17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: காவல்துறை தேடுதல் வேட்டையில் என்கவுன்டர் - என்ன நடந்தது?

டெல்லி காவல்துறைக்கும் முக்கியக் குற்றவாளிக்கும் இடையே நடந்த என்கவுண்டரின்போது அவர் காயமடைந்தார். (கோப்புப்படம்)
படக்குறிப்பு, டெல்லி காவல்துறைக்கும் முக்கியக் குற்றவாளிக்கும் இடையே நடந்த என்கவுன்டரின்போது அவர் காயமடைந்தார். (கோப்புப்படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

டெல்லி கல்காஜி கோயில் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

என்கவுண்டருக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஆசிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அமர் காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட டி.எம். அலுவலக சாலை அருகே ஆசிப்பை காவல்துறைப் படை சுற்றி வளைக்க முயன்றபோது, அவர் காவல்துறையினரை நோக்கி மூன்று முறை சுட்டதாக காவல்துறையைக் மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

துப்பாக்கிச் சண்டையின் போது, தலைமைக் காவலர் ராஜேஷின் குண்டு துளைக்காத கவச உடையை ஒரு குண்டு தாக்கியது. தற்காப்புக்காகத் தலைமைச் காவலர் இரண்டு முறை திருப்பிச் சுட்டார்; அதில் ஒரு குண்டு ஆசிப்பின் வலது காலில் பாய்ந்தது. காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைகாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

என்ன நடந்தது?

காவல்துறைக்குக் கிடைத்த தகவலின்படி, அந்தச் சிறுமி தனது ஆண் நண்பருடன் கல்காஜி கோயிலுக்கு வந்திருந்தார் - கோப்புப் படம்
படக்குறிப்பு, காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி, அந்தச் சிறுமி தனது ஆண் நண்பருடன் கல்காஜி கோயிலுக்கு வந்திருந்தார் - கோப்புப் படம்

காவல்துறை கூற்றுப்படி, திங்கட்கிழமை மாலை 17 வயது சிறுமி ஒருவர், தனது 17 வயது நண்பருடன் கல்காஜி கோயிலுக்கு வந்துள்ளார்.

இந்த வன்கொடுமை வழக்கு குறித்துத் தெற்குப் பிராந்தியக் இணை ஆணையர் விஜய் குமார் கூறுகையில், "அந்த ஆணும் பெண்ணும் முதலில் கோயிலுக்குச் சென்றுவிட்டு, பின்னர் ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு அவர்களிடம் வந்த மூன்று பேர் தங்களை காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களின் பாணியில் பேசி, நீங்கள் சிறுவர்கள், தவறான செயலில் ஈடுபட்டுள்ளீர்கள், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று மிரட்டியுள்ளனர். அதன்பிறகு, அந்த பையனைப் பிடித்து வைத்துக்கொண்டு, சிறுமியை அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்" என்றார்.

இணை ஆணையரின் கூற்றுப்படி, சிறுமியிடமிருந்து புகார் பெறப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

என்கவுண்டர் நடைபெற்ற இடத்திற்கு குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்
படக்குறிப்பு, என்கவுன்டர் நடைபெற்ற இடத்திற்கு குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்

காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிப்பின் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, அவரைப் பிடிப்பதற்காக அமர் காலனியில் காவல்துறை காத்திருந்தது.

அங்கே ஆசிப்பை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது என்கவுன்டர் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்குப் பிராந்திய காவல் இணை ஆணையர் விஜய் குமார் கூறுகையில், "காலை வேளையில் நடந்த காவல்துறையின் என்கவுன்டருக்குப் பிறகு ஆசிப் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சியுள்ள குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றம் - பெருநகரங்களில் டெல்லி முதலிடம்

நாடு முழுவதும் உள்ள 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது
படக்குறிப்பு, நாடு முழுவதும் உள்ள 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாவதில் நாடு முழுவதும் உள்ள 19 பெருநகரங்களில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தேசிய ஆவண காப்பகம் அல்லது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டுள்ள 'இந்தியாவில் குற்றம் 2024' (Crime in India 2024) அறிக்கையின்படி, வன்கொடுமை, ஆள்கடத்தல் மற்றும் வரதட்சணை மரணங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் டெல்லியில்தான் மிக அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

அந்த அறிக்கையின்படி, 2024-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான மொத்தம் 13,396 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், இதர பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக 1,058 வழக்குகள் வன்கொடுமைப் புகார்களாகப் பதிவாகியுள்ளன.

2025-ம் ஆண்டுக்கான என்.சி.ஆர்.பி. அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு