ஞானேஷ்குமார் பதவி விலக கோரி முக்கிய நகரங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டம் - 42 முன்னாள் நீதிபதிகளின் கடிதம் கூறுவது என்ன?

'4 பேர் கட்டுப்பாட்டில் இந்தியா': டெல்லியில் எதிர்க்கட்சிகள் மூன்றாவது நாளாக போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்தி வரும் போராட்டம் அக்டோபர் 8-ஆம் தேதி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் 'இந்தியா' (INDIA) கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மதிய உணவுக்குப் பிறகு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூன்று பேருந்துகளில் ஏறி காந்தி நினைவிடமான ராஜ்காட் நோக்கிச் சென்றனர். அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் உறுதியளித்துள்ளன. சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே)) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஆகியவற்றின் எம்.பி.க்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராஜ்காட் புறப்படுவதற்கு முன் ராகுல் காந்தி பேசுகையில், "மாநிலங்களவை மற்றும் மக்களவையைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்புகிறோம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக எங்களைப் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. முதல் நாளில், தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முன்பாகவே நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். அதன்பிறகு, நாங்கள் ஜந்தர் மந்தருக்குச் செல்வதாகக் கூறினோம். அங்கேயும் செல்லவிடாமல் நாங்கள் தடுக்கப்பட்டோம்; எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டனர்," என்றார்.

"நரேந்திர மோதி, அமித் ஷா, மோகன் பகவத் மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் ஒரு குற்றவியல் சதி மூலம் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர். அவர்கள் அரசியலமைப்பைச் சிதைத்துவிட்டனர்; வாக்குகளைத் திருடிவிட்டனர். இந்த நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்பது எங்கள் உறுதிமொழி," என்று குற்றம் சாட்டினார்.

'4 பேர் கட்டுப்பாட்டில் இந்தியா': டெல்லியில் எதிர்க்கட்சிகள் மூன்றாவது நாளாக போராட்டம்

3வது நாளாக நீடிக்கும் போராட்டங்கள்

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்) நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

தேர்தல் செயல்முறை மற்றும் வாக்காளர் பட்டியலின் வெளிப்படைத்தன்மை குறித்த தங்கள் கவலைகளுக்குப் பதில் அளிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டங்களின்போது காவல்துறையினருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அக்டோபர் 6-ஆம் தேதி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட பல எம்.பி.க்கள் அகில இந்தியா வானொலி நிலைய வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்டோபர் 7 அன்று, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜந்தர் மந்தர் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர்; ஆனால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, பல தலைவர்களைக் கைது செய்து தடுத்து வைத்தனர். அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளது. காவலர்களைத் தாக்கியதாகவும், அரசுப் பணிகளைத் தடுத்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

'4 பேர் கட்டுப்பாட்டில் இந்தியா': டெல்லியில் எதிர்க்கட்சிகள் மூன்றாவது நாளாக போராட்டம்

குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்கும் எதிர்க்கட்சிகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கிடையில், வியாழக்கிழமை ராஜ்காட்டில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் டெல்லி காவல்துறை அங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ராஜ்காட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏராளமான காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினரும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் நேரம் கோரியுள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அளித்துள்ள தகவல்படி, 'எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கடிதத்தை அனுப்பினர்; பின்னர் அக்டோபர் 5-ஆம் தேதி தங்கள் தலைவர்களின் பெயர்களுடன் மீண்டும் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். அவர்கள் அக்டோபர் 8 அல்லது 9-ஆம் தேதிகளில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.'

ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை தங்கள் போராட்டத்தைத் தொடரப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

மறுபுறம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் நிராகரித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்துச் சீரமைப்பதற்கான ஒரு நடைமுறைதான் 'எஸ்ஐஆர்' என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது; ஆனால், எதிர்க்கட்சிகள் இது குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றன.

பெங்களூருவில் சிஜேபி போராட்டம்

பெங்களூருவில் சி.ஜே.பி நடத்திய போராட்டம். நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் யூடியூபர் துருவ் ரத்தீ பங்கேற்பு
படக்குறிப்பு, பெங்களூருவில் சி.ஜே.பி நடத்திய போராட்டம். நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் யூடியூபர் துருவ் ரத்தீ பங்கேற்பு

அக்டோபர் 8 அன்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராகவும், 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஃப்ரீடம் பார்க் வளாகத்தில் சி.ஜே.பியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். மேடையில் பிரபல யூடியூபர் துருவ் ரத்தீ மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

"எஸ்ஐஆர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று காக்ரோச் ஜனதா கட்சி வலியுறுத்தியது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய துருவ் ரத்தீ, "மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார், அவர்களின் பெயர்கள் என்ன, அவர்களின் முகவரி என்ன என்பதை யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட ஞானேஷ் குமாருக்கு ஏற்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "உச்சநீதிமன்ற உத்தரவு வரும் வரை ஞானேஷ் குமார் இந்தத் தகவல்களை மறைத்தே வைத்திருந்தார். வேறு வழியில்லாமல் வற்புறுத்தப்படும் வரை தேர்தல் ஆணையம் எதையும் திறந்த மனதோடு பேசுவதில்லை. அங்கு வெளிப்படைத்தன்மையும் இல்லை, பொறுப்புக்கூறலும் இல்லை" என்றும் சாடினார்.

பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் பேரணி

 தேஜஸ்வி யாதவ்
படக்குறிப்பு, பாட்னாவில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கண்டனப் பேரணியின்போது, காவல்துறையினர் அமைத்திருந்த பாதுகாப்பு பேரிகார்டில் ஏறி ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பிகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தலைமையில் பாட்னாவில் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற்றது.

'இந்தியா' கூட்டணியின் அங்கமான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில், பாட்னாவில் உள்ள தியாகிகள் நினைவுச் சின்னத்தில் இந்த பேரணி தொடங்கியது. ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்ல முயன்ற கட்சியினரைத் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்தப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் அமைத்திருந்த பாதுகாப்பு தடுப்புகளில் தேஜஸ்வி யாதவ் ஏறினார்.

"பாதுகாப்பு தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்ற அவர்களைக் காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்" என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் பேசுகையில், "போலி தேர்தல்களை நடத்தி பாஜக ஆட்சிக்கு வருவதற்கான வழியை ஞானேஷ் குமார் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இப்போது உண்மை வெளிவந்துவிட்ட நிலையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் நியாயமான தேர்தல்களை உறுதி செய்யவும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான களம் அமைவதைத் உறுதி செய்யவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக 42 முன்னாள் நீதிபதிகள் கடிதம்

தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், 42 முன்னாள் நீதிபதிகள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக 'பிடிஐ' செய்தி முகமை தெரிவிக்கிறது.

தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பிற அரசியலமைப்பு நிறுவனங்களை பலவீனப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து இந்தக் கடிதத்தில் முன்னாள் நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள முன்னாள் நீதிபதிகள், எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி சுமத்தப்படும் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக பிடிஐ குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பு நிறுவனங்களை மீண்டும் மீண்டும் "திருடர்கள்" மற்றும் "கூட்டாளிகள்" என்று முத்திரை குத்துவது, ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

"அரசியலமைப்பை விமர்சிப்பது ஜனநாயக உரிமைதான், ஆனால் அவதூறு செய்வது முறையல்ல" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு