பாகிஸ்தான் தயாரித்துள்ள ஃபதே-4 இஆர் குரூயிஸ் ஏவுகணை எவ்வளவு தூரம் தாக்கும்? சிறப்பு அம்சங்கள் விவரம்

 ஃபதே-4 குரூயிஸ் ஏவுகணை
படக்குறிப்பு, ஃபதே-4 குரூயிஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது (மாதிரிப் புகைப்படம்).
    • எழுதியவர், அசாத் சோஹைப், உமைர் சலீமி
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபதே-4 குரூயிஸ் ஏவுகணையின் புதிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய பதிப்பை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தரையிலிருந்து ஏவப்படும் ஒரு குரூயிஸ் ஏவுகணை ஆகும்.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ஐஎஸ்பிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணையில் மிகவும் மேம்பட்ட பறக்கும் தொழில்நுட்பம் மற்றும் திசையைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்பிஆர் கூற்றுப்படி, இந்த ஏவுகணையால் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கி, மிகப்பெரிய அளவில் அழிவை ஏற்படுத்த முடியும்.

இந்தச் சோதனையின்போது, ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் தொழில்நுட்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணையின் துல்லியம் மற்றும் திறனை அதிகரிப்பதற்காக இந்த அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஐஎஸ்பிஆர் தகவல்படி, பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், இந்த ஏவுகணையை உருவாக்கிய நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுடன் இணைந்து இந்தச் சோதனையை நேரில் பார்வையிட்டனர்.

பாகிஸ்தான் ராணுவ அறிக்கையின்படி, இந்த ஏவுகணை தாழ்வாக பறந்து செல்லக் கூடியது.

இதன் காரணமாக, எதிரிகளின் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றிவிட்டு இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்க முடியும்.

ஃபதே-1, ஃபதே-2 மற்றும் ஃபதே-3 என ஃபதே வகையைச் சேர்ந்த மூன்று ஏவுகணைகள் ஏற்கெனவே பாகிஸ்தானிடம் உள்ளன.

இந்த ஆண்டு மே 7-ஆம் தேதி, ஃபதே-3 க்ரூஸ் ஏவுகணையை ஐஎஸ்பிஆர் முதன்முறையாக ஒரு காணொளியில் காட்சிப்படுத்தியது. அப்போது, இந்த ஏவுகணை இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையுடன் ஒப்பிடப்பட்டது.

டொராண்டோவைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை செய்தி மற்றும் ஆய்வு அமைப்பான குவா-வின் கூற்றுப்படி, ஃபதே-1 வகை ஏவுகணையை பாகிஸ்தான் முதன்முறையாக 2021-ஆம் ஆண்டு சோதனை செய்தது.

இந்த ஏவுகணை 140 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் திறன் கொண்டிருந்தது.

2024-ஆம் ஆண்டு, ஃபதே-2 ஏவுகணையை பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தில் சேர்த்தது. இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக்கூடியது. இதையடுத்து, இந்த ஆண்டு மே மாதம் ஃபதே-3 ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டது.

'தாழ்வாக பறந்து செல்லும்'

2024-ஆம் ஆண்டு, ஃபதே-2 ஏவுகணையை பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தில் சேர்த்தது. இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக்கூடியது. இதையடுத்து, இந்த ஆண்டு மே மாதம் ஃபதே-3 ஏவுகணை முதல்முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
படக்குறிப்பு, புதிய ஃபதே-4 ஏவுகணையால் 330 கிலோகிராம் வரையிலான வெடிபொருளைச் சுமந்து செல்ல முடியும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, ஃபதே ரக ஏவுகணைகளை உருவாக்குவதில் பாகிஸ்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக பாகிஸ்தான் விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் கமடோர் ஓவைஸ் கான் தெரிவித்துள்ளார்.

புதிய ஃபதே-4 ஏவுகணை அதிகபட்சமாக 330 கிலோ எடையுள்ள வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று அவர் பிபிசி நியூஸ் உருதுவிடம் தெரிவித்தார்.

மின்னணு குறுக்கீடுகள் இருந்தபோதிலும், ஏவுகணையின் வழிகாட்டுதல் அமைப்பு தானியங்கி முறையில் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

ஜாமிங் என்பது மின்னணு குறுக்கீடுகளை உருவாக்கி, ஏவுகணையின் வழிசெலுத்தல் அமைப்பைச் செயலிழக்கச் செய்வதாகும்.

ஓவைஸ் கான் கூறுகையில், "இதன் வேகம் மேக் 0.7, அதாவது மணிக்கு 864 கிலோமீட்டர் எனக் கூறப்படுகிறது. இது சப்-சோனிக் ஏவுகணையாகும். அதாவது, இதன் வேகம் ஒலியின் வேகத்தைவிட குறைவாகும். இதன் துல்லியம் சுமார் 5 மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

"நீண்ட தொலைவுகளுக்கு குறைந்த உயரத்தில் பறக்கச் செய்தும் இது சோதனை செய்யப்பட்டுள்ளது. எதிரியின் ரேடார் அமைப்பை ஏமாற்றிவிட்டு, இலக்கைச் சென்றடையும் திறன் தான் இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்."

அவர் கூறுகையில், "எதிரியின் ரேடார் வலையமைப்பைத் தவிர்ப்பதற்காக, இந்த ஏவுகணையால் தரையில் இருந்து வெறும் 50 மீட்டர் உயரத்தில் பறக்க முடியும்" என்றார்.

ஃபதே-4 இன் புதிய பதிப்பு

பாதுகாப்புத் துறை விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் பிலால் ஹுசைன் கான் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள காணொளியில், இது ஃபதே-4 ஏவுகணையின் புதிய பதிப்பான ஃபதே-4 ஈஆர் (ER) என்பது தெரியவருகிறது.

"முந்தைய ஃபதே-4 ஏவுகணையைவிட ஃபதே-4 ஈஆர் (ER) அளவில் பெரிதாகத் தெரிகிறது" என்று அவர் பிபிசி நியூஸ் உருதுவிடம் தெரிவித்தார்.

இந்தப் புதிய பதிப்பு முந்தையதைவிட அதிக தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்பதை ஐஎஸ்பிஆர் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், அதன் தாக்கும் தூரம் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் கூறவில்லை.

பிலால் ஹுசைன் கூறுகையில், "எங்களது சமீபத்திய செய்தி அறிக்கைகளில், நீண்ட தொலைவு செல்லக்கூடிய குரூயிஸ் ஏவுகணைகளைப் பெறுவதில் பாகிஸ்தான் ராணுவம் பணியாற்றி வருவதாக முடிவு செய்துள்ளோம்" என்றார்.

"குறிப்பாக, 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன."

அவரது கூற்றுப்படி, "தற்போதைய ஃபதே-4 ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 750 கிலோமீட்டர். இதற்கு முன்பு, பாபர்-1 ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 900 கிலோமீட்டர் எனக் கூறப்பட்டது."

"எனவே, ஃபதே-4 ஈஆர் (ER)-ன் உண்மையான தாக்குதல் தொலைவை உறுதிப்படுத்த முடியாது."

"ஆனால், அதன் தாக்குதல் தொலைவு 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கருதுவது நியாயமானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்."

ஃபதே-4 ஈஆர் (ER)-ன் தாக்குதல் தொலைவை 1,200 முதல் 1,500 கிலோமீட்டர் வரை அதிகரிப்பது பாகிஸ்தான் ராணுவத்தின் அடுத்தக்கட்ட சாத்தியமான இலக்காக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

பிலால் ஹுசைனின் கூற்றுப்படி, தாக்குதல் தொலைவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஃபதே-4 ஏவுகணையின் கட்டமைப்பிலும் சில முக்கியமான மாற்றங்கள் காணப்படுகின்றன.

"அதன் சுழலும் இறக்கைகள் ஏவுகணையின் உள்ளே பொருத்தப்படுவதற்குப் பதிலாக, வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன" என்று அவர் கூறுகிறார்.

"இதனால், முன்பைவிட ஏவுகணையைத் தயாரிப்பது எளிதாக இருக்கலாம். அதன் செலவையும் குறைக்க முடியும்."

"தாக்குதல் தொலைவை அதிகரிப்பதற்காக, அதிக எரிபொருளைச் சேமிக்கும் வகையில் ஏவுகணையின் கட்டமைப்பும் பெரிதாக்கப்பட்டுள்ளது."

பிலால் ஹுசைன் கூறுகையில், "இது சப்-சோனிக் குரூயிஸ் ஏவுகணையாகும். நீண்ட தொலைவில் உள்ள தரை இலக்குகளைத் தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது."

"இதன் பங்கு ஃபதே-1, ஃபதே-2 மற்றும் ஃபதே-3 ஆகிய ஏவுகணைகளிலிருந்து வேறுபட்டது. இது நீண்ட தொலைவு தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும்."

எதிர்கால மோதல்களில் குரூயிஸ் ஏவுகணைகள் என்ன பங்கை வகிக்கும்?

பிலால் ஹுசைன் கூறுகையில், “இது சப்-சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். நீண்ட தொலைவில் உள்ள தரை இலக்குகளைத் தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.”
படக்குறிப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் சூப்பர்சோனிக் குரூயிஸ் ஏவுகணைகள் இருப்பதாக பாதுகாப்புத் துறை நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஏவுகணைகள் எதிர்காலப் போர்களை, கடந்த காலப் போர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக மாற்றக்கூடும். சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பறக்கக்கூடியவை.

பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பிரிகேடியரும், பாதுகாப்புத் துறை நிபுணருமான முனைவர் துக்ரல் யாமின், கடந்த மே மாதம் பிபிசியின் உமைர் சலீமியிடம் கூறுகையில், குரூயிஸ் ஏவுகணைகள் ரேடாரின் கண்காணிப்பில் சிக்காமல் இருக்க முடியும் என்றார்.

நீண்ட தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இதைச் செய்ய முடியாது.

குரூயிஸ் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் வேகத்தில் செல்லக்கூடியவை என்றாலும், அவற்றின் தாக்குதல் தொலைவு சற்று குறைவாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

யுக்ரேன் போர் மற்றும் மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், தற்போது போர்களில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவுகணைப் படை உருவாக்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் படைகள் பல ஏவுகணைகளைச் சோதனை செய்துள்ளன.

ஏவுகணைப் படையை உருவாக்கியதன் நோக்கம், பாகிஸ்தானின் மூலோபாய அணு ஏவுகணைகளை வழக்கமான ஏவுகணைகளில் இருந்து தனியாக வைத்திருப்பதுதான் என்று முனைவர் துக்ரல் யாமின் விளக்குகிறார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "போரில் பயன்படுத்தப்படும் வழக்கமான ஏவுகணைகள் தனியாகப் பிரிக்கப்பட்டன. இதனால், அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவுகளை விரைவாகவும் எளிதாகவும் எடுக்க முடியும்" என்றார்.

துல்லியமான எதிர் தாக்குதல்

கான்பெரா தேசியப் பல்கலைக்கழகத்தின் மூலோபாயம் மற்றும் பாதுகாப்புத் துறை பேராசிரியர் முனைவர் மன்சூர் அகமது, 2025-ஆம் ஆண்டு மே மாதம் பிபிசி நியூஸ் உருதுவின் முனாஸா அன்வரிடம் கூறுகையில், ஃபதே ஏவுகணை என்பது பாகிஸ்தானின் புதிதாக உருவாக்கப்பட்ட நவீன ஆயுதம் என்றார்.

இந்த ஏவுகணைகள் மிகவும் துல்லியமான எதிர்த் தாக்குதல்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் இலக்குகளாக விமான நிலையங்கள், ராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள், படைகளுக்கான விநியோகப் பாதைகள், விநியோக டேங்கர்கள் மற்றும் எதிரிகளின் முன்களத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பீரங்கிகள் ஆகியவை இருக்கலாம்.

முனைவர் மன்சூரின் கூற்றுப்படி, ஃபதே வரிசை ஏவுகணைகள் பாகிஸ்தானின் மிகவும் பயனுள்ள ஏவுகணை அமைப்பாகும்.

எதிரியின் முக்கியமான பாதுகாப்பு இலக்குகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, இது விமானப்படையுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஏவுகணைகளின் மிக முக்கியமான அம்சம், எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதல் வரம்புக்கு வெளியே இருந்தபடியே அவற்றை ஏவ முடியும் என்பது தான் என்று அவர் கூறினார்.

இது "ஸ்டாண்ட்-ஆஃப் ரேஞ்ச்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணை அமைப்புகளில் "தாக்கிவிட்டு நகர்தல்" (shoot and scoot) திறனும் உள்ளது. அதாவது, ஏவுகணையை ஏவிய உடனேயே அதை வேறு இடத்துக்கு நகர்த்த முடியும்.

இதன் மூலம் எதிரிகளின் தாக்குதலில் இருந்து அவை தப்பிக்க முடியும். அவற்றை விரைவாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவதால், அவற்றைக் குறிவைப்பது அல்லது இடைமறிப்பது மிகவும் கடினமாகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு