செளதி ஆதரவு படைகள் - ஹூத்திகள் மோதும் ஏமனின் முன்கள நகரில் நடப்பது என்ன?

சௌதி அரேபியா தலைமையிலான சர்வதேசக் கூட்டணி ஒன்று, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது.
படக்குறிப்பு, சௌதி அரேபியா தலைமையிலான சர்வதேசக் கூட்டணி ஒன்று, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது.
    • எழுதியவர், நவல் அல்-மகாஃபி
    • பதவி, மூத்த சர்வதேச புலனாய்வு செய்தியாளர்
    • இருந்து, Taiz, Yemen
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"இதுதான் முதல் டிரோன்.பொதுவாக இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும்" என்று தென்மேற்கு ஏமனில் எங்களுடன் வந்த ராணுவ வீரர் கூறினார்.

புதர்களுக்கு அடியில் நாங்கள் மறைந்து கொண்டபோது, மேலே கேட்ட ட்ரோனின் ரீங்கார சத்தம் அதிகரித்தது. பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்றோம்.

சுமார் 10 நிமிடங்களுக்குள், ஒன்றன் பின் ஒன்றாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைப் போன்ற பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. ஆனால், அவை எங்கு தாக்கின என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தைஸ் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மலைகளில், சண்டை நடைபெறும் போரின் முன்களப் பகுதி எங்கு தொடங்குகிறது என்பதைத் தெளிவாகக் கண்டறிவது கடினமாக உள்ளது.

செங்கடலின் கடற்கரைப் பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் வேகமாக முன்னேறி, முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஏமனின் உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்திய ஹூத்தி போராளிகளைத் தடுத்து நிறுத்த, சௌதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் அரசுப் படைகள் போராடி வருகின்றன.

தைஸ் நகரில் இருந்து அரசுப் படைகளுடன், சோதனைச் சாவடிகளைக் கடந்து, அவர்களின் கட்டுப்பாடு முடிந்து, யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதி தொடங்கும் இடம் வரை பயணித்தோம்.

அங்கு நடைபெறும் சண்டையை நேரில் பார்ப்பதே எங்களது நோக்கமாக இருந்தது.

மலைச்சரிவுகளில் ஆங்காங்கே வீடுகள் காணப்படுகின்றன. ஆனால், சண்டையில் இருந்து தப்பிக்க குடும்பங்கள் வெளியேறியதால், அவற்றில் பல வீடுகள் கைவிடப்பட்டுள்ளன.

அங்கு அச்சமூட்டும் அமைதி நிலவுகிறது.

நகரம் முழுவதும் தொடர்ந்து சீறிப்பாயும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் சத்தம் எதுவும் கேட்கவில்லை. கால்நடைகள் கத்தும் சத்தமும், வந்து விழும் மற்றும் அங்கிருந்து பாயும் குண்டுகளின் சத்தமும் மட்டுமே கேட்கின்றன.

"எனது நிலத்தில் இரண்டு மோட்டார் குண்டுகள் வந்து விழுந்தன" என்று போரின் முன்களப் பகுதியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், தனது வீட்டுக்கு வெளியே ஆடுகளுடன் அமர்ந்திருந்த அலி கூறினார்.

தொடர்ந்து குண்டுவீச்சும் துப்பாக்கிச் சூடும் நடப்பதைத் தங்களால் இனியும் சமாளிக்க முடியாததால், தனது குழந்தைகளை இடம்பெயர்ந்தோருக்கான முகாமுக்கு அனுப்பிவிட்டதாக அவர் கூறினார்.

ஏமன், ஹூத்திகள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தனது மனைவி மற்றும் சகோதரிகளுடன் தங்கி, அவர் கால்நடைகளைப் பராமரித்து வருகிறார்.

"எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. எங்கள் கால்நடைகள் இல்லாமல் நாங்கள் அனைவரும் பசியால் வாடி, எப்படியும் இறந்துவிடுவோம்" என்கிறார் அவர்.

ஹூத்திகள் வரும் நாட்களில் இந்தப் பகுதியைக் கைப்பற்றினால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு அஞ்சி, அவர் தனது முதல் பெயரை மட்டுமே தெரிவித்தார்.

ஹூத்தி தரப்பில் உள்ள எங்களது தொடர்புகள், தங்களது படைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும், மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசுப் படைகளிடம் கேட்டபோது, தங்களுக்கு இது குறித்து தெரியும் என்றும், தாங்களும் தயாராகி வருவதாகவும் கூறினர்.

போரின் முன்களப் பகுதிக்கு மிக அருகில் இருந்த சோதனைச் சாவடியில், மலையின் உச்சியில் உள்ள நிலைகளில் இருந்து சற்று முன்பு திரும்பிய சில போராளிகளைச் சந்தித்தோம். அவர்கள் முன்னேறி வரும் ஹூத்தி படைகளிடமிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இருந்தனர்.

அவர்களில் ஒருவர், தங்களது படைப்பிரிவு குண்டுகளை வீசக்கூடிய, ஆனால் சென்றடைய முடியாத ஒரு பகுதியில் 18 அரசுப் படை வீரர்களின் உடல்கள் கிடப்பதாகக் கூறினார்.

"நாங்கள் அவர்களின் மீது சுடுகிறோம். ஆனால், அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை" என்றார் அவர்.

நான்கு ஆண்டுகளாக பெரும்பாலும் நீடித்து வந்த போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 10-ஆம் தேதி நகரத்துக்கு மேற்கே 85 கி.மீ. தொலைவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் துறைமுகமான மோகாவை ஹூத்திகள் கைப்பற்றினர். அதன்பிறகு தைஸைச் சுற்றியுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது.

ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடமான பாப் அல்-மண்டப் நீரிணையை ஒட்டியுள்ள பரந்த நிலப்பரப்பை அந்தக் குழு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இப்பகுதியிலிருந்து வரும் விநியோகத்தில் மேலும் இடையூறுகள் ஏற்படுமோ என்ற அச்சம் அதிகரித்ததால், இது எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

ஏமனின் மூன்றாவது பெரிய நகரமும், அதன் கலாசாரத் தலைநகருமான தைஸில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

வடக்கு ஏமனில் ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும், தெற்கில் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் இடையே முக்கியமான சந்திப்புப் பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது.

மேலும், பல திசைகளிலும் போர் முனைப்பகுதிகளால் இந்த நகரம் சூழப்பட்டுள்ளது.

தைஸ் நகரின் மையப் பகுதி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஹூத்தி நிலைகள் உள்ளன.

சமீபத்திய மிகக் கடுமையான சண்டைகள் நகரின் மேற்குப் பகுதிகளில் நடந்துள்ளன. அங்கு, நகரின் தெற்குப் பகுதிக்குச் செல்லும் முக்கிய சாலையை மேலிருந்து கண்காணிக்கக்கூடிய நிலப்பரப்பைக் கைப்பற்ற இரு தரப்பினரும் போராடி வருகின்றனர்.

இந்தப் பகுதிகளை ஹூத்திகள் கைப்பற்றினால், மோகாவை மீண்டும் கைப்பற்றுவது அரசுப் படைகளுக்கு மிகவும் கடினமாகிவிடும்.

தெற்கில் உள்ள ஏடனில் இருந்து தைஸுக்குப் பயணம் செய்தோம். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமனின் அதிபர் தலைமைக் கவுன்சிலும் அரசும் ஏடனில்தான் செயல்பட்டு வருகின்றன.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ​​12 வயதான கானா மோர்டார் குண்டுத் தாக்குதலால் பலத்த காயமடைந்தார்.
படக்குறிப்பு, ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ​​12 வயதான கானா மோர்டார் குண்டுத் தாக்குதலால் பலத்த காயமடைந்தார்.

வழியெங்கும் சுமார் 30 சோதனைச் சாவடிகள் இருந்தன. ஒவ்வொரு சோதனைச் சாவடியும் வெவ்வேறு தளபதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் பகுதிகளைக் குறித்தன. அரசுத் தரப்பில் போராடும் படைகளின் பிளவுபட்ட தன்மைக்கு இது தெளிவான அடையாளமாக இருந்தது.

நகரை நெருங்கியபோது, ஆம்புலன்ஸ்கள் எங்களைக் கடந்து செல்லத் தொடங்கின. அரை மணி நேரத்துக்குள் குறைந்தது ஐந்து ஆம்புலன்ஸ்களை எண்ணினோம். அவை தைஸின் முக்கிய மருத்துவமனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.

கடுமையான போரின் மையப்பகுதியில் உள்ள ஒரு நகருக்குள் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இருள் சூழ்ந்த பிறகு நகரை அடைந்தோம். கடைகள் விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தன. உணவகங்களில் கூட்டம் நிரம்பியிருந்தது. குழந்தைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவ்வப்போது, நகரைச் சுற்றியுள்ள மலைகளிலிருந்து குண்டுவீச்சின் இடிச் சத்தமும் துப்பாக்கிச் சூட்டின் வெடிப்புச் சத்தமும் என வேறு சில ஒலிகள் அந்தச் சத்தங்களைக் கிழித்துக்கொண்டு கேட்டன.

ஏமனில் பேரழிவை ஏற்படுத்திய உள்நாட்டுப் போரில் தைஸ் நகரம் முக்கியமான போர்க்களமாக இருந்து வருகிறது.

2015-ஆம் ஆண்டு சனா நகரில் இருந்து அரசை ஹூத்திகள் வெளியேற்றிய பிறகு, தைஸ் நகரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் முயன்றனர். ஆனால், உள்ளூர் ஆயுதக் குழுவினர் அவர்களை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து விரட்டியடித்தனர்.

தற்போதைய புதிய தாக்குதலில், ஹூத்திகள் பிற ஆயுதங்களுடன் டிரோன்களையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

சௌதி அரேபியா, மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐ.நா. நிபுணர்களின் கூற்றுப்படி, ஹூத்திகளுக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் ராணுவ ஆலோசனைகளை வழங்கி முக்கிய வெளிநாட்டு ஆதரவாளராக இரான் உள்ளது.

எனினும், ஹூத்திகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக இரான் ஏற்கெனவே மறுத்துள்ளது. தாங்கள் அவர்களுக்கு அரசியல் ரீதியாக மட்டுமே ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது.

பல ஆண்டுகளாக ஹூத்திகள் சிறார் படைவீரர்களைச் சேர்ப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசுப் படை வீரர் ஒருவரும், போரின் முன்களப் பகுதியில் அவர்களைத் தான் எதிர்கொண்டதாக எங்களிடம் தெரிவித்தார்.

"ஒரு ஏமன் குழந்தையைப் பார்த்து அவனை நோக்கிச் சுடுவது கடினம். ஆனால், அவன் உங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டியிருக்கிறான். எனவே, நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது" என்றார் அவர்.

ஏமனில் இந்த மாதத்தில் இதுவரை நடைபெற்ற சண்டைகளால் 1,30,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, ஏமனில் இந்த மாதத்தில் இதுவரை நடைபெற்ற சண்டைகளால் 1,30,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு, சிறார்களைப் படையில் சேர்க்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து, ஹூத்திகள் ஐ.நா.வுடன் "செயல் திட்டத்தில்" கையெழுத்திட்டனர். அரசுப் படைகளில் பணியாற்றும் பதின்ம வயதினரிடமும் பிபிசி பேசியுள்ளது.

இதற்கிடையில், சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி ஏமன் அரசுக்கு ஆதரவளித்து வருவதுடன், அதற்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.

செங்கடல் கடற்கரையில் உள்ள ஹூத்தி நிலைகள் மீது சௌதி ராணுவம் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதேவேளையில், தென்மேற்கு சௌதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை நோக்கி ஹூத்திகள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளனர்.

மாலை நேரத்தில், தைஸில் உள்ள அல்-தவ்ரா மருத்துவமனையில், போரின் முன்களப் பகுதிகளில் காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு நாங்கள் பார்த்த ஒவ்வொரு படுக்கையிலும் நோயாளிகள் இருந்தனர்.

சில நோயாளிகள் போராளிகள். மற்றவர்கள் பொதுமக்கள்.

பன்னிரண்டு வயதான கானா நபீல் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, வெடிகுண்டுச் சிதறல் அவரது தலையைத் தாக்கியது. அருகில் ஹூத்திகள் வீசிய மோட்டார் குண்டு ஒன்று விழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவர் சுயநினைவின்றி படுத்திருந்தார். அவரது தலை கட்டுகளால் சுற்றப்பட்டிருந்தது. முகம் வீங்கி, காயங்களுடன் காணப்பட்டது.

அவர் கண்விழித்த பிறகு அவரது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய அவரது குடும்பத்தினர் படுக்கைக்கு அருகில் காத்திருந்தனர்.

அந்தக் காயம் அவரது மூளையைப் பாதித்துள்ளதாக மருத்துவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

"அவர் இனி ஒருபோதும் முன்பு இருந்ததைப் போல இருக்க மாட்டார்" என்றார் அவர்.

