'ரூ.80க்கு விற்ற சாப்பாடு தற்போது ரூ.120' - அதிகரிக்கும் பணவீக்கம் தமிழக மக்களை எப்படி பாதிக்கிறது?

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"கடந்த ஜூன் மாதத்தில் முழு சாப்பாடு 80 ரூபாய்க்கு கொடுத்து வந்தோம். அரிசி விலை உயர்வால் 100 ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது முக்கியமான சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் ஒரு முழு சாப்பாட்டை 120 ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது."

புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவகம் நடத்தி வரும் முருகேசன் என்பவரின் கருத்து இது.

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெவ்வேறு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்படுகிறது.

உணவகங்களை நம்பி இருப்பவர்கள் தொடங்கி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவதை பல தரப்பினரிடம் பிபிசி தமிழ் பேசியதிலிருந்து அறிய முடிகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களில் சில்லறை பணவீக்கத்திலும் உணவுப் பொருட்களின் பணவீக்கத்திலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக சமீபத்திய மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதத்திற்கான தற்காலிக தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் 6.81 சதவிகிதமாகவும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 10.62 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?

த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் முதலிடம் பிடித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் செல்வதை கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தேசிய அளவிலான போக்கு என்று கூறும் பொருளாதார நிபுணர் மற்றும் பேராசிரியர் ஜோதி சிவஞானம், தற்போதைக்கு மாநில அளவிலான தரவுகளை தீவிரமான குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார்.

ஆனால் மாநில அளவிலான பணவீக்கத்திலும் தமிழ்நாடு அதிகமாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான கிருஷ்ணமூர்த்தி பிரபாகர்.

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தரவுகள் கூறுவது என்ன?

மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் தொடர்பான தரவுகளை வெளியிடுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக தரவுகளின்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.54 சதவிகிதமாக உள்ளது. இது கிராமப்புறங்களில் 6.08 சதவிகிதமாகவும் நகர்ப்புறங்களில் 4.88 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.83 சதவிகிதமாக இருந்த நிலையிலிருந்து செப்டம்பர் மாதம் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் உணவு விலை குறியீட்டின் அடிப்படையிலான, ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 7.74 சதவிகிதமாகவும் இருப்பது தெரியவந்தது. இது கிராமப்புறங்களில் 8.06 சதவிகிதமாகவும் நகர்ப்புறங்களில் 7.18 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, கோப்புப் படம்

தேசிய அளவில் தனிநபர் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு, இதர சரக்கு மற்றும் சேவைகள் மற்றும் உணவகங்கள் மற்றும் தங்கும் சேவைகளுக்கு அடுத்து உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் பணவீக்க விகிதம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உணவுப் பொருட்களில் வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் பணவீக்கம் அதிகமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்களில் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை) அதிக பணவீக்கத்தில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஓடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன.

உணவுப் பொருட்கள் பணவீக்கத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஓடிசா உள்ளன.

சாமானியர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் சென்னையில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் இவருக்கு மாதாந்திர உணவுச் செலவு ரூ.2,600 - ரூ.2,700 வரை இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களில் இது மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது ரூ.3,400 - ரூ.3,500 வரை வருகிறது.

"விடுதிக் கட்டணத்தை ஆண்டின் தொடக்கத்தில் மொத்தமாகச் செலுத்திவிடுவோம். ஆனால் உணவுக் கட்டணம் மாதமாதம் செலுத்த வேண்டும். அது 800 ரூபாய் வரை அதிகரித்தது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த விடுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி வருகின்றனர்.

மிகவும் அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வு தான் செலவீனங்களை அதிகரிப்பதாகக் கூறுகிறார் அந்த விடுதியின் மேலாளர் நாராயணன்.

"தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தான் கடந்த 6 மாதங்களில் கடுமையாக அதிகரித்துள்ளது. மற்ற காய்கறிகள் ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கின்றன. ஆனால் இந்தக் காய்கறிகள்தான் சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவதால் செலவீனங்களும் அதிகரித்துள்ளன. எங்கள் விடுதிக்கு தினசரி 50 கிலோ வெங்காயம் தக்காளி தேவைப்படுகிறது. அரிசியும் ஒரு மூட்டைக்கு ரூ.500 வரை அதிகரித்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மதுரையைச் சேர்ந்த முத்துவேல் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் வசித்து உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உணவகங்களில் விலை உயர்வால் அம்மா உணவகத்தை நாடிச் செல்வதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு மாதம் முழுவதும் விடாமல் வேலை செய்தால் சராசரியாக 25,000 ரூபாய் கிடைக்கும். இதில் தங்குமிடச் செலவு, வாகனத்திற்கான செலவு, வீட்டுக்கு அனுப்பும் பணம் என பலவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவுக்கென ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.150 ஒதுக்கி மாதம் 4,500 முதல் 5,000 ரூபாய்க்குள் உணவுக்கான செலவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் கடந்த சில நாட்களில் இட்லி, தோசை, சாப்பாடு என வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளின் விலை அதிகரித்துள்ளது. 70 ரூபாய்க்கு கிடைத்த முழு சாப்பாடு இன்று 100 ரூபாய் ஆகிவிட்டது. மாதத்திற்கு இதுவே ரூ.1000 கூடுதல் செலவு. இதனால் கடந்த 2 மாதங்களாக முடிந்தவரையில் உணவகங்களைத் தவிர்த்து அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டு வருகிறேன்," என்று தெரிவித்தார்.

பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

தேசிய அளவிலான காரணிகள் மற்றும் முடிவுகள் தான் பணவீக்கத்தை தீர்மானிப்பதால் மாநில வாரியான தரவுகளை தற்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார் ஜோதி சிவஞானம்.

தொடர்ந்து பேசிய அவர், "வட்டி விகிதம் உயர்வு, உற்பத்தி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறைந்தது, ரூபாயின் மதிப்பு சரிந்தது ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தான் தீர்மானிக்கிறது. அதனால் மாதாந்திர மாநில வாரியான தரவுகளை தற்போது பெரிதாக பார்க்க வேண்டியதில்லை. வருடாந்திர தரவுகளைத் தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும்." என்றார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் என்று கூறும் அவர் ரிசர்வ் வங்கி அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "உற்பத்தி மற்றும் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது நிற்கும். அதிகரித்த பணப் புழக்கமும் இதற்கு ஒரு காரணம். எனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தலாம்." என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் மற்றும் பேராசிரியர் ஜோதி சிவஞானம்

மாநில வாரியான தரவுகளிலும் தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி பிரபாகர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மாநிலத்தின் பல்வேறு பொருட்களின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து தான் பணவீக்கம் கணக்கிடப்பட்டுள்ளது. வழக்கமாக நகர்ப்புறங்களில் இது அதிகமாகவும் கிராமப்புறங்களில் குறைவாகவும் இருக்கும்.

ஆனால் இம்முறை கிராமப்புறங்களில் பணவீக்கம் அதிகமாக இருப்பதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் மக்களின் சேமிப்பும் செலவினங்களும் பாதிக்கப்படும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்ற செலவீனங்களைக் கட்டுப்படுத்துவார்கள். இந்தப் போக்கு அதைச் சார்ந்திருக்கக்கூடிய துறை மற்றும் தொழில்களையும் பாதிக்கலாம்," என்று தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் கிராமப்புறங்களில் 7.17 சதவிகிதமாகவும் நகர்ப்புறங்களில் 6.53 சதவிகிதமாகவும் உள்ளன.

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான கிருஷ்ணமூர்த்தி பிரபாகர்.

காய்கறிகளின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது?

கோயம்பேடு விற்பனையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் தற்போதைய நிலவரம் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.

அன்றாடம் எவ்வளவு காய்கறி வரத்து இருக்கிறதோ அதைப் பொருத்தே அன்றைய விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அவர் கூறினார். பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தான் அதிகம் உயர்ந்துள்ளதாக செந்தில்குமார் தெரிவிக்கிறார்.

"கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து விலை அதிகரித்து வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மகாராஷ்டிராவின் நாஷிக்கில் இருந்து தான் பெரும்பாலும் வெங்காயம் வருகிறது. ஆனால் தற்போது அந்த வரத்து குறைந்துள்ளது. மொத்த விற்பனை விலை கிலோவுக்கு அதிகபட்சம் 80 ரூபாய் ஆக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது 40 ரூபாயாக இருந்தது. பெரிய வெங்காயத்தின் சில்லரை விற்பனை விலை ரூ.120 வரை இருக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பெரிய வெங்காயத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே வேளையில் கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்களின் விலை சரிந்துள்ளது.

சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் அதிகபட்சமாக ரூ.140-க்கும் சில்லறை விற்பனையில் அதிகபட்சமாக ரூ.200-க்கும் விற்கப்படுவதாக செந்தில்குமார் தெரிவிக்கிறார்.

"தமிழ்நாட்டிலே விளையும் காய்கறிகளின் விலை சீராக உள்ளது, சிலவற்றின் விலை குறைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் விலை தான் ஏறியுள்ளது. தற்போது தட்டுப்பாட்டை சமாளிக்க ஆந்திராவிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்படுகிறது. இதனால் விலையேற்றத்தை சற்று கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் அவை விலை குறைவாக இருந்தாலும் சற்று தரம் குறைவாகவும் அதிக எண்ணெய் எடுக்கக்கூடியதாகவும் உள்ளது," என்கிறார் செந்தில்குமார்.

அடுத்தடுத்த மாதங்களில் நிலவரம் எப்படி இருக்கும்?

ஆனால் இது அசாத்தியமான போக்கு இல்லை என்று செந்தில்குமார் கூறுகிறார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் விலை அதிகரிக்கும். அதன்பிறகு குறையும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் விலை நிலையாக இருந்தது. தற்போது தான் அதிகரித்துள்ளது. மழை பொய்த்ததும் வெப்பமான காலநிலையும் இதற்கு ஒரு காரணம் தான். இந்த முறை காய்கறி வரத்து குறைந்தது தான் இதற்கு முக்கியமான காரணம். ஆனால் அடுத்து வரக்கூடிய குளிர்காலத்தில் வரத்து சீரடைந்து விலையும் சீரடையும் என நம்புகிறோம்." என்று தெரிவித்தார்.

அமைச்சரின் பதில் என்ன?

இந்தியாவின் பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பின்னணி என்ன?
படக்குறிப்பு, நிதியமைச்சர் மரிய வில்சன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக கருத்து பெற உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் வெங்கடரமனனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால் அவரின் கருத்தைப் பெற முடியவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், "இதில் பருவமழையின் தாக்கம் இருக்கிறது. ரூபாய் வீழ்ச்சியின் தாக்கமும் இருக்கிறது. மேற்கு ஆசியா போரின் தாக்கம் இருக்கிறது. இதெல்லாம் ஓர் அம்சம் தான். இந்தியா முழுவதும் இந்தப் பிரச்னை இருக்கிறது. வெளிநாட்டிலும் இது நடக்கிறது.

இங்கு வலுவான அரசு இருக்கிறது. பொதுமக்கள் மீது அக்கறை செலுத்தும் சிறந்த முதலமைச்சர் இருக்கிறார். அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார். துறை ரீதியான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்." என்று தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு