சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவை 5 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு – சிஜேபி கூறியது என்ன?

பட மூலாதாரம், @abhijeet_dipke
காக்ரோச் ஜனதா கட்சியின் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
போராட்டம் நடத்துவதற்கான இடமாக ஜந்தர் மந்தர் ரத்து செய்யப்பட்ட மறுநாளே, அங்கு நுழைய முயன்றதாகக் கூறி டெல்லி காவல்துறையினர் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
லைவ் லா செய்தியின்படி, டெல்லி சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இருவரையும் 5 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அசுதோஷும் சௌரவும் ஐந்து நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களது குற்றம் என்ன? ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியை காட்டியதுதான்'' என்றார்.
மேலும், "நரேந்திர மோதி, கொஞ்சமாவது துணிச்சலைக் காட்டுங்கள். எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதில் நீங்கள் இவ்வளவு உறுதியாக இருந்தால், கோழைத்தனமான உத்திகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளாமல், அவசரநிலையை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் துணிச்சலைக் காட்டுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் தேசியப் பொறுப்பாளர் அஜின்க்யா ஷிண்டே, "நானும் அசுதோசும் சௌரவ் தாசும் கட்சித் தொண்டர்கள் சிலருடன் ஜந்தர் மந்தருக்குச் சென்றோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாங்கள் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை காட்டி, 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிட்டோம். இதற்காக, சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட மோதி–ஷா அரசு சௌரவையும் அசுதோஷையும் ஐந்து நாட்கள் சிறையில் அடைத்துள்ளது. இன்று அசுதோஷின் பிறந்தநாள். அவரது பிறந்தநாளில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிட்டதற்காகவும் மூவர்ணக் கொடியை காட்டியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.'' என்றார்.

பட மூலாதாரம், @abhijeet_dipke
மேலும், "எங்கள் தலைவர்களான அசுதோஷ், சௌரவ் ஆகிய இருவரையும் ஐந்து நாட்கள் சிறையில் அடைத்தால் அவர்கள் அச்சமடைந்துவிடுவார்கள் என்று அரசு நினைத்தால், அது தவறான எண்ணம். அவர்கள் தலைநிமிர்ந்தபடியே சிறைக்குள் செல்கிறார்கள். தாங்கள் அஞ்சப்போவதில்லை என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்," என்று அஜின்க்யா ஷிண்டே கூறினார்.
இதற்கு முன்னதாக, ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜின்க்யா ஷிண்டே ஆகியோரை இன்று டெல்லி காவல்துறையினர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் கைது செய்ததாகக் காக்ரோச் ஜனதா கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்தார்.
"நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது," என்று ரத்னா சிங் குறிப்பிட்டார்.
மேலும், இரவு வெகுநேரம் வரை அவர்களது வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிகாலை 3 மணிக்கு தனியார் வேன் ஒன்றில் அவர்கள் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
"இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அவர்களின் மன உறுதி குறையவில்லை," என்று அவர் கூறினார்.
ஊடகங்களிடம் பேசிய ரத்னா சிங், "டெல்லி காவல்துறையினர் ஒரு குறிப்பிட்ட 'விதிமுறைப் புத்தகத்தின்' அடிப்படையில் செயல்படுவதை இப்போது பார்க்கிறோம். மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையில் அந்த விதிமுறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, காவல்துறையினர் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்," என்றார்.
"கிட்டத்தட்ட 24 மணி நேரம் கடந்தும் அவர்களை வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. தொடக்கத்தில், தாங்கள் ஏன் காவலில் வைக்கப்படுகிறோம் அல்லது கைது செய்யப்படுகிறோம் என்பதற்கான காரணங்கள்கூட அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் கைது செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டன." என்று அவர் கூறினார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, மூவரும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் இருப்பதைக் காட்டும் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "காக்ரோச் கட்சியைச் சேர்ந்த அஜின்க்யா, அசுதோஷ், சௌரவ் தாஸ் ஆகியோர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் உள்ளனர். எதுவும் அவர்களது மன உறுதியை உடைக்க முடியாது," என்று குறிப்பிட்டிருந்தார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செவ்வாய்க்கிழமை காலை ஜந்தர் மந்தருக்குள் தடுப்புகளை தாண்டிச் சென்றதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டனர்.
ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்துவதற்கான அதிகாரபூர்வ இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட மறுநாளே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
திங்களன்று டெல்லி காவல்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், நகரின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்துவதற்கு மூன்று புதிய இடங்கள் அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில், முன்பு போராட்டங்கள் நடத்துவதற்கான அதிகாரபூர்வ இடமாக இருந்த ஜந்தர் மந்தருக்கு அந்த அங்கீகாரம் நீக்கப்பட்டது.
குடிமக்களின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய இடத்துக்கு மாற்றாகப் பொருத்தமான இடங்களை அடையாளம் காண மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்ததாக அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் போராட்ட இடம் என்ற அங்கீகாரத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராரி மைதானம், ஷாதராவில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