தைஸ் நகருக்கு தெற்கே சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள அல்-மோனிக் இடம்பெயர்ந்தோர் முகாமில், மோகா மற்றும் சண்டையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறிய குடும்பங்கள் நூற்றுக்கணக்கான கூடாரங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தனர்.

கடந்த 10 நாட்களில் 200 குடும்பங்கள் அங்கு வந்ததாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மரியம் சாலே (உண்மையான பெயர் அல்ல), ஒரு வாரத்துக்கு முன்பு தனது கணவர் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் மோகாவில் இருந்து அங்கு வந்திருந்தார். அவர்களது இளைய குழந்தைக்கு ஏழு வயது.

ஏமானில் இந்த மாதத்தில் இதுவரை நடைபெற்ற சண்டைகளால் 1,30,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, ஏமனில் இந்த மாதத்தில் இதுவரை நடைபெற்ற சண்டைகளால் 1,30,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

அன்றைய உணவை வாங்குவதற்கான பணத்தைச் சம்பாதிக்க, விற்பனை செய்வதற்கான தொப்பி ஒன்றை நெய்துகொண்டிருந்தார் மரியம்.

"நாங்கள் வெறுங்காலுடன் நடந்தோம். எங்களுடன் எதையும் எடுத்துச் செல்லவில்லை. எங்கள் குழந்தைகளை மட்டுமே அழைத்துக்கொண்டு வந்தோம்" என்று அவர் என்னிடம் கூறினார்.

அவர்கள் தப்பிச் சென்றபோது, மோட்டார் குண்டில் இருந்து சிதறிய உலோகத் துண்டு தாக்கி தனது சகோதரியின் மகன் உயிரிழந்ததாக அவர் கூறினார். அவர் மரியமுக்குப் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தார்.

குடும்பத்துக்கு முன்னாலும் பின்னாலும் மோதல்களும் துப்பாக்கிச் சுடுதலும் நடந்ததாக அவர் விவரித்தார். பின்னர் மலையில் ஆயுதம் ஏந்திய நபர்களைக் கண்டதாகவும் கூறினார்.

"எங்கள் கதை முடியப்போகிறது என்று நினைத்தோம்" என்றார் அவர்.

குழந்தைகள் அலறி கொண்டும் அழுதுகொண்டும் இருந்தனர். ஆனால், குடும்பத்தினர் தொடர்ந்து நடந்து சென்றதாக அவர் கூறினார்.

பாத்மா முகமது சாலே மற்றொரு குடும்பத்தின் கூடாரத்துக்கு வெளியே காலியாக இருந்த அரிசி முட்டையின் மீது படுத்திருந்தார்.

அவரால் நடக்க முடியாது, மேலும் மாற்றுத்திறனாளியான அவர், தனக்கென உறங்குவதற்கு இடம் கூட இல்லை என்று என்னிடம் கூறினார்.

"என்னிடம் எதுவுமே இல்லை... தங்குமிடம் இல்லை, மெத்தை இல்லை, குடும்பம் இல்லை. எதுவுமே இல்லை" என்றார் பாத்மா.

சண்டை தங்கள் கிராமத்தை எட்டியபோது, தனது இரண்டு மகன்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் இருந்ததாக பாத்மா கூறினார்.

ஆனால், தான் அவர்களது வேகத்தைக் குறைத்துக்கொண்டிருந்ததால், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஓடுமாறு அவர்களிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களைத் தனது கைகளையும் முழங்கால்களையும் பயன்படுத்தி ஊர்ந்து சென்றதாக அவர் கூறினார்.

"நான் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இங்கிருந்து தோட்டாக்கள் வந்துகொண்டிருந்தன. அங்கே குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன. இங்கும் தோட்டாக்கள் வந்தன, அங்கும் குண்டுகள் விழுந்தன. எனக்கு மேலே இடி இடிப்பது போல் இருந்தது. நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்."

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அவரைப் பார்த்து, முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். அதன்பிறகு அவர் தனது குடும்பத்தினரைப் பார்க்கவில்லை.

செப்டம்பர் 22 அன்று, ஐ.நா அகதிகள் அமைப்பு, உள்நாட்டுப் போரினால் ஏற்கனவே இடம்பெயர்ந்த 52 லட்சம் பேருடன் சேர்த்து, இந்த மாதம் இதுவரை ஏமன் முழுவதும் 1,30,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்தது.

அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 1 லட்சம் பேர், பாத்மாவைப் போல, தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்தது.

கூடுதல் தகவல்கள் : ஜாஸ்மின் டையர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு