையின் சாதாரண அனுபவத்தைப் பிரதிபலிப்பதில்லை.
பல ஆண்டுகளாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அலைபேசிகளில் உள்ள நீல ஒளி வடிகட்டிகளைப் பயன்படுத்திய பிறகு, திரைகள் இங்கு முதன்மையான குற்றவாளி அல்ல என்று சமீபத்திய அறிவியல் கூறுகிறது. உதாரணமாக, 11 வெவ்வேறு ஆய்வுகளின் சமீபத்திய மதிப்பாய்வு, திரைகளிலிருந்து வரும் ஒளி தூக்கத்தை அதிகபட்சமாக சுமார் ஒன்பது நிமிடங்கள் மட்டுமே தாமதப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. இது பூஜ்ஜியம் அல்ல, ஆனால் வாழ்க்கையையே மாற்றும் அளவிற்கானதும் இல்லை.
அலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் திரைகளால் உமிழப்படும் நீல ஒளியின் அளவு சூரியனிடமிருந்து நாம் பெறும் நீல ஒளியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. ஓர் ஆய்வின்படி, டிஜிட்டல் சாதனங்களிலிருந்து 24 மணிநேரம் கிடைக்கும் நீல ஒளி, வெளியில் செலவிடும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்குச் சமம். மற்ற ஆய்வுகள், இது நமது தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் அளவைப் பாதிக்கும் அளவுக்குப் போதுமானது அல்ல என்பதைக் காட்டுகின்றன.
அப்படியானால் நான் ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறேன்? ஜெய்ட்ஸர் மற்றும் பிறர் என்னிடம் கூறுகையில், நீல ஒளி மற்றும் பிற ஒளிகள் எனது தூக்க நேரத்தைக் கெடுக்கப் பல வழிகள் உள்ளன. நான் உண்மையிலேயே அந்த 'நீல அரக்கனை' எதிர்கொள்ள விரும்பினால், அதற்கு ஒரு தீவிரமான வாழ்க்கை முறை மாற்றம் தேவைப்படும்.

ஓரளவு நீலம்
எனது சோதனையின் முதல் நாளில் சூரியன் மறைந்தபோது நான் வெளியில் உணவகத்தில் இருந்தேன். இரவு 8:30 மணியளவில், நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னேன். ஒளியிடமிருந்து மறைய வேண்டிய நேரம் அது. தூக்க நிபுணர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆலோசனையின் அடிப்படையில், எனது தீவிரமான படுக்கை நேரத் தயாரிப்புகள் நான் போர்வையை இழுத்துப் போர்த்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன.
எனது வழக்கம் ஒரு அசாதாரணமான கண்ணாடியுடன் தொடங்குகிறது. நீங்கள் சாதாரண கண்ணாடி அணிபவராக இருந்தால், நீல ஒளியை வடிகட்டுவதாக உறுதியளிக்கும் சிறப்பு பூச்சுகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அவை பெரிய அளவில் எதையும் செய்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையான நீல ஒளியைத் தடுக்கும் கண்ணாடிகள் கவர்ச்சியாக இருக்காது. உண்மையைச் சொன்னால், அவை பெரும்பாலான மக்களுக்கு ஒரு நடைமுறை தீர்வும் அல்ல.
நல்ல கண்ணாடிகளில் அடர் ஆரஞ்சு, சிவப்பு அல்லது ஆம்பர் நிற லென்ஸ்கள் இருக்கும், அவை ஒளியைப் பக்கவாட்டிலிருந்து நுழைய விடாமல் உங்கள் கண்களை முழுமையாகச் சுற்றியிருக்கும். தீவிர உற்பத்தியாளர்கள் எவ்வளவு நீல ஒளி உள்ளே நுழைகிறது என்பதைக் காட்டும் 'ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வை' வழங்குகிறார்கள். "உங்களால் அதிக நீலத்தைப் பார்க்க முடியாது," என்கிறார் நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தூக்கம் மற்றும் குரோனோபயாலஜி ஆராய்ச்சி குழுவின் இயக்குனர் ஹவார்ட் கல்லெஸ்டாட்.
என்னிடம் உள்ள அந்தச் சிறப்பு நீல ஒளி கண்ணாடிகள், கண் பாதுகாப்பு தேவைப்படும் லேசர்களுடன் (lasers) வேலை செய்பவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. நான் அவற்றை அணிந்துகொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன். தெருவில் ஒரு நீல நிற நியான் போர்டு இருந்தது. நான் கண்ணாடியை அணிந்ததும், அந்த போர்டின் ஒளி மறைந்துவிட்டது. நினைத்தது நடந்தது.
பத்திரிகை துறைக்காக நான் செய்யும் தியாகங்களை நினைத்துக்கொண்டே சோஃபாவில் அமர்ந்தேன். இன்ஸ்டாகிராமைப் பார்த்தேன். அது... ஆரஞ்சு நிறத்தில் தெரிந்தது. ஒளி எனது தூக்கத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் எனது நோக்கம் என்பதால், எனது அலைபேசி, டிவி அல்லது கணினிப் பழக்கங்களில் நான் எதையும் மாற்றவில்லை. ஆனால் அந்தக் கண்ணாடி ஆரம்பம் மட்டுமே.
"உங்கள் குடியிருப்பை ஒரு குகையாக மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் கல்லெஸ்டாட். "ஒளி உள்ளே வருவதைத் தடுத்து மெழுகுவர்த்தியைப் பயன்படுத்துங்கள்." நவீன எல்இடி விளக்குகள் ஒரு டன் நீல ஒளியை உருவாக்குகின்றன. பழைய கால இழை விளக்குகள் மிகக் குறைவாகவே உருவாக்குகின்றன, ஆனால் மெழுகுவர்த்திகளில் கிட்டத்தட்ட நீல ஒளியே கிடையாது.
நியூயார்க்கில் நான் வசிக்கும் பகுதி எப்போதுமே இருட்டாக இருப்பதில்லை. எனவே எனது ஜன்னல்களைக் கருப்புத் திரைகளால் மூடினேன், எனக்கும் மையிருட்டுக்கும் இடையில் எனது அலைபேசியும் சில மெழுகுவர்த்திகளும் மட்டுமே இருந்தன. எனக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. இது ஒரு நீண்ட இரு வாரங்களாக இருக்கப்போகிறது.

பட மூலாதாரம், Getty Images
நீல ஒளியிலிருந்து உங்களை எப்படி விடுவிப்பது?
நாள் முழுவதும் நீங்கள் பெறும் ஒளியின் அளவுதான் முக்கியம் என்பதில் நிபுணர்கள் உடன்படுகிறார்கள். உகந்த தூக்கத்திற்கு, உங்களுக்குக் காலையில் அதிக வெளிச்சமும், இரவில் மிகக் குறைந்த வெளிச்சமும் தேவை. நீல ஒளி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், ஒட்டுமொத்த ஒளியின் அளவுதான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கான தீர்வு நீங்கள் எழுந்திருக்கும் தருணத்திலிருந்தே தொடங்குகிறது. எனது சோதனையின் போது ஒவ்வொரு காலையிலும், 1980-களின் அறிவியல் புனைகதை படத்திலிருந்து வந்த கருவி போன்ற ஒரு விளக்குக்கு முன்னால் நான் அமர்ந்தேன். நான் காபி குடிக்கும்போது அது எனது முகத்தில் பிரகாசமான ஒளியைப் பாய்ச்சுகிறது. அந்த விளக்கு சிறியது, எனவே நான் அதற்கு எவ்வளவு நெருக்கமாக அமர முடியுமோ அவ்வளவு நெருக்கமாக அமர வேண்டும் என்று கல்லெஸ்டாட் கூறுகிறார். இது மகிழ்ச்சியாக இல்லை. இந்த விளக்கு பருவகால மனச்சோர்வைச் சரிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒளியின் வெப்பநிலை குறிப்பாக நீலமாக இருக்கும், இது காலையிலேயே கிடைக்கும்போது விழிப்புணர்வை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது அன்றிரவு நீல ஒளியை எதிர்கொள்ள எனது கண்களைத் தயார்படுத்துகிறது.

பட மூலாதாரம், Hana Mendel
"பகல் நேரத்தில் உங்களுக்கு எவ்வளவு அதிக ஒளி கிடைக்கிறதோ, அவ்வளவு குறைவாகவே மாலையில் ஒளியின் தாக்கம் இருக்கும்," என்கிறார் ஜெய்ட்ஸர். பெருந்தொற்றுக்கு முந்தைய உலகம் மக்களை அவர்கள் உணர்ந்ததை விட அதிக ஒளிக்கு ஆளாக்கியது. அலுவலகத்திற்குச் செல்லும்போது சூரிய ஒளி, அலுவலகத்தின் பிரகாசமான புளோரசன்ட் விளக்குகள், மதிய உணவுக்கு நடப்பது எனப் பல இருந்தன. இப்போது, நம்மில் பலரும் படுக்கையிலிருந்து எழுந்து உறங்கும் வரை அதே விளக்கு நிலைகளின் கீழ் அமர்ந்திருக்கிறோம். நமது உடல்களால் பகலுக்கும் இரவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல முடிவதில்லை.
எந்த விளக்கையும் விட வீட்டை விட்டு வெளியேறுவது இதை வேகமாகச் சரிசெய்யும். மேகமூட்டமான ஒரு நாளில் கூட, நீங்கள் சுமார் 10,000 லக்ஸ் (ஒளி செறிவின் அளவு) பெறுவீர்கள் என்கிறார் ஜெய்ட்ஸர். ஒரு பிரகாசமான வெயில் நாளில் இது 1,00,000 லக்ஸ்-ஐ எட்டும். ஒப்பிடுகையில், உங்கள் வரவேற்பறையில் இது சுமார் 100 லக்ஸ் மட்டுமே இருக்கும். (உங்கள் அலைபேசி அதிகபட்சமாக 50-80 லக்ஸ் மட்டுமே தரும், பிரகாசத்தைக் குறைக்கும்போது இது இன்னும் குறையும் என்கிறார் ஜெய்ட்ஸர்).
"முடிந்தால் வெளியே செல்லுங்கள், தேவைப்பட்டால் விளக்கை உபயோகியுங்கள்," என்கிறார் கல்லெஸ்டாட். காலையில் 30 நிமிடம் நடப்பது கூட உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் (சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்). மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் வெளியே செல்ல முடிந்தால், அதுவும் வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜெய்ட்ஸர் கூறுகிறார். இது உங்கள் உடலியக்க கடிகாரத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவராக இருந்தால், மற்றொரு குறிப்பை முயற்சிக்கலாம். பகலில் உங்கள் விளக்குகளைப் பிரகாசமாக எரிய விடுங்கள் மற்றும் மாலையில் அவற்றை அணைக்கத் தொடங்குங்கள். "ஒளி வெளிப்பாட்டின் உண்மையான ரகசியம் முரண்பாடு தான்," என்கிறார் ஜெய்ட்ஸர்.
எனவே, தூக்கத்தை ஊக்குவிக்கும் இயற்கை சூரிய ஒளியிடமிருந்து விலகி நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி திரைகளை பார்த்துக் கொண்டிருந்தால், அது கெட்ட செய்திதான். ஆனால் அந்தத் திரைகளிலிருந்து வரும் நீல ஒளி நமது வாழ்க்கை முறையின் பரந்த சிக்கலுக்கு மிகக் குறைவாகவே பங்களிக்கிறது. உண்மையான பிரச்னை, படுக்கைக்கு முன் நமது அலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளில் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் என்கிறார் ஜெய்ட்ஸர்.
"ஒளியை விட, மக்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதுதான் அவர்களை விழித்திருக்க வைக்கிறது," என்கிறார் ஜெய்ட்ஸர். இது நீங்கள் ஒளியை எவ்வளவு உணர்கிறீர்கள் என்பதையும் பொறுத்தது - உங்களை விட நான் அதிக அல்லது குறைந்த உணர்திறன் கொண்டவனாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Isa Zapata
எனது நீல காலம்
எனது ஓய்வைக் கண்காணிக்க நான் ஒரு தூக்கத்தை கண்காணிக்கும் கருவி(ஸ்லீப் டிராக்கரைப்) பயன்படுத்துகிறேன். இது அறிவியல் ரீதியாகத் துல்லியமானது அல்ல, ஆனால் ஒரு தோராயமான குறியீடு. எனது சோதனையின் போது எனது தூக்கத்தின் தரம் பெரிய அளவில் மாறவில்லை. ஆனால் சில வேறுபாடுகளை நான் கவனித்தேன். இரண்டாவது வாரத்தின் முடிவில், சரியான நேரத்திற்குப் படுக்கைக்குச் செல்ல நான் சற்று அதிக உந்துதலை உணர்ந்தேன். தூங்குவதும் எளிதாகத் தெரிந்தது. எனது சோதனையின் முடிவில் நான் தூங்கிய நேரத்தின் அளவு மாறவில்லை, ஆனால் நான் தூங்கும் நேரமும் காலையில் எழுந்திருக்கும் நேரமும் சற்று சீராக இருந்தது. நான் நீல ஒளியைத் தடுத்ததால் இது நடந்ததா? சொல்வது கடினம், ஆனால் இது ஒரு பெரிய வெற்றியாகத் தோன்றியது.
நான் உங்களிடம் சொல்லக்கூடியது, நான் எனது மெழுகுவர்த்தி ஒளியுடனான மாலைப் பொழுதுகளை எதிர்பார்க்கத் தொடங்கினேன். இதுவே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஏதோ ஒன்று "படுக்கைக்கு முந்தைய வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறும்போது, அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் உடலுக்கு நினைவூட்ட இது ஒரு வலுவான உளவியல் குறியீடாகச் செயல்படும்," என்கிறார் ஜெய்ட்ஸர்.
அலைபேசியில் நீல ஒளியைக் குறைக்கும் ஆட்டோ-டிம்மிங் வசதிகளும் இதைப் போன்றதே. "இது உண்மையில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாது, ஆனால் இது ஒரு பாவ்லோவியன் கண்டிஷனிங் குறியீடாக (ஒரு பழக்கமாக மாறி, மூளைக்கு சமிக்ஞை கொடுக்கும் ஒரு குறியீடு) சிலருக்குச் செயல்படும். திரையின் நிறம் மாறும்போது அல்லது நீங்கள் கண்ணாடியை அணியும்போது, படுக்கைக்குத் தயாராக வேண்டிய நேரம் இது என்பதை உங்கள் மூளை புரிந்துகொள்ளத் தொடங்குகிறது."
நீங்கள் என்னுடன் தங்குவதற்கு வந்தால், நான் அந்த நீலத் தடுப்பு கண்ணாடிகளை அணிந்திருப்பதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். அவற்றை விட்டது எனக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது, ஆனால் நான் மெழுகுவர்த்திகளைத் தொடர்ந்து பயன்படுத்தக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































