ஏ.ஐ முதலை படத்தால் சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு என்ன நேர்ந்தது?

பாண்டன் நீர்த்தேக்கத்தில் முதலை தென்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முதலை குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். (கோப்புப் படம்; ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது அல்ல)
படக்குறிப்பு, பாண்டன் நீர்த்தேக்கத்தில் முதலை தென்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முதலை குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். (கோப்புப் படம்; ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது அல்ல)
    • எழுதியவர், செரின் ஹா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிங்கப்பூரில் பிரபலமான நீர்த்தேக்கத்தில் உவர்நீர் முதலை இருப்பது போன்ற ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட படத்தைப் பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மியான்மரைச் சேர்ந்த யே லின் மீது, பொய்யான தகவலைத் தெரிவித்தது மற்றும் நீதிச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அந்தப் படத்தையும், அதை உருவாக்கப் பயன்படுத்திய செயலியையும் நீக்கியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் போலிப் படம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். சிங்கப்பூரின் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் முதலை ஒன்று தென்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேசிய நீர் முகமை கடந்த மாதம் இரண்டு நாட்களுக்கு தனது பணிகளை நிறுத்தியது.

உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசிய யே லின், தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பாண்டன் நீர்த்தேக்கம் சிங்கப்பூர் நகர மையத்துக்கு மேற்கே அமைந்துள்ள பிரபலமான நடைப்பயிற்சி மற்றும் கயாக்கிங் பகுதியாகும்.
படக்குறிப்பு, பாண்டன் நீர்த்தேக்கம் சிங்கப்பூர் நகர மையத்துக்கு மேற்கே அமைந்துள்ள பிரபலமான நடைப்பயிற்சி மற்றும் கயாக்கிங் பகுதியாகும்.

தேசிய நீர் முகமைக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பாண்டன் நீர்த்தேக்கத்தில் முதலை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் முகமை அதிகாரிகளும் தேசிய பூங்காக்கள் அமைப்பின் ஊழியர்களும் முதலை இருப்பிடத்தைக் கண்டறிந்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சிங்கப்பூர் படகோட்டுதல் சங்கம் மற்றும் சிங்கப்பூர் கேனோ கூட்டமைப்பு ஆகியவை தங்களது நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன.

ஆனால், மறுநாளே அந்த முதலைப் படம் போலியானது என்பதை தேசிய நீர் முகமை உறுதி செய்ததுடன், இந்த விவகாரம் குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தது.

இந்த வழக்கு நவம்பர் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. யே லின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சிறைத் தண்டனையும் அதிக தொகை அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் பொய்யான தகவலை அனுப்பிய குற்றத்துக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 10,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். நீதிச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்துக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

யே லின் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முதலையின் படத்தை உருவாக்கி, பின்னர் அதைத் தனது சக ஊழியர் ஒருவருக்கு அனுப்பியதாகக் காவல்துறை குற்றம்சாட்டுகிறது.

"தனது செயல்களை மறைக்க முயன்ற அவர், பின்னர் அந்தப் படத்தையும் அதனுடன் தொடர்புடைய செயலியையும் நீக்கியுள்ளார்" என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யே லின் தனது சக ஊழியருக்கு அனுப்பிய போலிப் படம் குறித்து தேசிய நீர் முகமைக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு